TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிசாசை வீட்டுக்கு அனுப்புவோம்

mahiதமிழ் மக்களை பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலினூடாக தமிழ் மக்களை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கா விட்டாலும் ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் “வீட்டுக்கு அனுப்பும்” வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்துவதைப்பற்றி சிந்திப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது நடைபெற்ற தமிழ்மக்கள் மீதான மனிதப்படுகொலைகளை நிறுத்தும்படி பல சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக்கொண்டன. ஆரம்பத்தில் ராஜபக்ச அரசு யாருடைய கருத்தையும் செவிமடுக்கவில்லை. பின்னர் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, ராஜபக்ச அரசு பாதுகாப்பு வலயங்களை அறிவித்து அவ்வலயங்களிற்குள் மக்களை செல்லுமாறு கேட்டுக்கொண்டது.

யுத்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக அரசின் அறிவிப்பை நம்பி அங்கு சென்ற தமிழ் மக்கள் மீது மோசமான தாக்குதலை நடாத்தி அம்மக்களைக் கொன்றொழித்து, அங்கவீனர்களாக்கிய பெருமை இந்த ராஜபக்ச அரசையே சாரும். இந்த மனிதப்படுகொலை சம்பந்தமாக உலகின் பல்வேறுபட்ட மனிதநேய அமைப்புக்கள் ஓங்கிக் குரல் கொடுத்த போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் சிறிதளவேனும் பொருட்படுத்தவில்லை.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினத்தின் மீதான தாக்குதல் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சர்வதேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. உயிர் தப்பிய தமிழ்மக்கள் வன்னியிலிருந்து வவுனியா கொண்டுவரப்பட்டு சிறை அகதி முகாம்களிற்குள் அடைக்கப்பட்டனர். அவர்களிற்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மிகுந்த துன்பியல் வாழ்க்கையை வாழ்ந்தனர். அத்துடன் காரணமின்றி கைதுசெய்தல், கடத்திச் சென்று காணாமல் போகச்செய்தல், சுட்டுக் கொலை செய்தல் உட்பட பல கொடுமைகளை ராஜபக்ச அரசு செய்தது.

இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட அனுமதி வழங்குமாறு ஐ.நா சபை உட்பட பல சர்வதேச நாடுகளும், மனிதஉரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களும் கேட்டுக்கொண்ட போதும் இலங்கை அரசு எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. சாட்சிகளற்ற இனஅழிப்பை மேற்கொண்டு விட்டு தங்களது மனித உரிமை மீறலுக்கான எந்த நேரடி சாட்சியங்களும், சான்றுகளும் இல்லாதபடி செய்வதற்காக மேற்படி சர்வதேச நிறுவனங்களுக்கும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களிற்கும் ஆர்வலர்களிற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசின் திட்டமிட்ட மனிதப்படுகொலைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைச் சபையால் கொண்டு வரப்பட்ட சர்வதேச மனித உரிமை மீறல் குற்ற விசாரணைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இந்தியாவின் பரிபூரண எதிர்ப்பினால் தோல்வியில் முடிந்தது. அதாவது இந்தியா பல நாடுகளின் ஆதரவைத் திரட்டி இலங்கைக்கு சார்பாக செயற்பட்டதனாலேயே மனித உரிமை விசாரணையின் மீதான வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுமாறு பல நாடுகள் கோரிக்கைகளை விடுத்திருந்தபோதும், ராஜபக்ச அரசு யாருடைய கருத்துக்கும் செவிசாய்க்காமல் பொய்யான நொண்டிச்சாட்டுகளைக் கூறிவந்தது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கான நிதிச்சலுகைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களிற்கான நிதிஉதவி நிறுத்தம் போன்ற அழுத்தங்களை பிரயோகித்தது.

