TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை மக்களுக்கான மாற்று அரிசியல் வழி

makkalஇலங்கை மக்களுக்கான மாற்று அரிசியல் வழி காட்டலை சிங்கள அரசியல் தலைமையால் முன்வைக்க முடியுமா?

சிங்களப் பேரினவாதம் இலங்கை அரச அதிபர் தேர்தலிலும் இன மொழி மத வெறி அரசியலை கொண்டுதான் செயற்பட முடியும் என்பதை வருகின்ற தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் அனைத்து அபேட்சகர்களின் அரசியல் கொள்கைகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதன் மூலம் இலங்கையில் உண்மையான நடுநிலை ஜனநாயக அரசியலை ஆதரிக்கும் மக்களுக்கு அத்தகைய வழியைத் தெரிவு செய்யும் வாய்ப்பும் வசதியும் முற்றாகவே இல்லாது ஒழிக்கப் பட்டுள்ள சூழல் உருவாகி விட்டது. இன்றுள்ள சிங்களச் சமுதாயத்தில் அத்தகைய அரசியல் தலைமை உருவாகக் கூடிய சாத்தியப்பாடும் இல்லாத நிலையே தெரிகிறது.

கடந்த காலங்களில் இடதுசாரிச் சிங்களக் கட்சிகள் பெருமளவில் முயற்சித்த போதிலும் சிங்கள இனவாத அரசியல் கட்சிகளின் மக்கள் செல்வாக்கும் அரசியல் கட்சிகளின் அதிகாரப் போட்டியும் இலங்கை அரசியலின் போக்கை முற்றிலும் திசை திருப்பிவிட்ட நிலையே இன்று காணக் கூடியதாக உள்ளது.

இன்று இலங்கையில் வாழும் சகல இன மக்களின் ஒருமித்த கருத்தை கவரும் அரசியல் அறவே இல்லாத வகையில் சிங்களப் பேரினவாத அரசியல் இன மத மொழி வெறி கொண்ட ஆட்சி முறையே ஜனநாயக அரசியல் என அகில உலகிற்கும் எடுத்துக் காட்டி நிற்கிறது.

* இலங்கையின் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை மறுத்ததும் அல்லாமல் தமிழரின் அரசியல் போராட்டங்களை இராணுவ அடக்கு முறை மூலம் தமிழரை இராணுவப் போராட்ட வழிக்குத் தள்ளியதோடு அதனையே அமைதிப் பேச்சு வார்த்தைகளின் நடுவே பயங்கரவாதமாக உலகின் முன் பிரச்சாரப் படுத்தி அரசு நோக்கிய தமிழீழ தேசத்தையும் மக்களையும் முற்றாக அழித்து வெற்றி கண்டுள்ளது.

* ஒரு புறம் மனித உரிமை மீறல் போர்க் குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்வதோடு மறு புறம் தனது இராணுவ அராஜகத்தையே இலங்கையின் ஜனநாயக அரசியலாக உலக அங்கீகாரம் பெறும் வகையில் காட்ட முனைவது தெரிகிறது.

* போரில் முக்கிய பங்காளிகளான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேயும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஜனாதிபதித் தேர்தல் மூலம் மக்;களின் அங்கீகாரத்தைப் பெற்று விடத் துடிக்கும் நிலை தெரிகிறது. இத்தகைய நிலையில் இலங்கையில் வாழும் கிருஸ்துவ இஸ்லாமிய தமிழ் மற்றும் சிங்கள நடுநிலை வாதிகளுக்கான அரசியல் தெரிவு இல்லாமல் போய்விட்ட துயர நிலை ஜனநாயக அரசியலை நம்பும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இன்றுள்ள நிலையில் விக்கிரமநாயக கருணரத்னே ஒரு மாற்று அரசியல்வாதியகக் காணப்படுவதில் தவறு இல்லை. ஆனாலும் அவரை அனைத்து தரப்புச் சிறுபான்மை இன மக்களும் ஒரு சிங்களவர் என்பதற்கு அப்பால் பார்க்க முடியாது இருப்பதே உண்மை. அவரும் முஸ்லீம் மற்றும் தமிழ் கிருஸ்தவ மக்களின் தலைவர் என்ற நிலையில் தம்மை வடிவமைத்துக் கொண்டு உள்ளார் எனவும் கருத முடியாது.

