TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஜனாதிபதி தேர்தலும் முஸ்லீம் காங்கிரஸின் நோக்கும் இலக்கும்

electionமொத்தத்தில் 1978 2009 வரையான 31 வருடகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை, படிப்படியாக மாற்றமடைந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு மாட்சிமை தாங்கிய மன்னராட்சியாக முழுமை அடைந்துள்ளது.

நமது நாட்டில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் வந்த 4 வருட கால நிகழ்வுகள் மறக்க முடியாதவை.
இனவாதமும், மதவாதமும் இக்காலகட்டத்தில் என்றுமில்லாதவாறு நாட்டில் பரவலாக அதிகரித்தன. இவற்றால் சிறுபான்மையினர் சகல வழிகளிலும் சிறுபான்மைப்படுத்தப்பட்டனர். நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து வீழ்ச்சியை நோக்கி வேகமாக இறங்கியதால், பெரும்பாலான தனி மனிதர்கள் வறுமையில் வாடி வதங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. யுத்தத்தின் காரணமாக மரணங்களும், இடப்பெயர்வுகளும் அதிகரித்து உறவுகளின் பிரிவும், ஓலங்களும், அவலங்களும், அழுகைகளும் அக்காலகட்டத்தில் மனித வாழ்வின் நிரந்தர அம்சங்களாகவே விளங்கின. இவற்றின் காரணமாக “மரணம் மட்டும் தான் தனி மனித வாழ்வின் ஒரே உறுதியான எதிர்காலம்” எனக் குறிப்பிடப்படும் அளவுக்கு பொது இலட்சியமும், பொது வாழ்வும், சமூக மேம்பாடுகளும் சிதைக்கப்பட்டுக்கொண்டே வந்தன.

* மத்திய ஆட்சியில் ஜனநாயகம் துளியளவு கூட இல்லாத நிலை.
* இலங்கை முழுவதையும் தமது சொத்தாகக் கருதிச் செயற்பட்ட ஒரு குடும்பத்தின் செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம்.
* “எதிர்க்கட்சிகள் எல்லாம் தேசத்துரோக சக்திகள்” என்ற கட்டுக்கதை அரசால் பிரசாரம் செய்யப்படுகின்ற இக்கட்டான சூழல்.
* ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் குரல் கொடுக்கும் எவரும் காணாமல் போகும் அவலம்.
* உண்மையை உரைக்கும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் உடைக்கப்படுவதும், தீயிடப்படுவதும், கடத்தப்படுவதும், நடுவீதியில் சுடப்படுவதுமான காட்டுமிராண்டித்தனம்.
* ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசைகாட்டி பிடுங்கி எடுக்கப்பட்டு, செயற்கையான நாடாளுமன்றப் பெரும்பான்மை உருவாக்கப்பட்டதுடன், நிறைவேற்று அதிகாரத்துக்கு கைகாட்டிச் சேவகம் செய்யும் சபையாக நமது நாடாளுமன்றம் தரம் தாழ்ந்து போனமை.
* முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளுக்கும், தேசிய அரசியல் இயக்கத்துக்கும் எதிராக, சுயநல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சால்வை அணிவித்து அழகு பார்த்தமை.
* சிறுபான்மைக் கட்சிகளை அழித்து ஒழித்துவிட்டு சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை, தமது பெரும்பான்மைக் கட்சியின் பிரதிநிதித்துவமாக முலாம் பூசும் முயற்சி.
* அரசுத் தலைமையின் “இனி நாட்டில் சிறுபான்மையினரே கிடையாது” என்ற அகங்கார அறிவிப்பு.
* சிறுபான்மையினர் அடிமைகள்; இலங்கையில் உரிமை இல்லாதவர்கள்; வெளிநாட்டிலிருந்து வந்தான் வரத்தார்கள்; சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டியவர்கள்; மொத்தத்தில் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய சிறுபான்மை மக்களுக்கு இந்த நாடு சொந்தமில்லை என்ற கருத்துருவாக்கங்கள் பரப்பப்பட்டமை.
* மாதாமாதம் குட்டித் தேர்தல்களை நடத்திவிட்டு எதிர்க்கட்சிகளை ஏப்பமிடும் அரசின் குள்ளநரித் தந்திரப் பிரயோகம்.
* அரச கட்சியின் அடாவடித்தனம் காரணமாக பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கவின் அடித்தளம் கூட அசைக்கப்பட்டு ஒரு கட்சி மட்டும்தான் மிஞ்சுமோ என்று எண்ணும் வண்ணமான நிலைமை.
* யுத்தத்தின் வெற்றி; வெற்றியின் முழக்கம்; கொண்டாட்டங்கள்; குதூகலங்கள்; இனித் தன்னை எவராலும் அசைக்க முடியாது என்ற இறுமாப்புடன், அடுத்த பல தசாப்தங்களுக்கு தனது பரம்பரையே ஆளப்போகிறது என்ற நினைப்புடன் காலத்துக்கு முன்பே தேசியத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டமை.

