TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“ஜனாதிபதித் தேர்தலும் தமிழர்களின் எதிர்காலமும்”

புத்தாண்டு வாழ்த்துகள்

உங்களுக்கும் உரித்தாகட்டும்

தேர்தல் எல்லாம் எப்படிப்போகிறது?

இப்படித்தான் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால் உரையாடல்கள் நடக்கிறது.

அது எந்த இன, மத, குலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அக்கறை அவர்களிடத்தில் இருக்கிறது. என்றாலும் இந்த நாட்டின் பெரும்பான்மையினத்தின் அபிலாசைகளும் சிறுபான்மைத் தமிழினத்தினதும் தமிழ்பேசும் மக்களினதும் ஏக்கங்கள் வெவ்வேறானவை.

இது வரைகாலம் நாட்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றம் தான் யுத்தத்தின் நிறைவு. யுத்தம் முடிவுற்றதால் பெரும்பான்மையின மக்கள் பாரதூரமற்ற விடயங்களைக் கூட பல்வேறு விதமாகப் பேசுவார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டிய நிர்ப்பந்தம். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இயல்பு வாழ்வும் வாழ்வாதார மீள்கட்டுமானமுமே இன்றைய தேவை. அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினுடையது. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் தார்மீக உரிமை நம்முடையது. இதனை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான அவசியமும் அவசரமும் நீண்ட காலப் போர் நெருக்குவாரங்களுக்கு உள்ளானவர்களுக்கே கூடுதலாக உள்ளது.

யுத்தம் என்றால் என்ன, தேர்தல் என்றால் என்ன, எதனையும் தம் சுய பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனையில் நோக்குவோர், எல்லாச் சமூகத்திலும் இருக்கிறார்கள். நாட்டில் நடைபெறும் தேர்தலொன்றை மக்களின் நலனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட, தம் வர்த்தக வியாபார செழிப்புடன் மாத்திரம் சிந்திப்பவர்கள், தாமும் குழம்பி மற்றவர்களையும் பேதலிக்கச் செய்துவிடுவார்கள்.

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகத் தீர்மானகரமானதாகும். இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த வாழ்விடத்தில் மீள்குடியமர்வதும், இத்தனை காலம் எந்த அபிலாசைகளுக்காக வாழ்வைத் தொலைத்தோமோ அவற்றை அடைவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதும் தமிழ் மக்ளுக்கு உள்ள பாரிய சவாலாகும்.

சொந்த மண்ணில் வேறு எவரினதும் தலையீடு இன்றித் தம்மைத் தாமே நிர்வகித்து வாழ்வதற்கான ஓர் அரசியல் பொறிமுறைக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள், இறுதியில் திசைமாறிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொண்டும், இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையைத் தொலைத்தும்,அவலத்தைக்கொடுத்து தமிழ் மக்களை அநாதைகளாக்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

இனப் பிரச்சினைக்கு அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இந்திய அரசாங்கத்திடமும் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார். இது எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டது என்பதை அனைவரும் அறிவர்.

* அதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிச்சயம் அரசியல் தீர்வொன்று எட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் இன்று நேற்று உருவானதல்ல. (அரசியல் தலைமையான தந்தை செல்வா, உட்பட போராட்டத்தலைமையான விடுதலைப்புலிகள்) மூன்று தசாப்தத்திற்கு முன்பே இந்த நம்பிக்கை உதயமானாலும், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட அதீத நம்பிக்கையும் சுய மதிப்பீடின்மையும் (அதாவது இந்தியா எம்மைக் காக்கும் இரட்சகன்) தமிழர் தம் வாழ்வைச் சூனியமாக்கின.

* தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசு தமிழ் மக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், மேம்படுத்த வேண்டும் என்பதால், இந்திய அரசும் அவரது தொடர்ச்சியான நிர்வாகத்தையே எதிர்பார்க்கிறது என்பதை தமிழர்கள் மிகக் கவனமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. (இந்தியாவை எவ்வாறு தமிழர்பக்கம் திருப்புதல் அல்லது பிராந்திய நலன்களூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லவைத்தல்)

தமிழர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவதாகக் கூறி வாக்குக் கேட்கும் தகுதியையும் துணிவையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எப்போதோ இழந்துவிட்டார். அவர் நினைத்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகாமல் பிரச்சினைக்கத் தீர்வொன்றைக் கண்டிருக்க முடியும். இதையெல்லாம் சிந்திக்க முடியாத சித்த சுவாதீனமற்ற நிலையிலா தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் தம் கட்சியில் உறுதியான ஓர் உறுப்புரிமையைக் கொண்டிராத ஒருவரை முன்னிலைப்படுத்தி தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் கைங்கரியத்தில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இன்று அள்ளியெறியும் வாக்குறுதிகளை நாளை மறுதலிக்கும் வாய்ப்பு ரணிலிடம் நிரம்பவே உள்ளன. தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கு ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாரிய பொறுப்பு இருப்பதைப் போலவே தமிழர்களின் இருப்பு சின்னாபின்னமாகுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்கிருக்கிறது.

தற்போது சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும் ஜே.வி.பி. தன் அரசியல் வரலாற்றில் இனப் பிரச்சினைக்கு எந்தவொரு உருப்படியான தீர்வையும் முன்வைத்த கட்சியல்ல. மாறாக சகல தீர்வுகளையும் அவர்கள் கடுமையாக எதிர்க்கும் இயலாத அரசியலையே செய்து வந்துள்ளனர்.

யுத்தத்தை யார் நிறைவு செய்தார்கள் என்பது பற்றிய தர்க்கம் எமக்கு (தமிழருக்கு) அவசியமே இல்லாதது. அந்திமகாலப் போரில் தமிழர் பட்ட அவஸ்தைக்கும் மனக்கீறல்களுக்கும் ஒத்தடம் கொடுக்க வேண்டியவர்கள் இன்றைய ஆட்சியாளர்களே. யுத்தத்தை நிறைவு செய்ததைப் போலவே. நிரந்தரத் தீர்வுக்கும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டும்.

தமிழ் மக்கள் எதிர்பார்த்த நிம்மதியான எதிர்காலத்தையும் வளமான வாழ்வையும் ஏற்படுத்தித் தரும் முயற்சியில் தமிழ் அரசியல் தலைமைகளும் தோல்வி கண்டு வந்துள்ளன. எனவே இனியும் அவர்களின் வழிகாட்டல்களில் தங்கியிருக்கத் தயாராக இல்லை என்பது அண்மைக்கால அரசியல் செல்வழிகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மாற்றம் என்பது தேவையைப் பொறுத்தே அவசியமாகிறது. இன்றைய சூழ்நிலையில் அதனைப்பற்றி நாம் சிந்திப்பதானது ஏற்கனவே பின்னோக்கிச் சென்றிருக்கும் நம் வாழ்வை இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்தள்ளிவிடும்.

* தமிழ் மக்கள் தாமாகச் சிந்தித்துத் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுமான அவர்களின் வாழ்க்கைக்கு ஒரே வழி

“கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?

கொழும்பிலிருந்து ஆதவன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*