TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: 13

காட்டினைச் சுற்றி இராணுவ முற்றுகை இறுக்கத்தினால் உணவு பிரச்சினை, வெடிபொருள் பற்றாக்குறை என்பன போராளிகளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அத்துடன், காயமடைந்த போராளிகள் போதிய மருத்துவ வசதிகள் இன்றியும் இருந்தார்கள்.

ஒரு போராட்டத்தில் இருக்கும் இந்தச் சாதாரண பிரச்சினைகளுக்கு கூட முகம்கொடுக்க முடியாமல், இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் வீடுகளுக்கு செல்லப்போவதாக புதிதாக இணைந்திருந்த போராளிகள் சிலர் கூறத் தொடங்கினார்கள். இது போராளிகளுக்கு இடையில் முரணை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இப் பிரச்சினை தளபதி ராம் அவர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அப்போராளிகளுக்கு போராட்டத்தின் அவசியமும், தேவையும் அவரால் எடுத்து விளக்கப்பட்டது. இறுதியில் போராளிகள் போராட்டத்தின் தேவையை உணர்ந்து தங்கள் எண்ணங்களைக் மாற்றிக்கொள்கின்றார்கள். எனினும், அம்பாறையில் படையினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு அதன் பின்னர் களத்திலும் அம்பாறை காட்டினுள்ளும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன.

இத்துடன் கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை முழுமையாக முடிவுக்கு வருகின்றது. கிழக்கு மாகாணம் முழுமையாக சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் செல்கின்றது. கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாக சிறீலங்கா வெற்றிக் கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழ்ந்தது. கிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் பிள்ளையான் போன்றவர்களை வைத்துக்கொண்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும், பெளத்த மதச்சின்னங்களை நிறுவுவதற்கு வழிகளை சிறீலங்கா அரசு ஏற்படுத்திக்கொண்டது. இப்போதும் தொடர்ந்தும் அதனையே செய்துகொண்டிருக்கின்றது. அத்துடன், மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழர்களின் வரவரலாற்றின் அடையாளச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றையும் தமிழ் ஒட்டுக் குழுக்களான பிள்ளையான், கருணா குழுக்களை தமது பிரதிநிதிகளாக வைத்துக்கொண்டே சிறீலங்கா அரசு நடத்தி முடித்தது. கலையும், விழாக்களும் என களைகட்டியிருந்த கிழக்கு, இன்று இருள் சூழ்ந்துபோய்க் கிடக்கின்றது. நாளை விடியும் என்ற நம்பிக்கையுடன்….­­­­ ­­­­ ­­­­ ­­­­கிழக்கு மண் முழுமையாக இழக்கப்பட்டபோதும் வன்னியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பணிகள் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருந்தன. அதாவது போர்நிறுத்த குழுவினருடனான சந்திப்பு போன்ற செயற்பாடுகளில் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை, கிழக்கினை இழப்பதற்கு முன்பாகவே 26.03.2007 அன்று வான் புலிகளை கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் மூலம் அறிமுகப்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள், தங்கள் வான் தாக்குதலை மேலும் அதிகரித்திருந்தார்கள். ஆனால், சமாதன காலத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தங்கள் வான்படையை உருவாக்கிவிட்டார்கள் என்று கூச்சலிட்டது சிறீலங்கா.

சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாக பகுதிகளுக்கு சமாதானத் தூதர்களையும், பேச்சுவார்த்தைக்குச் சென்ற தளபதிகளையும் ஏற்றிச் சென்று வந்த சிறீலங்கா படையின் உலங்குவானூர்திகள் அந்த சந்தர்ப்பத்தை தமது புலனாய்வுக்கும் பயன்படுத்திக்கொண்டன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறமாட்டாது என்ற துணிவினால் வன்னிக்கு பறப்புக்களை மேற்கொண்ட சிறீலங்கா வான்படையின் உலங்குவானூர்திகள் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தாழ்வாகப்பறந்து இரணைமடுப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் விமானத் தளத்தினை கண்காணித்து, ஒளிப்படங்களையும் எடுத்திருந்தனர். விடுதலைப் புலிகள் விமானதளம், விமானங்கள் வைத்திருப்பதை உறுதிப்படுத்தியபின், சமாதான காலத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தங்கள் விமானப்படையை கட்டியமைத்துவிட்டதுபோன்று அதனைப் பெரும் பிரச்சினைக்குரியதாக போர் நிறுத்த மீறலாக மாற்றி சர்வதேச ரீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது மகிந்த அரசு.

ஆனால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் 1998ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது மலர் தூவியதன் ஊடாக தங்களிடம் விமானப் படையினர் இருப்பதை விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது விடுதலைப் புலிகள் விமானப்படைக்கு கேணல் சங்கர் அவர்கள் பொறுப்பாக இருந்தார். முல்லைத்தீவு வற்றாப்பளை நந்திக்கடல் வெளிப் பகுதியில் விமானத்தினை வைத்து வான் புலிகள் பயிற்சியில் ஈடுபட்டார்கள். பின்பு வேறுசில இடங்களிலும் விமானதளங்கள் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டன. சமாதான காலத்திற்கு முன்னரே விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமான வளர்ச்சி உயர்வடைந்தே இருந்தது. சமாதான காலப்பகுதியைப் பயன்படுத்தித்தான் புலிகள் படை வலுவை அதிகரித்தார்கள் என்பது சிறீலங்கா அரசின் பொய்ப்பிரச்சாரமே.

