TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேசிய கீதம்? (உள்ளிருந்து உண்மையின் குரல்)

மெதுவாக வருடும் கார்த்திகை மாதக்காற்று அன்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. வெளியே மழை தூறிக்கொண்டிருந்த பொழுதும் மனதை ஒருவிதமான புழுக்கம் கவ்விக்கொண்டது. மழை நீரில் சிலிர்த்துநிற்கும் வன்னி மண்ணின் கார்த்திகைப்பூக்கள் அன்று சோகம்கவிந்து வாடிக்கிடந்தன.

அந்தக் காலைப் பொழுதில் பாலியாற்றைக் கடந்து மல்லாவி நகரின் திசையில் சிங்கள இராணுவ ஊர்தியொன்று வேகமாக விரைந்து கொண்டிருந்தது. முன்புறம் இரண்டு பீல்ட்பைக் ரக உந்துருளிகள் வழிகாட்டப் பின்தொடர்ந்த இராணுவ ஊர்தியைத் தொடர்ந்து இன்னுமொரு கவச வாகனம்… அதைத் தொடர்ந்து ஒரு பிக்கப் ரக ஊர்தியும், அதன் பின்னால் கவச ஊர்தி ஒன்றுமாக பச்சைப் பேய்கள் அணிவகுத்துச் சென்றன.

ஈரலித்து போயிருந்ததால் அவை மீது வன்னி மண் புழுதி வாரியிறைக்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களின் ஊர்தியில் ஒட்டுக்கொள்வதற்கு விருப்பமில்லை என்பதை வணங்காமண் உணர்த்துவது போல அது இருந்தது.

வேகமாக நகர்ந்த சிங்கள இராணுவத் தொடரணி சிதைந்து போன வீதிகளைக் கடந்து பாடசாலை வளாகம் ஒன்றுக்குள் நுழைந்த பொழுது பட்டுப் பீதாம்பரம் பளபளக்க ராஜன் மாஸ்ரர் ஓடிவந்தார். நடுவே வந்து, மெதுவாக நின்ற பிக்கப்பில் இருந்து இறங்கிய மேஜர் சுனில் கொடித்துவக்கை கைகூப்பி ராஜன் மாஸ்ரர் வரவேற்றார்.

வவுனியா முகாம்களில் சிங்களச் சிப்பாய்களுக்கு சலாம் போட்டவர்களில் ராஜன் மாஸ்ரருக்கு நிகர் அவரேதான். தேர்தல் நெருங்க மல்லாவியில் ஒரு தொகுதி மக்களை மகிந்த அன்ட் கோ மீளக்குடியமர்த்திய பொழுது சிங்களச் சிப்பாய்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதில் ராஜன் மாஸ்ரர் பின்நிற்கவில்லை.

‘குட் மோர்னிங்க் சேர்’ என்று கூறிக்கொண்டே ராஜன் மாஸ்ரர் பல்லிளிக்க, வேகமாக பிக்கப்பில் இருந்து இறங்கிய மேஜர் கொடித்துவக்கு பதிலுக்கு ‘ஆய்புவான்’ என்று கர்வமாக கர்ஜித்தார்.

‘ஸ்ரூடன்ஸ் எல்லாம்ங் ரெடிதானே?’ என்று ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழில் கேட்கத் தொடங்கிய மேஜர் கொடித்துவக்கு, ராஜன் மாஸ்ரரின் பதிலுக்கு காத்திருக்காமல் விளையாட்டுத் திடலை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து அவரது நான்கு மெய்ப்பாதுகாவலர்கள் சுடுகுழல்களை நேரே நீட்டியவாறு நடந்தார்கள்.

‘யெஸ் சேர்’ என்று ராஜன் மாஸ்ரர் கூறியது ஏதோ கிணற்றில் இருந்து தவளை ஒலிப்பது போல் எதிரொலித்தது.

ஒன்றரை வருடத்திற்கு முன்னர் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற பாடசாலைக் கட்டிடம் ஆங்காங்கே தூண்களும், இரும்புக் கம்பிகளுமாக தொங்கிக் கூனிக்குறுகிக் கிடந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சிக் கிடந்த சுவர்களில் திட்டுத் திட்டாக சன்னங்கள் பாய்ந்திருந்தன. கடும் சண்டை நடந்து ஓய்ந்த இடம் அது என்பதை அவை உணர்த்திக் கொண்டிருக்க அவற்றுக்கு சாட்சியாகப் பாலை மரம் ஒன்று மௌனம் சாதித்துக் கொண்டிருந்தது.

