TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐ.டி. ரெய்டுகள் தினகரனுக்கு சாதகமா? பாதகமா?

“வரலாறு காணாத வேட்டை”

“187 இடங்களில் அதிரடி சோதனை”

“சூறாவளியாய் சுழன்றடித்தது ரெய்டு”

இப்படியெல்லாம் உற்சாகமாக தலைப்புகள் கொடுத்து மீடியாக்கள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தினகரனும் ரெய்டுக்கு ஆளான அவர் சார்ந்த ஆட்களும் கொஞ்சம்கூட பரபரப்பில்லாமல் அனைத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோ, முன்பு நடத்திய ரெய்டுகள் என்னாயிற்று? அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்கிறார்.

திருமா, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ரெய்டுகளை தினகரனுக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றே குற்றம்சாட்டுகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியே தினகரனின் பாஜக எதிர்ப்பு நிலையை வியந்து பாராட்டினார். தினகரனுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறினார்.

இதற்கிடையே தினகரன் தனது மனைவியோடு பசுமாட்டுக்கு பூஜை செய்து ரெய்டுகளை பயங்கரமாக கிண்டலடித்துள்ளார். இதுபோன்ற ரெய்டுகளும், சிறையும் தங்களுக்கு புதிதல்ல என்றும், தங்களை அச்சுறுத்தி அரசியலில் இருந்து ஒதுக்கவே மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தினகரன் பேட்டி கொடுத்தார்.

மறுபக்கம், ஜெயா டி.வி.யில் சோதனை நடத்திய அதிகாரிகள் செய்தி ஒளிபரப்பையும், தினகரன் பேட்டியையும் ஒளிபரப்ப தடை விதித்துள்ளனர். இது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என்றாலும் அதை துணிச்சலாக செய்துள்ளனர். ஒளிபரப்பை நிறுத்த அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.

வருமானவரித் துறையினரின் இந்த சோதனைகள் தினகரனையும் அவருடைய குடும்பத்தினரையும் மிரட்டுவதற்காக நடத்தப்பட்ட பட்டவர்த்தனமான பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களுக்கு புரிகிற வகையிலேயே மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கைகள் அளவுக்கு மீறினால் அதுவே சம்பந்தப்பட்டவர் மீது அனுதாபம் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பதற்கு சின்னதாய் ஒரு உதாரணம் சொல்லலாம்…

திருடன் ஒருவனை ஊர்மக்கள் கையும் களவுமாக பிடித்து பொது இடத்தில் கட்டிவைத்து உதைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நேரம் வரை வேடிக்கை பார்ப்பவர்கள் ரசிப்பார்கள். அளவுக்கு அதிகமாக திருடனை அடித்தால், “அட விடுங்கப்பா செத்துறப் போறான்” என்ற அனுதாபக் குரல்கள் கேட்கத் தொடங்கும்.

அதுபோலத்தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர் அணியைக் காட்டிலும் அதிகமாக வாக்குகளை தினகரன் பெறுவார் என்ற நிலை வந்தபோது பணப்பட்டுவாடா புகார் கூறி இடைத்தேர்தலை ரத்து செய்தனர்.

அதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கு ஆதாரம் கிடைத்ததாகவும், அந்த பட்டியலில் முதல்வர் எடப்பாடியின் பெயர் முதலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

சேகர் ரெட்டி, அன்புநாதன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியதும் ஆவணங்களும் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதும் என்னாயிற்று என்றும் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். ஆனால், இதுவரை அந்த வழக்கிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில்தான் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் தரப்பு எடுத்துவைத்துள்ள ஆதாரங்கள், முன்வைத்த வாதங்கள் அனைத்தும் எடப்பாடி, பன்னீர் அணிகளுக்கு இடையூறாக இருக்கும் நிலையில் தினகரன் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் சோதனை ஏவப்பட்டிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சோதனைகள் தினகரனும் அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்கொண்ட விதம் அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினரிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அவர்கள் தினகரனை சுபாஷ் சந்திர போஸ் லெவலுக்கு பில்டப் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

தனக்கு நேருகிற நல்லது கெட்டதுகளை துணிச்சலோடு சிரித்த முகத்தோடு எதிர்கொள்ளுகிற துணிச்சலோடு எதிர்த்து நிற்கிற அரசியல்வாதிகளை அவர் சார்ந்த தொண்டர்கள் நேசிக்க தொடங்கிவிடுவார்கள்.

அந்த வகையில் பயந்து மிரண்டு யாரிடமும் பேரம் பேசாமல் மண்டியிடாமல் ஐ.டி.சோதனைகளை தினகரன் எதிர்கொள்வதாகவே தினகரன் ஆதரவாளர்களும் அவர் சார்ந்த சமூகத்தினரும் கருதுவதாக தெரிகிறது.

பாஜக இதை கருப்புப்பண வேட்டையின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டாலும், சோதனை முடிவில் எவ்வளவு கருப்புப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது பகிரங்கமாக வெளியிடப்புடமா என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamizhagam

Your email address will not be published. Required fields are marked *

*