இதன் காரணமாக ராஜபக்சவின் அரசு குறிப்பிட்டளவு வன்னி மக்களை மீளக்குடியேற்ற முன்வந்தது. தற்போது வன்னி பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக சொன்னாலும் அங்கு சுதந்திர நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.(இதுவரை ஏ9 வீதியின் கிழக்கு புறத்தில் எந்த மக்களையும் குடியிருக்க அனுமதிக்கவில்லை) மற்றும் காணாமல் போதல், கைது செய்தல் போன்ற சம்பவங்கள் தொடருவதுடன் அம்மக்களை இராணுவத்தினர் அடிமைகள் போன்று நடாத்துகின்றனர். அங்கு இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற சூழலிலேயே தமிழ் மக்கள் வாழுகின்றனர்.

இராணுவ வெற்றிவாய்ப்பின் மிதப்பில் சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகளை இலகுவில் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆகலாம் என்ற மதிப்பீட்டில் மகிந்த ராஜபக்ச தேர்தலை நடாத்த தீர்மானித்தார். ஆனால் யுத்தவெற்றியில் பிரதான பங்காளர்களான ஜனாதிபதி ராஜபக்சவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவும் எதிரெதிர் முனைகளில் தேர்தலில் களமிறங்க வேண்டிய அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக சிதையக்கூடிய சிங்கள வாக்குகளை ஈடுசெய்ய தமிழ் மக்களிடமிருந்தே வாக்குகளைப் பெற்றக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ளது. தனது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டிய இக்கட்டிலிருக்கும் ராஜபக்ச அவர்கள், தனது வெற்றி வாய்ப்பு தமிழ் மக்களின் வாக்குகளில் கணிசமான அளவு தங்கியிருக்கின்றது என்பதை உணர்ந்துள்ளார். எனவே தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கவரக்கூடிய பல திட்டங்களும் சலுகைகளும் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன் விளைவாக துரித மீள்குடியேற்றங்கள், பதிவு நடைமுறைகளுடன் கூடிய மக்களின் நடமாட்டம், அண்மையில் குறிப்பிட்ட சில அகதி முகாம்களிலிருக்கும் மக்கள் வெளியே சென்றுவர அனுமதித்தல் போன்றவற்றுடன் கூடிய பல சலுகைகளை தமிழ் மக்களிற்கு ராஜபக்ச அரசு வழங்குகின்றது. இதற்கும் அப்பால் மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதியாக்கி இலங்கையை தன்கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற தேவை இந்தியாவிற்கு அதிகமாகவே உள்ளது.

இந்திய காங்கிரஸ் அரசும் ராஜபக்ச அரசைக் காப்பாற்ற தன்னாலான முயற்சிகளையும் மேற்கொள்கின்றது. குறிப்பாக வடக்கு அபிவிருத்திக்கு பல கோடி ரூபா பணத்தை வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேரடியாக இலங்கைக்கு அனுப்பி தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தனக்கு அதீத கரிசனையிருப்பதாக காட்டி தமிழ் மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்த நினைக்கின்றது.

அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளை கவர வேண்டுமாயின் தமிழ்மக்களின் பிரதிநிதிகளை மென்போக்காக கையாள்வதே அரசியல் நகர்விற்கு பொருத்தமானதாகும் என்ற இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில்தான் பிரணாப் முகர்ஜியின் வருகைக்குப்பின் இதுவரை அகதி முகாம்களிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை அகதி முகாம்களிற்கு செல்ல அனுமதித்ததுடன் அவர்களின் பயண ஒழுங்கையும் அரசாங்கமே பொறுப்பெடுத்துச் செய்து கொடுத்தது. மேலும் இலங்கை
அரசாங்கத்திற்கு அஞ்சி வெளிநாடுகளில் தங்கிவிட்டு நாடு திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மென்மையாக கையாள்கிறது.

வடக்கு கிழக்கு இணைக்கப்படும் என ஜனாதிபதி ராஜபக்ச உறுதியளித்ததாக இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களின் கருத்தும் இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ. எம் கிருஷ்ணா அவர்களின் கருத்துக்களும் தமிழ் மக்களிற்கான தீர்வு கிடைக்க இந்தியா முயற்சிக்கின்றது என்பது போன்ற மாயத்தோற்றத்தை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் பிராந்திய அரசியல் சுயநலத்தின் உள்ளடக்கமே.