அந்த மரத்திற்கு அருகில் கொடிக்கம்பம் எழுப்பப்பட்டு சிங்கக் கொடி பவ்வியமாக கட்டப்பட்டிருந்தது. அருகில் மேஜர் கொடித்துவக்கும் அவரது பரிவாரங்களும் அமர்ந்து கொள்வதற்கு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இவர்களுக்கான இடத்தில் இருந்து பத்து மீற்றர் தொலைவில் பளிச்சிடும் வெள்ளைச் சீருடை அணிந்து சுமார் முப்பது மாணவர்கள். அவர்களுக்கு அருகில் கலா ரீச்சரும், கந்தசாமி வாத்தியாரும் நின்றிருந்தார்கள்.

கொடிக்கம்பத்தை மேஜர் கொடித்துவக்கு நெருங்கியதும் கலா ரீச்சரை நோக்கி ராஜன் மாஸ்ரர் கையசைத்து சைகை செய்தார். அதேநேரத்தில் தனது நடையின் வேகத்தைத் தளர்த்தி கொடிக்கம்பத்தைப் பயபக்தியுடன் மேஜர் கொடித்துவக்கு நெருங்க, ஏற்கனவே ராஜன் மாஸ்ரர் தயார்நிலையில் வைத்திருந்த பாண்ட் வாத்தியம் ஒலிபெருக்கியில் அலறத் தொடங்கியது. மெதுவாக கொடிக்கம்பத்தில் கைவைத்த மேஜர் கொடித்துவக்கு கையிற்றை அவிழ்க்க சிங்கக் கொடி ஆடத் தொடங்கியது.

புலிக்கொடி ஏறிய அதே தமிழ் மண்ணில் இப்பொழுது சிங்களக் கொடி ஏறிக்கொண்டிருந்தது. சீராக அணிவகுத்து நின்று தமிழீழ தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய மாணவச் செல்வங்கள் இப்பொழுது சிங்கள தேசத்தின் கொடிக்கு பாடல் இசைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘சிறீலங்கா தாயே… நம் சிறீலங்கா தாயே…
நமோ நமோ நமோ நமோ தாயோ…’

என்று பண்டிதர் நல்லதம்பி மொழிபெயர்த்த சிங்கள தேசிய கீதத்தை சுருதிலயமேதுமின்றி வன்னி மண்ணின் மாணவச் செல்வங்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.

முகத்தில் ஒருவிதத் திருப்தியோடு சிங்கக் கொடியை ஏற்றிக் கொண்டிருந்த மேஜர் சுனில் கொடித்துவக்கு சட்டென்று புருவத்தை உயர்த்தித் திரும்பிப் பார்த்தார். அவரது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத மாணவர்களோ தொடர்ந்தும் பாடிக் கொண்டிருந்தார்கள்.

‘நல்லெழில் பொலிசீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா…’

என்று தமிழ் மொழியில் சிங்களநாட்டின் தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருக்க சிங்கள இராணுவ அதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

சிங்கக் கொடியை ஏற்றத் தொடங்கிய பொழுது இருந்த நிதானம் அப்பொழுது அவரிடம் தென்படவில்லை. எதுவுமே புரியாமல் குழம்பிப் போன ராஜன் மாஸ்ரரின் நெற்றியில் பொட்டுப் பொட்டாக வியர்வைத் துளிகள். ஆனால் மாணவர்களின் பாடல் மட்டும் நிற்கவில்லை.

‘ஈழ சீரோண்மணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே!’

என்று பாடல் வரிகளை மாணவர்கள் நிறைவுசெய்ய, சிங்கக் கொடி மேலே ஏறியதா? இல்லையா? என்று கூடப் பார்க்காமல் வேகமாகக் கயிற்றைக் கம்பத்தில் கட்டிய மேஜர் சுனில் கொடித்துவக்கு ஒலிவாங்கியை நோக்கி பாய்ந்து சென்றார். அவரைத் தொடர்ந்து ஓடிச்சென்றார் ராஜன் மாஸ்ரர்.