இது போன்ற இன்னும் பல ஜனநாயகத்துக்கு விரோதமான சர்வாதிகார செயற்பாடுகள் முடக்கி விடப்பட்டிருந்தன. மொத்தத்தில் 1978 2009 வரையான 31 வருடகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை, படிப்படியாக மாற்றமடைந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு மாட்சிமை தாங்கிய மன்னராட்சியாக முழுமை அடைந்துள்ளது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஒரு காலத்தில் அனுகூலமான அனுபவத்தைத் தந்திருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, அதன் குரூரமான வளர்ச்சி முறையில் பிற்பட்ட காலங்களில் ஆபத்தான அனுபவங்களை அள்ளி வீசியது. முடியாட்சி போன்ற தோற்றப்பாடு ஏற்பட்ட பின்பு இந்த நிறைவேற்று அதிகாரம், சிறுபான்மை மக்கள் இந் நாட்டின் குடிகளேயல்ல என்ற முடிவுக்கு வந்தது.

தேசிய கட்சிகளில் பின்னிப் பிணைந்திருந்த காலத்துக்குப் பிறகு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இலங்கை முஸ்லிம்களும் தமது தனித்துவ அடையாள அரசியலில், கடந்த 21 வருடங்களாக நிறைவேற்று அதிகாரத்தின் நன்மைகளையும், தீமைகளையும் அனுபவமாகப் பெற்றுள்ளனர். அதன் தீமைகளைப் பொறுத்தவரையில் கடந்த 4 ஆண்டு கால அனுபவம் கடும் கசப்பானதாகும். எனவேதான் நம்மை நாடற்றவர்களாகவும், தனிக்கட்சி அற்றவர்களாகவும், தனித்துவமற்றவர் களாகவும், உரிமைகள் அற்றவர்களா கவும் ஆக்கக்கூடிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இலங் கையில் இருந்து ஒழித்துக் கட்டவேண்டும் என்ற முடிவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வந்துள்ளது. வேறு வார்த்தையில கூறுவதானால் “ஆளை அகற்றுவதல்ல, அதிகாரத்தை அகற்றுவதே” எமது முடிவாகும். நாமும் தனித்துவமுள்ள இலங்கையர் என்று முழு உரிமை கொண்டாடவும், ஏனைய சமூகங்களுடன் சுதந்திரம், சமத்துவத்துடன் சகவாழ்வு வாழவும், சமூகப் பொருளாதாரத்தையும், நாட்டுப் பொருளாதாரத்தையும் சரிவிலிருந்து நிமிர்த்தவும், சுயமாக எமது மார்க்கத்தை முன்னெடுக்கவும், எமது வாழ்வாதாரத் தொழில்களை ஏதேச்சாதிகார இடையூறுகள் இன்றிச் செய்யவும். சிறுபான்மை அரசியல் கட்சிகளைக் காப்பாற்றி தனித்துவத்தை நிலை பெறச் செய்யவும். அகதி வாழ்க்கையில் இருந்து மீளவும், சிதைந்து கிடக்கும் கட்டுமானங்களை பழையபடி நிமிர்த்தவும். விரும்புவதனால் மேற்கூறிய எமது அபிலாஷைகளுக்கு குறுக்காக சீனப் பெருஞ்சுவர் போல எழுந்து நிற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு விரும்பும் அனைவருடனும் கைகோக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.
“இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்ட பின்பு, நாடளுமன்ற ஜனநாயகத்துக்கு ஊடாக அணுகப்படுவது, ஆயுதப் பிரயோகம் அற்ற இச் சூழலில் ஆரோக்கியமானதாகத் தெரிகிறது.” யுத்த வெற்றியே இனிவரும் தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்குமோ என்று மலைப்பு ஏற்பட்டிருந்த சூழலில், இந்த மலைப்பில் இருந்தும், கொடுமுடி ஆட்சியில் இருந்தும் தப்புவதற்கான வழி என்ன? என்ற சிந்தனை நமக்கு ஏற்பட்டிருந்த வேளையில்தான் யுத்த வெற்றியின் நாயகர்களாக இருவர் ஒரே நேரத்தில் தோன்றினர்.

ஒருவர் அரசியல் தலைவர். மற்றையவர் இராணுவத் தளபதி.
அரசியல் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
இருவருமே ஒரு முகப்பட்டிருந்தால் அழிவிலும், அடக்குமுறையிலும் மாட்டிக் கொண்ட மக்கள் விலங்கு மாட்டப்பட்டபடியே கிடந்திருப்பர். ஜனநாயக ஆட்சியை விரும்பும் மக்கள் வேறு வழியின்றி இரகசியமாக உருவாக்கப்பட்டு வந்த மன்னராட்சியின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பர்.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க விரும்பவில்லை. தளபதி சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரத்தை வைத்திருக்க விரும்பவில்லை.

