TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கொலை வழக்கில் முதல் எதிரி மகிந்த ராஜபக்ச

mahinda-rajapaksaஇரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசை ஆதரிப்பது? அல்லது இரண்டு பிசாசுமே வேண்டாம் நாம் தனித்து நின்று கேட்போம், அதுவும் வேண்டாம் இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன அல்லது இடையில் வந்த அனுமான் ஆண்டால் என்னவென்று தேர்தலையே முற்றாகப் புறக்கணிப்போம். இந்த தெரிவுகளையிட்டுத்தான் தமிழ்த் தேசியக் கூட்டணி தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறது போல் தெரிகிறது.

வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாள்களே (டிசெம்பர் 17) முழுதாக எஞ்சியிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போய்த் திண்டாடுகிறது.

“சனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி சனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்ற செய்தி உண்மையல்ல. 12 ஆம் நாள் (சனிக்கிழமை) வரை எந்த முடிவையும் தமிழத் தேசியக் கூட்டணி எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

ஆட்சித் தலைவர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அய்ந்துக்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து நிற்பது தெரிகிறது.

முதலாவது குழு

தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். இந்தத் தேர்தல் சிறிலங்காவின் ஆட்சித்தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சிங்களவர்கள் மத்தியில் நடைபெறும் தேர்தல். சுதந்திரமும் இறைமையும் படைத்த தமிழீழ அரசே எமது வேட்கை என்பதால் சிங்கள நாட்டில் நடைபெறும் தேர்தலைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. 2005 ஆம் ஆண்டிலும் வி.புலிகள் இந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்தார்கள்.

இரண்டாவது குழு

வட-கிழக்குத் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். வட – கிழக்குக்கு வெளியே உள்ள தமிழர்கள் தங்கள் வாக்குகளை தமிழர்களது தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்ளும் இடதுசாரி முன்னணி வேட்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தினாவுக்குப் போட வேண்டும். இந்தக் குழுவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் இருக்கிறார்கள்.

மூன்றாவது குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை தேர்தலில் போட்டியிட நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் சுயேட்சையாகப் போட்டியிடுவேன் எனத் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் எம்.கே. சிவாஜிலிங்கம்.

நான்காவது குழு

அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி வேட்பாளரும் தமிழ்மக்களை நரகவேட்டை ஆடியவருமான மகிந்த இராசபக்சேயை ஆதரிக்கும் குழு. என்.சிறிகந்தா, சிவநாதன் கிஷோர், கே. தங்கேஸ்வரி இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

அய்ந்தாவது குழு

இரண்டும் பிசாசுகள். அதில் இப்போது பதவியில் இருக்கும் இராசபக்சே என்ற பிசாசைத் துரத்த வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வழி சரத் பொன்சேகா என்ற பிசாசை (choosing the lesser of the two devils) ஆதரிப்பது. இந்தக் குழுவில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இருக்கிறார்கள்.

ஏன் இவ்வாறு வெவ்வேறு குழுக்களாக அல்லது அணிகளாகப் பிரிந்து சந்தி சிரிக்கும் வண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டை பிடிக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

ஓரு மாதத்துக்கு முன்னர் ஆட்சித் தலைவர் தேர்தல் உப்புச் சப்பில்லாது இருந்தது. மகிந்த இராசபக்சேக்கு போட்டியே இல்லை என்ற தோற்றம் இருந்தது. அவரிடம் இருக்கும் ஆள், அம்பு, பணம், பதவி, அடியாள், அண்ணன் தம்பிகள் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்க தென்னிலங்கையில் வேறு சிங்களத் தலைவர் இல்லை என்பதே பேச்சாக இருந்தது. ஆனானப்பட்ட அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளரான இரணில் விக்கிரமசிங்கா ஒரு நொண்டிக் குதிரையாகவே பார்க்கப்பட்டார். அதுவும் பரிதாபத்தோடு பார்க்கப்பட்டார்.

ஆனால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் குதித்தது மகிந்தாவின் வெற்றியை இரவோடு இராவாகக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இராசபச்சே, பொன்சேகா இருவருமே சிங்கள – பவுத்த பேரினவாதிகள். இரண்டுபேருமே தமிழினத்தின் பரம எதிரிகள். பின் ஏன் இருவருக்கும் இடையில் மோதல்?

எல்லாம் வி.புலிகளுக்கு எதிரான போர் வெற்றிக்கு யார் காரணம்? அந்தப் பெருமை யாருக்கு உரியது? என்ற குடுமிச் சண்டைதான்.

சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் குதித்ததால் தேர்தல் சூடு பிடித்துள்ளது. இருவருக்கும் இடையில் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு பிசாசுகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்குப் பலம் தமிழ்மக்களுடைய கையில் இருக்கிறது.

இந்தத் தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 2005 ஆம் ஆண்டில் வி.புலிகள் இராணுவ சம பலத்தோடு விளங்கினார்கள். அத்தோடு அவர்கள் ஒரு நிழல் அரசை இயங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய நிலமை முற்றிலும் வேறுபட்டது. களமும் இல்லை. அரசும் இல்லை. இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

2005 ஆம் ஆண்டு வி.புலிகள் எடுத்த முடிவு சரியாக இருந்தாலும் இப்போதுள்ள நிலைமை அவ்வாறனதல்ல. தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்றவிதத்தில் சாதுரியமாக காய்களை நகர்த்தவேண்டும்.

