TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசதலைவர் தேர்தலும், வாரிசு அதிகாரமும், பொன்சோகாவும்!

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்குமிடையே கடும் போட்டி காணப்படுவது புலப்பட ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்களை அரசாங்கம் அறிவித்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீளவும் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டன.

ஆனால் அண்மைய கருத்துக்கணிப்புக்கள், மற்றும் புலனாய்வு அறிக்கைகள் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளன. 52 வீதமான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெறுவார் என அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் கருத்துக்கணிப்புக்களும் புலனாய்வு அறிக்கைகளும் ஆளும் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதுவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிலை தடுமாற வைத்துள்ளது. அந்த உண்மையை ஜீரணிக்க முடியாது அவர் கடும் சினமடைந்துள்ளார். இதனால் இவ்வாறு கூறும் அமைச்சர்கள் மற்றும் நபர்கள் மீதும் அவர் சீறிப் பாய்ந்துள்ளார்.

“கடந்தவாரம் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தேர்தல் நிலைவரம் குறித்து உரையாடுகையில் ஜெனரல் சரத் பொன்சேகா 52 வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவார் என புள்ளிவிபரங்களில் உறுப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கின் நிலைமை படுமோசமாக ஜெனரலுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. காவற்துறைப் பொறுப்பதிகாரிகளும், ஊடகத்துறையினரும் சரத் பொன்சேகாவே வெற்றிப் பெறுவார் என கூறுகின்றனர். இதனால் நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ஜனாதிபதி “ஓய் உமக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறி லக்ஷ்மன் யாப்பாவை திட்டித் தீர்த்திருக்கிறார்.

உண்மையை ஜீரணிக்க முடியாத ஜனாதிபதியின் இந்தப் போக்கு ஆளும் கட்சிக்குள் அதிருப்திகளை உருவாக்கியிருக்கிறது. ஏற்கெனவே ஜனாதிபதியாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்குள் பூசல்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்து வரும் விடயங்கள் கணக்கில் கொள்ளப்படாதிருப்பது நெருக்கடிகளை வளர்த்துச் செல்வதாக இருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கி, ஜெனரல் சரத் பொன்சேகாவை விமர்சித்தார் எனில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் எண்ணத்தை கைவிட வேண்டியேற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அரசாங்க அமைச்சர்களுடன் இடம்பெற்ற உட்தரப்பு பேச்சுவாரத்தையொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்ச, ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் மைத்திரிபால சிறிசேன அங்கு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் ஜனாதிபதிக்கும் அறிவித்திருக்கிறார். ஏனினும் பிரதமர் பதவியை குறிவைத்து செயற்படும் கோத்தபாய ராஜபக்சவோ தனது நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொண்டதாக இல்லை. நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றிலும் இதேபாணியில் அவர் உரையாற்றியிருக்கிறார்.

இதேவேளை அரச நிதி, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத் தகவல் திணைக்களம், தேர்தல் பிரசார அலுவலகமாகவே மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட மேற்கொண்டு வருவதுடன் அரசியல் நியமனம் பெற்ற தயாரத்ன ரட்டகெதர, தெசத்திய பத்திரிகையின் ஆசிரியர் வசந்தபிரிய ராமநாயக்க, பத்திரிகை அதிகாரி கே.பி.ஜயந்த, இலங்கை நிர்வாக சேவையின் உதவிப் பணிப்பாளரான ஹில்மி மொஹமட் ஆகியோர் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டவுடன் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனு~ பெல்பிட்ட, ஜனாதிபதிக்கு புகழை ஏற்படுத்தும் வகையில் குறுந்திரைப்படங்கள், நடப்பு விவகார நிகழ்ச்சிகள் மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை தயாரித்ததுடன், இதற்கு மேலதிக செலவுகளுக்காக திறைசேரியிடமிருந்து 20 லட்சம் ரூபா பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி, ஐரிஎன், தொலைக்காட்சிகளிலும் பசில் ராஜபக்சவால் கொள்வனவு செய்யப்பட்ட சுவர்ணவாஹினி தொலைக்காட்சிகளிலும் ஜனாதிபதி அவரது சகொதரர்களான கோத்தபாய மற்றும் பசில் ஆகியோரது பிரச்சாரங்கள், விளம்பரங்கள் அளவு கணக்கின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் லேக்ஹவுஸ் பத்திரிகைகளும் வெறும் துண்டுப்பிரசுரங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. இதன் ஒரு அம்சமாக “ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமாயின் ராஜபக்ச குடும்பத்தினரை தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசியர் ஆரியரத்ன எத்துகல, ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கூறியிருக்கிறார்.

களனி பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட மக்கள் கருத்தாய்வொன்றின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது எனவும் ஆரியரத்ன எத்துகல, ஊடகத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளர்.

இந்த நிலைமையானது ஜனாதிபதியின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார். ஆரியரத்ன.

