TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழீழம் நோக்கி புதிய படை!

pulam_bernதமிழீழம் நோக்கி புதிய படை! மலர்ந்தது நோர்வே தமிழீழ மக்களவை!
தமிழீழ வரலாற்றின் நெடும் பயணத்தில், தமிழர்கள் சிங்கள இனவெறி ஆதிக்கவர்க்கத்தின் பிடியில் சிக்குண்டு சிதறி, ஓயாத அலைகளாய் மீண்டு எழுந்து தமிழர்களின் வரலாற்றையும் வீரத்தையும் மீட்டெடுத்தே வந்துள்ளனர்.

தமிழர்களின் வாழ்வோடு கலந்திருக்கும் வீரத்தின் சாட்சியாய் தமிழீழ மக்கள் ஓய்ந்ததும் இல்லை, தமிழர்களின் நிலம் வன்னியும் எந்த எதிரிக்கும் அடங்கியதும் இல்லை. ஓயாத நெருப்பு அலைகளாய் துடித்தெழும் ஆற்றல் தமிழ் குலத்திற்கே உரிய பண்பு. குறுகிய நிலமாய் சிதறுண்ட சோழர் நிலத்தை பெரும் வள நாடாக மாற்ற வேண்டும் என்ற பார்த்தீப சோழனின் கனவு, விக்கிரம சோழன், சுந்தர சோழன்இ கரிகால சோழன், அருள்மொழி வர்மன் (ராச ராச சோழன்), குலோத்துங்க சோழன் போன்றோரால் வலிமை பெற்று வெற்றியும் பெற்றது. காவிரி நிலத்தின் ஓரத்தில் கட்டுண்ட சோழர் நிலம், கடல் கடந்து கடாரம் வரை விரிந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீப சோழன் கண்ட கனவு எங்ஙனம் பலித்ததோ, அவ்வாறே பார்த்தீபன் என்கிற திலீபன் கண்ட கனவும் நிச்சயம் ஓர் நாள் பலிக்கும்.

உலகிற்கு ஆயுத பலத்தின் மூலம் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய புலிப் படையில், அறவழி போராட்டத்தை முன்னின்று நடத்தி காந்திய போராட்டத்தின் வலிமையை உணர்த்தினான் அண்ணன் திலீபன். தமிழீழ கனவு நிறைவேறும் வரை தனது ஆத்மாவும் ஓயாது என்று உரைத்தான். வன்னி மண் எவ்வாறு எதிரிகளுக்கு அடங்கியதில்லையோ, வன்னித் தலைவனின் பிள்ளைகளும் விடியல் வரை ஓயமாட்டார்கள். முப்பது ஆண்டுகளாய் தமிழர்க்காய் போரிட்ட தலைவனுக்கு முடி சூட்டும் காலம் வரை போராட்டத்தை முன்னெடுப்பார்கள். ஆம்! அதற்கான அடித்தளம்தான் நோர்வே தமிழீழ மக்களவை. முள்ளிவாய்க்கால் நிலத்தில், தமிழர்களின் இரத்தத்தை பல வல்லரசுகளின் துணையோடு குடிக்க காத்திருந்த சிங்கள இன வெறி இராணுவத்திற்கெதிரான சண்டையில் புலிகள் தங்களது ஆயுதங்களை மௌனித்தார்கள்.

