TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறீலங்கா அதிபர் தேர்தல் தள்ளாடும் தமிழ் கட்சிகள்..

கூட்டமைப்பு கக்கியுள்ள தேர்தல் எரிமலை நெருப்பா..
தேர்தலுக்கு பின் எரியக்கூடிய கொழும்பு சைவக்கடை நெருப்பா..

சிறீலங்கா அதிபர் தேர்தல் கட்சித் தலைவர்களுக்கு அதிகமாக பணம் உழைக்கும் நேரம் மட்டுமல்ல, இரண்டு பக்கங்கங்களாலும் அழுத்தங்கள் வரக்கூடிய காலமுமாகும். பெரியசாமி சந்திரசேகரன் மாரடைப்பால் மரணித்துள்ளார். இந்த அதிபர் தேர்தலின் நெருக்குவாரம் அவரையும் பாதித்திருக்க இடமுண்டு.

தமிழர் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் எதிர் காலத்திற்காக கருத்து மோதல் நிலையடைந்து பிளந்திருந்தால் அதை வரவேற்கலாம்.. ஆனால் போயும் போயும் சிறீலங்கா அதிபர் தேர்தலுக்காக மோதிப் பிளவடைந்திருக்கிறது. இதுவரை காலமும் கக்காத கூட்டமைப்பின் எரிமலை சிறீலங்கா அதிபர் தேர்தலில் கக்கியுள்ளது. கூட்மைப்பில் கனன்றது அரசியல் நெருப்பா விடுதலை நெருப்பா என்பதை அறிய இப்போது கக்கியுள்ள எரிமலைக் குழம்பே போதுமானது.

1977 தேர்தலை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அன்றைய தமிழர் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முழங்கினார்.. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்களியுங்கள் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார் 1983 கலவரத்தில் மாறு வேடம் பூண்டு அவர் நாட்டை விட்டு ஓடியபோது உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

பாராளுமன்றம் ஓர் உலக மேடை அங்கு போவதே எமது பிரச்சனைகளை உலக மன்றிற்கு எடுத்துச் செல்லும் என்று அதே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அன்று முழங்கினார். ஆனால் வன்னியில் இன்று நடந்து முடிந்த அவலங்களை நிறுத்த நமது பாராளுமன்ற ஆசனங்களால் முடியவில்லை.

வன்னியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. புலம் பெயர் நாடுகளில் வரலாறு காணாத ஊர்வலங்கள் நடாத்தப்பட்டன. அப்போதும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது..

சிங்கள அரசுக்கு 32 ற்கு மேற்பட்ட உலக நாடுகள் போருக்காக உதவி செய்தன.. சற்லைற் கண்காணிப்பால் விடுதலைப் புலிகளின் நகர்வுகளை படம் பிடித்து, பலர் துடிக்கத் துடிக்க கொல்லப்பட வழி காட்டியவை உலக நாடுகளே..

இத்தகைய உலக நாடுகளுக்கு நமது ஒற்றுமையை, தமிழீழ தாகத்தை இனியும் ஒரு முறை அதிபர் தேர்தலில் வாக்களித்துத்தான் காட்ட வேண்டுமா.. இது நமது கேள்வியல்ல யாழ். மக்களில் பலர் கேட்கிறார்கள்.

யாழ். மாநகரசபை தேர்தலில் 80 வீதமான மக்கள் வாக்களிக்காமல் விட்டது எதற்காக..? வாக்குச் சீட்டால் உலகத்திற்கு காட்ட இனி எந்த அம்மணமும் நம்மிடம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

உலக நாடுகளுக்கு காட்ட சிறீலங்காவின் அதிபர் தேர்தலை எத்தனை முறை பயன்படுத்தப் போகிறோம் ? என்று கேட்பதுபோல தமிழ் காங்கிரஸ் கட்சி தேர்தலை பகிஷ்கரித்திருக்கிறது.

சம்மந்தர் இதுவரை முடிவுகள் எதையும் எடுக்கவில்லை.

இனி அவர் எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்காக மீதம் வைக்கப்பட்டிருப்பது ஒரேயொரு வழி மட்டுமே. மக்கள் விரும்பியதை செய்யட்டும், நாம் இந்தத் தேர்தலில் யாதொரு கருத்தும் கூற விரும்பவில்லை என்று கூறுவதே கடைசி வழி.

