TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகாவின் வாக்குறுதி சாத்தியமானதொன்று தானா?

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றப் போவதாகவும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப் போவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார் சரத் பொன்சேகா.

* சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் நேரடியாகப் போய் பலாலியில் இறங்கி வீடுகளைப் பார்க்கப் போகலாம் என்று புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்களின் பிள்ளைகள், உறவினர்கள் நினைத்தவுடன் வந்து பலாலியில் இறங்கி வீட்டுக்கு வருவார்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களின் பெற்றோர், உறவினர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்படும் என்ற சரத் பொன்சேகாவின் வாக்குறுதி சாத்தியமானதொன்று தானா?

* இதனால் யாழ்ப்பாணத்துக்குக் கிடைக்கக் கூடியது நன்மையா- தீமையா?

* இந்த அறிவிப்பின் பின்னால் மறைந்து கிடக்கின்ற ஆபத்துகள் என்ன?

இவை எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் தான் இப்படியான கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். சரத் பொன்சேகா தன்னை ஒரு நல்லவர் போலத் தமிழர்களுக்குக் காட்டிக் கொள்ள முனைகிறார். அவர் எத்தகையதொரு கொடூரமான மனிதர் என்பதை நன்கு அறிந்தவர்கள் தமிழ் மக்களே. இப்போது உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்கு என்று கேள்வி எழுப்பும் அவர்- அவற்றை நீக்கி விடப் போவதாக என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

2002ம் ஆண்டு இதே சரத் பொன்சேகா யாழ்.படைகளின் தளபதியாக இருந்த போது உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது என்று அடம்பிடித்தவர். அப்படி அகற்றுவதானால் புலிகள் தம்மிடம் உள்ள ஆட்டிலறிகளை ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தவர். அவரது இந்த நிபந்தனைக்கும் உயர்பாதுகாப்பு வலயங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயும் புலிகளின் ஆட்டிலறி ஷெல்கள் விழுந்து வெடித்தன. உயர் பாதுகாப்பு வலயங்களுக்கும் புலிகளின் பீரங்கிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தெரிந்திருந்தும்- அப்படியொரு நிபந்தனையை அவர் விதித்ததற்குக் காரணமே போர்நிறுத்தத்தை குழப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

* போர்நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான வகையில் பேச்சுக்கள் நகர்ந்து கொண்டிருந்த போது- சரத் பொன்சேகா கிளப்பிய உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சினைகளால் தான் பேச்சுக்களில் நம்பிக்கையீனம் ஏற்பட்டது. அன்று உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற சரத் பொன்சேகா சம்மதித்திருந்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்திருப்பார்கள். அது புலிகளுக்கும் அமைதி நோக்கிய பாதையில் செல்வதற்கு உந்துசக்தியாக இருந்திருக்கும். அன்று அதை உணராத சரத் பொன்சேகா- இன்று தான் ஆட்சிபீடம் ஏறுவதற்கு தமிழ்மக்களின் வாக்குகள் தேவை என்று வந்தவுடன் அவர்களிடம் போய் கையேந்துகிறார்.

சரத் பொன்சேகா அன்றையதினம் எதிர்ப்புத் தெரிவிக்காதிருந்திருந்தால்- சதீஸ் நம்பியார் என்ற தனது நண்பனான இந்திய ஜெனரலைக் கொண்டு வந்து வக்காலத்து வாங்க வைத்திருக்கா விட்டால் உயர்பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீளக் குடியமர்ந்திருப்பார்கள். அப்போது மீள்க்குடிமயர்வு சாத்தியமாகியிருந்தால் – யாழ்ப்பாண மக்கள் இன்று சரத் பொன்சேகாவின் கரங்களை நிச்சயம் பலப்படுத்த கடமைப்பட்டவர்களாகவே இருந்திருப்பர்.

ஆனால் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உயர்பாதுகாப்பு வலயப் பகுதி மக்களை இன்று வரை அகதியாக வாழவைத்த பெருமை கொண்ட சரத் பொன்சேகா- இப்போது வந்து தனக்கு வாழ்வளித்தால் உங்களை வாழ வைப்பேன் என்கிறார். அன்று தமிழ் மக்கள் தம்மைச் சொந்த இடங்களில் வாழ விடுவாறு கெஞ்சியது இவரது காதில் விழவில்லை. அப்படிப்பட்டவரை இன்று வாழ வைக்க வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இருக்கிறதா? இவரது பிடிவாதத்தினால் தமிழ்மக்கள் இழந்தவை ஏராளம்.

* எத்தனை ஆயிரம் உயிர்களை-எத்தனை ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை-இவற்றையெல்லாம் விட இன்று தலைமையை இழந்து தமிழ்மக்கள் நிர்க்கதியாக நிற்பதற்கும் பொறுப்பானவர் இவரல்லவா?

அவர் இப்போதும் கூட உயர்பாதுகாப்பு வலயங்கள் விடயத்தில் கடும்போக்குடன் தான் இருக்;கிறார் என்பதே உண்மை. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சரத் பொன்சேகா கொடுத்துள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி விடுவோம் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமரலாம் என்பதெல்லாம் வெறும் தேர்தல் வாக்குறுதிகள் தான். இதையெல்லாம் தேர்தல் முடிந்ததும் அவருக்கு மறந்து போய் விடும்.

சரத் பொன்சேகா நினைத்தாலும் பலாலி உயர் பாதுகாப்பு வலயங்களை முழுமையாக நீக்க முடியாது. காரணம் அது ஒரு மிகப் பெரிய படைத் தளப்பிரதேசமாக மாற்றப்பட்டு விட்டது.

