TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தொலைக்காட்சியில் உயர் இராணுவ அதிகாரிகள்

Sarath Fonsegaதொலைக்காட்சியில் உயர் இராணுவ அதிகாரிகள் சீருடையில் தோன்றி பொன்சேகாவுக்குப் பதில் ..
கடந்த மே மாதம் பாதுகாப்புப் படை யினரால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பிறகு சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருபோதும் இல்லாதவகையில் ஜனநாயக அரசியலுக்குள் இராணுவத்தன்மை தாராளமாகக் கலப்படமாகத் தொடங்கியிருக்கிறது. இது மெதுவாக வளர்ந்து வருகின்றமை மட்டுமல்ல உயிராபத்துக்களை விளைவிக்கும் ஒரு போக்கும் தென்படத் தொடங்கியுள்ளது.

புலிகளின் பெரும் எண்ணிக்கையானவர்கள் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெரும் அளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுவிட்டன. எஞ்சி யிருப்பவை ஒவ்வொருநாளும் கைப்பற்றப்பட்டு வருகின்றன. உயிருடனிருக்கும் போராளிகளில் காவலில் இருக்கும் 10 ஆயிரம் பேரில் அனேகர் அடையாளம் காணவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்; இன்னும் ஒரு சிலரே வெளியில் இருக்கக்கூடும். ஆயிரக்கணக்கில் இருப்பார்கள் என்று கூறப்படுவது மிகைப்படுத்திக் கூறுவதாகவே இருக்கும். அறிவுபூர்வமாக ஆராய்ந்தால் ஒரு சில நூறுபேரே அப்படி இருப்பார்கள் என்று கண்டறியலாம். நூறுபேருக்கும் குறைவாக இல்லாதுபோனாலும் அவ்வாறான ஒரு குழுவினால் நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தக்கூடிய நிலையில் இருப்பார்களா? என்று கூறமுடியாது. இதற்கு “ஆம்” என்பது விடையாக இருக் குமானால் புலிகளின் இராணுவத்திறமை தோற்கடிக்கப்பட்டுவிட்டது, புலனாய்வுத் திறமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசாங்கம் கூறிக்கொள்ளும் நிலைப்பாடுகள் முரணானவையாகக் காணப்படுகின்றன. இன்னொரு வகையில் “இல்லை” என்பது பதிலாக அமையுமானால் நாடு முழுவதும் ஆயுதப் படைகளும் பொலிசாரும் சிவில் பாதுகாப்புப் படைகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் அளவு ஈடுகொடுப்பதாக இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
தலைவர்கள், ஆயுதபலம், மற்றும் நாடு முழுவதும் செயல்படுவதற்கான புலனாய்வுத்திறன்கள் யாவும் இழந்து இருக்கும் அவர்கள்தான் சாட்டுக்குக் கிடைத்துள்ளவர்கள். அரசின் கட்சி அரசியலானது மிகவும் தாழ்வான நிலைக்குப் போய்விட்டது. இவ்வாறுதான் ஜெனரல் பொன்சேகா ஹில்டன் ஹோட்டலில் செய்தியாளர் மத்தியில் தேர்தலில் போட்டியிடப்போவது பற்றி முதல் தடவையாக அறிவித்ததுடன் போராட்ட நிலைகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு விட்டன.

அன்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள் என்றில்லை. ஐ.தே.க குழுவொன்றும் கலந்துகொண்டு கைதட்டி மகிழ்ந்தது. மேற்கு மாகாண சபை உறுப்பினர் ஒரு வரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும் முதல் வரிசையில் இருந்து கொண்டு கேள்விகளைத் தொடுத்தார்கள். வெளியில் ஜே.வி.பியின் அனுர குமார திஸாநாயக்க தனது கைத்தொலை பேசியைக் காதில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் உலாவிக்கொண்டிருந்தார். பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு அவர் பதில் கூறிக்கொண்டிருந்தார். அவருக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்க வில்லையென்ற அரச தரப்பு ஊடகங்களின் செய்திகளை அவர் மறுத்தார். பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கம் எதுவும் தமக்கு இருக்க வில்லையென்று அவர் கூறினார்.

இந்த மாநாட்டில்தான் பிரதான எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகத் தாம் போட்டியிட முன்வந்திருப்பதை பொன்சேகா அறிவித்தார்.

