TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அலங்கார ஊர்திகள் சொல்லும் செய்தி!

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை முடிவுக்கு வந்த இறுதிநாளில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.

கோத்தபய ராஜபக்ஷேவின் நேரடி உத்தரவின் பேரில்தான், அந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்கிறார் அவர். மறுநாளே ‘யூ’ டர்ன் அடிக்க முயற்சித்தாலும், முதல் நாள் கூறியதை அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை. நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய அந்த மூன்று தலைவர்களும் அவர்களுடன் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்றவர்களும் காக்கை குருவியைப்போல சுட்டுத்தள்ளப்பட்டதை ஒருவரும் மறந்திருக்கமுடியாது. கொல்லப்பட்டவர்களில் நடேசனின் மனைவியும் ஒருவர். சிங்களப் பெண்மணியான அவர், ‘சரணடைய வருபவர்களைப் சுடுகிறீர்களே?’ என்று சிங்கள மொழியில் நியாயம் கேட்டபோதே சுடப்பட்டார். சரியான தகவல் தொடர்பு இல்லாததாலும், ‘சரணடையச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம்’ என்கிற தகவல் ராணுவத்தை உரிய நேரத்தில் போய்ச் சேராததாலும், அவர்கள் உயிரைக் காப்பற்ற இயலாது போனதாக அப்போது சிறீலங்கா அரசு சொன்னது.

அந்தப் பொய்யைத்தான் இப்போது தோலுரித்திருக்கிறது பொன்சேகாவின் குற்றச்சாட்டு. இப்போது குற்றம் சுமத்தும் பொன்சேகா, அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்? என்கிற கேள்வி நியாயமானது. அதைவிட நியாயமானது இன்னொரு கேள்வி. ஆம்! இரண்டு மாதங்களுக்கு முன், கண்களைக் கட்டிய நிலையில் நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ படம், பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது பழைய படம் மாதிரி தெரிகிறது’ என்று அவசர அவசரமாகக் கருத்து சொன்ன நம்ம ஊர்ப் பெரியவர், இப்போது சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டைப் பற்றி மூச்சே விடவில்லையே ஏன்? என்கிற கேள்வி அதைவிட நியாயமானது. நடேசன் முதலானோர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்தினம் இரவு, பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மேரி கோல்ட்வின்னுடன் சட்லைட் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய புலித்தேவன், சரணடையும்போது சர்வதேச நடைமுறைகள் மீறப்படாதிருக்க ஏற்பாடு செய்யும்படி கோரியிருக்கிறார்.

ஜ.நா. பிரதிநிதிகள் உள்பட பலரிடம் இது தொடர்பாகப் பேச முயன்றிருக்கிறார் அந்த பிரிட்டிஷ் பெண் பத்திரிகையாளர். அந்த நெருக்கடியான இரவிலும், பதுங்குக் குழிக்கு உள்ளேயிருந்த புலித்தேவன், தனது சட்லைட் போனில் புன்னகையுடன் தனது புகைப்படத்தைத் தானே எடுத்து மேரி கோல்ட்வின்னுக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப் பெண்மணியை மட்டுமல்ல, கேள்விப்பட்ட ஒவ்வொருவரையும் உறையவைத்த உருக்கமான புகைப்படம் அது. அந்தப் பெண்மணியும் சாதாரணமானவர் அல்ல. இலங்கையின் வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் சிங்கள இனவெறி ராணுவம் நடத்திய காட்டு தர்பாரை அம்பலப்படுத்த, பலவகையிலும் முயன்றவர்.

ஒருமுறை, சிங்கள ராணுவத்தின் பார்வையில் படாமலேயே தமிழர் பகுதிக்குள் போய்விட்டார். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அந்தச் சகோதரியின் ஒரு கண்ணைக் குண்டு துளைத்தது. அந்தக் கண்ணின் பார்வையே போய்விட்டது. அதற்குப் பிறகும் சளைக்காமல் சகோதரத் தமிழர்களுக்காக எல்லா விதத்திலும் முயற்சிகளை மேற்கொண்டார் அவர். இங்கேயிருந்த அரசியல்வாதிகள், பக்கம்பக்கமாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டேயிருக்கிற அரசியல்வாதிகள், மேரி கோல்ட்வின் என்கிற அந்த வீரமிக்க வரலாற்றையெல்லாம் படித்துப் பார்க்க வேண்டும். ஒருபுறம், சரத்பொன்சேகா பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார். தமிழர்கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படவில்லை’ என்று புகார் சொல்கிறார், இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.