‘எனிப் புறொப்ளம் சேர்?’ என்று ராஜன் மாஸ்ரர் கேட்க, அவரை நோக்கித் திரும்பிப் பொரிந்து தள்ளினார் மேஜர் சுனில் கொடித்துவக்கு.

‘என்ன நடக்குதூ இங்கை? உங்கடே ஸ்ரூடன்ட்ஸ் தேசக்கீதம் பாடீனதா? அல்லது கொட்டியாவுக்கு கீதம் பாடினதா?’ என்று சீறிவிழுந்தார் மேஜர் சுனில் கொடித்துவக்கு.

‘இல்லை சேர். தேசிய கீதத்தை தமிழ் மொழியிலை அவையல் பாடினவையல். அதிலை ஏதாவது பிழையிருக்கோ சேர்?’ என்று உதடுகள் வெடவெடக்க ராஜன் மாஸ்ரர் கேட்டார். அப்பொழுது மழை தூறும் வேகம் அதிகரிக்க அவரது உடல் நடுக்கமும் அதிகரித்துக் கொண்டது.

அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு ஒலிவாங்கியை கையில் எடுத்த மேஜர் சுனில் கொடித்துவக்கு, எச்சரிக்கும் தொனியில் பேசத் தொடங்கினார்.

‘இண்டேக்கு நீங்கள் பாடுனது தேசக் கீதம் இல்லே. தேசக் கீதம் தேச மொழியிலேதான் பாட வேணும். நீங்கள் தெமிள் பேசலாம். ஆனால் தேசிய கீதம் சிங்களத்திலதான் பாடவேணும். இதூ உங்களுக்கு பைனல் வோர்னிங்க்…’

என்று மேஜர் கொடித்துவக்கு கூறிக்கொண்டிருக்க மாணவர்கள் மருளத் தொடங்கினார்கள். கலா ரீச்சருக்கு எதுவுமே புரியவில்லை.

மிரண்டு போன மாணவர்களை நோக்கி மீண்டும் மேஜர் கொடித்துவக்கு பேசினார்.

‘நீங்கள் பாடின கீதத்துலே ஈழம் வருது. அது வரக்கூடாது. ஈழம் முடிஞ்சுது. இது சிறீலங்கா. இனிமே ஈழம் பேர் வரக்கூடாது.’

என்று கூறிவிட்டு கட்டிடத்திற்குள் மேஜர் கொடித்துவக்கு நுழைந்து கொண்டார்.

மிரண்டு போன மாணவர்கள் இப்பொழுது குழம்பிப் போயிருந்தார்கள். ராஜன் மாஸ்ரர் மட்டும் சொக்கித்துப் போய் நிற்க, கந்தசாமி வாத்தியாருக்கு எல்லாமே புரிந்தது.

‘சிங்களவனுக்கு ஆலவட்டம் பிடிக்கப் போய் கிழி வேண்டினதுதான் மிச்சம். இதைத்தான் பொல்லைக் குடுத்து பொல்லால அடி வேண்டிறது எண்டு சொல்லுறது.’ ராஜன் மாஸ்ரரைப் பார்த்தவாறு கலா ரீச்சரின் காதில் கந்தசாமி வாத்தியார் குசுகுசுத்தார்.

(தொடரும்)

பிற்குறிப்பு: அண்மையில் வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் சிங்களப் படையினரின் கட்டளைக்கு அமைய சிங்கக் கொடி ஏற்றப்பட்டு சிறீலங்காவின் தேசிய கீதம் தமிழ் மொழியில் மாணவர்களால் பாடப்பட்டது. அப்பொழுது அங்கு பிரசன்னமாகியிருந்த சிங்களப் படை அதிகாரி, நிகழ்வை ஏற்பாடு செய்த ஆசிரியரை நேரில் அழைத்து
கடுமையாகக் கடிந்து கொண்டதோடு, சிங்கள தேசிய கீதம் சிங்கள மொழியிலேயே பாடப்பட வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் ‘ஈழம்’ என்ற சொல் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருந்தார். இதனைத் தழுவி உள்ளிருந்து வெளிவரும் உண்மையின் குரலாக இந்தக் கதை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*