சிரேஷ்ட படை அதிகாரிகள் மூவர் தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை

பொன்சேகா முதல்தடவையாகத் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் என்பதை அறிவித்த சில மணித்தியாலங்களுக்குள் அரசு வேகமாகச் செயலில் இறங்கியது. மரபுக்கு மாறாக மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை அரச ஊடகமான ரூபவாஹினியில் தோன்றி பொன்சேகாவின் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்குமாறு அரசினால் உத்தரவிடப்பட்டது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, முன்னாள் இராணுவப் பேச்சாளரும் தற்போதைய சிக்னல் அதிகாரியுமான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, முன்னாள் இராணுவப் பேச்சாளரும் மீள்குடியமர்வின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் தயாரட்னாயக்க ஆகிய மூவரும் இராணுவ உடையில் தோன்றி ஜெனரல் பொன் சேகாவின் சில கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்தனர். இதில் சுவாரஷ்யம் என்ன வென்றால் பொன்சேகா பதவியில் இருந்த போது நாணயக்காரவும் சமரசிங்கவும் அவரைப் பலமாக ஆதரித்து நின்றவர்களாவர். எதுவானாலும் மேஜர் ஜெனரல் ரட்னாயக்க தாம் முன்னாள் இராணுவத் தலைவருடன் ஒத்துப்போகவில்லை யென்றும் தமது பதவி உயர்வை அவர் மறுத்துவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இராணுவம் அரசியல் மயமாக்கப்பட்டு விட்டது. மற்றும் சாதாரண உடையில் இராணுவத்தினர் அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்களை பிரிகேடியர் நாணயக்கார மறுத்துரைத்தார். புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தமைக்கு எந்த ஒரு தனிப் பட்ட இராணுவத்தினரும் பெருமைப் பட்டுக்கொள்ள முடியாது என்று பிரிகேடியர் சமரசிங்க எடுத்துக் கூறினார். கடந்த காலங்களில் சேவையில் இருந்த எந்தவொரு இராணுவ அதிகாரியும் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அரசியல் கருத்துக்களுக்குப் பதிலளிக் கும்படியாக பணிக்கப்பட்டிருக்கவில்லை.

இராணுவத்துக்கு பதில் கடற்படையினர்

இதற்குப் பிந்திவந்த நாள்களில் கொழும்பு நகரில் சில இடங்களில் இராணுவ நிலைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. முக்கியமான சில இடங்களில் இராணுவத்துக்குப் பதிலாகக் கடற்படையினர் நிறுத்தப்பட்டனர். சில பிரதான பகுதிகளில் இராணுவம் அகற்றப்பட்டு கடற்படையினர் நிலை கொண்டனர். உயர்மட்ட நிலைகளிலும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. படைகளின் பிரதான அதிகாரியின் பணிமனையிலிருந்து மேலும் பலர் மாற்றப்பட்டு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற சில இராணுவ அதிகாரிகள் ஜெனரல் பொன்சேகாவின் பிரசாரப் பணிகளில் இறங்கியுள்ளனர். இலங்கை ரூபவாஹினியிலிருந்து பதவி விலகி பொன்சேகாவுடன் கடைசியாகச் சேர்ந்துகொண்டுள்ளவர் மேஜர் ஜெனரல் சுனில்சில்வா ஆவார். இராணுவத்தின் தளபதியாக பொன்சேகா இருந்த போது இவர் இராணுவச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தமது பிரசார வேலைகளை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர். புதிய மஹிந்த சிந்தனையொன்றை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது விநியோகிக்கப்பட்ட மஹிந்த சிந்தனையில் மேலும் சில மாற்றங்களைச் செய்வதாக இது இருக்கப் போகின்றது.

ஒருவரை ஒருவர் வெறுக்கும் வெற்றியின் பங்காளிகள்

வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள இம்மாதிரி இராணுவ நடவடிக்கைகளுக்கும் இங்கு இடம்பெற்றுள்ள இராணுவ நடவடிக்கைக்கும் இடையிலான வேறுபாடுகள் இப்போது துலாம்பரமாக வெளிப்பட்டு வருகின்றன. ஏனைய நாடுகளில் இறந்தவர்களின் அல்லது அவயவங்களை இழந்தவர்களின் தியாகங்களின் மீது கிடைத்துவிட்ட வெற்றிகளின் மேன்மையை, புகழை அல்லது மாண்பினை வெற்றியாளர்கள் தொடர்ந்தும் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். ஆனால் இங்கேயோ வெற்றியின் பங்காளிகள் வேலுப்பிள்ளை பிரபாகரனை வெறுத்ததைவிட அதிகமாக ஒருவரை ஒருவர் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அரசு நடத்தும் ஊடகங்களும் அரச சார்பு இணையத்தளங்களும் ஜெனரல் பொன்சேகாமீது கடும் தாக்குதல்களை, வசைபாடுதல்களை ஆரம்பித்துவிட்டன. ஓர் இணையத்தளம்அரசிடமிருந்து தனது ஒருமாத காலப் பணிக்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களைப் பெற்று வருகின்றது. இது கடந்த காலத்தில் பொன் சேகாவை வானளாவப் புகழ்ந்து வந்தது.

