TamilSpy

பொழுது போக்கு இணையம்…

களத்தில் வீழ்த்தப்பட்டவர்கள், புலத்தில் பலம்கொண்டு எழுகின்றார்கள்!

pulam‘முள்ளிவாய்க்காலுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது’ என்ற சிங்கள தேசத்தின் பரப்புரைக்கு மேலும் ஒரு பேரறை புலம்பெயர் தேசத்தின் தமிழர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 12, 13-ம் திகதிகளில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீமானத்தின் மீதான மீள் தீர்மான வாக்கெடுப்பில் 99,32மூ வீதமான பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்து ‘தமிழீழமே எங்கள் தாகம்’ என்று உலக நாடுகளுக்கு அழுத்தமாகத் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அரசு இந்தத் தேர்தலை நடாத்த முடியாதபடி தனது தூதுரகமூடாக பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டபோதும், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட ‘பிரஞ்சுத் தமிழர் பேரவை’ யினரது மனம் தளராத முயற்சி காரணமாகவும், பிரான்சில் வாழும் தமிழர்களின் இலட்சிய உணர்வு காரணமாகவும் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.

தமிழீழ தனியரசுக்கு எதிராக 43 வாக்குக்கள் மட்டுமே பதிவாகியிருந்தது. ஈழத் தமிழர்கள் ஈவிரக்கமற்ற இனப் படுகொலையால் அச்சுறுத்தப்பட்டு, இன ஒடுக்கல் மூலமாக மவுனமாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் அவர்களுக்கான தமது ஏகோபித்த விருப்பினைப் பதிவு செய்துள்ளனர். நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் தீர்மான வாக்கெடுப்பு தற்போது பிரான்சில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இங்கிலாந்திலும், கனடாவிலும், ஏனைய புலம் பெயர்ந்த நாடுகளிலும் நடைபெற உள்ளன. பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் இந்த தமிழ்த் தேசிய உணர்வு இனிமேல் நடைபெறவுள்ள ஏனைய நாடுகளிலும் பேரெழுச்சியைத் தோற்றுவிக்கும் என நம்பலாம்.