பசில், கோத்தபாய, ஜனாதிபதியின் மகன் நாமால் போன்றவர்களின் விடயங்களில் தலையிட்டு, அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள முடியாது என அமைச்சர் அனுரப்பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டுள்ளதோடு பணிப்பாளரின் இந்த யோசனையையும் புறந்தள்ளியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் ‘இளைஞர்களுக்கான எதிர்காலம்’ என்ற விளம்பர நிகழ்ச்சிக் காரணமாக கூட்டுத்தாபனம் எதிர்நோக்கும் நிதி நிலைப்பாதிப்பு குறித்தும் ஆரியரத்ன இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற விளம்பர நிகழ்ச்சியில் நடிக்குமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தான் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று கிரிக்கெட் வீரரான முத்ததையா முரளிதரன் பதிலளித்துள்ளார். இதன் பின்னர் முரளிதரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்நிகழ்ச்சியில் நடிக்குமாறு முரளிதரனைப் பலவந்தப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே ‘இளைஞர்களுக்கான எதிர்காலம்’ என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த விளம்பரப்படத்தில் நடித்த நடிக நடிகையர்களுக்கான இராப்போசன விருந்து ஒன்று பிங்கார எனும் விடுதியில் அதன் தலைவர் நாமல் ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவரும் நாமல் ராஜபக்ஷவும் இரவு விடுதிக்கு வெளிப்புறமாக இருந்த வாகனத் தரிப்பிடத்தில் தவறான முறையில் காணப்பட்ட போது, கிராமவாசிகளால் துரத்தப்பட்டுள்ளனர். நடிகை உள்ளாடையுடன் வாகனத்துள் இருந்து தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஒரு பேச்சு அடிபடுகிறது.

நாமலைப் பொறுத்த அளவில் இது ஒன்றும் புதிய பெரிய விடயமல்ல. அவர் பணத்தினால் எல்லாவற்றையும் சாதித்து விடக் கூடியவர். வர்த்தக உலகில் மிஸ்டர் டென் பேர்சன்ட் என குறிப்பிடப்படும் பசில் ராஜபக்சவை மிஞ்சுமளவில் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஸபக்ச மாஸ்டர் டென் பேர்சன்ட் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது ஜனாதிபதியின் அதிகாரத்தை கையில் எடுத்த வியாபாரியாக மாறியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூட்டிக்காட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்கென நாமல் வர்த்தகர்களில் பல கோடி ரூபாய்களை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள மங்கள, தந்தை வெற்றிப் பெற்றாலும் தோற்றாலும் நாமால் ராஜபக்ச சுமார் எட்டு தலைமைமுறைக்கான பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான நாளிலிருந்தே தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கடத்தி வைத்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து வந்தவர்கள் இவர்கள். பணம் கொடுக்காத காரணத்தால் கொல்லப்பட்டவர்களும் உண்டு. ஏனினும் தற்போது நிலைமைகள் தலைகீழாகத் தொடங்கியுள்ளன. அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று இவர்கள் எவ்வாறு பலவந்தமாக பணம் பிடுங்கி வந்திருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் உறவினரான மேர்சன்ட் வங்கியின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவினால் செலிங்கோ இன்வஸ்மன்ட் நிறுவனத்திடமிருந்து பலவந்தமாக கொள்வனவு செய்த பங்குகளை செலிங்கோ நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவிற்கு மீண்டும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனக்க ரத்னாயக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி லலித் கொத்தலாவலவிற்குச் சொந்தமான 39 வீத பங்குகளை செலிங்கோ இன்வஸ்மட்ன் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்திருந்தார்.

இதனடிப்படையில், செலின்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான த பினான்ஸ் நிறுவனம் அலரி மாளிகைக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டுவரும் பின்காரா உணவு விடுதி என்பன மறைமுகமாக ரத்னாயக்கவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. கோல்டன் கீ நிறுவனத்தின் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற காலப்பகுதியிலேயே இந்தப் பங்குப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சிலிங்கோவின் தலைவர் கொத்தலாவல சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பங்குகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் வைப்பாளர்களினால் நீதிமன்றத்தில் தகவல்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த 39 வீத பங்குகளை செலிங்கோ இன்வஸ்மன்ட் நிறுவனத்திற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நீதி தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினர்களுக்கும் கிடைக்குமா?

சிறிலங்காவில் போரின் பின்னதாக மஹிந்த குடும்பத்தினரை அரசபரம்பரம்பரையாகக் கட்டமைக்கும் பிரச்சாரமும், அதிகார வாரிசு உருவாக்கமும், மிக உச்சமாக நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரம் எவ்வாறு வடிவமைக்கப்டுகிறது என்பதையும், அதற்கு உடனிருப்பவர்களையும் கிழே வரும் பாடலில் காணலாம்.

இலங்கன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*