TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவீரர்களின் தியாகத்தினால் மண் மீட்பது உறுதி

Maaveerarஎமது இன்றைய அழிவுகளினதும் போராட்டங்களினதும் அடிப்படைக் குற்றவாளிகளாக இந்திய அமெரிக்க பிராந்திய ஆதிக்கப் போரே உள்ளது. இலங்கைத் தீவை தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு நிகழ்த்தப்படும் பூகோள அரசியல் போராகவே இது நிகழ்த்தப்படுகின்றது.

எந்தவொரு பிடிவாதக்கார சர்வதேச அரசுகளும் எமது மக்களின் உண்மைக் கோரிக்கைகளை ஏற்க மறுத்திருக்கின்றன. எமது போராட்டமானது வெறுமனே சிங்கள தேசத்திற்கும் தமிழீழ தேசத்திற்கும் நடக்கும் போராகவே நாங்கள் கருதுகின்றோம். இந்தப் போராட்டம் இரு தேசியங்களுக்குள் மட்டும் நிகழ்ந்திருந்தால் சர்வதேச அனுசரணையுடன் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு என்றோ தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் பிணக்கின் அடிப்படையும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட கொடூர வீழ்ச்சியும் சர்வதேச வல்லாதிக்கப் போரின் விளைவுகளே.

அமெரிக்க, இந்திய சக்திகளாலும் காட்சிக்குள் இழுக்கப்பட்டு குற்றம்சாட்ட ஒருவர் வேண்டும் என்பதாலேயே சீனா கொண்டுவரப்பட்டது. ஆனால், சீனாவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது இலாபங்களை, புவிசார் அரசியலில் தனது பலத்தையும் பெற்றுக்கொண்டது. ஆனால், சீனாவிற்கு சிறீலங்காவின் பலவீனங்களும் நிலையற்ற தன்மையும் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தன் ஆதிக்கத்தையும் வியாபாரத்தையும் அதிகரித்துவிட்டு தன் எதிரியான இந்தியாவின் கணக்கை தீர்த்துக்கொண்டது. ஆனால், சீனா அமெரிக்காவின் விரோதி போன்று காட்டப்பட்டாலும் இவர்களின் பொது எதிரியான இந்தியாவை வீழ்த்துவதற்கு எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும், புவிசார் அரசியலில் எந்த முடிவுகள் வகுக்கப்பட்டாலும் சீனா அமெரிக்க சார்பிலேயே நிற்கும்.

இந்த அரசுகளின் பிடிவாத தன்னலப்போக்கு தமிழர்களின் அபிலாசைகளை ஏற்க மறுக்கின்றது. இவ்வல்லரசுகளின் போட்டிகளையும் பலவீனங்களையும் புரிந்துகொண்ட சிறீலங்கா அரசு இவர்களைப் பயன்படுத்தி தமிழின அழிப்பை பாரிய பலத்தோடு செய்கின்றது. இப்படுகொலைகள் சர்வதேச சக்திகளால் தடுக்கப்படாதது மட்டுமல்ல, ஊக்கிவிக்கவும்பட்டது. பாரிய இராணுவ வழங்களை வழங்கி தம் வியாபார அரசியல் இலாபங்களுக்காக போட்டியிடுகின்றன. இந்த அரசியல் யுத்தம் மேலும் மேலும் சர்வதேச நாடுகளுக்குள் பிணக்குகளை ஏற்படுத்தி சிக்கலை தீவிரமடையச் செய்யும். மற்றொரு பக்கத்தில் இவர்களின் ஆதிக்கப்போரில் சிறீலங்கா தனது இறைமையாண்மையையும் சுதந்திரத்தையும் மெல்ல மெல்ல இழந்து வருகின்றது.

சிறீலங்கா தனது சுதந்திரத்தை இழப்பதற்கு சாட்சியமாக இன்று சிங்கள மக்களே விளங்குகிறார்கள். சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்களக் கட்சிக்கு வாக்களிப்பதென்ற இறையாண்மையும் சுதந்திரமும் பறிபோய் இன்று அமெரிக்க ஆதிக்க ஆதரவு சக்திக்கு வாக்களிப்பதா, அல்லது ஆதிக்க ஆதரவு சக்திக்கு வாக்களிப்பதா என்ற அடிமை நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு சக்தியும் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் இன அழிப்பு நிற்கப்போவதோ, அல்லது மனித உரிமைகள் மேம்படப்போவதோ இல்லை. தமிழர்கள் அழிவில் போட்டியிட்டு பங்குபற்றிய சர்வதேச சமூகம் இன்று சிங்கள வாக்குகளைப் பெறுவதற்காக போட்டியில் இறங்கியுள்ளன.

