TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: 12

Mavilaru thodarமட்டக்களப்பில் இருந்து பின்வாங்கியிருந்த புலிகளின் அணிகள், அம்பாறைக் காடுகளில் நிலைகொண்டிருந்தபடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக சிறீலங்காவின் தென் பகுதியில் உள்ள சில இராணுவ முகாம்களும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் இலக்காகியிருந்தன.

இதன்போது முழுமையான சிங்களப் பிரதேசமாக இருந்த புத்தல (கடந்த மாவீரர் தினமான 27ம் திகதி உலங்குவானூர்தி விழுந்து நொருங்கிய இடம்) என்ற பகுதியில் அமைந்திருந்த படைமுகாம் ஒன்றையும் வெற்றிகரமாகத் தாக்கி அழித்திருந்தார்கள். இவ்வாறு சிறு சிறு தாக்குதல்களை தென்பகுதியில் நடத்துகின்றார்கள். இந்நிலையில், அம்பாறை காடுகளுக்குள் இருக்கும் விடுதலைப் புலிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் இறங்குகின்றார்கள். அம்பாறையில் விடுதலைப் புலிகளின் நிர்வாக பகுதியாக கஞ்சிகுடிச்சாறு பகுதிகாணப்படுகிறது. அத்துடன், ‘கஞ்சிக்குடிச்சாறில் படையினருக்கும் போராளிகளுக்கும் மோதல்’ என்று அடிக்கடி நீங்கள் செய்திகள் கேள்விப்படும் அளவிற்கு சிறீலங்காப் படையினருடான பல மோதல்களை சந்தித்த மண்ணாகவும் கஞ்சிக்குடிச்சாறு விளங்குகின்றது.

இப்பகுதியில் பெருமளவான மக்கள் விடுதலைப் புலிகளின் நிர்வாக பகுதிகளுக்குள் வாழ்ந்து வந்தார்கள். சிறீலங்கா படையினர் கஞ்சிகுடிச்சாறு பகுதி மீது பெரும் படை யயடுப்பை செய்தார்கள். இதன்போது கட்டுப்பாட்டுப் பிரதேசம் இழக்கப்பட்டு கஞ்சிகுடிச்சாறு, மற்றும் றூவஸ் குளப்பகுதிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் படையினரால் பிடிக்கப்பட்டு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். இவர்களில் பலர் பின்னர் காணாமல் போயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பின்போது மக்களில் பலர் விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த காடுகளுக்குள்ளும் வந்திருந்தார்கள். காடுகளுக்குள் மக்களும் இடம்பெயர்ந்து வந்தமையால், படையினருடன் பாரிய மோதல்களை எதிர்கொள்ள முடியாத நிலை போராளிகளுக்கு எழுந்தது.

எனவே, தாக்குதல்களை குறைப்பதற்காக அம்பாறை, மட்டக்களப்பு காடுகளுக்குள் இருக்கும் விடுதலைப் புலிகளில் குறிப்பிட்ட தொகையினர் வன்னி நோக்கி அனுப்பப்படுகின்றார்கள். இதேவேளை வன்னியில் இருந்தும் ஒரு அணி கிழக்கிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இது காட்டுத் தாக்குதல்களில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்த ஒரு அணியாக இருந்தது. காட்டுப்பகுதிகளில் குறிப்பாக அம்பாறையின் எல்லைக் கிராமங்களாக அமைந்திருந்த கதிர்காமம், புத்தல மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் சிறுசிறு தாக்குதல்கள் கிளைமோர் தாக்குதல்கள் படையினர் மீது மேற்கொள்ளப்படுகின்றது. படையினருக்கு இதனால் பலத்த இழப்புக்கள் ஏற்படத் தொடங்கியிருந்த நிலையில், காடுகளுக்குள் விடுதலைப் புலிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள்.

அம்பாறை காட்டுக்குள் புலிகளைத் தேடிப் புறப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினருக்கு கண்ணிவெடிகளும், மிதிவெடிகளும் பலத்தை வரவேற்பை அளித்தன. தொடர்ச்சியாக வாங்கிய பலமான இந்த அடியால், சிறப்பு அதிரடி படையினர் அம்பாறை காடு ஒரு பெருங்காடு, இக்காட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது கடினமானது என்று கூறி தொடர்ச்சியாக தேடுதல்களில் ஈடுபடுவதற்கு மறுக்கின்றார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்க்க படையினர் முதற்கட்டமாக றூபஸ் குளப்பகுதி ஊடாக காட்டுக்குள் நுழைகின்றார்கள். காட்டுக்குள் நுழைந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் சிறு குழுக்களாகச் சென்று தாக்குதல் நடத்துகின்றார்கள். அத்துடன், போராளிகள் காட்டுக்குள் பொருத்தி வைத்த பொறி வெடிகளில் படையினர் சிக்குகிறார்கள். படையினரை திகைப்புறவைக்கும் தாக்குதல் இங்கு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டன.