பிரபாகரனால்தான் தமிழர்கள் பொதுத் தேர்தலைப் புறக்கணித்தனர். அதனால்தான் ராஜபக்ஷே ஆட்சிக்கு வர முடிந்தது என்று ரணில் சொன்னவுடன், அவசர அவசரமாக ஒரு நீண்ட அறிக்கையைத் தயாரித்து, பிரபாகரன் மீது புழுதிவாரித் தூற்றிய முதல்வர் கருணாநிதியிடமிருந்து, ரணிலின் இப்போதைய புகார் குறித்து ஒரு நாலுவரி அறிக்கை கூட இன்றுவரை வெளிவரவில்லை. தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழு இலங்கையிலிருந்து சென்னை வந்து சேரும் முன்பே, ‘நான்கே நாளில் முள்வேலி முகாமிலிருந்து தமிழர்களை விடுவித்த கலைஞர் வாழ்க’ என்றெல்லாம் சுவர் ஒட்டிகள் அடித்து வைத்திருந்தார்கள் உடன்பிறப்புகள். அந்த சுவர் ஒட்டிகள் ஒட்டிய ஈரம் காய்வதற்கு முன்பே, ரணில் விக்ரமசிங்க சென்னைக்கு வந்து அதைக் கிழித்துக்கொண்டிருக்கிறார்.

வாய்திறந்து ஏதாவது பேச வேண்டாமா முதல்வர் கருணாநிதி? இதெல்லாம் போதாதென்று, ராமேஸ்வரம் – தங்கச்சி மடத்தில் நடந்த பொது விசாரணையில் தங்களது வலியையும், வேதனையையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்கள், மீனவச் சகோதரர்கள். 1994ல் சிங்களப் கடற்படையினரால் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவனின் மனைவி ரவீணா ராணி, இன்றுவரை அந்தப் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிறார். கணவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தச் சகோதரிக்கு 19 வயது. கடலிலிருந்து மீனோடு திரும்புவார் என்று அந்த இளம் மனைவி காத்திருக்க… கடலிலிருந்து திரும்பியது கணவரின் உடல். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராகவே, பொது விசாரணையில் பேசியிருக்கிறார் ரவீணா ராணி.

சிங்களக் கடற்படையின் தாக்குதலால் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட மீனவர்கள் கொடுத்த புகார்கள் பல காவல் நிலையங்களில் அப்படியே இருக்கின்றன. இன்றுவரை, தாக்கியவர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்படியரு கையாலாகாத நிர்வாகம் இருக்கும் வரை, கையறு நிலையில்தான் நமது மீனவச் சொந்தங்கள் நிற்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.‘‘சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டின்போது, என் உடலைத் துளைத்த குண்டுகளை அகற்ற பலமுறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். இப்போதும் தலையில் ஒரு குண்டு அப்படியே உள்ளது. அதை அகற்றினால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்” என்று காரைக்காலைச் சேர்ந்த சௌந்தர்ராஜ் என்கிற மீனவர் கண்ணீர் மல்க சொன்னபோது, இதயமுள்ள அத்தனைபேரையும் கண்ணீர் சிந்த வைத்தது.

பாழாய்ப்போன அரசு இயந்திரம் மட்டும் ‘‘நீ பாட்டுக்குப் பேசு…நான் பாட்டுக்கு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறேன்” என்கிற ஊசிப்போன உளுத்தம் வடையையே இன்னமும் விற்றுக்கொண்டிருந்தால், அந்த மீனவச் சகோதரர்களை வேறு எவர்தான் காப்பாற்றுவது? சிங்கள கடற்படை மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பாயிருக்க வேண்டிய இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை எல்லாம் என்ன கிழித்துக் கொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழுமா, எழாதா? எங்கள் கடல்தாயின் புத்திரர்களைப் பாதுகாப்பதற்காக அல்லாமல் வேறெதற்காக வங்கக் கடலில் மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் ரோந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்? எங்கள் மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட பிறகும், மீண்டும் மீண்டும் கொல்லப்பட்ட பிறகும், தாக்கியவர்கள் மீது ஒருமுறையேனும் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாத ஒருபடை, எங்கள் கடலில் ரோந்து போனால்தானென்ன, போகாவிட்டால்தான் என்ன?