எந்த ஆயுதம் தம் இனத்தை காக்கும் என்று நம்பினார்களோ (நம்புகிறார்களோ) அவ்வாயுதத்தை மௌனித்து உலகின் மன சாட்சியின் கதவைத் தட்டத்தொடங்கினார்கள். புலிகள் ஆயுதத்தை மௌனித்தாலும், உலகின் மௌனம் களைய புலிகளின் பிள்ளைகள் புதிய வகை அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிவிட்டார்கள். இலங்கைக்கு விடுதலை கிடைத்த 1948 ஆண்டு முதல் 1976 வரை பல்வேறு வழிகளில் உரிமைக்காக போராடி தோல்வியுற்ற நிலையில், வட்டுகோட்டையில் கூடிய தமிழர்களின் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, “தமிழீழமே” தீர்வு என முன் வைத்து 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட, தமிழர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றியும் பெற்றது. அதன் பிறகு நியாயமான முறையில் தேர்தல் நடக்காத நிலையில் தமிழர்கள் தங்களது அரசியல் மற்றும் வாழ்வுரிமை தொடர்பான எக்கருத்தையும் சனநாயக முறையில் வெளியிட முடியாமல் போனது.

காலம் சுழன்று, ஆயுத வழி போராட்டம், திலீபனின் அறவழி போராட்டம், பேச்சுவார்த்தைகள் என பலகட்டமாக நடந்த போராட்டத்தை உலகம் புரிந்துகொள்ளவே மறுத்துவந்தது. 2009 ஆண்டு சித்திரை நிறைவில் போர் உச்சக்கட்ட நிலையை அடைந்துக்கொண்டிருந்த நிலையிலும், தமிழர்களின் உடல்கள் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலும், நியாயத்தை உணர மறுத்துவந்த உலகத்திற்கு நோர்வே வாழ் தமிழர்கள், தங்களது எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் ஒன்றை நடத்தி அரசியல் போராட்டத்தின் களத்தை திறந்து வைத்தனர். வட்டுகோட்டை பிரகடனத்தை மீளுறுதிப் படுத்தும் தேர்தல் என்று பெயரிடப்பட்ட தேர்தலை நோர்வே நாட்டில் இயங்கும் யுத்ரூப் என்னும் பத்திரிக்கையின் மேற்பார்வையிலும், தேர்தல் நடைமுறைகள் நோர்வே நாட்டவர்களின் கண்காணிப்பிலும் நடத்தப்பட்டது.

நோர்வே வாழ் தமிழர்களில் 80ம சதவிகித மக்கள் கலந்து கொண்ட அத்தேர்தலில், 99 சதவிகித மக்கள் தமிழீழத்தை ஆதரித்து வாக்களித்தனர். எந்த நோர்வேயில் வருடாவருடம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறதோ, எந்த நோர்வே புலிகள் மற்றும் இலங்கை அரசின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவனாக செயல்பட்டதோ, அதே நோர்வேயில் தமிழர்கள் அரசியல் ரீதியிலான தங்களது விருப்பங்களைத் தெரிவித்தனர். சிங்களவருடன் சேர்ந்து வாழவே முடியாது என்கிற சூழலும்இ பூர்வீக நிலத்தில் உரிமையுடன் வாழ வேண்டும் என்ற ஆவலும் தமிழர்களை தனித் தமிழீழம் நோக்கி வேகமாக முன்னேற வைக்கிறது. 1977 ல் புதிய களமொன்றை திறந்து வைத்த வட்டுக்கோட்டை பிரகடனம்இ 2009 ல் நோர்வேயில் மீண்டும் ஒரு புதிய பரிணாமத்தை தொடங்கிவைத்திருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போராட்டம் நோர்வேயில் புத்துயிர் பெற்று வீறுகொண்டு எழத்தொடங்கி இருக்கிறது. வட்டுக்கோட்டை பிரகடனத்தை மீளுருதிப் படுத்திய நோர்வே வாழ் தமிழர்கள் இப்பொழுது நோர்வே தமிழீழ மக்களவை என்னும் அரசியல் அமைப்பைத் தொடங்கி சுயநிர்ணயஇ சுதந்திர தமிழீழக் கோரிக்கைக்காக குரல் கொடுக்க களம் புகுந்துள்ளனர். நோர்வே தமிழீழ மக்களவை உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளை பற்றி இனி பார்ப்போம். நோர்வே மக்களவையின் உருவாக்கம் கீழ்கண்ட குறிக்கோளின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்க, நோர்வே வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்க மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிட.

