TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஜனாதிபதித் தேர்தலும் முசுப்பாத்திகளும்….!

sarath_mahindaஅரசியல்வாதிகளெல்லாம் வடிவேல் சொல்வது போல் திடீரென்று “பாசக்காரப் பயலுகளாக” மாறத் தொடங்கிவிட்டார்கள். கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்கிறார்கள், பாஸ் இல்லாமல் போக்குவரத்துச் செய்யலாம் என்கிறார்கள், 180 நாள்கள் வேலை செய்தவர்களையெல்லாம் உத்தியோகத்தில் நிரந்தரமாக்குவோம் என்கிறார்கள்….. இப்படி நமது ஆளுந்தரப்பிலுள்ள அரசியல் வாதி களின் பாசமழை ஒருபுறம்!

மறுபக்கம், எதிரணியினர் குறிப்பாக ஜெனரல் சரத்பொன்சேகா தரப்பினர் பாச மழையில் மக்களை போதும், போதும் எனும் வகையில் தெப்பமாக்கித் தொலைக்கிறார்கள். நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்குச் சுதந்திரம் இல்லையாம், மாகாணசபை முறைமைக்கு அப்பால் சென்று சிறுபான்மையி னருக்கு தீர்வு வழங்கத் தயாராம், மக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையாம், அதை அவர் பெற்றுத்தருவாராம்!

எல்லாம் இந்த ஜனாதிபதித் தேர்தல் படுத்தும் பாடு! தேர்தல்கள் மட்டும்தான் அரசியல்வாதிகளைப் பாசக்காரப் பயலுகளாக மாற்றுகின்றன, மக்களை எஜமானர்களாக்குகின்றன. அப்படிப் பார்த்தால், அடிக்கடி தேர்தல் வருவதுதான் நல்லது போல் தெரிகிறது என்று சற்று நக்கல் பாணியில் நம்மிடம் சொன்னார் நமது ஊடக நண்பர். இந்த திடீர் பாசமெல்லாம் மக்கள் மீதுதான். ஆனால், வேட்பாளர்களோ ஒருவர் மீது ஒருவர் இனியில்லையென்ற கடுப்பில் இருக்கின்றார்கள். இராணுவத்துக்குள் நடந்த ஊழல்களுக்கெல்லாம் சரத்பொன்சேகாவே பொறுப்பு என்கிறது மஹிந்த தரப்பு. இந்த நாட்டில் நிலவும் அராஜகம், அட்டூழியம் அனைத்தையும் புரிந்தது மஹிந்த ராஜபக்ஷதான் என்கிறார் சரத்பொன்சேகா! மஹிந்தவும், பொன்சேகாவும் பரஸ்பரம் இப்படிக் குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கோஷமிடும் போது, அவர்களுடன் இணைந்து நிற்கும் சிறுபான்மையின அரசியல்வாதிகள் வில்லுப் பாட்டுக்கு ஆமா போடுகின்றமைபோல், பக்கப்பாட்டுப் பாடுகின்றமைதான் இப்போதைக்கு மிகக் கொடுமையாக இருக்கிறது.

உதாரணமாக, சரத்பொன்சேகா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர் சிறுபான்மையினத்தவருக்கு எதிரானவர் என்பது! பொன்சேகா இராணுவத்தளபதியாக இருந்தபோது வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியொன்றை வைத்துக்கொண்டுதான் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுச் சுமத்தப்படுகிறது.

கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் “நஷனல் போஸ்ற்” என்கிற ஊடகமொன்றுக்கு கடந்த வருடம் பொன்சேகா நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அதன்போது, இலங்கை நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனத் தாம் பலமாக நம்புகிறார் என்கிற அர்த்தப்பட அவர் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஊடகமும் அதை வெளியிட்டிருந்தது. பக்கம் சாராமல் சொல்வதென்றால், இது மிக மோசமானதோர் இனவாதக் கருத்துத்தான் என்பதில் இரண்டுபட்ட கருத்தியல் இல்லை! ஆனால், தான் அப்படிக் கூறவில்லை என்றும் தனது கருத்து பிழையாக விளங்கப்பட்டுவிட்டது என்றும் இப்போது சரத்பொன்சேகா கூறுகிறார். பொன்சேகா கூறுகின்றமை உண்மையாக இருந்தாலும் கூட, இந்த மறுப்பை அவர் பேட்டி வெளியான போதே கூறியிருக்க வேண்டும். இப்போது கூறுகின்றதில் இலாபமில்லை!