இவையெல்லாம் நாம் மட்டுமே கேட்கக் கூடாது… கருணாநிதியும் சேர்ந்து கேட்க வேண்டும். இதுபற்றி ஒரு நாலு வரி கடிதத்தைத் தட்டினாரென்றால், அது காங்கிரஸின் தலையில் தட்டுவதாக இருக்கும். தட்டுவாரா கருணாநிதி அவர்தான் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஓய்வில்லாமல் இருக்கிறாரே? உலகத் தமிழ் செம்மொழி மாநாடே வேண்டாம் என்று எவரும் சொல்லவில்லை. தமிழண்ணல் போன்ற ஆன்ற தமிழ் சான்றோர்கள் பலரும், ‘இப்போதுள்ள துயரச் சூழலில் ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்ற குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வழிவகைகள் செய்யாத நிலையில் மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலியில் முடங்கிக் கிடக்கும் நிலையில், தமிழ் மாநாட்டை நடத்துவது பொருத்தமாயிராது. கொஞ்சம் தள்ளிப்போடுங்கள்’ என்றுதான் கோருகின்றனர்.

அவையெல்லாம் பொருட்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக் கனவில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிறார். ஊர்வலக் காட்சி இப்போதே அவரது மனக்கண் முன் விரிகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழியைக் காப்பாற்ற ஆற்காடு வீராச்சாமி, சுதர்சனம் போன்றவர்களையெல்லாம் மாநாட்டுக் குழுக்களில் இடம் பெற வைத்துவிட மாநாட்டு களம் சூடாகிவிட்டது. மாநாட்டை நடத்திவிட்டு பின் மனிதர் ஓய்வார் போலிருக்கிறது.‘இப்படியொரு அவலச் சூழலில் நடக்கும் மாநாட்டுக்கு வராதீர்கள்’ என்று உலகெங்கிலுமுள்ள தமிழறிஞர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் பா.செயப்பிரகாசம் முதலான தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் உணர்வாளர்களும்.

இவர்களது அறைக்கூவலைக் கேட்டு, உலகின் பல நாடுகளிலுமிருந்து தமிழறிஞர்கள் வராமல் இருந்துவிடக் கூடாதே என்கிற கவலை எனக்கு! உலகத் தமிழறிஞர்களே! கோவையில் மாபெரும் அலங்கார ஊர்தி அணிவகுப்புடன் கோலாகலமாக நடக்க இருக்கும் தமிழ் மாநாட்டுக்கு வராமல் இருந்துவிடாதீர்கள். எங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஒரு லட்சம் பேர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது கூட வீதிக்கு வரத் தயங்கியவர்கள் நீங்கள். தமிழைக் காக்கவாவது நீங்கள் வீதிக்கு வர வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கிறேன். உலகெங்கிலுமிருந்து நீங்கள் வராமல் போனால் தமிழரைக் காப்பாற்ற பதவியைக்கூட உதறாமல் கவிழ்த்த எங்கள் தலைவர்கள், தமிழையும் சேர்த்து கவிழ்த்துவிடக் கூடும். அதற்காகவாவது நீங்கள் வந்தே ஆக வேண்டும்.

