TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: 11

Mavilaru thodarவிடுதலை புலிகளின் வழிகாட்டி அணிகள் முன்னாலே நகர்கின்றது. எதிர்பார்த்ததுபோன்று கொழும்பு வீதியில் தாக்குதல் தொடங்குகின்றது. இதுவொரு வழமைக்கு மாறான கடுமையான தாக்குதலாக இருந்தது.

ஒரு சில அணிகள் பாதையை கடந்து விட்டன. மேலும் சில அணிகள் கடக்கவேண்டியிருந்தது. இவர்கள் கடந்து செல்வதற்கு வசதியாக ஏனைய அணிகள் எதிரி மீது கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார்கள். எதிரி உக்கிர தாக்குதலை இவ்விடத்தில் நடத்திக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் நேரடிச் சண்டைகளைத் தவிர்த்து அப்பகுதி எங்கும் கடும் எறிகணை தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்கள். அத்துடன், தாக்குதல் உலங்குவானுர்திகளும் அவ்விடத்திற்கு வந்து கடுமையான தாக்குதலை நடத்தத் தொடங்கின. மிகமோசமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிக்கிய போராளிகளின் அணி காட்டில் சிதறுகிறது.

அதாவது தனித்தனியாகவும் குழுவாகவும் காடுகளுக்குள் பிரிந்துவிடுகின்றார்கள். தாக்குதல் சற்று ஓய்வு நிலைக்கு வந்த பின்னர் வழிகாட்டிப் போராளிகள் வேகமாகச் செயற்பட்டு போராளிகளை தேடிப்பிடித்து ஒன்றிணைத்தார்கள். அத்துடன், இந்தத் தாக்குதலில் போராளிகள் பலர் காயமடைந்தும், சிலர் வீரச்சாவடைந்தும் இருந்தார்கள். வீரச்சாவடைந்தவர்கள் அருகிலுள்ள இடங்களில் விதைக்கப்படுகின்றார்கள். காயமடைந்தவர்களை காவிக் கொண்டு அணி கொழும்பு வீதியைக் கடந்து வன்னி செல்லும் காட்டுக்குள் நுழைகின்றது. வன்னி செல்லும் காட்டிற்குள் நுழைந்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. கிழக்கில் இருந்து வடக்கிற்கும், வடக்கில் இருந்து கிழக்கிற்கும் தரை வழியாகப் பயணம் செய்வதென்பது மிகவும் நீண்டதும், உயிராபத்து மிக்கதுமான பயணம் இது.

போகும் போது கொண்டு செல்லும் குடிநீர் முடிவடைந்து ஒரு கட்டத்தில் குடிக்க நீர் கூட இருக்காது. உணவும் தீர்ந்து போயிருக்கும். ஆனாலும் தொடர்ந்து நடக்க வேண்டியிருக்கும். போகும்போதே சில போரளிகள் நீரின்றி மயங்கி விழுவார்கள். சிலர் நடக்கமுடியாமல் தளர்வடைந்து விடுவார்கள். அத்துடன், இந்த நீண்ட பயணத்தின் போது ஒரு போராளி தனக்குரிய துப்பாக்கி, ரவைகள், உடைகள் இவற்றுடன் மேலதிகமாக சில பொருட்கள் அத்துடன் காயமடைந்த போராளியையும் சுமந்துகொண்டுதான் செல்ல வேண்டும். இடையில் பெரிய பெரிய ஆறுகளையும் கடக்க வேண்டும். அத்துடன் எதிரியின் நடமாட்டங்களையும் அவதானித்துக் கொண்டே பயணம் செய்ய வேண்டும் என்பதால் காட்டினுள் பயணம் என்பது மிக மெதுவாகத்தான் இருக்கும்.

