TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வன்னிச் சொத்துக்கள் மோசடி அம்பலத்துக்கு வருமா?

mahinda“பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் மூலம் வன்னியில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன” – பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபச்ச தெரிவிப்பு.

“வன்னியில் இருந்து கைப்பற்றப்பட்ட நிதி மற்றும் சொத்துக்களை தன்வசப்படுத்தி அவற்றைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்த மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்” – ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவிப்பு.

இவ்வாறான செய்திகளும் இன்று தென்னிலங்கை ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தச் செய்திகளில் நேரடியான உண்மை ஒன்றை மறைமுகமாக பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

வன்னி மீதான தொடர் தாக்குதல்களின் போது மக்கள் தங்களால் முடிந்தவரையில் வாகனங்களிலும் உந்துருளிகளிலும் மிதிவண்டிகளிலும் ஏன் தலைகளிலும் தமது உடைமைகளைச் சுமந்து சுமந்தே இடம்பெயர்ந்தார்கள். வறுமை தலைவிரித்தாடிய பொழுதுகளில் மிகப் பெறுமதியான பொருட்களை எல்லாம் சில நூறு ரூபாய்களுக்கு விற்று தங்கள் உயிர்வாழ்தலுக்கான உணவுகளைத் தேடிக் கொண்டார்கள்.

மக்களின் பொருட்களில் சிங்களப் படைகளின் ஈவிரக்கமற்ற எறிகணைத் தாக்குதல்களாலும் விமானக் குண்டுத் தாக்குதல்களாலும் அழிக்கப்பட்டவை போக ஏனைய அனைத்தும் வன்னிப்பகுதிகளிலேயே விடப்பட்டிருந்தன. மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப் பைகளுடனேயே சிங்களப் படை ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மேலதிகமாக ஏதாவது கொண்டு செல்கின்றார்களா? என்பதைப் பார்ப்பதற்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது அனைத்து ஆடைகளும் களையப்பட்டு சிங்களப் படையினரால் சோதனையிடப்பட்டிருந்தன. இதற்கு பெண்களும் விதிவிலக்காகவில்லை என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் மக்களால் வன்னியில் கைவிடப்பட்ட பொருட்களுக்கான பதில் என்ன? அவற்றை மக்களுக்கு மீள வழங்குவது தொடர்பில் ஏதாவது ஒரு நடவடிக்கை?? – இது தொடர்பில் எந்த ஒரு சர்வதேச இராஜதந்திரியோ, ஒரு ஊடகமோ கேள்வி எழுப்பியதாக அந்த மக்கள் அறியவில்லை.

இதேவேளையில் மக்கள் அனைவரும் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த வேளையில் வன்னிப்பகுதியில் மீட்கப்பட்ட தங்க நகைகளை மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக வைப்பகங்களில் நகைகளை வைப்பிலிட்டோர் தங்கள் ஆவணங்களைக் கொண்டு சென்று பதியுமாறும் அவ்வாறு பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் நகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஒவ்வொரு முகாம்களிலும் சிங்களப் படைகளினால் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தன. அறிவிப்புக்களை அடுத்து மக்கள் முண்டியடித்து தமது பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பதிவு பதிவுடன் மட்டுமே முடிந்திருகின்றது. இதுவரையில் ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் மக்களுக்கான வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தனவே தவிர ஒரு நகை கூட மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் பெயர் குறிப்பிடவிரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தனது நண்பர் ஒருவருக்குத் தெரிவித்த கருத்துக்கள் காற்றுவாக்கில் எங்கள் இணையத்தின் கதவினைத் தட்டியிருக்கின்றது. படையினரால் கைது செய்யப்பட்ட, வைப்பகங்களின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் வைப்பகங்களின் நகைகள் தொடர்பில் தெரிவிக்கும் தொகைக்கும், தம்மால் எடுக்கப்பட்ட நகைகளின் தொகைக்கும் வேறுபாடு உள்ளதா? இன்னமும் நகைகள் வன்னியில் இருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்வதற்காகவே அன்றி அவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக அல்ல.

