TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வரலாற்று வெகுமானம்!

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று வெகுமானம்!

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இந்த உண்மையை நோர்வே, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் எண்பித்துள்ளார்கள். விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானப் பற்றிய வாக்குக் கணிப்பு (Referendum) நடைபெற இருக்கிறது.

இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக விழும் வாக்குகளைவிட அதன்பின்னால் உள்ள மக்களது வேட்கையும் துடிப்பும் முக்கியமானது. தேர்தல் நாளன்று அந்தளவு தூரம் ஆர்வம் கரை புரண்டோடியது. எண்பது அகவை தாண்டிய பாட்டன் பாட்டி ஆகியோரைப் பேரப்பிள்ளைகள் கைத்தாங்கலாகப் பிடித்து வந்து வாக்களிக்க வைத்தார்கள்!

கனடாவில் நடந்த தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மக்கள் அந்த வாக்குச் சாவடியில் கண்ட காட்சி அவர்களைப் மலைக்க வைத்தது. ஒரு சாவடியில் 50 க்கும் மேலான தேர்தல் அலுவலகர்கள், தொண்டர்கள் பணியாற்றினார்கள். நாடுமுழுதும் 2,000 தொண்டர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

ஒரு பொதுத் தேர்தலைவிட மிகவும் சுறு சுறுப்பாகவும் விறு விறுப்பாகவும் இந்த வாக்கெடுப்பு நடந்தது. பொதுத்தேர்தலில் வழக்கமாக ஒரு சாவடியில் 400 வாக்குகளே நாள் முழுதும் விழும். ஆனால் இந்த வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மணித்தியாலத்துக்கு 600 வாக்குகள் போடப்பட்டன. இதைப் பார்த்து இந்தத் தேர்தலை நடத்திய ES&S என்ற நிறுவனம் வியப்புத் தெரிவித்தது.

ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத சில அரைவேக்காடுகள் அல்லது சிங்கள அரசின் கைக்கூலிகள் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்” என்று ஊர் பேர் தெரியாத ஒருவரோ பலரோ “புதினப்பார்வை” என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு ஒரு அரசியல் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

“கீரைக் கடைக்கு எதிர்க்கடை வேண்டாமா?” “வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் வாழ்வின் வெகுமானம்” என்ற பாட்டு எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அல்லவா? அதற்கு எதிர்ப்பாட்டுத்தான் இந்த “அவமானம்” என்ற எதுகை!

வெகுமானத்துக்கு அவமானம் எதுகை. வட்டுக்கோட்டைக்கு எதுகை வேண்டாமா? “ஒட்டுமொத்தத்தில் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” மீதான மீள்வாக்கெடுப்பு என்பது – கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது” என்ற இமாலயக் கண்டுபிடிப்பு!

இந்தக் கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசே கொடுக்கலாம். குடியரசு என்ற நூலை எழுதிய பிளாட்டோ கூட இதனைக் கண்டு பிடித்திருக்க முடியாது!

“இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன” என்பது இன்னொரு கண்டு பிடிப்பு. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். குழப்பம் இவர்களுக்குத்தான்!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்றுப் பின்னணியைச் சொல்லிவிட்டு “இவ்வளவு அழிவுக்கும் பின்பு – “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” மீது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது – அவ்வளவு தியாகங்களையும் அவமதிப்பது போன்றது 30 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தந்துவிட்ட அந்த அரசியல் ஆணையைச் சிறுமைப்படுத்துவது போன்றது” என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற தோரணையில் புதினப் பார்வை இருக்கிறது.

இதில் எங்கே இருக்கிறது சிறுமை? ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க தீர்மானத்தை மீள் வாசிப்பது எப்படிச் சிறுமையாகும்? 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 1977 இல் 18 அகவை அடைந்தவர்கள்தான் வாக்களித்திருப்பார்கள். அதாவது 1949 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள்தான் வாக்களித்து இருக்க முடியும். அதன் பின் பிறந்தவர்களுக்கு – ஒரு தலைமுறைக்கும் மேலானவர்களுக்கு – அந்த வாய்ப்பில்லை. எனவே இப்போது நடைபெறும் மீள் வாக்களிப்பு அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது. இது மக்களாட்சி முறைமைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நாடாளுமன்றத்துக்கு ஏன் அய்ந்து அல்லது ஆண்டுக்கொருமுறை தேர்தல் நடைபெறுகிறது? ஏன் இருபது முப்பது ஆண்டுகளுக்கொருமுறை தேர்தல் வைக்கவில்லை? மக்கள் ஆணை அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும். அதே போன்றுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நியாயப்படுத்த மீள் வாக்கெடுப்பும் மக்கள் 1977 இல் கொடுத்த ஆணையைப் (Remandating the political validity of the present fundamentals of Vaddukkoddai Resolution) புதுப்பித்தலும் ஆகும்.

தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப் படுத்துபவர்கள் தாங்கள் மற்றவர்களை விட மேலான தேசியவாதிகள் என நடித்துக் கொண்டு அந்தத் திருப்பணியைச் செய்கிறார்கள். அதாவது போப்பாண்டவரை விடத் தான் தீவிரமான கத்தோலிக்கன் என்று சொல்பவன் கதையை ஒத்தது. அதைத்தான் புதினப்பார்வை செய்துள்ளது! இதோ இன்னொரு பார்வை:

“வட்டுக்கோட்டைத் தீர்மானம்” மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது – அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட “தமிழீழம்” என்ற இலட்சியத்திற்காகப் போராடிய – விடுதலைப் புலிகளை எமது ஏக பிரதிநிதிகள் என்று கூறி உலக வீதிகளில் இறங்கி நாம் நடத்திய போராட்டங்கள் எல்லாவற்றையும் நாமே கொச்சைப்படுத்துவது போன்றது.”

கொச்சைப்படுத்துவது நாம் அல்ல. இந்த அரசியல் கட்டுரையை எழுதியுள்ள புதினப்பார்வை. அது சரி. நாமே கொச்சைப்படுத்துவது போன்றது என்று சொன்னால் போதுமா? அதற்கான காரண காரியங்களைச் சொல்ல வேண்டாமா? அடுத்த வரியில்தான் புதினப்பார்வை எவ்வளவு ஞானசூனியம் என்பதைச் சொல்லிவிடுகிறது.

“2009 மே மாதத்திற்கு முன்னால் இந்த மீள்வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது வேறு கதை.” அட பாபமே! அது வேறு கதை அல்ல! அதுதான் கதை! நோர்வே நாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு மே 10 ஆம் நாள் நடந்தது. அதற்கான பணிகள் அதற்கு மூன்று மாதங்கள் முன்னால் தொடங்கி விட்டன. ஏனைய நாடுகளில் கள நிலை காரணமாக வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது. அதுதான் உண்மை.

மீண்டும் “விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இலக்கான “தமிழீழம்” எனப்படுவது தான் தமிழ் மக்களின் அரசியல் அவாவும் கூட என்பதை இந்த உலகிற்கு வலியுறுத்த அது உதவியிருக்கலாம். அத்தோடு – விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்; “தமிழீழம்” எனப்படுவது ஒர் அரசியலற்ற கோட்பாடு அல்ல அது ஆயுத ஆளுமைக்கு முன்னானது போன்றவற்றை இந்த உலகிற்கு நிரூபிப்பதற்கும் துணை புரிந்திருக்கலாம். அந்த வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கூட அழிவிலிருந்து காப்பாற்றி – தமிழர்களுக்கான தலைமையையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவியிருக்கலாம்” என மனம் போன போக்கில் எந்த அடிப்படையும் இல்லாது புதினப்பார்வை புலம்புகிறது. இது ஒரு பாமரத்தன்மையான மதிப்பீடாகும்.

உலக நாடுகளுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றித் தெரியாதா? அவ்வளவு அறிவிலிகளா அவை?

உண்மை என்னவென்றால் 11/9 க்குப் பின்னர் உலகம் ஆயுதப் போராட்டங்களை பயங்கரவாதமாகவே பார்த்தது. நல்ல பயங்கரவாதி கெட்ட பயங்கரவாதி என்ற வேறுபாடு உலக ஒழுங்கில் இல்லாமல் போய்விட்டது.

கொசோவோ ஆயுதப் போராட்டம் மட்டும் விதி விலக்கு. பூகோளகேந்திர நலம் காரணமாக – அய்ரோப்பாவில் அல் கெய்தா தீவிரவாதிகள் கால்பதித்துவிடுவார்களோ என்ற பயம் காரணமாக – கொசோவோ முஸ்லிம்களுக்கு தனிநாடொன்றை மேற்குலகம் பிரித்துக் கொடுத்தது.