1998, 1999 ஆண்டு கால பகுதியிலேயே முல்லைத்தீவு நந்திக்கடல் வெளியில் “கிளைடர்’ ரக விமானம் மூலம் பயிற்சி பெற்ற வான் புலிகள், பின்பு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். இதற்கமைவாக விமான தளத்திற்கு இசைவான மத்திய நிலையமாக இரணைமடுப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதாவது இரணைமடு குளத்தின் மேற்கு பகுதியை எல்லையாகக் கொண்டு விமான தளம் அமைக்கப்பட்டிருந்தது. விமான தளத்தின் பாதுகாப்பிற்காக வடக்குப் பக்கமாக இருந்த இரணைமடு குளக்கட்டு பகுதிக்கருகில் விடுதலைப் புலிகளின் பயிற்சித் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இதனைவிட இப்பிரதேசங்களின் பாதுகாப்பிற்காக விமானத்தளத்திற்கு அருகில் இருந்த கிராம பகுதிகளில் விடுதலைப் புலிகளால் தேர்வு செய்யப்பட்ட மாவீரர், போராளி குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு அப்பிராந்தியம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், அதன் பாதுகாப்பு தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

புதிதாக நடமாடுபவர்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயற்படுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டு, உடனுக்குடன் தகவல் அறிவிக்கும் ஏற்பாடுகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தன. விறகு பொறுக்க, காட்டு மரம் வெட்ட என இப்பகுதி காடுகளுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று விடுதலைப் புலிகளால் மக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் காட்டினுள் சில சில இடங்களில் வட்ட தகரத்தில் எழுதப்பட்ட ‘எச்சரிக்கைகள்’ மரங்களில் அடிக்கப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு வேறுபகுதி மக்களும் குறிப்பிட்டபகுதிக் காடுகளுக்குள் நுழைவதில்லை. விமான தளத்தின் கிழக்குப் பக்கமாக பெரும் காடு காணப்படுகிறது.

அதாவது கொய்யாக் குளம், முத்தையன் கட்டு பெரும் தொடர்காட்டினை மையமாகக் கொண்டு விமான தளத்தின் பாதுகாப்பிற்காக முகாம்கள் பயிற்சி தளங்கள், நிறுவப்பட்டு அதன் பாதுகாப்பு ஊடாக சுற்று ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் பாதுகாப்பு மணிக்கொரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இதேபோன்றுதான் தெற்குபகுதியும் அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு தொடர்காட்டினை மையமாகக்கொண்டு ஒட்டிசுட்டான், மாங்குளம் வீதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் ஊடாகவும், அம்பகாம காட்டில் பாரிய பயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டு முகாம்கள் ஊடாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மேற்காக ஏ-9 வீதியை மையமாகக்கொண்டு இரணைமடு, முறிகண்டி, கொக்காவில், 18ம் போர் குற்றம் போன்ற இடங்களின் காட்டுப் பகுதிக்குள் முகாம்கள் அமைத்து பாதுகாப்புடன் நடவடிக்கை செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையில் இரணை மடுக்குளத்தில் படகில் சென்று அடிக்கடி கண்காணிப்பும் நடைபெறும்.

இவ்வாறுதான் இரணைமடு விமானதளத்தின் பாதுகாப்பு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. அம்பகாமம் முத்தையன் கட்டு வனப்பகுதி, விசுவமடு வனப்பகுதி, கல்மடு வனப்பகுதி இவைகள் எல்லாம் அன்று விடுதலைப் புலிகளின் பயிற்சி தளங்கள் நிறைய பெற்ற இடமாகவும், படையணிகளின் முகாம்கள் அமையப்பெற்ற இடமாகவும் ஆயுத களஞ்சியங்களின் இருப்பிடமாகவும் அதாவது வெடிபொருள் பகுதி, ரவைப் பகுதி, துப்பாக்கிப்பகுதி, கனரக ஆயுதப் பகுதி என்று பல பகுதிகளாக செயற்பட்ட இடங்கள் இங்கு உண்டு. அதேபோல் விடுதலைப் புலிகளின் சில வெடிபொருள் உற்பத்திகள் செய்யும் பட்டறைகள் கூட இங்கு காணப்பட்டன. அதாவது கைக்குண்டு உற்பத்தி, எறிகணை உற்பத்தி, படகு உற்பத்தி என பல பகுதிகள் பலவேறு இடங்களில் காணப்பட்டன. இவ்வாறு குறிப்பிட்ட வனப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியாகவே காணப்பட்டது.

இவற்றுள் காடுகளைக் குடைந்து புதிய புதிய வீதிகள் அமைக்கப்பட்டன. நடைபாதை, வாகனபாதை என பல்வேறுபட்ட வீதிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் நடைபெற்றது. அதாவது சாதாரணமாக கூறுவதானால் விசுவமடு வனத்துள் நுழைந்தால் – முத்தையன்கட்டு, அம்பகாமம் செல்லக்கூடிய அளவில் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் ஊடாகத்தான் இரணைமடு விமானத்தளத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த இரணைமடு தளத்தை விடுதலைப் புலிகள் நீண்ட விமான தளமாக மாற்றி 2006ம் ஆண்டு காலப் பகுதியில் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தபோதுதான், விடுதலைப் புலிகளின் விமானங்கள் வானில் பறப்பதை மக்கள் அறிந்துகொள்ளத் தொடங்குகின்றார்கள். வான் புலிகள் அணி பிறந்துவிட்ட நம்பிக்கை மக்களிடம் பரவலாக காணப்படத் தொடங்கியிருந்தது.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*