சரத் பொன்சேகா அண்மையில் நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடடில் 13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்தார். எனவே இக்கருத்தானது தனக்கு தேர்தலில பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்த ராஜபக்ச அரசு, ஈபிடிபி கட்சியை பயன்படுத்தி தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு மற்றும் 13 ம திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதித் தேர்தலில், கோரிக்கைகளை ராஜபக்சவிடம் முன்வைக்க செய்துள்ளது. இவ்வாறாக ராஜபக்சவின் தமிழ் மக்களிற்கான சலுகைகள் மற்றும் அரசியல் தீர்வு நாடகம் தேர்தல் பிரச்சார ஓய்வுத்திகதி வரை முன்னெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் இத்தேர்தலினூடாக தமிழ் மக்களை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல்தீர்வு கிடைக்காவிட்டாலும் ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் “வீட்டுக்கு அனுப்பும்” வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்துவதைப்பற்றி சிந்திப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அடுத்து 08 வருடங்களிற்கு ஜனாதிபதியாக இருக்கும் வாய்ப்புள்ளது.

அத்துடன் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் நாட்டுக்குள்ளேயே குழிதோண்டிப் புதைக்கப்படும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத்தை சர்வதேச அளவில் தெளிவாக நியாயப்படுத்த இருக்கும் தற்போதைய ஒருவழி, ராஜபக்ச அரசின் தமிழின படுகொலை விவகாரத்தை வெளிக்கொண்டு வருவதற்காக ராஜபக்சவை தேற்கடித்து குடும்ப அரசியலை சிதைக்க வேண்டும்.

அத்துடன் கொடும் அழிவுப்போருக்கு துணை நின்ற இந்திய காங்கிரஸ் அரசிற்கு விரும்பாத ஒரு அரசை இலங்கையில் கொண்டு வருவதனூடாக இந்தியாவிற்கு அரசியல் பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு . முழுக்க முழுக்க இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்க அரசியலிற்கும் தனது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் ஈழவிடுதலைப் போராட்டம் பாதிப்பு என கருதி செயற்பட்டதே ஈழத்தமிழர்களின் அழிவைப்பற்றி சிந்திக்காமைக்கு காரணம். இதை நோக்கமாகக் கொண்டு சிங்களப் பேரினவாதிகளின் கொடும்போக்கிற்கு உதவி, தமிழ் மக்களின் இன விடுதலை அடையாளங்களை அழிப்பதற்கு துணை நின்றது. இந்தியாவின் இந்த இராஜதந்திரத்திற்கு எதிராகவும் ராஜபக்சவின் குடும்ப அரசியல் ஆட்சிக்கு எதிராகவும் ஏற்படுத்தும் தோல்வியினூடாக பாடம் கற்பிக்க வேண்டிய தேவை தமிழ்மக்களிற்கு உள்ளது. கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சரிவர தமிழ்மக்கள் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட அரசியல் வரலாற்றிலும் நீண்ட நெடும் யுத்தத்திலும் ஈழத்தமிழினம் வெறுமனே அற்ப சலுகைகளுக்காக விலைபோனதாக வரலாறில்லை. தமிழினத்தை கொடுந்துயருக்கு உள்ளாக்கிய ராஜபக்ச அரசாங்கம் தமது அரசியல் வாழ்வின் நீட்சிக்காக சலுகைகளை முன்வைத்து தமிழினத்திடம் கையேந்தி நிற்கின்றது.

இத்தேர்தலில் தமிழ்மக்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, இதனூடாக தமிழ் சமூகத்தின் ஒற்றுமையான கருத்தை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதுடன் தமிழ்மக்களின் போராட்டத்தின் நியாயத்திற்கு வலுச்சேர்க்கலாம் என்ற சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ் மக்கள் ஏற்கனவே 2005 ம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலை புறக்கணித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர் (தமிழ் மக்கள் தேர்தலை புறக்க்கணித்ததால் ராஜபக்ச பெற்ற மேலதிகவாக்குகள் 1,80,786 மட்டுமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்). கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 22 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து, தமது அரசியல் விடுதலைக் கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினுடாக சொல்லிவிட்டனர். இன்று வரை புலம்பெயர் தமிழ்மக்கள் முன்னெடுத்த, முன்னெடுக்கும் போராட்டங்கள், போராட்ட நியாயத்தையும் ஒற்றுமையையும் தெட்டத் தெளிவாக சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி நிற்கின்றன.

