TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்

தமிழ் சினிமாவில், வெற்றிக்கான வழிகளில் ஒன்று நகைச்சுவை. எப்படியோ எதையோ எடுத்து, படம் பார்ப்பவர்களை அந்த நேரத்தில் சிரிக்க வைத்து விட்டால் கூட போதும், படம் ஓரளவு வெற்றி பெற்று பெரும்பாலான சினிமா ரசிகர்களை அடைந்துவிடும். ஆனால், அந்த வழியும் கூட அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் கைவருவது இல்லை. தன் வெற்றிக்காகவும், இன்னும் அதிகமான ரசிகர்களை சென்றடையவும் இந்தப் படத்தை அதர்வா தேர்வு செய்திருக்கிறார் போல. ‘ஓடம்’ இளவரசு இயக்கியிருக்கும் நகைச்சுவை – காதல் (?) படம் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. தலைப்பில் உள்ள ‘ஜெமினிகணேசனுக்கு’ மட்டுமே படத்தில் காரணம் இருக்கிறது. ‘சுருளிராஜன்’ வெறும் கவர்ச்சியான தலைப்புக்காக மட்டுமே இருக்கிறது.

‘டைட்டில்’ வடிவமைப்பும் இசையும், ‘காதல் கிரீட்டிங் கார்டு’ உணர்வோடு இருக்க, மிக அழகாக தொடங்குகிறது படம். தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பிதழ் தர வருகிறான் நாயகன். அவர்களுடனான காதல் ஃப்ளாஷ்-பேக் தான் கதை. காதலைப் பிரித்தது பெற்றோரா, சூழ்நிலையா, விதியா, எதுவுமில்லை, நாயகனே தான். நகைச்சுவை மட்டுமே முக்கியம் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள். ஓரளவு அந்த எண்ணம் வெற்றி பெற்றிருக்கிறது. காதல் காட்சிகளும் நகைச்சுவையாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே வண்ணமயமாக எடுக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருந்தாலும், சில காட்சிகளில் வண்ணங்கள் சற்று கண்ணைக் கூச வைக்கின்றன.

நல்ல பையனாகவே பார்த்துப் பழகிவிட்ட அதர்வாவை ஒரு ‘பிளே பாய்’ ஆக ஏற்றுக்கொள்ள சற்று நேரமாகிறது.அவரது நடிப்பு எப்பொழுதும் போல நிறைவு. சூரியின் நகைச்சுவை பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஆனாலும், ஆங்கில வார்த்தைகளையும், எண்களையும் தவறாக உச்சரித்து, அதை நகைச்சுவை என்று சொல்வது எரிச்சலைத் தருகிறது. சூரி, தன் நகைச்சுவைப் பாணியை புத்தணர்விக்க வேண்டிய நேரமிது. ‘மொட்டை’ ராஜேந்திரன் இருக்கிறார். அவரது இருப்பு சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ரெஜினா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ஆகிய நான்கு நாயகிகளையும் மிக அழகாக காட்டியிருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் அழகிலும் சிறந்ததை உணர்ந்து பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அவர்களை அழகாய் காட்டியதே போதுமே, எதற்காக கருத்தவர்களை கிண்டலாக காண்பிக்க வேண்டும்? மக்கள் மத்தியில் கருத்துகள் மாறி வரும் வேளையில், இது போன்ற பழைய, ரசிக்க வைக்காத நகைச்சுவை யுத்திகள் தேவையா?

ஒரு காட்சியில், ஆம்னி வேனில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருக்கும் ரவுடிகளிடம், கருணை இல்லத்துக்கு உதவிகேட்டு உண்டியலை நீட்டுகிறார் ஒரு நாயகி. என்ன நடக்கும் என்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. நாயகனுக்கு சண்டைக்காட்சி வைக்க நாயகியை இவ்வளவு முட்டாள்தனமாக காட்ட வேண்டுமா? இதைப் போலத்தான் இருக்கிறது அவர்கள் காதலில் விழும் காட்சிகளும். “உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் என் பெஸ்ட் ஹஸ்பண்ட் ஆகணும்” என்று ஒரு வசனம். பல நண்பர்களில் சிறந்தவரை ‘பெஸ்ட் ஃப்ரெண்ட்’ என்று சொல்லுவோம். ‘பெஸ்ட் ஹஸ்பண்ட்’ என்றால்? நகைச்சுவை என்று முடிவெடுத்துவிட்டதால் எந்த கவலையும் இல்லாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். நாயகனுக்கு காதல் செய்வதைத் தவிர வேறு வேலை இல்லை, நாயகனின் தந்தை எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, இப்படி, படத்தில் எந்த வித தர்க்க நியாயங்களும் இல்லை.

இமானின் இசை படத்திற்கு படம் சுமாராகிக் கொண்டே செல்கிறது. ‘அம்மு குட்டியே’ தவிர பிற பாடல்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அதிலும் ‘வெண்ணிலா தங்கச்சி’ பாடல் ஏன் வந்தது என்று புரியவில்லை. பாடலும், படமாக்கிய விதமும் மிகப் பழையதாக இருந்தன. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, காட்சிகளை வண்ணமயமாக ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது. முதல் பாதியில் மதுரை என்று சொல்லி, வேறு இடத்தில் படமாகியிருப்பதை சரி செய்யவோ என்னவோ, ‘க்ளோஸ்-அப்’ ஷாட்கள் அதிகமாக இருக்கின்றன. பிரவீன்.K.L, திரைக்கதைக்கேற்ப சரியாக தொகுத்திருக்கிறார்.

படத்தை, பார்ப்பதற்கு முன்னும் பார்த்த பின்னும் பெரிதாய் யோசிக்காமல் பார்க்கும்போது மட்டும் சிரிக்க ஏற்ற படம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Movie Review

Your email address will not be published. Required fields are marked *

*