அமிர்தலிங்கத்தின் மேடைப் பேச்சிலேயே இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது. சிங்கள அதிபர் தேர்தல் சிங்களவருக்குரியது அதில் நாம் பகிரங்க கருத்து கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறி தந்திரமாக தப்பித்துக்கொண்டார், பின் ஜே.ஆர் கொடுத்த உலங்கு வானூர்தியில் பறந்து சென்றும் காட்டினார். சிங்கள இனவாதிகள் வாக்கையும், கணிசமான தமிழர் வாக்கையும் பெற இதுதான் சிறந்த தந்திரமான பதில் என்பது அன்று அமிர்தலிங்கத்திற்கு ஜே.ஆர் காட்டிய வழி.

கூட்டமைப்பு புலிகளுடன் தொடர்புடைய கட்சியென்று சிங்களவரிடையே வர்ணிக்கப்பட்டது. அவர்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அதற்கு அடுத்த பக்கமாக சிங்கள இனவாதிகளின் வாக்குகள் திரும்பும். ஆகவே கூட்மைப்பினரை மதில்மேற் பூனையாக இருங்கள் என்றே மகிந்தவும், சரத்தும் கேட்டிருப்பார்கள். அதுதான் கூட்டமைப்பு முடிவெடுக்க தயங்குவது போல காட்டுகிறது. அது எந்தப்பக்கமும் பாயாது சுவரிலேயே இருப்பது இத்தகைய எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. முடிவெடுக்க முடியாத கூட்டமைப்பு இதுவரை தாம் பேசியதையாவது மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

இன்னும் எத்தனை காலம்தான் இரகசியப் பேச்சுக்களை நடாத்தப் போகிறார்கள்…

மகிந்தவின் தோல்வி கருணா, பிள்ளையான், டக்ளஸ், சித்தாத்தன் போன்றோரின் அரசியல் எதிர் காலத்திற்கு சவாலாக அமையுமா என்று யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் அவர்கள் சிந்தித்துள்ளது தெரிகிறது.. அவர்கள் அதிபர் தேர்தலில் பாரிய முழக்கங்கள் போடாமல் இருக்கிறார்கள். சரத் பொன்சேகா வென்றால் அவர் பக்கம் சாய வசதியாக அடக்கி வாசிப்பது தெரிகிறது..

ஆக…

சிறீலங்காவில் நடப்பது அப்பட்டமான அரசியல் மட்டுமே…

புலம் பெயர் தமிழர் வீணாக உணர்ச்சி வசப்பட்டு இரத்தக் கொதிப்படையாது, வரலாற்றை உள்ளபடி தெரிந்து, அமைதியாக சிந்தித்து நிதானமாக நடப்பதே புத்திசாலித்தனமானது..

1948 முதல் தேர்தல் முடிந்ததும் சிங்கள இனவாதிகள் கொண்டாட்டம் போடுவார்கள்…

அப்போது கொழும்பில் உள்ள தமிழருக்கு அடிப்பது அவர்களுடைய தேசிய இயல்பு..

27ம் திகதி தமிழருக்கு அடி விழுகிறதா இல்லையா என்பதைப் பாருங்கள்..

புலிகளை வென்றபின் சிங்கள இனவாதம் திருந்திவிட்டதா இல்லையா என்பதைப் பார்க்க அதிபர் தேர்தலில் வாக்களிப்பதல்ல அளவுகோல்.. தேர்தலுக்கு அடுத்தநாள் கொழும்பில் தீப்பிடித்து எரியும் சைவக்கடை நெருப்பே அதற்கான அளவுகோலாகும்..

தேர்தலுக்கு முன் எரிமலையாகக் கக்கியுள்ள கூட்டமைப்பின் உள்ளக நெருப்பா ?

எரியக்கூடிய அபாயத்தில் உள்ள கொழும்பு சைவக்கடை நெருப்பா ?

காலம் பல கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டது..

இதற்கும் அதனிடம்தான் பதில் இருக்கிறது..

அலைகள்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*