அது ஒருபுறமிருக்க, ஆளுந்தரப்பிலுள்ள சிறுபான்மை அரசியல்வாதிகள், குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பொன்சேகாவின் அந்தக் கருத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, கோசம் போடும் போதுதான் நமக்குள் சில தார்மீகக் கோபங்களும், கேள்விகளும் எழுகின்றன. ஜெனரல் சரத்பொன்சேகா அந்தக் கருத்தைக் கூறியபோது, அவர் இலங்கை நாட்டு இராணுவத்தின் தளபதி எனும் பதவியை வகித்துக் கொண்டுதான் இருந்தார். அதாவது மஹிந்த ராஜபக்ஷவின் முழுமையானதொரு கட்டுப்பாட்டின் கீழ்தான் ஜெனரல் சரத்பொன்சேகா அப்போது கடமையாற்றினார். அப்படியானதொரு நிலையில், தனது இராணுவத் தளபதி இனவாதக் கருத்தொன்றைக் கூறும்போது, மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரின் அரசிலுள்ள முக்கியஸ்தர்களோ ஏன் அதை எதிர்க்கவேயில்லை? சிறுபான்மையினர் மத்தியில் அந்தக் கருத்து ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக ஏன் மன்னிப்புக் கோரவில்லை?

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து கொண்டே இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்துறை அமைச்சரான சம்பிக்க ரணவக்க தமிழ், முஸ்லிம் மக்களை கேவலப்படுத்தும் வகையில் கடந்த வருடம்; இனவாத வாந்தி எடுத்திருந்தமையை வாசகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டீர்கள். முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வியாபாரிகளாக வந்தவர்கள், இந்துக்களோ இந்தியாவிலிருந்து அகதிகளாக வந்தவர்கள். எனவே, இலங்கைத் தேசத்தில் இவர்களுக்கு எவ்விதமான உரிமைகளும் கிடையா. இந்த நாடு பௌத்த மகாஜனங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று ஆங்கிலப் பத்திரிகை யொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

சம்பிக்க இவ்வாறு கூறியபோது, ஆளுந்தரப்பிலிருந்த சிறுபான்மை அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய அரசியல்வாதிகளும் தங்கள் வாய்கள் உட்பட அனைத்தையும் மொத்தத்துக்குப் பொத்திக் கொண்டிருந்துவிட்டு, இப்போது மட்டும் சரத்பொன்சேகாவின் கருத்துக்கு எதிராகக் கோசமிடுகிறார்களே, இவர்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர்!
முஸ்லிம்களை வியாபாரிகளாக வந்தவர்கள் என்றும், இந்துக்களை அகதிகளாக வந்தவர்கள் என்றும் சம்பிக்க கூறியபோது மஹிந்த ராஜபக்ஷ மௌனம் காத்தாரே தவிர, அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஏன்? மௌனம் என்பது சம்மதத்துக்கும் ஆதரவுக்கும் அறிகுறி என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்ததுள்ளமையும் இங்கு கவனிக்கத் தக்கது!

இவை ஒருபுறமிருக்க, நாமெல்லாம் எதிர்பாத்தகால நேரங்களுக்கு முன்பாகவே கட்சித் தாவல்கள் ஆரம்பித்துவிட்டன. ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. என அழைக்கப்படுகின்ற எஸ்.பி. திஸாநாயக்க மீண்டும் சுதந்திரக் கட்சிக்குப் போய்விட்டார். இதில் சுவாரசியம் என்னவென்றால் எஸ்.பியின் வீட்டுக்கு ஜனாதிபதியே சென்று எஸ்.பி.யைக் கட்டித் தழுவி கட்சி மாறுமாறு கேட்டிருக்கின்றார். மஹிந்த ஏன் இப்படி இறங்கிப் போனார்? எஸ்.பியின் வீட்டுக்கு சென்று ஆதரவு கேட்குமளவு மஹிந்த ராஜபக்ஷவின் நிலை ஆட்டங்கண்டு விட்டதா? ஏன்று கேட்கிறார்கள் ஒரு சாரார்!

