TamilSpy

பொழுது போக்கு இணையம்…

செல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு!

நாம் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பப் பொருட்களில், மிக அத்தியாவசியமானவயாக மாறிவிட்டன செல்போன்கள். எந்தச் சூழலிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போன செல்போன்கள், அவற்றிற்கே உரித்தான பின்விளைவுகளையும் கொண்டுள்ளன. கதிரியக்க பாதிப்புகள், மின்சாரத் தாக்குதல்கள் என பரவலாக சொல்லப்பட்டு வரும் எச்சரிக்கைகள், எங்கேனும் ஏற்பட்ட பாதிப்புகளின் செய்திகளாக நம்முன் வருகின்றன. இவற்றால் நேரடியாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த புரிதல்கள் நமக்கு இருந்தாலும், இன்னும் நமக்குத் தெரியாத ஏராளமான மறைமுக பிரச்சனைகள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றன.

வழக்கமான ஒருநாளில் தேவைக்கும் அதிகமாக செல்போன்களைப் பயன்படுத்தும் பெற்றோர்களா நீங்கள்? கண்டிப்பாக நீங்கள் இதைப் படிக்க வேண்டும். எப்போதவது உங்கள் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவதையோ, புலம்புவதையோ பார்த்ததுண்டா? அப்படி ஒன்று நடந்திருக்கக் கூடாது என்பதே எங்களின் விருப்பம். ஆனால், கடந்தகாலத்திலேயே தேங்கிவிடக் கூடாதென, தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் தங்களை ஒவ்வொருவரும் உட்படுத்தி வரும் நிலையில், மற்ற எல்லா விஷயங்களையும் விட தற்கால பெற்றோர்களின் ஈடுபாடானது செல்போன்களில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. வேலை காரணமாகவோ, குடும்ப சூழல்கள் காரணமாகவோ அல்லது ஏதாவதொரு திணிக்கப்பட்ட காரணங்களாலோ செல்போன் பயன்பாடானது சமூகத்தில் கூடிக்கொண்டே இருக்கிறது.

பெரும்பாலானவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு செல்போன் அல்லது கணினி உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் இடையூறுகளை அனுபவிப்பதை ‘டெக்னோஃபெரன்ஸ்’(Technoference) என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்த ஆய்வினை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினர் அறிவியலாளர்கள். இதன்மூலம் பெற்றோர்களின் அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடுகள், அவர்களது பிள்ளைகளுக்கு மனரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதனால் அந்தப் பிள்ளைகள் அதீத கோபம், ஹைப்பர் ஆக்டிவிட்டி எனப்படும் அதீத செயல்பாடுகள், புலம்புதல் மற்றும் கோழைகளாக மாறிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 170 பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் செல்போன்கள், டேப்லட்டுகள் மற்றும் மடிக்கணினிகளின் பயன்பாடு குறித்தும், அவற்றால் குடும்பத்தில் செலவிட வேண்டிய நேரம் வீணாவது குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. பெற்றோர்கள் வீடுகளில் இருக்கும் வேளைகளில் குறிப்பாக சாப்பிடும் நேரமோ, குழந்தைகளோடு விளையாடும் நேரமோ அல்லது குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போதோ செல்போன்களால் இடையூறு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் தேவையற்ற காரணங்களுக்காகவே செல்போன்களை அவர்கள் எடுத்துப்பார்க்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக திடீரென்று வரும் குறுஞ்செய்திகள் மற்றும் சாதாரண அலுவல்களாக வரும் அழைப்புகள்.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட பெற்றோர்கள் எந்த அளவிற்கு தங்களது செல்போன்களால் கட்டிவைக்கப்பட்டுள்ளனர் மற்றும் செல்போன்களைத் தொடர்ச்சியாக பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழல்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், இதனால், தங்களது குழந்தைகளிடம் செலவழிக்க வேண்டிய நேரம் எவ்வாறு வீணாகிறது என்பது குறித்தும் கேட்கப்பட்டது. இதிலிருந்து பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது செல்போன்களின் இடையூறுகளால் குழந்தைகளோடு நேரம் ஒதுக்க முடியாமல் போனதை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர் ஆய்வு நடத்தியவர்கள்.