இது போன்ற சனநாயக வழிப் போராட்டங்களை ஆதரித்த புலிகள் அமைப்பும், புலம் பெயர் நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய போராட்டக் களங்களாக மூன்று வகை அரசியல் போராட்டத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கையின் சுருக்கம் கீழே வருமாறு:”

ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டம் பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் பேசும் மக்கள் ஓய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுத தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தை தொடர்ச்சியாக தலைமையேற்று நடத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்து தமிழ் பேசும் மக்களிடமும்இ குறிப்பாக புலம் பெயர் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக் கூறி நியாயமானதும் ஈழத்தமிழரின் நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்ப்பார்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருகின்றன.

ஆகவே, இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையையும் கொண்ட தமிழீழத்திற்கான விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கு ஆணித்தரமாக சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் இன்றைய வரலாற்றுக் கடமையாகிறது.”இவ்வாறு குறிப்பிட்ட விடுதலைப் புலிகளின் அறிக்கையில், புலம் பெயர் தமிழர்கள் மூன்று வகையான அரசியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்று, வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப் படுத்தி இவ்வுலகிற்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை எடுத்துக் கூறுதல்இ இரண்டு சனநாயக வழியில் நாடு தழுவிய கட்டமைப்பை உருவாக்கி தமிழர்களின் ஓர் அரசியல் தளத்தில் வைத்திருத்தல் மூன்றாவது நாடு கடந்த தமிழீழ அரசை கட்டியமைத்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் அது போராட்டத்தின் தன்மையை பாதிக்கும் எனவும் புலிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அவ்வகையில் நோர்வே வாழ் தமிழ் மக்கள் தங்களது அரசியல் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றே கூறலாம். நோர்வே தமிழீழ மக்களவைக்கான உருவாக்க செயல்பாடுகள் தொடங்கிய காலம் முதல் தேர்தல் நடைபெற்று பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்பட்டக் காலம் வரை நோர்வே தமிழர்கள் பலர் அல்லும் பகலுமாக உழைத்து தாயக விடுதலைக்கான வித்தை இட்டுள்ளனர் . நோர்வே மக்களவையையின் பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களைப் பார்ப்போம்.:

” 15.11.09 அன்று நோர்வேயில்இ தமிழீழ மக்களைவைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அமைதியான முறையிலும் மக்களின் ஒத்துழைப்போடும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தமிழீழ கோட்பாட்டை உறுதியாக கடைபிடிக்கும் தமிழின மக்களின் மனதை பிரதிபலித்தது. நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகளுடன் நடைபெற்ற தேர்தலில் 2767 தமிழீழ வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவினை வழங்கினர். வட்டுகோட்டை பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலில் கலந்துக் கொண்ட மக்களில் 50மூ சதவிகித மக்கள் இத்தேர்தலில் பங்குபெற்றனர். நோர்வே முழுவதும் ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுஇ தமிழ் மக்களின் தொகைக்கேற்ப மக்கள் பிரிதிநிதிகளின் எண்ணிக்கைப் பிரிக்கப்பட்டது.

கிழக்கு பிராந்தியத்திலிருந்து தேசிய அளவிலான செயல்பாட்டிற்கு ஆறு பிரதிநிதிகளும்இ ஏனைய பிராந்தியத்தில் இருந்து தலா ஒரு பிரதிநிதி என மொத்தம் பத்து பேர் தேர்வாகினர். அதுமட்டுமல்லாது, தேசிய பட்டியலுக்கு என நேரடியாக போட்டியிட்டி மொத்தம் ஐவர் நோர்வே தமிழீழ மக்களவைக்கான தேசிய பிரதிநிகளாகதேர்வாகினர். தேசிய அளவில் போட்டியிட்டவர்களில் நோர்வே நாட்டைச் சேர்ந்தவரான பியானார் மொக்ஸ்னஸ் (ஆச. டீதøயெச ஆழஒநௌ ) அதிக வாக்கு பெற்று தேர்வாகியுள்ளார்.

