TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விலை போக முடியாத விடுதலைத் தாகம்

Maaveerar_Kallaraiசிறீலங்கா அரசின் 1983இல் கொண்டுவரப்பட்ட ஆறாவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் பிரிந்துசெல்லும் உரிமையையும் ஜனநாயக ரீதியில் சொல்வதைக்கூடத் தடை செய்கின்றது.

தமிழர் தரப்பில் அல்லது தமிழர்களுக்காக என்று தேர்தலில் களமிறங்க முனையும் எவருமே இந்தத் தடைச் சட்டத்தினை நீக்குவதற்கு குரல் கொடுக்கவில்லையானால் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட விலைபேசுபவர்களாகவே தமிழ் மக்கள் அவர்களைக் கணிப்பார்கள். இதுபோன்றே தமிழரின் தேசிய அபிலாசைகளை ஏற்றுக்கொள்வோரின் அடிப்படைக் குரலாக ஒலிக்க வேண்டியது. இலங்கைத்தீவின் அரசியலில் தமிழ்பேசும் சமூகத்தவர் ஒருவர் எந்தநிலையிலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைய முடியாது. வெற்றியடைந்தாலும் சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அவர்தன்னைத் தமிழராகவே தக்கவைத்து சத்தியப்பிரமாணம் எடுக்கமுடியாது.

இந்த முயற்சி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் இந்திய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகளாகும். வெளியக அல்லது உள்ளக அழுத்தங்களுக்காக தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட முடியாது. ஈழத் தமிழத் தேசத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதையே நாம் எமது பிரிந்து செல்லும் வலியுறுத்துவதேயாகும். புலம்பெயர்ந்த தேசங்களில் எல்லாம் ஈழத் தமிழர்கள் தங்கள் தேசிய தாகத்தை மீள் வலியுறுத்திவரும் வேளையில் ‘தமிழரின் அரசியல்வாதிகள்’ எமது இலக்குகளை அடுத்தவருக்கு அடகு வைப்பதை அனுமதிக்க முடியாது. இந்த ஆறாவது தடைச் சட்டத்தை நீக்குவது முகாம்களில் முடக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதும் எமக்காகப் போராடிய போராளிகளை விடுவிப்பதுமே இவர்களின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

ஆனால், சில புலம்பெயர்ந்த சக்திகளும் தமிழ் அரசியல் கூட்டமைப்புக்களும் எமது அரசியல் அபிலாசைக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. சிறீலங்கா, இந்திய அரசுகளின் விருப்பங்களை நிறைவேற்ற சுயநிர்ணய உரிமைகளை விட்டுக்கொடுத்து உள்ளக சுயாட்சி என்றும், சமஷ்டி என்றும் கொள்ளைகளை விலை பேசுகின்றார்கள். விடுதலைப் புலிகளே இந்த உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பரீட்சித்தார்கள் என்று தமக்கு சாட்டுக்களைத் தேடுகின்றனர். ஆனால், விடுதலைப் புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பரீட்சிக்க முயன்றபோது தமிழர்களுக்கான ஒரு பலமான அரசு நிறுவப்பட்டு அதியுச்ச படைவலுவில் நின்றனர். அந்தவேளையில் எந்தவொரு அரசியல் பரீட்சார்த்தத்தையும் செய்துபார்க்கும் பலம் அவர்களுக்கு இருந்தது.

ஆனால் நாம் இன்று இருக்கும் கையறு நிலையில் எம் அடிப்படை விடுதலைத் தாககங்கள் மிகப்பத்திரமாகக் காக்கப்படல் வேண்டும். தமிழர்களின் அரசியல் எதிர்காலங்கள் தமிழர் தரப்பாலேயே விற்கப்படுவது மன்னிக்கப்பட முடியாததாகும். இந்த உள்ளக சுயாட்சி முறையைப் பிரேரிக்கும் தமிழ்க்கட்சி சர்வதேசப் பிணைப்புக்களையும் அவர்களின் ஈழத்தின் மீதான பார்வையையும் திருப்தி செய்யவும் தமிழீழ கோரிக்கையை கைவிட வைக்க துணைபோகும் செயலாகவே உள்ளது. 2006 இல் நிகழ்ந்த ஜெனீவா சமாதானப் பேச்சுக்களின் போதுகூட 6வது திருத்தச்சட்டத்தை நீக்கவும் பல்லின அரசியலை முன்னெடுக்கக் கோரியுமே சிறீலங்காவிற்கு விடுதலைப் புலிகள் சவால்களை வைத்தனர்.