மறைந்து போன சோவியத் ஒன்றியத்தின் சிற்பி என வருணிக்கப்படும் லெனின் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பது வழக்கம். அதில் அவர் அரசியலில் கையாள வேண்டிய இராசதந்திரம், வினை வலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி போன்றவற்றை எப்படி சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பது என்பது பற்றி பாடம் எடுப்பார்.

ஒரு கம்யூனிஸ்டுக்கு நான்கு எதிரிகள் இருந்தால் மூன்று எதிரிகளோடு சேர்ந்து நாலாவது எதிரியை முடித்துக் கட்ட வேண்டும். எஞ்சியுள்ள மூன்று எதிரிகளில் இரண்டு எதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது எதிரியை முடிக்க வேண்டும். அப்புறம் எஞ்சியுள்ள இரண்டு எதிரிகளில் முதல் எதிரியோடு சேர்ந்து இரண்டாவது எதிரியை முடிக்க வேண்டும்.

வகுப்பில் இருந்த ஒரு இளம் தோழர் “அந்தக் கடைசி ஆளை என்ன செய்யலாம் என நீங்கள் எதுவும் சொல்லவில்லையே” எனக் கேட்டான்.

“அவனை நீதான் வெற்றி கொள்ள வேண்டும். அந்தப் பலம் உன்னிடம் இல்லாவிட்டால் நீ ஒரு கம்யூனிஸ்டே இல்லை” என்றார் லெனின்.

தமிழ்மக்கள் முன் இரண்டு எதிரிகள் நிற்கிறார்கள். இதில் முதல் எதிரி இராசபக்சே. இரண்டாம் எதிரி சரத் பொன்சேகா. இரண்டாம் எதிரியோடு சேர்ந்து முதல் எதிரியை முடிக்க வேண்டும். அதுதான் சாணக்கியம்.

அம்பை எய்தவர் இராசபக்சே. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? ஆட்சித் தலைவர் என்ற முறையில், இராணுவத்தின் முக்கிய தளபதி (Commander in Chief of the Army) இராசபக்சேதான் போரை நடத்தினார். பொன்சேகா வெறும் அம்பு மட்டுமே!

இராசபச்சே ஒரு பலமான கட்சியின் தலைவர். அவரிடம் பதவி அதிகாரமும் பணபலமும் இருக்கிறது. அத்தோடு குடும்ப அரசியல் நடத்துகிறார். இந்தப் பலமெல்லாம் சரத் பொன்சேகாவிடம் இல்லை.

பொன்சேகா இராசபக்சேயைவிட மோசமான ஆளாக இருக்க முடியாது. ஒரு வாதத்துக்கு அப்படியே வைத்துக் கொள்வோம். முதலில் முதல் எதிரியான இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்புறம் எதிரிக்கு எதிரியான இரண்டாவது எதிரிபற்றி யோசிக்கலாம்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னும் தமிழ்மக்கள் முன்னும் இருக்கின்ற தேர்வுகள் என்ன?

1. சரத் பொன்சேகாவை ஆதரிப்பது, அதற்கு மனமில்லை என்றால்

2. இரா சம்பந்தனை தேர்தலில் நிறுத்த வேண்டும். ஆனால்

3. விருப்பு வாக்குகளை சரத் பொன்சேகாவுக்குப் போட வேண்டும்.

முதல் சுற்றில் இராசபக்சேக்கு 50% + வாக்குகள் எடுத்தால் வெற்றி அவருக்குத்தான். தமிழ்மக்கள் பொன்சேகாவுக்கு போட்ட வாக்குகள் அல்லது இரா சம்பந்தனுக்குப் போட்ட வாக்குகள் முடிவை மாற்றாது.

இராசபக்சே 50% + வாக்குகள் எடுக்கத் தவறினால் விருப்புவாக்குகளின் அடிப்படையில் பொன்சேகா வெற்றி பெறுவார். அதாவது தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்தால் பொன்சேகா 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார்.

மகிந்த இராசபக்சே – 47 விழுக்காடு

சரத் பொன்சேகா – 45 விழுக்காடு

இரா. சம்பந்தன் – 7 விழுக்காடு

மற்றவர்கள் – 1 விழுக்காடு

தேசியத்தை நேசிக்கும் தமிழ்மக்கள் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சரி தங்கள் பொன்னான வாக்குகளைச் சாணக்கியத்தோடு பயன்படுத்தினால் தமிழ்மக்களின் குருதி தோய்ந்த கையோடு காணப்படும் கொலையாளி மகிந்த இராசபக்சேயை மட்டுமல்ல தமிழ் ஒட்டுக் குழுக்களையும் காட்டிக் கொடுப்பவர்களையும் கூட்டிக் கொடுப்பவர்களையும் வீட்டுக்கு அனுப்பலாம்.

இந்திரஜித்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*