எனவே, அடர்ந்த காட்டில் சில மைல்கள் நகர்வது என்பதே பெரும்பாடாக இருக்கும். நீண்ட இந்தப் பயணத்தின்போது உடனடியாக சிகிச்சை வழங்கமுடியாது காயம் அடைந்த போராளிகள் சிலர் வீரச்சாவு அடைந்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு. அவ்வாறு வீரச்சாவு அடைந்தால் அவர்களை அவ்விடத்திலே மரியாதையுடன் விதைத்து விட்டு, பயணம் தொடரும். இவ்வாறுதான் பெரும் அணியயான்று அன்று மட்டக்களப்பில் இருந்து சில முக்கிய தளபதிகள், பொறுப்பாளிகளுடன் வந்தபோது இந்தச் சண்டை வெடித்திருந்தது. சண்டையை முடித்துக்கொண்டு காட்டு வழியாக நடந்து புல்மோட்டைக்கு அருகில் கொக்குதொடுவாய்க்கு இடையில் உள்ள ஒரு கடற்கரையை வந்தடைந்தது.

அந்த இடத்திலும் சில வேளைகளில் சிறீலங்காப் படையினருடன் சண்டையிட வேண்டிய சூழல் வரும் என்பதால் போராளிகள் அதற்கான தயார் நிலையிலேயே நின்றிருந்தார்கள். முல்லைத்தீவில் இருந்து கடற்புலிகளின் படகு அணிகள் அங்கு வரவேண்டியிருந்தது. அவர்கள் வந்தே கடல் வழியாக வன்னிக்கு செல்லமுடியும். நாயாற்றுக்கு அண்மையாக செம்மலை, அளம்பில் கடல்பகுதியில் கடற்புலிகளின் பாரிய தளம் ஒன்றிருந்தது. இந்தத் தளம் இருப்பது அன்று யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. இது மிகவும் இரகசியமாக விடுதலைப் புலிகளால் பேணப்பட்டு வந்தது. இங்கு கடற் புலிகளின் கடற் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட “ராடர்’ தளம் கூட அமைந்திருந்தது. இங்கிருந்துதான் கடற்புலிகளின் தாக்குதல் அணியுடன் கரும்புலிப் படகுகள் களம் நோக்கி விரையும்.

புல்மோட்டையை அண்மித்த கரையை விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அணி வந்துவிட்டது என்ற செய்தி தொலைத் தொடர்பில் “பரிபாசையில்’ இத்தளத்திற்கு எடுத்துக்கூறப்பட்டது. இதனையடுத்து கடற்புலிகளின் படகு அணிகள் கடலில் இறக்கப்பட்டன. கடற்புலிகளின் படகுகள் கடலில் இறங்கிவிட்டதையும் திருமலை நோக்கி அவை நகர்வதையும் திருகோணமலையில் உள்ள சிறீலங்காப் படைகளின் கடற்படை தலைமையக ராடரில் அவர்கள் கண்காணித்துவிடுவார்கள். அத்துடன் மணித்தியாலத்திற்கு இரண்டு டோறா என்ற வீதம் காங்கேசன்துறைக்கும் ‡ திருமலைக்கும் இடையே சுற்று காவல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும். இவர்களின் கண்களில் சிக்குப்படாமல்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு கண்டாலும் கடற்புலிகளின் பெருமளவு படகுகள் அணிகளைக் கண்டால் சிறீலங்கா கடற்படை நெருங்கிவராது.

அவ்வாறு நெருங்கிவந்தால் அது தற்கொலைக்கு சமமானது என்று அவைக்குத் தெரியும். இவ்வாறான சம்பவங்கள் பலவற்றில் தமது டோராக்களையும் கடற் கலங்களையும் இழந்த அனுபவம் சிறீலங்காவிற்கு உண்டு. எனினும், சிலவேளைகளில் கடற்சமர் வெடித்துவிடும். திருமலையில் இருந்து சிறீலங்கா கடற்படையின் டோறா படகுகள் தாக்குதலுக்கு வரும். கொக்குத்தொடுவாய் ‡ புல்மோட்டை வரையான கடற்பரப்பில் இரு தரப்பும் இடையே கடும் சமர் நடைபெறும். ஏன் கரும்புலி படகுகள் கூட இதன்போது வெடிக்கும். டோறா படகுகள் மூழ்கடிக்கப்படும். இவ்வாறுதான் சிறீலங்காக் கடற்படையினருடன் மோதி கடற்புலிகளின் படகுகள் அந்தப் பகுதியை வந்தடைய முடியும். அதேவேளை, இவர்கள் படகில் ஏறும்போதுகூட கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் ஒருபுறம் சிறீலங்கா கடற்படையை துரத்தி துரத்தி அடித்துக்கொண்டிருப்பார்கள்.

