TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பண்டிகை – விமர்சனம்

தமிழில் ஒரு முழுமையான, தரமான சண்டைப்படம் வந்து சில பல வருடங்கள் ஆகிவிட்டன என்பது ‘பண்டிகை’ பார்க்கும்பொழுது நமக்கு உரைக்கிறது. ‘தடையற தாக்க’ ஒரு உதாரணம். பொழுதுபோக்குப் படங்களில், அதுவரை நாயகியுடன் சேட்டைகள் மட்டும் செய்யும் நாயகன் திடீரென வில்லன்களுடன் போடும் சண்டையைக் குறிப்பிடவில்லை. நம்பத்தகுந்த, சுவாரசியமான சண்டைக்காட்சிகள், அதற்கான பின்னணி, அதன் விளைவுகள் என ஒரு முழுமையான, தரமான சண்டைப்படத்தைக் கூறுகிறோம். அப்படி ஒரு படமாய் வந்திருக்கிறது ஃபெரோஸ் இயக்கி, கிருஷ்ணா நடித்திருக்கும் ‘பண்டிகை’.

சிறு வயதிலிருந்தே சின்னச் சின்ன தேவைகளுக்கும் பற்றாக்குறைகளுக்கும் சண்டை போட்டே பெற வேண்டிய சூழலில் வளர்ந்த ஒருவன், வளர்ந்த பின், நல்ல முறையில் வாழ நினைக்கிறான். அப்பொழுது, அவனுடைய இன்னொரு தேவைக்கு சண்டை போட்டால் பணம் கிடைக்கும் என்ற நிலை வர, மீண்டும் இறங்கும் அவன் சந்திக்கும் பிரச்சனைகளும், அவற்றை அவன் கையாளும் விதமுமே பண்டிகை. ‘பண்டிகை, பொம்மை, முந்திரி சேட்டு, முனி, தாதா’ இன்னும் பல வார்த்தைகளும், கதாபாத்திரங்களும், பின்னணியும் நமக்கு மிகப் புதிதாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. அநீதியைப் பார்த்ததும் பொங்கி அடிக்கும் சண்டை என்றில்லாமல், சண்டைக்கான காரணம், சூழ்நிலை, சண்டையின் தீவிரம், ஏற்படும் காயங்கள் என அனைத்தும், படத்தை உண்மைக்கு மிக அருகில் வைக்கின்றன. ‘பண்டிகை’யின் பின்னணி, இடைவேளை காட்சி, பணம் திருடும் காட்சி என ஆங்காங்கே வரும் விறுவிறுப்பும் பரபரப்புமான காட்சிகள், மற்ற தொய்வுகளை மறக்க வைக்கின்றன. சண்டைக்காட்சிகளில் விழும் அடிகள் நம் மீது விழுவது போன்ற அளவுக்கு நிஜமாய் இருக்கின்றன.

நன்றாகச் செல்லும் படத்திற்கு பாடல் காட்சிகள், சிறிதாய் இருந்தாலும் இடைஞ்சலாகத்தான் இருக்கின்றன. அதுவும், ஒரு மிகப்பெரிய வேலையை செய்துவிட்டு குத்துப்பாட்டுக்கு ஆடுவதை எப்பொழுது தான் நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை. நன்றாகவும் இல்லாமல், திரைக்கதைக்கும் உதவாமல் எதற்கு அந்த பாடல் என்று புரியவில்லை. உயிரைப் பணயம் வைத்து முயற்சிகள் எடுத்த பின், மனம் திருந்துவது முழுமையாய் இயல்பாக இல்லை. ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள் பல இருப்பதால் பெரியவர்களின் துணையோடு குழந்தைகள் (UA) பார்த்தாலும் பாதிப்புகள் இருக்கும்.

கிருஷ்ணா, நடிப்பிலும் திரை இருப்பிலும் பல படிகள் முன்னேறியுள்ளார். சண்டைக்காட்சிகளிலும் அவரது உழைப்பு, நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது. சரவணன், நித்தின் சத்யா, கருணாஸ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனந்தி, அழகாக வந்து செல்கிறார். பாண்டியின் நகைச்சுவை முயற்சிகள் சில இடங்களில் மட்டும் வேலை செய்திருக்கின்றன. மதுசூதனனும், அந்த இரட்டை வில்லன்களும் மிரட்டியிருக்கிறார்கள். படத்தில் கையாண்ட நுண்விவரங்கள், ஒளி, அளவான வசனங்கள், படத்தொகுப்பு யுக்திகள் என, இயக்குனர் ஃபெரோஸ் ஒரு மிக அழுத்தமான அறிமுகத்தை தனக்கு உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அரவிந்தின் ஒளிப்பதிவு கதையின் நிறத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. பரபரப்பான காட்சிகளில் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. பிரபாகரின் படத்தொகுப்பு, படத்தின் தோற்றத்தை மெருகேற்றியிருக்கிறது. R.H.விக்ரம், பின்னணி இசையில் விறுவிறுப்பைக் காட்டியிருக்கிறார். பாடல்கள் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம், அல்லது இப்படி ஒரு படத்தில் இல்லாமலேயே கூட இருபித்திருக்கலாம்.

இது, அதிரடியான அடிதடி பண்டிகை, சிவப்பு வண்ணம் தெறிக்க கொண்டாடலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Movie Review

Your email address will not be published. Required fields are marked *

*