ஆய்வில் கலந்துகொண்ட பெற்றோர்களில் 48% பேர் ஒரு வழக்கமான நாளில் செல்போன்களால் மூன்று மற்றும் அதற்கும் மேற்பட்ட முறைகளில் இடையூறுகளைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர். 24% ஒருநாளில் இரண்டு முறையும், 17% பேர் ஒருநாளில் ஒருமுறையும், 11% பேர் எந்தவித இடையூறுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக எந்த அளவுக்கு தங்களின் குழந்தைகள் கோபம் கொள்கிறார்கள், புலம்புகிறார்கள், அவர்களின் மவுனம் மற்றும் அவர்களின் மன அழுத்த மாறுபாடுகள் போன்றவை. இதிலிருந்து கிட்டத்தட்ட 90% பேர் தொலைதொடர்பு சாதனங்களால் இடையூறுகளுக்கு உள்ளாதவதும், இதனால் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் குறித்த மேலும் பல கேள்விகள் கேட்டறியப்பட்டன. அவை பெற்றோர்-குழந்தை நெருக்கமான உறவு, அவர்களின் கல்வியில் உதவுதல், பெற்றோர்களின் வருமானம் மற்றும் அவற்றால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்படும் மாறுதல்கள் போன்றவையாக இருந்துள்ளன.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு பழகும்போது, செல்போன்கள் குறிக்கிடுவதால் அவர்கள் குழந்தைகளை விட்டு விலகிச் செல்வதாக அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜென்னி ரெண்ட்ஸ்கி எனும் பேராசிரியர் குழந்தைகள் மனநலம் குறித்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், செல்போன் மாதிரியான அனைத்து தகவல்களையும் கொண்ட ஒரு தொழில்நுட்பம், தங்களது சமூக உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்களை வெகுவாகப் பிரித்துவிடுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அளவில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 16 மணிநேரங்கள் கொண்ட ஒரு சராசரி நாளில் (உறக்கம் தவிர்த்து), ஒரு நபர் 6.5 நிமிடத்திற்கு ஒருமுறை செல்போனை ஏதாவதொரு காரணத்திற்காக எடுத்துப் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20-45 வயதுள்ள 25 நபர்கள் கொண்ட குழுவில் 10% பேர் செல்போன்கள் போன்ற தொழில்நுட்பங்களால் காயம்பட்டவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலான காயங்கள் செல்போன்களை உபயோகிக்கையில் முதுகெலும்புகளில் ஏற்பட்ட தேய்மானங்களாக இருக்கின்றன. இந்திய அளவில் 95% குழந்தைகள் உள்ள வீடுகளில் செல்போன் பயன்பாடானது உள்ளது. அவற்றில் 73% வீடுகளில் குழந்தைகள் செல்போன்களை உபயோகிக்கின்றனர். இந்த 73% குழந்தைகளில் 70% குழந்தைகள் 7-10 வயதுள்ளவர்களாகவும், 76% குழந்தைகள் 11-14 வயதுள்ள குழந்தைகளாகவும் இருக்கின்றனர். தங்கள் குழந்தைகள் செல்போன்களை உபயோகிப்பதையே பல பெற்றோர்கள் பெருமையாக எண்ணுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா மாதிரியான அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு சந்தையை குறிவைத்து, செல்போன் நிறுவனங்கள் தங்கள் கடைகளை நாடு முழுவதிலும் நிறுவியுள்ளன. இந்தியாவில் தற்போது உபயோகத்தில் உள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையானது 340.2 மில்லியனாக உள்ளது. இது அடுத்தாண்டில் 381.7 மில்லியனாகவும், 2021-ஆம் ஆண்டில் இது 467.9 மில்லியனாகவும் இருக்கும் என ஸ்டேட்டிஸ்டியா இணையதளம் தெரிவித்துள்ளது. மேலும், உலக அளவில் தற்போது 2.32 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், 2020-ம் ஆண்டில் இது 2.87 பில்லியனுக்கு உயரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இன்னும் சில வருடங்களில் செல்போன்கள் வைத்திருந்தால்தான், ஒருவர் சராசரி மனிதராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்கிற நிலை வரக்கூடும்.

எல்லா காலங்களிலும் சர்வதேச அப்பாவிகள் குழந்தைகளே. அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை பெற்றோர்களைச் சார்ந்தே வாழவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். மனதளவில் ஆதரவற்றவர்களாக தங்களைத் தாங்களே உணரும் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் தரும் அரவணைப்புகளே உண்மையான தேற்றும் மருந்தாக அமையும். இந்த சமூகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அடுத்த தலைமுறைகள் மனதளவில் பாதிக்கப்படுவது, அவர்களின் வாழ்வில் ஒரு வெற்றிடம் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமையும். நம் பிள்ளைகளை உடலளவிலும், மனதளவிலும் வளமாக்குவதில் அதிக அளவில் முயற்சிகள் மேற்கொள்கிறோம். எதிர்பாராத சில காரணங்களால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது. ஏனென்றால், அவர்களின் எதிர்காலத்தில் தான் நம் சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது!

ச.ப.மதிவாணன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: News

Your email address will not be published. Required fields are marked *

*