TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அழிவைச் சந்தித்த மக்கள் ஆபத்தான பொறிக்குள்?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு என்பன அரசியலில் முக்கிய விடயங்களாக மாறியிருக்கின்றன இதனால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் மீள்குடியமர்வு மற்றும் மீள்கட்டுமானம் என்பன குறித்த வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் நடைமுறைச் சாத்தியமானது தானா என்ற கேள்வியை எழும்பும் வகையில் அமைந்திருப்பது முக்கியமானது.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு குறித்த கடுமையான அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு வந்து கொண்டிருப்பினும் இது பிரச்சனைக்குரிய ஒரு விவகாரமாகவே உள்ளது.ஜனாதிபதித் தேர்தல் முடிந்த சில நாட்களில் அனைத்து மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவர்; என்று மீள்குடியமர்வு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியிருக்கிறார். ஏன்கனவே அரசாங்கம் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக இடம்பெயர்ந்த மக்களில் 80 வீதமானோரை மீள்குடியமர்த்துவதாக வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் இப்போது அனைவரையும் மீளக்குடியமர்த்த முடியும் என்று கூறியிருக்கிறது. இதுநடைமுறைச் சாத்தியமான விடயமல்ல.

ஏற்கனவே அரசாங்கம் மீளக்;குடியமர்வைத் தாமதப்படுத்துவதற்குக் கூறி வந்த ஒரு காரணம் கண்ணிவெடி அபாயம் உள்ளது என்பதே. வன்னியின் பெரும்பாலான பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் அவற்றை அகற்றுவதற்கு முன்னதாக மீள்குடியமர்வை மேற்கொள்ள முடியாதென்றும்- கண்ணிவெடி அபாயமுள்ள பகுதிகளில் மக்களை மீள்க்குடியமர்த்தத் தயாரில்லை என்றும் அரசாங்கம் கூறிவந்தது. அது அப்போது சரியான காரணமல்ல. இராணுவ நலன்களை முன்னிறுத்தியே அரசு அவ்வாறு கூறியிருந்து.ஆனால் இப்போது அரசாங்கம் இந்த மாத முடிவுக்குள் மீள்குடியமர்வு பூர்த்தியடைந்து விடும் என்று கூறியிருப்பதானது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முற்றுப்பெறு முன்னரே பொதுமக்களை மீளக்குடியமர்த்துவது எவ்வாறு சாத்தியமாகும் என்பது கேள்விக்குரிய விவகாரமாகும். ஏற்கனவே மீள்குடியமர்வுக்காக வன்னிப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுபவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் குடியிருக்க அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. பெருமளவானோர் அந்தந்தப் பகுதிப் பாடசாலைக் கட்டடங்களிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். இது முகாம்களை மாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாக இருந்கிறதே தவிர, மீள்குடியமர்வுத் திட்டமாகக் கருத முடியாது. இந்தநிலையில் அரசாங்கம் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் மீள்குடியேற்றங்களை மேற்கொண்டு தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறதா அல்லது பொய்யான வாக்குறுதியை வழங்கி ஏமாற்ற நினைக்கிறதா என்று கேள்வி எழுகிறது.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இடம்பெயர்ந்த மக்களை கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்துக்குள் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முனைவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில் இது சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாக மாறிவருகிறது. வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டு வன்னியில் அவர்களைக் கொண்டு போய் முகாம்களுக்குள் தங்க வைப்பதானது- இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றுவதற்கு எந்தவகையிலும் உதவாது. அதேவேளை கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்துக்குள் பொதுமக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தும்.

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக வன்னியின் மேற்குப் பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏனைய பகுதிகளில் இன்னமும் இதற்கான தொடக்கம் கூட நடக்கவில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீள்குடியமர்த்தப் போவதாக அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதி நடைமுறைச் சாத்தியமற்றதாகவே உள்ளது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இதே போன்றதொரு பிரசாரமே மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த அனைவரும் மீள்க்குடியமர்த்தப்பட்;டு விட்டதாக அரசாங்கம் அடிக்கடி கூறி வருகிறது. ஆனால் வவுனியா முகாம்களில் இருந்து சுமார் 65ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது உண்மை. எனினும் இன்னமும் அவர்களில் பலர் முகாம்களிலேயோ அல்லது உறவினர், நண்பர்களின் வீடுகளிலோ தான் தங்கியுள்ளனர். இதைவிட வலி-வடக்கு, தென்மராட்சியின் பல பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் உயர்பாதுகாப்பு வலயங்களால் இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் இன்னமும் வேறு இடங்களில் தான் வசிக்கின்றனர். குடாநாட்டின் தற்போதைய சனத்தொகையில் குறைந்தது ஆறில் ஒரு பங்கினரானராவது இடம்பெயர்ந்த மக்களாக இருக்கின்ற நிலையில்- அங்கு மீள்குடியமர்வு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து விட்டதாக அரசாங்கம் கூறியிருந்தது.இது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகமே. இதே போன்றதொரு நாடகத்தை வன்னியிலும் அரங்கேற்றவே, ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையுடன் மீள்குடியமர்வு மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

* நடைமுறைச் சாத்தியமான வாக்குறுதிகளுடன் மீள்குடியமர்வு, மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கும் நிலை காணப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தியே அனைத்து விவகாரங்களும் கையாளப்படுவது போலத் தெரிகிறது.போரின் கொடுமையில் இழப்புகளைச் சந்தித்து உயிர் மீண்ட மக்களை கண்ணிவெடிகள் நிறைந்த பகுதிக்குள் குடியமர்த்த முனைவது பேராபத்தை விளைவிக்கும். அதேவேளை மீள்குடியமர்வு பூர்த்தியாகி விட்டதாகக் கூறி வவுனியா தடுப்பு முகாம்களை மூடி விட்டு- வன்னியில் புதிய முகாம்களை அமைப்பதால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும் ஆபத்தும் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் ஒருவிதத்தில் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துவதற்கு உதவும் போல இருந்தாலும்- அது ஆபத்தான பொறிக்குள் மக்களைச் சிக்க வைத்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*