ஆனால், அப்படியல்ல இது மஹிந்தவின் ராஜதந்திரமாக்கும் என்கிறார்கள் வேறொரு சாரார்! அதாகப்பட்டது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாகப் பேசக்கூடிய அல்லது களமிறங்கக் கூடியதொரு நிலை இந்தத் தேர்தலில் காணப்படுகின்றது. அப்படி சந்திரிக்கா களமிறங்கினால், அது மஹிந்தவுக்கு ஏதோவொரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே, அந்த நிலையை எதிர்கொள்வதற்காகத்தான் ஐ.தே.க.வுக்குள் அதிருப்திகளோடு இருந்த எஸ்.பியை தனது அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

எஸ்.பி யும் சந்திரிக்கா அம்மையாரும் அரசியலில் கவுண்டமணியும் செந்திலும் போலானவர்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. (பாம்பும் கீரியும் என்கிற உதாரணத்தை எத்தனை காலத்துக்குத்தான் சொல்வது. அதுதான் இப்படியொரு உதாரணம். செந்திலை கவுண்டமணி உதைக்காமல் எந்தப் படம் தான் வந்திருக்கிறது) இதேவேளை, சிறுபான்மைக் கட்சிகளுக்குள்ளும் இந்தக் கட்சித் தாவல்கள் நிகழத் தொடங்கி விட்டன. உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் அங்கத்தவருமான சட்டத்தரணி அமீருல் அன்சார் மௌலானா அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்திருக்கிறார். இதுபோலவே, காத்தான்குடி நகரசபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தலைவர் மர்சூக் என்பவரும் நகரசபை உறுப்பினர்கள் சிலரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகிறார்கள் எனச் சொல்லிக்கொண்டு போய்விட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தாங்கள் அப்படி அணி மாறவில்லை என அவர்கள் தரப்பில் தற்போது மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக முக்கியமான பிரமுகரொருவர் நம்மைத் தொலைபேசியில் அழைத்து, சந்தேகமொன்றைக் கேட்கின்றமை போல், தகவலொன்றைக் கூறினார். அந்தத் தகவல் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் அணிக்குச் சென்று விட்டாராம் என்பதுதான் அந்தத் தகவலின் கதைச் சுருக்கம்!
மு.கா. தவிசாளரை அதே நிமிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசயத்தைக் கேட்டோம். மெல்லிய சிரிப்புடன் பதிலளித்தார். “”யாரோ வேண்டாதவர்கள் கட்டிவிடும் கதைதான் இது! மு.கா.விலிருந்து நான் ஒதுங்கிப் போகும் நிலையொன்று வந்தால், எனது வீட்டுக்குத்தான் செல்வேனே தவிர, இப்படியெல்லாம் போக மாட்டேன்” என்றார்!

ஐ.தே.முன்னணியோடு, முஸ்லிம் காங்கிரஸ் அவசரப்பட்டு இணைவது குறித்து அக்கட்சியின் தவிசாளர் பசீர்சேகுதாவூத்மாறு பட்டசில கருத்துக்களை
ஊடகங்களுக் குத்தெரிவித்திருந்தார். அதைவைத்துக்கொண்டு சிலர்போட்ட கோலம்தான், பசீர் கட்சி மாறிவிட்டார் என வந்த இந்தக் கதை என்பது பிறகு நமக்குப் புரிந்தது. ஆனாலும்,கட்சி தாவும் காட்சிகள் நிறையவே இன்னும் அரங்கேறத்தான் போகின்றன. அம்பாறை மாவட்டத் திலுள்ள ஓர் அமைச்சரும், இன்னொரு பிரதியமைச்சரும் கூட ஐ.தே.க. முன்னணியோடு இணையவுள்ளனர் என கதையொன்று உலவுகிறது. பேச்சுசையும் நடந்து விட்ட தாம்! இதுபற்றி நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந் தேன், அப்படியென்றால், நல்ல முசுப் பாத்திதான் என்று ரஜனி படமொன்றைப் பார்க்கப் போகும் ஆவலுடன் கேட்டார்!

உண்மைதான். ஜனாதிபதித் தேர்தலில் இன்னும் நிறையவே முசுப்பாத்திகள் காத்திருக்கின்றன!

மப்றூக்_உதயன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*