நீங்கள் வரவில்லையென்றால், ‘ தமிழ் வெறும் வாழ்த்துப்பாடல் மொழிதான்’ என்று போட்டி போட்டுக் கொண்டு நிரூபிக்க முயல்வார்கள் எங்கள் கவிஞர்கள். எழுதுகோலால் பதவியில் இருப்பவர்களின் முதுகு சொரிவதுபோல்தான் தமிழ் படிப்பவர்கள் என்கிற தீராத களங்கத்தில் இருந்து தமிழைக் காப்பதற்காகவாவது நீங்கள் கோவை மாநாட்டுக்கு வரவேண்டும். தமிழரைக் காப்பாற்ற முடியவில்லை. குறைந்தபட்சம் தமிழையாவது காப்பாற்றுங்கள். கோவை மாநாட்டு அலங்கார ஊர்திகளின் பேரணியை நீங்கள் பார்ப்பதற்காக, நான்கு இடங்களில் சிறப்பு மேடைகள் அமைக்கப்படுகின்றன. அந்த மேடைகள் நீங்கள் இல்லாமல் பொலிவிழந்து விடக் கூடாது. நீங்கள் எங்களைப்போல உணர்ச்சிவசப்படுகிற மனிதர்கள் இல்லை. வாடிய பயிர்களைக் கண்டு நீங்கள் வாடவேண்டியது அவசியமில்லை.

அதெல்லாம் வள்ளலார்கள் வேலை! அதனால் ஆறே மாதத்தில் கொல்லப்பட்ட எங்கள் ஒரு லட்சம் சொந்தங்களின் உடல் அந்த அலங்கார ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுவதாகக் கருதும் எங்களது மனநிலைதான் உங்களுக்கும் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அறிஞர்கள். ஆய்ந்து அறிந்து தெளிந்த அறிவாளிகள் என்றாலும், தமிழன் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, அந்த அலங்கார ஊர்திகளை பார்வையிடுவதற்காகக் கலைஞருடன் அமைக்கப்பட இருக்கும் சிறப்பு மேடைகளில் ஏறி நிற்கும்போது, இங்கிருந்து 26வது மைலில் கொல்லப்பட்ட எங்கள் சொந்தங்களின் நினைவாக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்துங்கள். உங்களைப் போன்ற மகத்தான அறிஞர்களின் ஒரு சொட்டுக் கண்ணீர், தங்களது தாய் மண்ணைக் காப்பதற்காக, கடைசிச் சொட்டு ரத்தம் வரை சிந்திய மாவீரர்களின் தியாகத்தைக் கௌரவிப்பதாக இருக்கும்.

கண்டிப்பாக நீங்கள் கண்ணீர் வடிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அலங்கார மேடையில் நின்றபடி வாண வேடிக்கைகளைப் பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்குத் தரப்படலாம். அந்த வாண வேடிக்கைகளை, சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து நடத்திவந்த ‘வான’ வேடிக்கைகளோடு ஒப்பிட முடியாது என்பது மட்டும் எங்களுக்கு உறுதியாகத் தெரியும் என்றாலும் உலகெங்கிலுமிருந்து வருகிற உங்களை வரவேற்க வாணவேடிக்கைகள் இல்லாவிட்டால் எப்படி? விருந்தினரை மகிழ்விப்பதல்லவா தமிழரின் மரபு! அதைக் கைவிட முடியுமா? தமிழர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதிய கருணாநிதி உங்களை அழைக்கிறார்.

தமிழர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் கண்ணீர்க் கவிதைகளைப் படைத்து எங்களை உருக வைத்த கருணாநிதி உங்களை அழைக்கிறார். ஓய்வுபெறுவதற்கு முன், தமிழருக்காக ஓர் ஆடம்பர, அலங்கார, கோலாகல மாநாட்டை, செலவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரமாண்டமாக நடத்தும் அவரது விருப்பத்தை நிறைவேற்ற அவசியம் வாருங்கள். உங்கள் அறிவையும், புலமையையும் கோவையில் வந்து கடைவிரிக்கும் போதே அழுகை மழையில் நனைந்து கொண்டிருக்கும் எட்டுக் கோடி தமிழருக்கும் குடை விரிக்கும் விதத்தில் ஒரே ஒரு அனுதாபத் தீர்மானமும் ஒரே ஒரு கண்டனத் தீர்மானமும் மட்டும் நிறைவேற்றுங்கள். கருணாநிதியும் உங்களை மறக்க மாட்டார்… நாங்களும் உங்களை மறக்க மாட்டோம்!

குறிப்பு; 18.12.2009 தேதியிட்ட தமிழக அரசியல் வார இதழில் வெளியான கட்டுரை.

திரு.புகழேந்தியின்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*