TamilSpy

பொழுது போக்கு இணையம்…

த.தே.கூட்டமைப்புக்குள் உருவாகியுள்ள குத்துவெட்டுக்கள்

பாரிய எதிர்பார்ப்புகளுடன் 2001ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில்- அதன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது- அந்தச் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை தோன்றியது.

ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட எடுத்த முடிவினால்- தமிழரசுக்க் கட்சியி;ன் பெயரில் போட்டியிடும் நிலை உருவானது.2004ம் ஆண்டில் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் போட்டியிடுவதில் இணக்கப்பாடு உருவாவதில் சிக்கல் எழுந்தது.ஆனால் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டால் தேசியப் பட்டியல் மூலம் கிடைக்கும் ஆசனங்களை நேரிடும் என்று சுட்டிக் காட்டப்பட்டதால் தான், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் முன்வந்தன. புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அவர்களின் கைப்பொம்மைகளாக இயங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுகள் விழுந்த போதும், கூட்டமைப்புக்குள் அப்போதிருந்த ஒற்றுமையோ- பலமோ இப்போது இல்லாமல் போய் விட்டது என்பதை மறுக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் விரிசல்கள் விழத் தொடங்கின.ஆளுக்கொரு பக்கமாக இழுத்துக் கொண்டு இயங்கத் தொடங்கினர்.கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட இந்த விரிசலுக்குப் பல காரணங்கள் இருந்தன.கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்கள் ஒருபுறத்தில் நின்று கொள்ள, இன்னொரு புறத்தில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள்ளேயே குத்துவெட்டுகள் ஆரம்பித்தன.

தமது கட்சியின் தலைமையையே மீறத்துணிந்து விட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதநிலை தோன்றியது.போர்முடிவுக்கு வந்த குறுகிய காலத்துக்குள்ளாகவே ரெலோவின ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான வினாநோகராதலிங்கம் அரசாங்கத்துக்கு ஆதரவாகக் கருத்து வெளியிடத் தொடங்கினார்.இடம்பெயர்ந்த மக்களின் நலனே தனக்கு முக்கியம் என்று நியாயம் கூறினார். பின்னர் அவர் ஏதோ காரணங்களுக்காக அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். இதையடுத்து வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தார். அவசரகாலச்சட்ட வாக்கெடுப்புகளின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவிக்க அலரிமாளிகைக்கும் சென்று வந்தார்.
அவரும் இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்காகவே தான் அப்படி நடந்து கொண்டதாகக் கூறிக் கொண்டார். இதன் பின்னர் சிறிகாந்தாவின் போக்கிலும் மாற்றங்கள் தென்பட்டன. அவரது கருத்துகள் பலமுறை அரசுக்குச் சார்பான வகையில் அமைந்திருந்தன.

இந்தக் கட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

* தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்றது ஒருதரப்பு.
* தனித்து வேட்பாளரை நிறுத்தலாம் என்றது இன்னொரு தரப்பு.
* தமிழரின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரட்ணவை ஆதரிக்கலாம் என்றது மற்றொரு தரப்பு.
* இல்லை- மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றது வேறொரு தரப்பு.
* மகிந்தவை வீட்;டுக்கு அனுப்பி ஆட்சியை மாற்ற சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் என்றது இன்னொரு தரப்பு.

இப்படியே விவாதித்து விவாதித்தும் 22 பேரைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்னமும் கூட ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அதேவேளை இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் அறிக்கைகள் வெளிவரட்டும் பார்க்கலாம் என்று கூறிக் கொண்டு முடிவை எடுப்பதைப் பின்போட்டிருக்கிறது கூட்டமைப்புத் தலைமை.

* இந்தச் சந்தர்ப்பத்துக்குள் தனித்துப் போட்டியிடலாம் என் று கோரிய சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாகக் களம் இறங்கியுள்ளார். அவருக்கு சிறிகாந்தாவின் பின்புல ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. அதைவிட தனது நிலைப்பாட்டை ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும் கூறிக் கொள்கிறார். அதேவேளை, மகிந்த ராஜபக்ஸவிடம் பணத்தை வாங்கிக் கொண்டே சிவாஜிலிங்கம் போட்டியிடுவதாகவும், மகிந்தவுக்கு எதிரான தமிழ் வாக்குகள் சரத் பொன்சேகாவுக்குக் கிடைக்க விடாமல் செய்வதே அவரது நோககம் என்றும் இன்னொரு கூட்டமைப்பு எம்பியான சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்ட இதுவே பெரிய விவகாரமாகியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சிவாஜிலிங்கம் இப்போது சிவகச்திஆனந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தளவும் நடந்து கொண்டிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்காக எதைக் கூறுவது என்று தெரியாமல் இருக்கிறது. தமிழ்மக்களின் ஒன்றுபட்ட பலத்தை வெளிக்காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று உள்முரண்பாடுகளால் சிதைந்து சின்னா பின்னமாகி வருகிறது. அடுத்த பொதுத்தேர்தல் வரைக்கும் கூட்டமைப்பு தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்து விட்டது. காரணம் கடந்தமுறை கட்சிகளின் அடிப்படையிலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையிலும் வேட்பாளர்களை நிறுத்திய கூட்டமைப்புக்குள் அடுத்த பொதுத்தேர்தலில் எந்த அடிப்படையில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது என்ற பிரச்சினை நிச்சயம் முளைத்தே தீரும்.

ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணுறும் கூட்டமைப்பினால்; பொதுத்தேர்தலில் வரப்போகும் மிகப்பெரிய சிக்கலை நிச்சயமாக சமாளிக்க முடியாது. ரெலோவுக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் கூட்டமைப்பில் பெரும்பாதிப்பை உருவாக்கும் நிலை ஏற்பட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழரின் நலன்கருதி உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்குள் வெளியாரின் செல்வாக்கு அதிகரித்து விட்டதாக பரவலான குற்றச்சாட்டு தோன்றியிருக்கிறது. இது கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு நல்லதொரு அறிகுறியாகத் தெரியவில்லை. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் கூட்டமைப்பை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்திய பலர் இப்போது உயிரோடு இல்லை. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவது தமிழரின் அடிப்படை அபிலாஷைகளையும்- அரசியல் கோரிக்கைகளையும் மேலும்மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமையப் போகிறது.


நான்கு கட்சிகளின் ஒன்றிணைவு எப்போது கேள்விக்குறியானதோ அப்போதே தமிழரின் நலன் என்பதும் பலிக்கடாவாக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாதங்களே இருக்கும நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடலுக்கு திறந்தமனதுடன் செல்வது அவசியம். தமிழர் நலனை முன்னிறுத்துவதாகக் கூறிக் கொண்டு அளுக்கொரு பக்கமாக நவக்கிரகங்கள் முகம்காட்ட மறுத்தால் தமிழரின் ஒட்டுமொத்த நலனும் சிதைக்கப்பட்டு விடும்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போருக்குப் பின்னர் ஒன்றுபட்ட சக்தியாக தமிழரின் அரசியல் சக்திகள் பலம் பெறும் என்ற நம்பிக்கை இப்போது சிதைய ஆரம்பித்து விட்டது. முன்னரை விடவும் இப்போது தமிழரின் அரசியல் பலம் கூறுபட்டு விட்டது என்பதே உண்மை.

தொல்காப்பியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*