TamilSpy

பொழுது போக்கு இணையம்…

க.தேவதாசன் என்ற ஒரு கைதியின் குரல்!!

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர்.

வெற்றுவாக்குறுதிகளைச் சரமாரியாக அள்ளி வீசுகின்றனர். இத்தேர்தல் மூலம் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் உரிமை உணர்வை உரசிப்பார்க்கப்போகிறார்களாம்.

இப்பொழுது பேரினவாதம் சமாதான சகவாழ்வு பற்றி பிரசங்கம் செய்கிறது. ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் சமாதான சகவாழ்வு ஒருபொழுதும் இருக்கமுடியாது. இணக்கப்பாட்டு அரசியல் என்பது இருதரப்பில் இருந்தும் வரவேண்டும்.

மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தமை, அவர்களில் கணிசமானேரைப் பலவந்தமாக நாடு கடத்தியமை, ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவந்தமை, பல்கலைக்கழக அனுமதிக்குத் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியமை, காலத்துக்கு காலம் இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டமை, தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவியமை, யாழ்பாண நூலகத்தை எரித்தமை, யுத்தத்தின் பெயரால் சுமார் இரண்டு இலட்சம் அப்பாவித் தமிழரை கொன்று குவித்தமை உட்பட சிங்களப் பேரினவாதத்தின் கடந்த ஆறு தசாப்த காலத் தமிழின விரோத வெறியாட்டத்தை நீண்ட பட்டியலிடலாம்.

இவ்வளவும் நடந்துவிட்ட பிறகும் இப்பொழுதுகூட அரசியல் இணக்கப்பாடு சாத்தியம்தான். ஆனால் இது நிகழவேண்டுமாயின் இதற்கு இடையூறாக இருந்துவரும் சிங்கள பேரினவாதம் சாகவேண்டும். அதாவது சிறீலங்காவின் சிந்தனையும் சொல்லும் செயலும் முழுமையாக மாறவேண்டும்.

அறுபது ஆண்டுகளுக்குமுன் இணக்கப்பாட்டு அரசியலை தமிழ்தேசியம் வெளிப்படுத்தியது. பேரினவாதம் அன்று அதை அலட்சியப்படுத்தியது. துன்பின்னர் அகிம்சை போராட்டத்தைத் தமிழ் தேசியம் ஆரம்பித்தது. அரச பயங்கரவாதத்தைப் பிரயோகித்துப் பேரிளவாதம் அதனையும் நசுக்கியது.

இதனையடுத்தே மாற்றுவழியின்றித் தமிழ் தேசியம் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தது. இதுவே இலங்கைத் தீவின் இனவிவகார வரலாறு. இதையாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனாலும், ஆயுதபோராட்டத்திற்கு வழிகோலிவிட்ட பேரினவாதம், ‘தமிழ்ப் பயங்கரவாதம்’ என அதற்கு பெயர் சூட்டி தனது வரலாற்றுத் தவறை மூடிமறைக்க முயன்றது.

தமிழ் தேசியத்தின் தன்னுரிமைப் பொரில் ஆயுதமேந்தியோர் மற்றும் அதற்கு உதவிசெய்தோரைப் பயங்கரவாதிகள் என்ற பெயருடன் சிறீலங்கா பிடித்து வைத்திருக்கிறது. விளக்கமறியலில்லா பலநூறுபேரும் தடுப்பு காவலில் பலஆயிரம் பேரும் உள்ளனர். இவ்விதம் கைது செய்து அடைத்துவைத்திருப்போரைத் தனிப்பட்ட சட்டவிரோதிகளாகக் குற்றஞ்சுமத்தித் தண்டிக்க சிறீலங்கா விரும்புகிறது. இந்நடைமுறை பேரினவாதிகளின் பழிவாங்கும் மனநிலையை தெட்டத்தெளிவாகப் பறைசாற்றுகிறது.

சட்ட நீதியின் சுதந்திரத்தன்மை பற்றியும், அதில் அரசின் தலையிடாத்தன்மை பற்றியும் சிறீலங்கா இன்று உலக அரங்கில் உரத்துப்பேசுகிறது. அதேவேளை , ‘யுத்தத்தில் வென்றதைப்போலத் தமிழ் மக்களின் மனதையும் வெல்லவேண்டும்’ என்று உள்ளுரில் உருக்கமாகப் பேசுகிறது. இதுதான் பேரினவாதத்தின் சந்தர்ப்பவாதம். தமிழ் தேசியத்தின் எதிர்காலம் என்பது பேரினவாதம் போடும் பிச்சையல்ல. சுமாதானம், சகவாழ்வு, அரசியல் இணக்கப்பாடு என்பன மீத சிறிலங்காவுக்கு உண்மையான பற்றிருந்தால், அதை செயலில் காட்டவேண்டும். பயங்கரவாதிகள் என்ற பெயருடன் சிறீலங்கா சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாடும் அரசியல் கைதிகள் விடயத்தில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும். சட்ட நீதி பற்றிக் கதையளப்பதையும் கைவிட வேண்டும்.

அவசியப்பட்ட பொழுதெல்லாம் ஆட்சியாளருடன் அநுசரித்துப்போக சிறீலங்காவின் சட்டநீதி என்றாவது தயங்கியதுண்டா? தேடப்பட்ட காலத்தில் தப்பியோடிய Nஐவிபி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மீண்டும் அரசியல் செய்வதற்காக இலங்கைக்குத் திரும்பிவர உடன்பட்டமை, தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த கைதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டமை, கடவுச்சீட்டு மோசடியில் கைதாகி லண்ட்டன் சிறையில் ஆறுமாதம் அடைபட்டு திரும்பிய கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கியமை என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆள்வோரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு சிறீலங்காவின் சட்ட நீதி அனுமதிதர மறுத்ததுண்டா? வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படுவதை சிறீலங்கா விரும்புகிறதா? அது உண்மையில் அடைத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகள்’ அனைவரையும் அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகவே விடுதலை செய்யவேண்டும்! இதே காரணத்தின் நிமித்தம் நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் தண்டனை அனுபவித்து வருவோரையும் இதுபோல விடுவிக்கவேண்டும்.!

உலக விவகாரங்களில் முக்கிய காலகட்டங்களில் சிறீலங்கா துணிச்சலான முடிவுகளை எடுத்து சர்வதேசத்தின் மத்தியில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்திருப்பது என்னவோ உண்மைதான். முழு ஆசியாவையும் ஆக்கிரமிக்க ஆசைப்பட்ட ஹிட்லரின் கூட்டாளியான யப்பான் தேசம் ‘மன்னிக்கப்படவேண்டும்’ என்று சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் வாதாடிய வென்றதாம் சிறீலங்கா.

இலங்கைத் தீவை அடிமைப்படுத்தப்போர் தொடுத்த அந்நிய இனத்தவரை அன்று மன்னித்த சிறீலங்கா, இலங்கைக்குள் அடக்குமுறைக்கெதிராகப் போர் தொடுத்த அயல் இனத்தவரை இன்று தண்டிப்பது ஏன்?. இது எந்தவகை நீதி? உலக அரங்கில் நல்ல பிள்ளை வேடம் போடும் சிறீலங்கா உள்ளுரில் தனது பேரினவாதப் போக்கை கைவிடத் தயாரா? முனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*