முக்கியமாக ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 03 மாதங்களின் பின் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலில் நிற்கும் தமிழ் தேசியப்பற்றுள்ள கட்சிகளை ஆதரிக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளையும் அதற்கான தமிழ்மக்களின் ஒற்றுமையையும் போராட்ட நியாயத்தையும் சர்வதேச அளவில் வெளிப்படுத்த பொருத்தமான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலாகும்.

இதனூடாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைக்கான பலத்தை மீண்டும் நிரூபிப்போம். அதேவேளை அவர்கள், சர்வதேச அளவில் பிரசாரங்களையும் கருத்துருவாக்கங்களையும் செய்யலாம். எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இப்பிரதிநிதிகளின் கருத்துருவாக்கத்தினூடாக அரசியல் தீர்விற்கான நியாகக்கருத்துக்கள் மேலும் வலுப்பெறும் என்பதை தமிழ்மக்கள் எல்லோரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை தற்போதைய அரசியல் களச்சூழலைப்பார்க்கும் போது தமிழ்மக்கள் பலம் பெறும் வரை, அரசியல் அடிப்படைகளை பாதுகாத்து வலுப்படுத்துவது எம்முன்னே உள்ள தலையாக கடமைகளில் முதன்மையாக உள்ளது. எனவே சாணக்கியமாக செயற்பட்டு, பலம் பெற்று நிமிரும் வரை தேசியத்தை பாதுகாத்து வலுப்படுத்துவோம் காலம் வரும் போது நிமிர்வோம்.

ஜனாதிபதித் தேர்தலின் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதோ அன்றி அல்லது இடதுசாரிக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கோ வாக்களிப்பதானது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கப்போகும் தமிழ் மக்களின் வாக்குகளை பயனற்று போகச் செய்துவிடும் என்பது மட்டுமல்ல மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் வாய்ப்புகளை பிரகாசமாக்கும்.

தமிழ்மக்கள் ஜனாதிபதித் தேர்தலை நிராகரிக்காமல் விடுவது மட்டுமல்ல, வாக்குகளை பொருத்தமற்ற முறையில் பயன்படுத்தவும் விரயமாக்கவும் கூடாது. தமிழ் மக்களை கொன்ற ராஜபக்ச அரசிற்கும், அவரின் குடும்பத்திற்கும் தண்டனை வழங்கக்கூடிய முறையில் வாக்குகளை பயன்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகள் தமிழர்களிற்கு நன்மை தராமல் போகுமிடத்து தமிழ் மக்களிற்கு அழிவைத் தந்தவனுக்கே வலியை கொடுக்க பயன்படுத்த வேண்டும்.

சில வேளை ராஜபக்ச வென்றாலும் தமிழ் மக்களின் வாக்குகள் அவரது அரசியல் நகர்விற்கு எதிராக விழுந்தது என்ற வரலாற்றுப் பதிவை வைப்பதே தற்போது முக்கியமானது. அதுவே தமிழ் மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாடையும் எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தி நிற்கும். எனவே தமிழ் மக்கள் வாக்கை பயன்படுத்துவது தொடர்பில் சரியாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்.

அபிஷேகா
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
 • EELAM says:

  RAJABAKSEVAI MUTHALLE VEEDUKU ANUPUVOM…….pooril vella mudiyatha rajapacse & co vai politic il vellumvom uravukale

  December 7, 2009 at 09:13
 • Eelam2010 says:

  Rajapaksa. your days are coming. your own ppl will come after me. Like Lasantha said, “And then they came for me”.

  For you it will be. “ANd then my people came to depart me”.

  Rajapaksa. Have a good life, in HELL.

  December 7, 2009 at 23:23

Your email address will not be published. Required fields are marked *

*