TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அமெரிக்க அறிக்கையும் இந்திய பயணங்களும்

vanniஅண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக் வவுனியா முகாம்களுக்குச் சென்று அங்குள்ள வன்னி மக்களை பார்வையிட்டுள்ளார். அதனையடுத்து இந்தியாவிற்கு தனது உத்தியோகப் பயணத்தை மேற்கொண்ட றொபர்ட் பிளேக், போர்க் குற்ற விசாரணைகள் நடைபெறாதென்ற தமது நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்றோரின் இந்திய பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் பிரதிநிதி றொபர்ட் ஓ பிளேக்கும் அங்கு சென்றிருப்பது இலங்கை போர்க் களத்திலும் அரசியல் களத்திலும் இந்தியாவின் வகிபாகத்தை உணர்த்துகிறது.

இந்தியாவின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்ற இலங்கை அரசின் உயர்பீட பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் ஆகியோரை சந்தித்து இனப்பிரச்சினை தீர்வு குறித்து சில வாக்குறுதிகளை வழங்கியதாகத் தெரிய வருகிறது.

தேர்தலின் பின்னர் தீர்வு முன் வைக்கப்படுமென்பதே அந்த வாக்குறுதியாகும். ஆனாலும் இந்த பல தரப்பினர் மேற்கொள்ளும் பயணங்கள் விரைவுபடுத்தப்படும் இவ்வேளையில் பூகோள அரசியலில் இலங்கையின் வகிபாகம் குறித்த தமது அறிக்கையினை அமெரிக்க செனட் சபையின் விசேட குழுவொன்று வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின் சாராம்சம் அமெரிக்காவின் இலங்கை குறித்த புதிய அணுகு முறைகளையும் கடற்பாதையின் முக்கியத்துவத்தையும் தெளிவாக முன்வைக்கிறது.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மீள் குடியேற்ற நிவாரணப் பணிகள் மற்றும் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள் குறித்து வட மாகாணத்தை மையப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தால், தென்னிலங்கையானது சீனாவின் பொருளாதார ஆதிக்கத்திற்குள் விழுந்து விடுமென்கிற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டமானது, பர்மா, சீனா, ஈரான் மற்றும் லிபியாவுடனான இலங்கையின் உறவினை, வலுப்படுத்தி விட்டதென்கிற ஆதங்கமும் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தனது பொருளாதார நண்பனான ஜப்பான் நிலை கொண்டுள்ள கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கும் இடையில் வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு இணைப்புப் பாதையாகவிருக்கும் கடல் பாதையில், இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையத் தரிப்பிடம் அமெரிக்காவுக்கு அவசியமானதென்று அவ்வறிக்கை கூறுகிறது. இடம்பெயர்ந்தோரின் இயல்பு வாழ்வு மற்றும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை தென்னிலங்கை வாழ் சிங்கள மக்களும் ஆட்சியாளர்களும் அண்மைக் காலமாக தம் மீது செலுத்திவரும் வெறுப்புணர்வை நீக்க, பொருளாதார, வர்த்தக மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியாவென குறிப்பிடும் அமெரிக்க அறிக்கை, இலங்கை விவகாரத்தில் இந்தியாவோடு இணைந்து செயற்படுதல் என்கிற புதிய இராஜதந்திர நகர்வினை கோடிட்டுக் காட்டுகிறது. இவை தவிர பயங்கரவாதம், கடற்கொள்ளை, நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பன இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கும் மிகப் பெரிய மூன்று முக்கிய அச்சுறுத்தல்களாக அமெரிக்காவால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் இலங்கையோடு நெருக்கமான உறவினைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைக்கப்படாமல் மிகச் சாதுரியமாக தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் பாகிஸ்தானுடனோ அல்லது இலங்கையில் சீன ஆதிக்கத்தை முறியடிக்க காய்களை நகர்த்தும் இந்தியாவுடனோ, தற்போதைய நிலைமையில் முரண்பட்டுக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை போல் தெரிகிறது. நண்பர்கள் தேவையில்லை, பங்காளிகளே போதுமென்கிற அதிபர் பராக் ஒபாமாவின் பிரகடனத்தின் அடிப்படையிலிருந்தே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் இராஜதந்திர மூலோபாய நகர்வுகளைப் பார்க்க வேண்டும்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, அனைத்துலக நாணய நிதியத்தின் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி போன்றவற்றால் மேற்குலகிற்கும் இலங்கைக்குமிடையே பல்வேறு தளங்களில் உரசல் நிலை தோன்றியதை அமெரிக்கா கவனத்தில் கொள்கிறது. மனித உரிமை மீறல் விவகாரத்தை தொடர்ந்தும் உயர் த்திப் பிடிப்பதால் தனது வல்லாதிக்க ஆளுமை இலங்கையில் தளர்ந்து விடுமெனக் கணிப்பிடும் அமெரிக்கா, சில விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்படுகிறது.

