TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேர்தல்: பேச நல்ல நேரம்

electionஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பற்றிய உத்தி யோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்ட கையோடு, ஒவ்வொரு கட்சியும் தமது ஆதரவுகள் யார் யாருக்கு என்பதை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதில் ரொம்பவே அவசரம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறு ஆதரவைத் தெரிவிப்பதில் தவறொன்றுமில்லைதான். ஆனால், சிறுபான்மை கட்சியொன்று தனது வாக்குகளையெல்லாம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஒட்டுமொத்தமாய் அள்ளிக் கொடுப்பதாக இருந்தால், குறித்த வேட்பாளரிடமிருந்து ஏதாவது சில அனுகூலங்களை தனது வாக்காளர் சார்ந்த சமூகத்துக்கு அந்தக் கட்சி பெற்றுக் கொடுத்தேயாக வேண்டும்.

எங்கள் கட்சியிடம் இத்தனை லட்சம் வாக்குகள் இருக்கின்றன. அவைகளை உங்களுக்கு வழங்குவதென்றால், அந்த வாக்குகளை வழங்கும் சமூகத்தினருக்காக நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது எங்கள் மக்களுக்காக நாங்கள் கேட்பதை உங்களால் தர முடியுமா? எனும் பாணியில் பேரம் பேசுவதற்கு இது மிகப் பொருத்தமான நேரம்!

இத்தனை காலமும் நம்மை ஆட்டிப் படைத்த தலைவர்களை, நாம் கொஞ்சம் ஆட்டிப் படைத்துப் பார்ப்பதற்கு நல்ல சமயம் இது! ஆனால், நமது சிறுபான்மைக் கட்சிகளில் மிக அதிகமானவை இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஆறுமுகன் தொண்டமானின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை இ.தொ.காங்கிரஸ் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையில் மிகத் துயரமான தொரு அவல வாழ்வை நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். மின்சாரம், குடிதண்ணீர், மலசலகூட வசதிகள் கூட இல்லாமல், பல ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அடிமைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அந்த மக்களின் வாக்குகளால் எம்.பி.யாகி, அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆறுமுகன் தொண்டமானும் அவரின் கூட்டத்தாரும் நிபந்தனைகள் எதுவுமின்றி மஹிந்தவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதாக அறிக்கை விட்டிருக்கின்றார்கள்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை மட்டும் பட்டியல் இடுவதற்கே நூறு உதயன் போதாது. பிரச்சினைகளும், தேவைகளும் மிகவும் அதிகமுள்ளவர்கள் அந்த மக்கள்! ஆனால், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதாக பறையடித்துக் கொள்கின்ற இ.தொ.கா.வுக்கு அந்த மக்கள் சார்பாக, ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நிபந்தனைகளாக முன்வைக்க அல்லது கேட்டுப் பெற, எதுவுமே இல்லாமல் போனதுதான் விசித்திரம்தான்!

இதுபோலவே, ரி.எம்.வி.பி. எனப்படுகின்ற தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கப் போகிறாரென முடிவெடுத்துள்ளனர். அந்தக் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இதுகுறித்து பகிரங்கமாக அறிவித்தும் விட்டார். ரி.எம்.வி.பியின் இந்த நிலைப்பாட் டுக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும், கருணா அம்மான் எனப்படுகின்ற அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனுக்குமிடையிலான அரசியல் முறுகல்! இது பற்றி நாம் அறிவோம்!

கருணா அம்மானின் தற்போதைய அரசியல் பலம் அவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாசறையில் இருப்பது தான். அந்தப் பலத்தை வைத்துக் கொண்டுதான் தன்னை அமைச்சர் கருணா நெருக்குவாரப்படுத்துகிறாரென சந்திரகாந்தன் நினைத்திருப்பார். எனவே, முள்ளை முள்ளால் எடுப்பது போல, கருணா அம்மானை முகம் கொள்ள மஹிந்தவின் விரலைப் பிடிக்கின்றமையே இப்போதைக்கு உசிதமான வழியாக சந்திரகாந்தனுக்குப் பட்டிருக்கக் கூடும் என்கிறார் ஊடக நண்பரொருவர்.

இராணுவத்திலிருந்து வந்த சரத்பொன்சேகா போன்றோர் அரசியலுக்கு வருகின்றமை ஆபத்தானது. அதனால்தான் மஹிந்த ராஜபக்ஷவை தமது கட்சி ஆதரிப்பதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் கூறியிருக்கின்றாரே, இதுபற்றி என்ன சொல்கிறீர்கள் என்று அந்த ஊடக நண்பரைக் கேட்டோம். அப்படியென்றால், பிள்ளையான் எனப்படுகின்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டும் அரசியலுக்குள் எப்படி வந்தார்? அவர் என்ன மகாத்மா காந்தியோடு சத்தியாக்கிரகம் செய்தவரா? அவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற போராட்ட அமைப்பில் ஆயுதம் தூக்கிச் சண்டையிட்ட ஒரு போராளி தானே! இத்தனைக்கும் சந்திரகாந் தனை நல்ல முதலமைச்சர் என்றுதான் பலரும் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் முதலமைச்சரின் கூற்றில் உதைக்கிறதே. சேம் சைட்டில் கோல் போடுவதென்பது இதைத்தான் என்று சற்று அழுத்தமாகவே பதிலளித்தார் அதே ஊடக நண்பர்!
இதுபோலவே, அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது. அதாவுல்லா முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர். இன்று, முஸ்லிம்களுக்கு குறிப்பாக அதாவுல்லாவின் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட முஸ்லிம் களுக்கே ஆயிரத்தெட்டுப் பிரச்சி னைகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானவை சிங்களப் பேரின வாதிகளால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புகளாகும்.