படகில் ஏறியவர்கள் செம்மலை அளம்பில் கடற்கரையில் கொண்டு சென்று இறக்கப்படுவார்கள். இறங்கும் இடங்களை கடற்படையினர் அறிவித்தால் அவ்விடத்திற்கு சிறீலங்கா வான்படையின் கிபீர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். இவற்றை எல்லாம் எதிர்கொண்டுதான் மட்டக்களப்பில் இருந்து போராளிகள் வன்னியை வந்தடைகிறார்கள். குடும்பிமலை, கரடியனாறு, குறிப்பாக சில முதன்மையான இடங்களை பிடித்த சிறீலங்காப் படையினர் சிங்கக் கொடியினை அங்கு ஏற்றிக் குதூகலித்து மகிழ்ந்தார்கள். கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டக்களப்பு மண் மீட்கப்பட்டுள்ளதாக 2007இன் இறுதிப் பகுதியில் சிறீலங்கா அரசு அறிவிக்கின்றது. படுவான்கரையில் சில இடங்களுக்கு சிங்கள பெயர் சூட்டுகிறார்கள்.

தாண்டியடி பிரதேசம் சுதந்திரபுர என சிங்களப் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மட்டக்களப்பில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அங்குநின்று போராடிய ஏனைய போராளிகள் அம்பாறை மாவட்ட போராளிகளுடன் இணைந்து கொள்கிறார்கள். போராளிகள் சிலர் விலகி தங்களின் வீடுகளுக்கு செல்கிறார்கள். இவர்களை அடையாளம்கண்டு பின்னர் படையினர் கைதுசெய்து, இவர்கள் மூலம் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுத தளபாடங்கள் சிலவற்றை கண்டுபிடிக்கின்றார்கள். சில இடங்களில் தங்களது தொழில்நுட்ப கருவிளைக்கொண்டும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதை இனம்காண்கிறார்கள்.

இவ்வாறு படுவான்கரையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஆயுதங்கள், மோட்டர்கள் என்பன படையினரால் எடுக்கப்பட்டு சிறீலங்கா அரசின் பாதுகாப்பு இணையத்தளத்தில் ஒளிப்படங்கள் மூலம் காண்பிக்கப்பட்டிருந்தது. சிறீலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட படுவான்கரைப் பகுதியின் பாதுகாப்புக்கு என சிறீலங்கா ஊர்காவல் படையினரும், காவல்துறையினரும் முகாம்களை அமைக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறீலங்கா படையின் சிறப்பு அதிரடி படையினரே பாதுகாப்பில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்பது இவர்கள் நடாத்திய பல்வேறு படுகொலைகள் மூலம் அறிந்திருந்த தமிழ் மக்கள், இவர்களது கட்டுப்பாட்டில் தாங்கள் இருப்பதென்பது ஆபத்தானது என்பதை உணருகின்றார்கள்.

அதேவேளை, படுவான்கரையில் பாதுகாப்பில் உள்ள சிங்கள ஊர்காவல் படையினர் தமிழ் மக்களின் சொத்துக்கள், உடமைகளை சூறையாடி தமது கிராமங்களுக்கு எடுத்துச் சென்றார்கள். தமது உடமைகள் பறிபோனபோதும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை அங்கிருந்த தமிழ் மக்களுக்கு இருந்தது. ஏன் படை அதிகாரிகள் கூட, தமிழ் மக்களின் சொத்துக்களை வாகனங்களில் ஏற்றி தங்களிடங்களுக்கு கொண்டு சென்றதும் நடந்தது. இவ்வாறுதான் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டக்களப்பு மண்ணை வல்வளைப்புச்செய்து வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறீலங்கா அரசு நின்றது. அதன் அடுத்த இலக்காக மாறியது அம்பாறை.

(தொடரும்…)

நன்றி்:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*