TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விஜய்யின் தளபதி அவதாரம்..

கடந்த 21-ஆம் தேதி மாலை நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மெர்சல் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்தப் போஸ்டரில் கவனிக்கும்படியாக பல விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும், அனைவரையும் விவாத தளத்திற்கு அழைத்துச்சென்ற விஷயம் விஜய்யின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழியில் ஏற்பட்டிருந்த மாற்றம். ஆம், ‘இளையதளபதி’ விஜய் இப்போது ‘தளபதி’ விஜய் ஆகிவிட்டார். அடைமொழியில் தானே மாற்றம்; இதிலென்ன ஆச்சர்யம் என்று கேட்டு முடிப்பதற்குள், நெட்டிசன்கள் இளைய தளபதி விஜய்- தளபதி விஜய் ஆன செய்தி குறித்து திமுக செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை இணைத்து செய்திகளை உருவாக்கி வைரலாக்கி விட்டிருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், அக்கட்சியைச் சேர்ந்தவர்களால் தளபதி என்று அழைக்கப்படுவதால் அவரோடு, இந்த செய்தி இணைத்து வைத்து பேசப்பட்டிருக்கலாம். உண்மையில் தளபதி என்கிற பட்டம் ஸ்டாலினுக்கு மட்டுமே சொந்தமானதா? தளபதி என்கிற பட்டத்திற்குப் பின் திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது.

1938-ஆம் ஆண்டு இராஜாஜி கொண்டுவந்த இந்தித் திணிப்பை எதிர்த்து, திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி திராவிட இயக்கத்தின் சார்பில் நெடும்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழறிஞர்கள், பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நடைபயணத்தைத் தலைமை தாங்கிய பட்டுக்கோட்டை அழகிரி தான் அப்போது தளபதி என அழைக்கப்பட்டார். இந்த நடைப்யணத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடைபயணம் மேற்கொள்பவர்களின் பாதைகளில் செருப்பு மாலைகளை தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டனர். அப்போது பட்டுக்கோட்டை அழகிரி, இந்தித்திணிப்பின் அபாயம் குறித்து அவர்களிடம், “உங்களுக்காகவும் சேர்த்துத் தானே போராடுகிறோம், இந்தச் செருப்பை தோரணமாகக் கட்டியதற்குப் பதிலாக எங்களுக்குத் தந்திருந்தால், நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்” என உணர்த்தினார். பின் செருப்பு தோரணங்கள் கழற்றப்பட்டன.

இதே போல் 1940-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது திராவிடர் கழகத்தில் பேரறிஞர் அண்ணா தளபதி என அழைக்கப்பட்டார். 1980-களில் ஈழப்போராட்டங்களில் திமுகவும், திக-வும் இணைந்து செயல்படுகையில் தமிழினத் தலைவர் மு.கருணாநிதி என்றும், கீ.வீரமணி தளபதி என்றும் அழைப்பட்டார். திமுக-வில் இளைஞரணி தொடங்கப்பட்டு, அது தமிழகம் முழுவதும் பரவிய பின்புதான் மு.க.ஸ்டாலின் தளபதி என அழைக்கப்படுகிறார். திராவிட இயக்கங்களில் எப்போதும் தளபதி என்ற பெயர் தொடர்ச்சியாக இருக்கும். திராவிட இயக்கங்களின் போராட்டங்களையும், போராட்டக்குழுக்களையும் முன்னெடுத்துச் செல்பவர் தளபதி என்றே அழைக்கப்படுவார்.

1991-ஆம் ஆண்டு ரஜினி நடித்து தளபதி என்ற படம் வெளியாகி, பெரும் பாராட்டுகளைப் பெற்றிருந்தது. அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே திமுக-வில் மு.க.ஸ்டாலின் தளபதி என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதைய சூழலில் இந்த செய்தி பெரிதும் பேசப்படவில்லை.

1992-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமாகும் போது, அவருக்கு எந்தப்பட்டமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. விஜய் நடித்து வெளிவந்த விஷ்ணு திரைப்படத்திற்குப் பின் அவரது ரசிகர் ஒருவரின் வேண்டுகோள் கடிதத்தைத் தொடர்ந்து, விஜய் இளையதளபதி பட்டத்தை வைத்துக் கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இளையதளபதி என்ற பட்டம் தளபதி என்றாகியிருப்பது அவரது அரசியல் எண்ட்ரியாகக் கூட இருக்கலாம என அரசியல் வட்டாரங்களும், அவரது ரசிகர்களும் தெரிவிக்கின்றனர். உண்மையில் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அதற்கு அவரது திரைப்படங்களும், பொது இடங்களில் அவர் தன் கருத்துக்களைப் பதிவு செய்யும் விதமுமே சான்று.

நடிகர் சிம்பு பல வருடங்களாக லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் யங் சூப்பர் ஸ்டாராக பரிணமித்துக் கொண்டதை இந்த இடத்தில் பொருத்திக் கொள்ளலாம். காலத்திற்கேற்றாற்போல் அடைமொழிகள் மாறிக்கொண்டே இருக்கும். செய்யும் செய்கைகளும், கொண்ட கொள்கையுமே ஒருவரது பொதுவாழ்வின் நீரோட்டத்தைத் தீர்மானிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*