மீட்கப்பட்ட நகைகள் ஒவ்வொன்றும் வைப்பகத்திற்கான பைகளில் மக்களின் சரியான முகவரி மற்றும் பெயர்களுடன் வைக்கப்பட்டிருந்தாகவும் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்றும் வைப்பகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இங்கு நகை என்பது ஒரு சின்ன உதாரணமாகவே கொள்ளப்படுகின்றதே தவிர இலட்சக்கணக்கான உந்துருளிகள், மிதிவண்டிகள், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், பல நூறு கோடிகள் பெறுமதிகளான வீட்டுத் தளபாடங்கள், வியாபாரநிலையத் தளபாடங்கள், மீன்பிடி உபகரணங்கள், படகுகள், விவசாய உபகரணங்கள், உழவியந்திரங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், வன்னியின் தனித்துவமாகத் திகழ்கின்ற கால்நடைகள், இன்னும் நீண்ட பட்டியலிடக் கூடிய பொருட்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தினர் என்னும் சீருடை தரித்த காடையர்களால் சூறையாடப்பட்டுள்ளன.

வன்னியின் வாகனங்களின் உதிரிப்பாகங்கள், மற்றும் அனைத்துப் பொருட்களும் “வன்னி சேல்(Vanni Sale)” என்ற பெயரில் புத்தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக சில மாதங்களின் முன்னர் மக்களால் பரவலாகப் பேசப்பட்டது.

இந்த இணையத்தளத்தினைப் பார்வையிடுவோரில் பெருமளவானோர் வன்னிப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். பெருமளவானனோர் வன்னியின் காற்றின் சுகந்தத்தை அறிந்தவர்களாக இருந்திருக்கலாம். அவர்களுக்கு வன்னியில் ஒவ்வொரு வீடும் சேமித்து வைத்திருந்த தலைமுறை தலைமுறையான சொத்துக்கள் பற்றிய நினைவுகளை மீட்டிப்பார்த்தால் அந்தப் பொருட்களின் பெறுமதிகளை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

இவை அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு தென்னிலங்கைக்குப் பறந்த சிங்கள இனவாத அரச பீடமும் அதன் பரிவாரங்களான சிங்களப் படைகளும் தாமே விழுங்கி ஏப்பமிட்டிருப்பதையும் எஞ்சிய சிலவற்றை அரசுடைமையாக்கியமையையும் கோத்தபாய ராஜபக்சவின் கருத்து வெளிக் கொண்டுவந்திருப்பதை அவதானிக்கலாம்.

இந்த விடயத்தினை ஊடகவியலாளர்களுக்கு சிறு கருப்பொருளாக இந்தக் கட்டுரையின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என கருதமுடிகின்றது. காரணம் வன்னியின் சூறையாடிய பொருட்களை ஏப்பமிட்டோர் இன்று எதிர் எதிர் துருவங்களாக ஒருவரை ஒருவர் வசைபாடத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி அவர்களைக் குடைவதன் மூலம் உண்மையான விடயங்களை வெளிக் கொண்டுவர முடியும் என்பது வெளிப்படையானது.

ஆனால் எது எவ்வாறு வெளிவந்தாலும் வன்னியில் இழந்த உயிர்களுக்கும், இரத்தங்களுக்கும், அவலங்களுக்கும் எவராலும் எந்த வல்லரசாலும் விலை கொடுக்க முடியாது.

மக்களின் துயர் போக்க தேசிய ஒருமைப்பாட்டின் மூலமே சரியான பதிலடியை சிங்களப் பேரினவாதிகளுக்குக் கொடுக்க முடியும்..

– இராவணேசன்: ஈழநேஷன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • EELAM says:

    nampikaiyeh vaazhlkai…..porudkal enna ugirkale poonalum..michma irukiratai vaithu …thuzhirthu elumpum thamila inam….pala 100 aandukal adimai kidanthalum ,enka inam innum azhiyamal ugir vaazhuthe..athev ithuku saadchi….

    December 8, 2009 at 08:59

Your email address will not be published. Required fields are marked *

*