இதனை ஆதரிக்காத அல்லது மறுதலிக்காத எந்தக் கட்சிக்கும் தமிழர்களின் ஆதரவு என்பது கிடைக்கப்போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய அறிக்கையில் சிறீலங்காவின் ஒற்றுமையைக் காப்பதற்கும் ஒன்றுபட்ட சிறீலங்காவிற்குள் தமிழர்களுக்கு உள்ளக சுயாட்சி அல்லது சமஷ்டி போதுமென்று கூறியுள்ளனர். இந்திய மாநிலங்களுக்கு உள்ளதைவிட மிகக்குறைந்த அதிகாரங்களையே ஏற்பதற்கு இவர்கள் தயாராக உள்ளனர். இவர்களின் அடிகோலிகளும் வேறுசில சக்திகளும் வட்டுக்கோட்டைத் தீர்மான வலியுறுதலைக்கூட புலம்பெயர் மக்களிடையே ஏற்படுத்திவிடாது தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. எனவே, புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடும் முழு ஒத்துழைப்போடும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் வலியுறுத்தும் வாக்கெடுப்பில் தம் பங்கை ஆற்றவேண்டும்.

எமது ஜனநாயக ரீதியிலான அபிலாசைகளை வெளிப்படுத்தும் உரிமையை எந்தசக்தியும் தடைசெய்ய முடியாது. இலங்கை அரசியலில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழர் தாயகத்தையும் ஏற்றுக்கொண்டு களமிறங்கும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை தமிழர்கள் அவதானிக்கத் தவறக்கூடாது. சிறீலங்காத் தேர்தலில் கலந்துகொண்டு வாக்களிப்பதற்கு மக்கள் சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது. இந்தத் தேர்தலில் மாபெரும் ‘இன அழிப்பாளர்கள்’ இருவர் களமிறங்கியுள்ளனர். தமிழர் தாயகத்தை அழித்து பல்லாயிரக் கணக்கில் தமிழர்களை அழித்து, தமிழர் இன அழிப்பில் வெற்றிக் களிப்பில் கொண்டாடிய அரசியல் தலைமையும் இராணுவத் தலைமையும் வாக்கு வங்கிக்கான வேட்டையில் இறங்கியுள்ளன.

இவர்கள் இருவருள் எந்தத் தெரிவும் எம்மீதான இனப்படுகொலையை நிறுத்தப் போவதில்லை. இவர்களுக்கு துணை போக தமிழர் தரப்புகளும் தயாராகிவிட்டன. தாய் நிலத்தில் வாழும் மக்கள் இராணுவ முள் வேலிக்குள் பலவந்தமாக வாக்களிக்க வைக்கப்படுவார்கள். அங்கு மீண்டும் இனவெறி அரசு, மீண்டும் அரசுக் கட்டிலில் ஏறத்தான் போகின்றது. வெளியே புலத்தில் அனைத்துச் சுதந்திரத்துடனும் வாழும் நாம் எமது சுயமான அரசியல் விருப்பை எதிர்வரும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறுவதன் மூலமே சர்வதேசத்தின் முன் சிறீலங்காவிற்கு எதிரான எமது புறக்கணிப்பை கூறமுடியும். எமது தாகம் தமிழீழம் என்பதனை இவர்கள் மொழியிலேயே கூறமுடியும். எனவே, நாம் அனைவரும் இந்த வரலாற்றுக் கடமையில் இணைந்து எமது ஜனநாயக் கட்டளையை வழங்குவோம்.

-சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*