தேசிய அளவில் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களுள் மொத்தம் ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோர்வே தமிழீழ மக்களவையானது தேசிய அளவில் தேந்தெடுக்கப்பட்ட பதினைந்து பிரிதிநிதிகளுடன் தமது பணிகளைத் தொடங்க இருக்கிறது. தமிழர்களின் புதிய சனநாயக வழிப் போராட்டத்தின் பின் அணிதிரண்டு தேசியத்தை கட்டியமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் .நோர்வே தமிழீழ மக்களவைக்காக பிராந்திய அளவில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேசிய பட்டியலுக்கு நுழைந்த பிரதிநிதிகள் விவரம் வருமாறு:

1. திரு சிவகணேஸ் வடிவேலு (கராட்டி சிவா)

2. திரு இராஜேந்திரம் பொன்னுத்துரை (NTHO ராஜன்)

3. திரு சிவராஜா வல்லிபுரம்

4. திரு கண்ணன் நாகேந்திரம்

5. திருமதி மேரி புளோறிடா யூடின் பிரான்சிஸ்

6. திரு இராசரத்தினம் வேலுப்பிள்ளை

7. திரு றெஜி டேவிட்ராஜூ

8. திரு விஜய்சங்கர் அசோகன்

9. செல்வன் ரூபன் ஐயாத்துரை

10. திரு இராசகுமார் குமாரசாமி (பாபு)

தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில், ஒருவர் நோர்வே நாட்டை சேர்ந்தவர் (பியானார் மொக்ஸ்னஸ் – Mr. Bjønar Moxnes ) என்பதும் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் (விஜய்சங்கர் அசோகன்) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளோடு நோர்வேயில்செயல்படும் தமிழ் நிறுவனங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து பிரதிநிதிகள், தெரிவவை உறுப்பினர்களாய் செயல்படுவார்கள்.” இவ்வாறு தேர்தல் மூலம் நோர்வே தமிழீழ மக்களவை தனது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழர்களின் தாயக நிலத்தை மீண்டும் தமிழர்களே ஆட்சி செய்ய, தமிழர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாய் விளங்கும் இதுபோன்ற மக்கள் கட்டமைப்புகளை அனைத்து தமிழர்களும் ஆதரித்து, மாவீரகளின் கனவை பலித்திட வைக்க உறுதி ஏற்பான். “மாண்ட வீரர் காவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்” காலம் விரைவினில் வரும். வருடாவருடம் மாவீரர் நாள் நடக்கும் தருவாயில் பாடப் பெரும் பாடலான “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே” பாடல் இவ்வருடமும் ஒலிக்கும். தாயக கனவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவு அனைத்து தமிழர்களையும் வழிநடத்தி உன்னதமான நாட்டினை படைக்க துணை நிற்கும்.

ஒன்றை இழக்காமல் எதனையும் பெற முடியாது. தமிழர்களாய் அனைத்தையும் இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், பெறுவதற்கு நாடுண்டு. மாவீரர்களை நோக்கி பாடப் பெரும் பாடல் வரியான, ” எந்த நிலை வரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்” என்பதை நோர்வே வாழ் தமிழர்கள் பறைசாற்றியுள்ளதாகவே படுகிறது. தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் தங்களால் ஆனா முயற்சியினை மேற்கொண்டு, மாவீரர்களின் துணையோடு நிமிர்ந்து, புலிகளின் (தமிழர்களின்) தாகம் தமிழீழத் தாயகத்தை பெற்றுக் கொடுத்து, வரலாற்றில் இடம்பெறுவோம்.

“நம்புங்கள் தமிழீழம் நாளைப் பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்”

– தமிழ்செல்வன்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*