இழப்புக்கள் மிகவும் அதிகரித்ததால் இந்த நடவடிக்கையை கைவிட்ட படையினர், பின்பு எறிகணை தாக்குதல்களை காட்டினுள் கடுமையாக நடத்தியபின், காட்டுக்குள் நுழைகிறார்கள். இந் நடவடிக்கையில் சிறீலங்கா படையணியின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினர் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். இந்தச் சண்டைகளின் போது விடுதலைப் புலிகளுக்கும் சிறு சிறு இழப்புக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் காட்டினைச் சுற்றிய படையினரின் முற்றுகையும் இறுகுகின்றது. இருந்தும் விடுதலைப் புலிகள் தளரவில்லை. காட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது. இருந்தும் உணவு பொருட்கள் நீண்ட தூரம் மக்கள் வாழும் பகுதிகளுக்குள்ளால் சென்று போராளிகள் சிலர் கொள்வனவு செய்கிறார்கள். இவ்வாறு பாரிய இடர்களை அங்குள்ள போராளிகள் எதிர்கொண்டபடிதான் படையினருக்கு எதிரான வியூகங்களை வகுத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

கண்ணிவெடிகள், பொறிவெடிகள், கிளைமோர்கள் ஒரு பக்கம் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்த, நேரடி மோதல்களிலும் கடுமையான இழப்புக்களை படையினர் சந்திக்கின்றார்கள். தொடர்ச்சியான இழப்புக்களால் படையினர் சலிப்புற்று, சோர்வடைந்த நிலையில், அவர்களின் தாக்குதல் திட்டம் மாற்றியமைக்கப்படுகின்றது. போராளிகள் சிறு சிறு அணிகளாகச் சென்று தாக்குதல் நடத்துவதுபோல், படையினர் சிறு சிறு அணிகளாக பிரிந்து சென்று காட்டினுள் தாக்குதலை நடத்தத் தொடங்கினார்கள். அவர்களின் ஆள் வளமும், ஆயுத வளமும் அதிகமாக இருந்ததால், பெருமளவு சிறு சிறு அணிகளை பல முனைகளினூடாக இறக்கி விடப்பட்டிருந்தன. குறிப்பிட்டளவு போராளிகளே நின்றிருந்த நிலையில், வரும் அணிகள் அனைத்தையும் சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது.

எனினும், போராளிகள் இல்லாத இடங்களில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளும், பொறிவெடிகளும் படையினருக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இதேவேளை, இவ்வாறான வெடிப்புச் சம்பவங்களின் போது அச்சம் காரணமாக படையினர் நடத்திய தாக்குதல்களில், அவர்களது சக படையினரே உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றன. இவைகள் அன்றைய காலப்பகுதியில் வெளியில் தெரியவராமல் மறைக்கப்பட்டன. அதாவது களமுனைகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளைவிட அதிகமாக அம்பாறைக் காட்டிற்குள் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது என்பது மிகையானதல்ல. இந்த இழப்புக்களினால், ஒரு சில கரையோரக் காடுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய படையினர் தமது தேடி அழிக்கும் நடவடிக்கையை நிறுத்திவிட்டு எல்லைப் புறக் கிராமங்களில் முகாம்கள், காவலரண்கள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்துகின்றனர்.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் சற்று குறையத் தொடங்கின. இந்த இறுக்கத்தைப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நன்றாகக் குறைத்து காட்டினுள் போராளிகள் குறைவடைந்துவிட்டது போன்றதொரு நிலையை ஏற்படுத்துகின்றார்கள். அத்துடன், அதே காலப்பகுதியில் காட்டினுள் தமது இருப்பிடங்களை நிலைப்படுத்தும் நடவடிக்கை, உணவு தேடும் நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறுதான் மட்டக்களப்பு காட்டினுள்ளும் போராளிகள் தாக்குதல்களை நிறுத்திவிட்டு தங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்கள். எனினும், அவ்வப்போது படையினருடன் எதிர்பாராத நிலைகளில் மோதவேண்டிய சந்தர்ப்பங்களும் எழுந்தன. இதனால் காட்டினுள் இருந்த போராளிகள் சில சிக்கல்களுக்கும் முகம்கொடுக்கிறார்கள். இந்தச் சிக்கல்களினால், போராளிகள் சிலர் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு வீடு செல்லப்போவதாக கூறுகின்ற அளவிற்கு நிலைமை சென்றிருந்தது.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*