புலம்பெயர் தேசங்களில் ‘தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்ற மூட நம்பிக்கையுடன் கனவுலகில் பயணித்துக்கொண்டிருக்கும் சில தமிழர்களுக்கும் இந்த வாக்குப் பதிவு மிகப் பெரிய செய்தியினைத் தெரிவித்துள்ளது. தமிழீழ மக்கள் தமது தீர்மானங்களில் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது இலட்சியப் பாதையே அவர்களது தெரிவாகவும், இறுதி முடிவாகவும் உள்ளது. அதை யாராலும் குழப்பவோ, சிதைக்கவோ முடியாது என்பதே அந்த அழுத்தமான செய்தியாகும். ஒரே தலைவனின் கீழ், ஒரே கொடியின் கீழ், ஒரே இலட்சியத்தின் கீழ் பயணிக்கும் எமது ஒன்றுதிரண்ட பலத்தை எந்த சக்திகளினாலும் அசைத்துவிட முடியாது என்பதை அவர்கள் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆயுத பல இழப்பிற்குப் பின்னர் போராடும் பலம் பெற்ற சக்தியாகப் புலம் பெயர் தமிழர்களே உள்ளனர். ஈழத் தமிழர்களுக்கான அந்தப் பலத்தைச் சிதைப்பதற்கு சிங்கள தேசம் தனது முழு வளத்தையும் பயன்படுத்துகின்றது. வன்னி யுத்தகளத்தில் விடுதலைப் புலிகள் மத்தியில் பல துரோகிகளை ஊடுருவ விட்டது போலவே, புலம்பெயர் தமிழர்களைத் தேற்கடிக்கும் தற்போதைய யுத்தத்திலும் ஏராளமான துரோகிகளை தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்துள்ளதுடன், பல்வேறு வகையான உளவியல் போரையும் நடாத்தி வருகின்றது. ஆனாலும், புலம்பெயர்ந்த தேசங்களின் தமிழர்கள் மிகத் தெளிவான முடிவோடு இருப்பதால் அந்தச் சதி முயற்சிகள் எல்லாம் அவர்களால் முறியடிக்கப்பட்டே வருகின்றது. விடுதலைப் புலிகளின் களமுனை இழப்புக்களைத் தொடர்ந்து, தமிழீழ மக்கள் மவுனிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் மேய்ப்பர் இல்லாத ஆடுகள் போல திக்குத் தெரியாமல் திசை மாறி அலையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்தத் தேர்தல் உறுதியானதும், இறுதியானதுமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழீழ மக்களின் அபிப்பிராயங்களைக் கணக்கிலெடுக்காத அரசியல் பயணம் அவர்களது அரசியல் அஸ்தமனத்திற்கே வழி செய்யும். தமிழீழ மக்களுக்கான விடுதலைப் போரை சர்வதேச அரங்கில் தொடர்ந்து முன்னெடுக்கும் புலம்பெயர் சமூகத்தின் விருப்பங்களை மீறிய எந்த நகர்வுகளையும் தமிழ் மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்பதை சிங்கள – இந்திய அரசியல் சதிக்குள் லாபம் தேட முயலும் தமிழ் அரசியல் சக்திகள் தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும் என்பதே அந்தச் செய்தியாகும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் தீர்மான வாக்கெடுப்பின் பெரு வெற்றியானது தனது பிராந்திய வல்லாதிக்க கனவுகளுக்காகத் தமிழ்த் தேசியத்தையும், தமிழீழ மக்களையும் சிங்கள தேசத்தின் இனக் கொடூரப் பசிக்கு இரையாக்கி வரும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் ஒரு செய்தியை வலியுறுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் இலட்சியக் கனவை எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. களத்தில் வீழ்த்தப்பட்டவர்கள் புலத்தில் பலம்கொண்டு எழுந்து போராடுகின்றார்கள். அந்தப் போராட்டத்தின் இலக்கிற்கு இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் தடை போடுமாக இருந்தால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தியாக உயர்ந்து நிற்கும் புலம்பெயர் சமூகம் அந்தத் தடைகளை உடைப்பதற்கான புதிய வியூகங்களை வகுக்கும் என்பதை இந்தத் தேர்தல் மூலம் பதிவு செய்துள்ளது.

இறுதியாக, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் தீர்மான வாக்குப் பதிவு சர்வதேச நாடுகளுக்கும் ஒரு உண்மையை ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளது. சிங்கள இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர்களின் ஜனநாயக வழிப் போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதத்தால் தோற்கடிக்கப்பட்டதனாலேயே அந்தப் போராட்ட வடிவம் ஆயுதம் ஏந்திய போராட்டமாக மாற்றம் பெற்றது. ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்களால் ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் சிங்கள தேசத்தால் மறுதலிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் தொடர்ந்தும் இன ஒடுக்கலுக்கும், இன வன்முறைக்கும், இனப் படுகொலைக்கும் ஆளான காரணத்தாலேயே தமிழீழ இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.

இந்திய – சிறிலங்கா கூட்டுச் சதியால் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் ‘பயங்கரவாதம்’ என்ற பொருத்தமற்ற அமெரிக்க ஒற்றைச் சொல்லின் ஊடாகக் 21 நாடுகளின் நேரடி, மறைமுக உதவிகளுடன் கள முனையில் தோற்கடிக்கப்பட்டது. தற்போது, அனைத்துலக சமூகத்தின் விருப்பப்படி ஈழத் தமிழர்கள் தமது அபிலாசைகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தியுள்ளார்கள். புலம்பெயர் தேசத்துத் தமிழர்கள் மேற்கொள்ளும் இந்த ஜனநாயக வெளிப்படுத்தல்கள் சர்வதேச நாடுகளின் மனச்சாட்சியை அசைக்கும் உண்மையின் வெளிப்பாடாகவே உள்ளது. ஈழத் தமிழர்களின் இந்த ஜனநாயக ரீதியான தீர்மானங்களை உலகின் ஜனநாயக விழுமியங்கள் கொண்ட எந்த சக்திகளும் அலட்சியம் செய்துவிட முடியாது.

-சி. பாலச்சந்திரன்

நன்றி:ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*