இவை தவிர பிராந்திய ஆதிக்கப் போட்டியில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக காட்டும் அதேவேளை தென்னிலங்கையிலும் சில நகர்வுகளை சமாந்தரமாக மேற்கொள்ளும் உத்தியை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தவறவிட்ட விடயத்தை 2010 இலாவது நிறைவேற்றிவிட்டால் இந்தியாவில் முழுமையாகத் தங்கி நிற்கும் அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்படாது. வருகிற அதிபர் தேர்தலிலும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையேயான நிழல் யுத்தமொன்று கடலடி நீரோட்டம் போல் சலனமில்லாமல் நடைபெறுவதை அவதானிக்கலாம்.

சர்வதேச அரங்கில், தன்னோடு பல தளங்களில் மோதிக் கொண்டிருக்கும் நாடுகளுடன் நெருங்கிய உறவினைப் பேணிக் கொண்டிருக்கும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினை விட மேற்குலகச் சிந்தனையோடு ஒத்துப் போகும் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டமைப்பு ஆட்சிப்பீடமேறுவதையே தனக்குப் பொருத்தமான தெரிவாக அமெரிக்கா கருதக்கூடும். இந்தியாவின் நிலைப்பாடு இதிலிருந்து முற்றாக வேறுபடும். குறுகிய காலப் பார்வையில் சீனாவும் நீண்ட கால நோக்கில் அமெரிக்காவும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்கும் வகையிலான ஆட்சி அமைவதையே இந்தியா விரும்பும்.

ஆனாலும் அம்பாந்தோட்டை வாசல் வழியாக பொருளாதார பலத்தோடு உள் நுழைந்திருக்கும் சீனாவை அகற்றுவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. இவர்களின் நகர்வுகளை சிங்கள தேசமும் மிகத் தெளிவாகப் புரிந்திருக்கும். சீனா, இந்தியா, அமெரிக்கா என்கிற உலகின் மிகப் பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசாளர்களை போர்க் காலத்தில் கையாண்டது போன்று அவர்களுக்கிடையே நிலவும் பிராந்திய சந்தை ஆதிக்கப் போட்டிகளை உன்னிப்பாக அவதானித்து தமது புதிய நகர்வுகளை சிங்களம் மேற்கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.

முழு இலங்கையும் பௌத்த சிங்கள இறையாண்மைக்கு உட்பட்டது என்கிற கருத்தினை மறுதலிப்பவர்களோடு முரண் நிலைப் போக்கினைக் கடைப்பிடிக்கும் நிலைப்பாடு மாற்றமடையப் போவதில்லை. இவ்வாறான நிலையில் இன ஒடுக்கு முறைக்கு நீண்ட காலமாகவே முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினம், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றிற்கும் அப்பால் தமது பூரண சுய நிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது.

சமஷ்டிக்காகப் போராடப் போவதாக கூறும் பல கட்சிகள் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வல்லரசாளர்களின் காய் நகர்த்தல்களுக்கூடாகப் புரிந்து கொள்ளும் சர்வதேச அரசியலை, எவ்வாறு தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பயன்படுத்தப் போகிறது?ஆனாலும் போரை முன்னெடுத்த இருவரில் ஒருவரே அதிபராகும் வாய்ப்பு இருக்கிறது. இதில் யாரை ஆதரிப்பது அல்லது சுயேட்சையாகப் போட்டியிடும் ஒருவரை ஆதரிப்பதா அல்லது இத் தேர்தல் தமிழ் மக்களுக்குச் சம்பந்தமற்ற விடயமென்று ஒதுங்கி இருப்பதா என்பதனை சரியான தருணத்தில் வெளிப்படுத்த விருப்பதாக கூட்டமைப்பு கூறுகிறது.

ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அரசியல் நலனை பிரதிபலிக்கும் கட்சி, எதிர்ப்பு அரசியல் என்கிற தளத்தில் இருந்து விலகி, ஒடுக்குவோருடன் சமரச அரசியலை மேற்கொள்வதை, அம்மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை புள்ளடி ஜனநாயகம் மட்டும் தீர்மானிப்பதில்லை.

– இதயச்சந்திரன்

நன்றி: வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*