TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வனமகன் – விமர்சனம்

நடித்திடும் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்னும் ஆர்வம் உள்ள தமிழ் திரைப்பட நடிகர்களில் ‘ஜெயம்’ ரவி ஒருவர். இன்று, திரைப்பட ரசிகர்களும் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். இயக்குனர் விஜய், தன் ஒவ்வொரு படத்திலும் தேர்ந்தெடுக்கும் களம் புதிதாக இருக்கிறதோ இல்லையோ, வேறு வேறாக இருக்கும். ஏதாவது ஒரு புதிய களம் அல்லது கதாபாத்திரம் கொண்ட படங்கள் தான் இன்று அதிக அளவில் வெற்றி பெறுகின்றன. வித்தியாசம் என்பது ஒப்பனையில், உருவத்தில், தோற்றத்தில் இருந்தது பழைய காலமாகி கதையில், களத்தில், கதாபாத்திரத்தில் இருக்க வேண்டிய காலமாக ரசனை மாறியிருக்கிறது. ‘பேராண்மை’யில் ஏற்கனவே காட்டில் வாழும் இனத்தை சேர்ந்தவராக நடித்திருந்தாலும், அதற்கும் மேலே போய் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக ‘ஜெயம்’ ரவி, விஜய் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘வனமகன்’.

அந்தமான் காட்டில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ‘ஜெயம்’ ரவி, ஒரு விபத்தினால் சென்னையை சேர்ந்த மிகப்பெரும் தொழிலதிபராகிய சயீஷாவுடன் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். காட்டிலேயே வாழ்ந்த முரட்டு ஆளாகிய அவர், நகரத்தில் நடந்து கொள்ளும் விதம் பல கலாட்டாக்களை உண்டாக்குகிறது. அதே நேரம் அந்தமான் காவல்துறையும் அவரைத் தேடுகிறது. வழக்கம் போல காதலில் விழுந்தாரா, இல்லை மீண்டும் காட்டிற்கு சென்றாரா இந்த வனமகன் என்பதே படம். படத்தின் ஒளித்தரம், மெதுவான, சீரான வேகம், உணர்வுப்பூர்வமான வசனங்கள், ஆங்காங்கே நல்ல நகைச்சுவை என இயக்குனர் விஜயின் அத்தனை நல்ல விஷயங்களும் உண்டு. அதே போல, கதை புதியதாய் இல்லாமல் இருக்கிறது. அடுத்தடுத்து நடக்கப் போகும் விஷயங்களில் எந்த மறைவும் இல்லாமல், நாமே கணிக்க முடிவதால், நடக்கும் விஷயங்களில் உள்ள சுவாரசியமும் காட்சிகளின் அழகும் தான் படத்தை ரசிக்க வைக்கின்றன.

‘ஜெயம்’ ரவி எப்பொழுதும் போல தன் உழைப்பை முழுமையாய் கொடுத்திருக்கிறார். தோற்றத்திலும் நடிப்பிலும் சிறப்பு. சயீஷா ஒரு ‘சர்ப்ரைஸ்’. அழகும் நடனமும் கண்களிலேயே நிற்கின்றன. பிரகாஷ் ராஜிற்கு இது பெரிய வேலை ஒன்றுமில்லை. தம்பி ராமையாவின் இருப்பும் வசனங்களும் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. இவர் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறாரோ என்று தோன்றுகிறது. நல்ல நடிகர்களை அவர்களுக்கான தேவையும், விஷயமும் இல்லாமல் அதிகமாக பயன்படுத்துவது பின்னர் நடிகர் மீதான சலிப்பை ஏற்படுத்தி விடும். காட்டில் வாழ்ந்த பலசாலியான நாயகன் என்றாலும், சுவற்றை உடைத்தெறிவது, காரைத் தள்ளி விடுவது என சுலபமாக செய்வது சற்று யோசிக்க வைக்கிறது. பெற்றோர் இல்லாத பணக்கார நாயகி, ஒரு நேரத்திற்கு சாப்பிட இருபது வகைகள் செய்யப்படுவது, காட்டில் ஆலை தொடங்க அங்கு வாழும் மக்கள் அனைவரும் கொல்லப்படுவது என, வழக்கமான மிகையான விஷயங்கள் இருக்கின்றன. வசனங்களில் இருக்கும் கவனம் புதிய காட்சிகளை அமைப்பதிலும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜின் ஐம்பதாவது படம். ஆனாலும் வழக்கமான இசை. ‘எம்மா..அழகம்மா’ பாடல் மட்டும் நம்முள் சுற்றிவருகிறது. பின்னணி இசையும் அவரது வழக்கமான பாணி. மதன் கார்க்கியின் பாடல் வரிகள், இசையைத் தாண்டி கவனம் ஈர்க்கின்றன. புதுமை, அழகு, கருத்து என மூன்றும் கலந்து ரசிக்க வைக்கின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் ‘திரு’வின் ஒளிப்பதிவு. காட்டையும் சயிஷாவையும் அழகாய் காட்டியிருக்கிறார். சாதாரணமான காட்சிகளும் கூட சலிப்பேற்படுத்தாமல் படமாக்கியிருக்கிறார்.

மிக அருமையான படமில்லை என்றாலும் முழுமையான படம் வனமகன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Movie Review

Your email address will not be published. Required fields are marked *

*