28 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளிடக்கிய 25சதுர கி.மீ பரப்பளவான நிலத்தை விழுங்கி நிற்கும் இந்த உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றாமல் தடுத்து வைத்திருப்பதற்காகவே அவர் இன்னொரு அஸ்திரத்தையும் ஏறியிருக்கிறார். அது தான் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவது என்ற வாக்குறுதி. பலாலி சர்வதேச விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதற்கு என்றால் வடபகுதி தமிழர்கள் வாயைப் பிளந்து கொண்டு நிற்பார்கள் என்பது சரத் பொன்சேகாவுக்கு நன்றாகத் தெரியும்.

ஏனென்றால் வடபகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் வெளிநாடு;களில் உறவுகள் இருக்கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் வரவும், அவரிகளிடம் இவர்கள் செல்லவும் வசதியாக இருக்கும் என்ற நினைப்பில் தனக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார் சரத் பொன்சேகா.

பலாலியை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது ஒரு உயர் மட்டச்சதி என்பது பலருக்கும் புரியாதிருக்கலாம். இப்போதுதுள்ள பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை தொடர்ந்து பேணுவதற்கே இப்படியொரு நாடகம். பலாலி விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையின் நீளம் 2286 மீற்றர் மட்டுமே. ஆனால் இதை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதானால்- ஓடுபாதையை 3500 மீற்றராக விஸ்தரிக்க வேண்டும். இதன்படி ஓடு பாதையை மேலும் சுமார் 1200 மீற்றரால்; அதிகரிக்க வேண்டும்.

அம்பாந்தோட்டை- மத்தாலவில் நிர்மாணிக்கப்படும் புதிய விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றரைக் கொண்டதாகவே இருக்கப் போகிறது. அதுபோலவே பலாலியிலும் ஓடுபாதை விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்து மத்தால விமான நிலையத்தை அமைப்பதற்காக அரசாங்கம் கையகப்படுத்தியுள்ள நிலத்தின் பரப்பளவு சுமார் 2000 ஹெக்ரெயர் ஆகும். இது கிட்டத்தட்ட 20 சதுர கி.மீ.

இந்தவகையில் பலாலியை சர்வதேச விமான நிலையமாக மாற்றினால்- அதற்காகவே 20 சதுர கி.மீ பரப்ளவுள்ள பிரதேசத்தை கைப்பற்றி விட முடியும். அடுத்து அதன் பாதுகாப்பு மற்றும் விமானங்களின் தரையிறக்கத்துக்கு ஆபத்தான கட்டங்கள் உள்ள பகுதி என்று கூறி ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அரசாங்கம் கையகப்படுத்தும்.

இதன்மூலம் தற்போதைய 25சதுர கி.மீ உயர்பாதுகாப்பு வலயம் இன்னமும் அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுமே தவிர குறைவதற்குச் சாத்தியம் இல்லை. அதாவது படையனரின் வசமுள்ள உயர் பதுகாப்பு வலயத்தை தக்க வைப்பதே சரத் பொன்சேகாவின் திட்டம். வலி-வடக்கு வளம்மிக்க விவசாய நிலம். அங்கு விமான நிலையத்தை அமைப்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பாரம்பரிய நிலங்களை பறிக்கும் முயற்சியாகவும் அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் முயற்சியாகவுமே இருக்கப் போகிறது. அதுமட்டுமன்றி பலாலி சர்வதேச விமான நிலையமாக மாறும் போது தற்போது உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் படைத்தளங்கள் பலவற்றைப் படையினர் விட்டுக் கொடுக்க நேரிடும். அவர்கள் புதிய இடங்களில் தமது தளங்களை அமைத்து தமிழர் நிலங்களை விழுங்கப் போவதும் உறுதி.

* இந்தநிலையில் யாழ்ப்பாணத்தி;ல் சர்வதேச விமான நிலையம் ஒன்று தேவை தானா என்ற கேள்வி முக்கியமானது. பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைவது யாழ்ப்பாணத்தின் பொருளாதார வளரச்;சிக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. ஏனென்றால் பிரதான நகரங்களில் இருந்து குறைந்தது 25கி.மீ தொலைவில் தான் சர்வதேச விமான நிலையங்கள் இப்போது அமைக்கப்படுகின்றன.ஆனால் யாழ்ப்பாண நகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமையும் சர்வதேச விமான நிலையத்தால் யாழ்ப்பாண நகரின் வளர்ச்சியே தடைப்படும்.அங்கு உயரமான கட்டங்களை அமைக்க முடியாது போகும். இன்னும் பல கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வரும் போது பாதிக்கப்படப் போவது யாழ்ப்பாணமாகவே இருக்கும்.

* வடக்கில் ஒரு சர்வதேச விமான நிலையம் அவசியமே- அதற்கு தரிசாகக் கிடக்கும் நிலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு விட்டு வளம்மிக்க நிலத்தில் தார்வீதிகளைப் போட்டு விமானங்களை தரையிறங்க வைப்பதால் யாழ்ப்பாண மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடாது.

சரத் பொன்சேகா இந்த வாகுறுதியை நிறைவேற்றுவதன் மூலம் வலி வடக்கு மக்களின் பாரம்பரிய நிலங்களை அபகரிக்கப் பார்க்கிறார் என்பதே உண்மை. இந்த உண்மையை அவருக்கு வக்காலத்து வாங்க முயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் உணராது போயிருப்பர் என்று சொல்ல முடியாது.

தொல்காப்பியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*