வெளிப்படையாகச் சென்னால், மஹிந்தவின் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க அதாவுல்லாவுக்கு மிக நல்ல நேரமிது! தனது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கேட்டு நிபந்தனைகளைப் பட்டியலிடுவதற்கான காலமிது!
ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட முஸ்லிம் மக்களுக்காக நுரைச் சோலையில் அமைக்கப்பட்டுள்ள 500 வீடுகளையும், அவர்களுக்கு வழங்குங்கள், பொத்துவில் கரங்கோவில் முஸ்லிம் விவசாயிகளிடமிருந்து ஆக்கிரமிக் கப்பட்ட 500 ஏக்கர் காணிகளையும் மீள ஒப்படையுங்கள், உணவுக்காக முஸ்லிம்கள் மாடுகளை அறுக்கின்றமையைத் தடைசெய்யாதீர்கள், தீகவாவி என்கிற குக்கிராமத்தை வைத்துக் கொண்டு அதைச் சுற்றியுள்ள முஸ்லிம் மக்களின் ஆயிரக் கணக்கான காணிகளை அபகரிக்காதீர்கள், ஏலவே அபகரித்தவைகளைத் திருப்பிக் கொடுங்கள் என்று பட்டியலிட ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் அதாவுல்லாவுக்கு இருக்கின்றன. ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை வழங்க முஸ்லிம் சமூகம் சார்பில் அதாவுல்லா எதுவித நிபந்தனைகளையும் முன்வைத்ததாகத் தெரியல்லை!

அப்படியென்றால் இங்கு சில சந்தேகங்கள் நமக்குள் எழுகின்றன. அவை
நிபந்தனைகளை முன்வைக்க முடியாதளவுக்கு அதாவுல்லா பலவீனமானவரா?
நிபந்தனைகளை முன்வைத்தால் மஹிந்த அதாவுல்லா உறவுக்குப் பங்கம் வந்து விடுமா?
நிபந்தனைகளை முன்வைப்பதற்கு அதாவுல்லா பயப்படுகின்றாரா?
நிபந்தனைகளாக முன்வைக்கு மளவுக்கு முஸ்லிம் சமூகத்தில் பிரச்சினைகள் எதுவுமில்லை என அதாவுல்லா நினைக்கின்றாரா?

வழமை போலவே, தனக்குச் சாதகமற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மறுக்கித்திரிகின்றமையைப் போல, அமைச்சர் அதாவுல்லா மேலுள்ள சந்தேகங் களுக்கும் பதிலளிக்கப் போவதில்லை! ஆனால், அரசியலில் பதில் சொல்லப்படாத கேள்விகள் சிலவேளைகளில் மிகவும் ஆபத்தாக அமைவதுண்டு. ஏனெனில், பொதுமக்கள் தமது விருப்பங் களுக்கு ஏற்றால் போல் கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்து விடுவார்கள்! அந்த விடைகள் அரசியல்வாதிகள் விரும்புபவை போல அமைந்து விடுவதில்லை!

எல்லா நரிகளும் ஓடுகின்றன என்பதற்காக குட்டை வால் நரியும் கூட ஓடியதாம் என்று ஒரு நையாண்டித் தொடர் உண்டு. கேள்விப்பட்டிருப்பீர்கள்! இதுபோல, நாங்களும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம் பார் எனும் தோரணையில், சில குட்டைவால் கட்சிகளும் ஆதரவு கொடுப்பதாக அறிக்கை மேல் அறிக்கை விட்டு, தமது விசுவாசத்தை அநியாயத்துக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுக்கவே இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது. இந்த குட்டைவால் கட்சித் தலைவர்கள் எதிர்பாராத வேலைகளில் ஏதாவதொரு அலைவரிசைக்குள் புகுந்து, பயம் காட்டித் தொலைக்கிறார்கள்.
எது எவ்வாறிருந்த போதும், வாக்காளர்களாகிய மகாஜனங்கள் தமது சமூக நலன் குறித்து மிகவும் அக்கறையோடு இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்படுதல் வேண்டும். நமது நலன்கள் பற்றிப் பேசாத ஒரு தலைவரை நம்பி அவர் விரல்காட்டும் வேட்பாளர் எவருக்கும் நமது வாக்குகளைத் தாரை வார்க்க வேண்டும் என்று எந்தவொரு வேத நூலிலும் எழுதி வைக்கப்படவில்லை. நமது கட்சித் தலைவர்கள் நமக்காக பேசாது விட்டால், சிவில் அமைப்புக்களினூடாக ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்தித்து நமது தேவைகள் பற்றிப் பேசலாம், நமது நிபந்தனைகளை முன்வைக்கலாம்!
காற்றுள்ள போதுதான் தூற்றிக் கொள்ள வேண்டும்!

அப்படியென்றால், நமது தலைவர்களில் பலர் நல்ல காற்று இருந்தும் ஏன் தூற்றிக் கொள்வில்லை என்று நீங்கள் கேட்கிறீர்களா?
நெல்லில் இருக்கும் ஒரு சில பதரை அகற்றி விடுவதற்காகத்தான் நெல்லை தூற்றியெடுப்பார்கள். ஆனால், நமது தலைவர்கள் பலரிடம் இருப்பவை எல்லாமே பதர்கள்தான் எனும் போது எதைத் தூற்றுவது? எதை எடுப்பது?

மப்றூக்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*