‘ஜனநாயகத் தேர்தல்(?)’ நடாத்த முண்டியடிக்கின்றன. இந்தப் போரின் முடிவு தங்களை தமிழர்களின் அரசியல்வாதிகள் என்று காட்டிக்கொண்டோரை வெறும் பொம்மைகளாக்கியுள்ளது. இவர்கள் நேர்மையும் வீரமும் இன்று சர்வதேச சர்வாதிகாரத்திடம் மண்டியிட்டுவிட்டன. தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாபெரும் உயிர்த் தியாகங்களுடன், பற்றுடனும் நேர்மையுடனும் எந்த சர்வாதிகார சக்திகளுக்கும் அடிபணியாமல் தமிழீழ தேசியத் தாகத்தை யாரிடமும் சரணடையாமல் நிகழ்த்திய போராட்டம் இந்த நாகரீகமடைந்த நவீன உலகினால் கூட மிக உயர்வாகவே பார்க்கப்படுகின்றது. போராட்ட முறைகளை பயங்கரவாதம் என விமர்சித்தபோதும் சர்வதேசத்தின் பார்வை வியப்புடனே எம்மைப் பார்க்கின்றது.

இந்தப் போராட்டம் ஆயிரக்கணக்கான போராளிகளினதும் சுதந்திர வேட்கையுள்ள மக்களினதும் அளப்பரிய தியாகத்தில் நிமிர்ந்து நிற்கும் மக்கள் போராட்டம் என்பது இவர்களாலும் உணரப்படுகின்றது. எந்தப் பாரிய சக்திகளின் பெரும் பலத்தின் முன்னும் கொள்கைகளை சரணடையாப் போராட்டம் தற்கால உலகின் மனித வரலாற்றில் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. பொருத்தமற்ற சர்வதேச கொள்கைகளைக் கொண்டிருக்கும் வல்லரசு நாடுகளையும் வெட்கமடைய வைத்து, அவர்களின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டிய தருணத்தை உணர்த்தியுள்ளது.

உலகின் வல்லரசு சக்திகளின் துணையோடு எம் வரலாற்றை திரிபுபடுத்தக் கடும் முயற்சியை எடுத்தும் கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் துணைக்கழைத்தும் பிரயத்தனங்கள் செய்தபோதும், மனச்சாட்சியுள்ள மனித சமூகம் இவர்களின் புரட்டுக்களைப் புறந்தள்ளியுள்ளன. வரலாறுகள், போராட்ட வீரர்களையும் தியாகிகளையும் என்றும் மறப்பதில்லை. வரலாறு என்பது வென்றவர்கள் பக்கம்தான் நிற்கும் என்பது உண்மையில்லை. வல்லரச சக்திகள் வரலாற்றை தம் பக்கம் திருப்ப முயன்றாலும் மக்கள் சக்தியும், சாமானிய மக்களின் மனதில் பதியும் பதிவுகளும், வடுக்களும், நியாயத்தின் பக்கத்திலும் உண்மையின் பக்கதிலும் போராடுபவர்களின் பக்கமே நிற்கும்.

உண்மைக்காக, விடுதலைக்காகப் போராடுபவர்கள், போராடியவர்கள் அழிக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மனங்கள் அவர்களையே பதிவு செய்யும். தமிழீழ விடுதலைக்காக உயிர் துறந்த மாவீரர்கள் எமது இனத்தின் வரலாற்றுக் கால வீரத்தின் சின்னங்களாகவும் நவீன உலகின் புவிசார் அரசியல் சக்திகளின் ஆதிக்கங்களில் இருந்தும் அரச பாயங்கரவாதத்தில் இருந்தும், இன ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெறப் போராடும் இனங்களுக்கான ஒரு வீரச்சின்னமாகவும் விளங்குகின்றார்கள். சிங்கள தேசத்திற்கு தமிழீழ தேசியத்தின் அரசியல் உயிர்ப்புத் தன்மையை உணரும் காலமும் அவசியமும் வெகுவிரைவில் ஏற்படும். எமது புலம்பெயர் மக்களின் ஒன்றிணைந்த அரசியல், ஜனநாயக அமைப்புக்களின் பலம் வாய்ந்த செயற்பாடுகள் சிறீலங்கா அரசை வழிக்கு கொண்டுவர வழிவகுக்கும்.

இந்த அவசியம் சிறீலங்காவிற்கு ஆதிக்க சக்திகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும். எமது போராட்டம் புலம்பெயர் மண்ணில் தொடங்கப்பட வேண்டிய கட்டாயமும் கடமையும் உள்ளமையை எல்லாத் தமிழர்களும் உணர்ந்துள்ளனர். அதன் வடிவங்களும் போராட்டமுறைகளும் மாற்றமடைந்து ஜனநாயக முறைக்கு திரும்பலாம், ஆனாலும் எந்த சக்தியினாலும் இறுதி இலக்கு மாற்றத்திற்கு உள்ளாகாமல் ஆக்கப்படல் வேண்டும்.

எங்களுக்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களை நாம் மனதில் கொள்ளும்போது எம் எண்ணங்களில், ‘தமிழீழ தேசத்தின் உருவாகத்திற்கு உழைப்போம்’ என உறுதியெடுத்துக்கொள்ளல் வேண்டும். இன்று அரசியல் சதுரங்கத்தில் அரசோடு சேர்ந்து ‘தம்மை யதார்த்த அரசியல்வாதிகள்’ கூறிக்கொள்ளும் சக்திகள் எல்லாம் இன்னும் அரசோடு சேர்ந்து இன அழிப்பிற்கு துணைபோகவே செய்கின்றன. விதையாகிப்போன மாவீரர் சுவடுகளில் நம் மனதை நிறுதித்தி உறுதி கொள்வோம். தமிழீழம் வெல்வது உறுதி.

-சோழ.கரிகாழன்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*