இவ்விருவரில் யாரை நாம் தெரிவு செய்வது?

ஆளை அகற்றுவதல்ல, அதிகாரத்தை அகற்றுவதே எமது நோக்கமாகையால் எமக்கு ஆளைப்பார்க்கும் அவசியம் அற்றுப் போய் அதிகாரத்தின் தன்மையை நோக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவையும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மேலோட்டமாக ஒப்பிடுவதன் மூலமே எமக்கான இறுதித் தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். சரத் பொன்சேகா எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமில்லாதவராகவும், எந்தக் கட்சியையும் சொந்தமாகக் கொண்டிராதவராகவும் விளங்கும்போது மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மட்டும் சொந்தக்காரராகவும், எல்லா அரசியல் கட்சிகளையும் அடக்கி வைத்திருக்க விரும்பும் ஒருவராகவும் விளங்குகிறார்.
நாடாளுமன்றத்தைப் பெரும்பான்மையோடு தன்பக்கம் இழுக்க வாய்ப்பில்லாதவராக சரத் பொன்சேகா இருக்கும்போது அதே நாடாளுமன்றத்தைப் பெரும்பான்மையோடு தன்பக்கம் இழுக்க அவசியமுள்ளவராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். சரத்துக்கு எந்தக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பறிக்கும் அனுபவமும் அவசியமும் இல்லை. ஆனால், எல்லாக் கட்சிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் களைப் பறிக்கும் அனுபவமும் அரசியலும் மஹிந்தவுக்கு இருக்கிறது. யுத்தம் முடிந்துவிட்ட சூழலில் இராணுவச் சீருடையையும் ஆயுதத்தையும் களைந்து வைத்திருப்பவர் சரத். ஆனால், அதே யுத்தம் முடிந்துவிட்ட சூழலில் படைபட்டாளங்களோடு முப்படைகளின் தளகர்த்தாவாக மஹிந்தவே இன்றும் காணப்படுகிறார்.சரத் சிறுபான்மைக் கட்சிகளை இல்லா தொழிக்கும் அவசியமற்றவர். ஆனால் சிறிய கட்சிகளை நசுக்க விரும்புவராகவும், ஒரு கட்சி ஆட்சி முறையை நேசிப்ப வராகவும் மஹிந்த விளங்குகின்றார். இனப் பிரச்சினைத் தீர்வு நாடாளுமன்றத்திடம் விடப்படும் என்று சரத்பொன்சேகா கூறும்போது, யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்ட காரணத்தினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தேவையில்லை என்பவர் மஹிந்த ராஜபக்ஷ. நாமும் சேர்ந்து தெரிவுசெய்யும் வேட்பாளராக சரத் பொன்சேகா விளங்குகின்றார். ஆனால் மஹிந்தவோ தன்னைத்தானே தெரிவு செய்த வேட்பாளராக இருக்கிறார்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் இலங்கை அரசியலில் முஸ்லிம் தேசியம் அசைந்திருக்கும் தனது தரப்பை சரி செய்ய வேண்டிய அதே நேரம் தமிழ்த் தேசியமும் சிதைந்திருக்கும் தனது “முகப்பை” சரிசெய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

புலிகளுக்குப் பிந்திய தமிழ்த் தேசியப் பரப்பு தனது நவீன முகத்தைக் காட்ட வேண்டிய தருணமாகவும், முஸ்லிம் தேசியம் தன்மீது கடந்த காலங்களில் கட்டவிழ்ந்து விடப்பட்ட அரசியற் பயங்கரவாதத்தை முறியடிக்கும் தருணமாகவும் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

எனவே சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து, நாடாளுமன்ற ஆட்சி முறையை ஆக்க எடுக்கும் முடிவை எடுப்பதே சிறந்த வழியாகும். யுத்த வெற்றியைக் கொண்டு தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்க முயலும் அரசின் முயற்சிகள் பல்வேறு பக்கங்களில் இருந்தும் முடுக்கிவிடப்படுவதால், இந்த வழியைத் திறப்பதற்கு சரத் பொன்சேகாவே வைபவரீதியாக நாடாவை வெட்டி வைக்க வேண்டும்.

அதற்குத் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொதுச் சின்னமான “அன்னப்பறவை” க்கு வாக்களிக்க வேண்டிய தற்காலிகக் கடப்பாடு கொண்டவர்களாக விளங்குகிறோம். *

பஷீர் சேகுதாவூத்
(எதிர்க்கட்சித் தலைவர் கிழக்கு மாகாணசபை,
தவிசாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரம்)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*