இராணுவத்திலுள்ள சில பெண் இராணுவத்தினரின் பிள்ளைகளின் தந்தையை நிர்ணயிப்பதற்கு மரபணுச் சோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று இந்த இணையத்தளம் இப்போது தெரிவித்துள்ளது. முன்னொரு தடவை பொன்சேகாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பாதுகாப்புத் தளபாட கொள்வனவில் கமிஷன் பெற்றதாகவும் தங்கள் சட்டத்தரணிகள் இலாபம் பெறுவதற்கு உதவியதாகவும் இந்த இணையத்தளம் குற்றஞ்சாட்டி யிருந்தது. தேசிய வீரர் என்று முன்பு பொன்சேகாவைப் பாராட்டிய அரசாங்கம் இப்பொழுது சட்டவிரோதமாகக் குழந்தைகள் உற்பத்தியாக தந்தையாக விளங்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டுவதற்கு இணையத்தளம் ஒன்றுக்கு உதவி வருகின்றது. இப்படியான குற்றச்சாட்டுக்கள் ஓர் இராணுவ ஜெனரல் மீதோ அல்லது வேறு ஓர் இலங்கையர் மீதோ தெரிவிக்கப்படுவதானது இலங்கையர் ஒவ்வொரு வரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
நாட்டுப்பற்றாளராகவிருக்கும் ஒருவர் மறுநாளே தேசத்துரோகியாகத் தூசிக்கப்படும் கலாசாரம் ஒன்று இங்கே தலை தூக்கி வருவதை உலகம் இதன்மூலம் அறிந்துகொண்டுவிடும்.

ஜெனரல் பொன்சேகா ஓய்வுபெற்றமை வர்த்தமானியில் வெளியிடப்பட வில்லை யென்ற தகவல் வெளிவந்ததையடுத்து ஜனாதிபதியின் செயலாளரின் பெயரில் இரண்டு அறிவித்தல்கள் வெளிவந்துள்ளன. ஜெனரல் பொன்சேகா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார் என் பதும் கூட்டுப்படைகளின் பிரதான அதிகாரி பதவியிலிருந்து அவர் விலகிக் கொண்டார் என்பதும் திகதிகளுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

பொன்சேகாவின் இந்திய விஜயம்

ஜெனரல் பொன்சேகா கடந்த புதன்கிழமை முன் ஏற்பாடு அற்ற விஜயம் ஒன்றை மேற்கொண்டு மும்பைக்குச் சென்று வெள்ளிக்கிழமை திரும்பி வந்தார். இலங்கை விமான நிலையம் ராஜபக்ஷ ஆதரவாளர்களினால் கட்டுக்குள் வைத்திருக்கப்படுகின்றது. அண்மைக் காலத்தில் வெற்றி வீரராகத் திகழ்ந்த பொன் சேகாவை எவரும் கண்டுகொண்ட மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு அதிகாரிகள் எவரும் மரியாதைகள் செலுத்தவில்லை. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல்.

பிரசாரத்திட்டம்

பல்வேறு அம்சங்களைக் கொண்ட பிரசாரத் திட்டங்களைத் தீட்டி வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினர் ஜெனரல் பொன்சேகா பதவியில் இருந்தபோது தொலைக்காட்சிப் பேட்டிகளில் வழங்கிய கருத்துக்களை அவர்களில் ஒரு பிரிவினர் தொகுத்து வருகின்றனர். குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் பற்றிய அவர் கருத்துக்களை அவர்கள் ஆராய்வதாகத் தெரிகிறது. பத்திரிகை யாளர்களின் கொலைகள், அவர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் பற்றிய சம்பவங்களும் தொகுக்கப்படுகின்றனவாம். பிரசாரத்தின்போது இவைகளைத் தமக்குச் சார்பாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறார்கள். இவைகளில் “சண்டே லீடர்” ஆசிரியர் லசந்தவிக்கிரம துங்கவின் கொலையும் அடங்கும்.

கடந்த ஞாயிறன்று பத்திரிகையாளர் மத்தியில் ஜெனரல் பொன்சேகா பேசுகையில் “விக்கிரமதுங்கவின் கொலை மட்டுமில்லை, கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாகவும் என்னை அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். நான் மரபு ரீதியிலான ஓர் இராணுவத்தை வழிநடத்தியவன், என்னிடம் காடையர்கள், போதைவஸ்துக்காரர்கள் போன்றவர்கள் இருக்கவில்லை. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் இந்தக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டிக்க முயலவில்லை. இப்பொழுதும்கூட ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள். இந்த அரசாங்கமும் அவைகளை ஊக்கமளித்து நடத்தியவர்களுமே பொறுப்பு” என்று கூறினார். இவ்விதமான குற்றச்செயல்களின் போது அரசாங்கம் பேசாமல் இருந்தது என்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டு முன்னணியானது தாங்கள் இவைகளுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்று நினைக்கிறார்களோ அவர்களை சுட்டிக் காட்ட இப்போது முனைகிறார்கள் என்றே கொள்ளவேண்டும்.

“சண்டே ரைம்ஸ்” பத்திரிகை (06.12.2009) அன்று எழுதியிருந்த அரசியல் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை இவை…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*