இந்நிலையில் சகல வழிகளிலும் விரக்தி உற்றுத் துன்புறும் தமிழ் மக்களுக்கு இத்தேர்தல் இன்னும் ஒரு சோதனைக் களமாக அமைந்துள்ளது. ஏறச் சொன்னால் எருதுக்கு நோகும் இறங்கச் சொன்னால் முடவனுக்கு நோகும் என்ற நிலை. சென்ற அரச அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டதால் மகிந்தர் பதவிக்கு வர முடிந்தது. இந்த முறை தமிழ் மக்கள் வாக்களிக்க விரும்பும் நிலையும் இல்லை. கடனுக்கு வாக்களித்தாலும் முடிவு கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்கும் எரியும் நெருப்புக்கும் உள்ள வித்தியாசமே. இருப்பினும் தமிழ் மக்கள் வாக்களித்தால் மட்டுமே எவரும் வெற்றி பெறும் வாய்பைப் பெறமுடியும் என்பது உண்மை நிலையாக உள்ளது.

* ஆனால் போட்டியாளர் எவருக்கு வாக்களித்தாலும் அது தமிழருக்குச் சிங்கள ஆட்சியாளரால் இழைக்கப் பட்ட, இழைக்கப்பட்டும் வரும் அனைத்து கொடுமைகளுக்கும் தமிழ் மக்களே வழங்கும் அங்கீகாரம் என்றே பொருள்படும். அரசும் அதனை உலக அரங்கில் அப்படித்தான் பிரச்சாரப் படுத்தித் தப்பித்துக் கொள்ளும். ஆனால் இந்த வரலாற்றுத் தவறை தமிழரின் வருங்காலச் சந்ததி ஒருபோதும் மன்னிக்காது. எனவே தமிழ் மக்களின் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழ் மக்களுக்கான ஒரு மாற்று வழியை அமைத்துக் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளது. அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலமே தமிழ் மக்களின் வாக்களிப்புச் சிக்கலுக்குத் தீர்வு கிட்டும்.

இலங்கையில் சமத்துவ சமதர்ம சம வாய்ப்பு சர்வ இன சர்வ மத கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் கொள்கைகளை சிறுபான்மை மக்கள் சார்பாக முன் எடுக்கக் கூடிய ஆற்றலும் ஆழுமையும் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. இந்த உண்மையைச் சில நாட்களுக்கு முன்னர் மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனும் சுட்டிக் காட்டியிருந்தார்.

தனித் தமிழீழம் பேசி வந்த இவர்களுக்குத் தொடர்ந்தும் அதனை வலியுறுத்துவது சாத்தியம் அற்ற ஒன்றுதான். ஆயினும் கூட்டாட்சி அமைப்பில் வடக்குக் கிழக்கு மக்களுக்கு ஒரு ஆட்சி முறை தீர்வாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் புதிய கோரிக்கை சர்வதேச வரன் முறைகளுக்கும் நாடு பிரியாமல் தவிர்க்கவும் ஏற்புடையதே. எனவே எந்த சட்டச் சிக்கலும் இல்லாத ஒரு கோரிக்கையாக இது பார்கப்படும் சாத்தியம் உள்ளது.

இத்தருணத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது சார்பாக ஒரு இஸ்லாமியத் தமிழரை நிறுத்துவரெனில் அதுவே இரு சமூகங்களுக்கிடையிலும் பல தாசாப்தங்களாக நிலவும் அவநம்பிக்கை மற்றும் உணர்வு சார்ந்த விரிசல்களுக்கான ஒத்தடமாகவும் பரிகாரமாகவும் மாறி வருங்காலத்தில் வலுவான சிங்களப் பேரினவாத அரசியலுக்குச் சவாலாகவும் அமையலாம்.

இப்படியான ஒரு அபேட்சகர் அரச அதிபர் தேர்தலில் நிறுத்தப்படும் பட்சத்தில் மலையகத் தமிழர், இஸ்லாமிய இந்து கிருஸ்தவத் தமிழர், இன்னும் நடுநிலை அரசியலை நாடும் சிங்கள மக்களுக்கும் நல்ல ஒரு வாய்ப்பாகவும் வடிகாலாகவும் திகழும். மேலும் சிங்களத் தலைமையின் தயவு அரசியல் நடத்தும் டக்லஸ்,கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றோரின் பின்னால் வேறு வழியின்றி ஆதரவு அளித்து வரும் மக்களில் கணிசமானோர் வாக்களிக்க முன்வருவர்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் சிங்களப் பேரினவாத அரசியலுக்கு ஒரு ஆக்கபூர்வமான அர்த்தம் நிறைந்த மக்களின் எதிர்ப்பையும் வெளிப்படுத்த முடியும். யாருக்கு வாக்களிப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் அனைத்து தரப்பு அறிவார்ந்த மக்களுக்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஒரு வழிகாட்டியாகவும் அமையும் வாய்ப்பும் கிடைக்கும். செய்வார்களா?

த.எதிர்மன்னசிங்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*