இதோ புதினப் பார்வையின் மற்றுமொரு குருட்டுப் பார்வை. அதிசய கண்டுபிடிப்பு.

“இன்னொரு பக்கத்தில் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” மீதான இந்த மீள் வாக்கெடுப்பை – நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியுடன் சிலர் குழப்பப் பார்க்கின்றார்கள். “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” மீதான மீள் வாக்கெடுப்பு எனப்படுவது “நாடு கடந்த தமிழீழ அரசு” அமைக்கும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் என்றும் கற்பிதம் செய்யப்படுகின்றது. ஆனால் – உண்மையில், சில தனிப்பட்ட ஆட்கள் இந்த இரண்டு முயற்சிகளிலும் தொடர்; பட்டுள்ளார்கள் என்பதைத் தவிர – நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கும் முயற்சிக்கும் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” மீதான மீள்வாக்குப் பதிவுக்கும் கோட்பாட்டு ரீதியான எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை”.

அறியாமையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வீட்டின் வரைபடம். நாடுகடந்த தமிழீழ அரசு என்பது அதன் கட்டுமானம். அது மக்கள் ஆட்சிநெறிகளுக்கு அமைவாக உருவாக்கப்படும் அடையாள (symbolic) அரசு. அதன் ஓரே குறிக்கோள் புலம்பெயர் தமிழர்கள் சார்பாக ஒரே குரலில் அனைத்துலக அரசியல், இராசதந்திர மட்டத்தில் பேச முடியும். அந்த அரசில் அமைச்சர் அவை இருக்கும் ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இருக்க மாட்டார். மத்திய வங்கி இருக்காது. வரி விதிப்பு இருக்காது.

நாடுகடந்த அரசு என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவை கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசு சட்ட அடிப்படையான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழ அரசு மட்டுமல்ல நாடளாவிய மக்கள் அவையும் இவற்றோடு தொடர்புள்ள ஒரு கட்டுமானந்தான்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தலைமைச் செயலகம் செப்தெம்பர் 9, 2009 இல் வெளியிட்ட ஊடக அறிக்கை தெளிவு படுத்துகிறது.

“மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற சனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்”.

தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.”

இப்போதாவது “நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கும் முயற்சிக்கும் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” மீதான மீள்வாக்குப் பதிவுக்கும் “கோட்பாட்டு” அடிப்படையில் தொடர்பு இருப்பதை ஞானக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் ஊனக் கண்ணால் பார்த்தாவது புதினப்பார்வை புரிந்து கொள்ளுமா?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மையக் கோட்பாடு எது என்பது பற்றியும் புதினப்பார்வைக்குப் புரியவில்லை.

யானை பார்த்த குருடர்கள் போல் “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகளான – தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் ஒட்டுமொத்தமான வடிவமாகவே “தமிழீழம்” என்ற கருத்துரு பிறப்பெடுத்தது” எனப் புதினப்பார்வை திரிபுவாதம் பேசுகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருப்பொருள் “ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயசார்பற்ற தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் தவிர்க்க முடியாததாகி விட்டது” என்பதுதான்.

(This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.)

கொலனித்துவ நாடுகளிடம் போர்க்களத்தில் இழந்த சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழ அரசை மீள் கட்டியெழுப்பி மீள் உருவாக்க வேண்டும் என்பதே வட்டுக்கோட்டைத் தீர்மனத்தின் அடிநாதம்!

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய ஒரு விளக்கமான கட்டுரையைப் பேராசிரியர் ஆ.க. மனோகரன் இன்போ தமிழ் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதனை உலகத்தமிழர் ஒருமுறைக்கு இருமறை மறுபதிப்புச் செய்துள்ளது. கட்டுரை முடிவில் புலம்பெயர் நாடுகளில் மக்கள் வாக்கெடுப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் பதினெட்டை அவர் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார். புதினப்பார்வைக்குக் கண் தெரிந்து ஆனால் கருத்துப் புரியவில்லை என்றால் அந்தக் கட்டுரையை ஒரு முறைக்குப் பலமுறை படித்துப் பார்த்துப் பயன் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நக்கீரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*