TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசியல் கோலங்களில் விசித்திரமான மாற்றங்கள்

fonsegaநெருங்கிய நண்பர்களை விரோதிகளாக்கிவிட அரசியலினால் முடியும். அதே அரசியலினால் விசித்திரமான நண்பர்களையும் உருவாக்க முடியும். இலங்கையின் அரசியல் கோலங்களில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் உண்மையில் விநோதமானவையாகவே இருக்கின்றன. முப்படைகளின் பிரதம தளபதியாக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆணையின் கீழ் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா போரின் வெற்றிக்குப் பிறகு முழுமையாக 6 மாதங்கள் உருண்டோடுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதியுடன் முரண்பட்டுக் கொண்டு அடுத்த மாத பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்து எதிரணிக் கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார்.

போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு முறையான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு புகழாரம் சூட்டிய ஜெனரல் பொன்சேகா, தற்போது அவரை ஒரு சர்வாதிகாரியென்றும் பயங்கரவாதத்திடமிருந்து மீட்ட நாட்டை சர்வாதிகாரத்தின் கைகளில் ஒப்படைக்க முடியாது என்றும் சூளுரைத்திருக்கிறார். ஜெனரல் பொன்சேகாவை போர் வீரநாயகன் என்று பாராட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்க அமைச்சர்களும் தற்போது அவரை நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் சக்திகளின் கைப்பொம்மையென்றும் தேசவிரோத சக்திகளின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் துரோகியென்று வசைபாட ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

மறுபுறத்தில், ஜெனரல் பொன்சேகாவின் தலைமையில் இராணுவம் போரைத் தீவிரப்படுத்திய போது ஒரு முட்டாளினால் கூட போரை ஆரம்பிக்க முடியுமென்று கேலிசெய்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களும் இரட்சணிய சேனைக்கு தலைமை தாங்குவதற்குக் கூட தகுதியில்லாதவர் என்று ஜெனரல் பொன்சேகாவை வர்ணித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராக அவரை எதிரணியின் பொதுவேட்பாளராக்க களமிறக்குகிறார்கள்.

ஐ.தே.க. தங்களது பிரதான அரசியல் எதிரியென்ற கோட்பாட்டு ரீதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யினர் “அதே பிரதான எதிரியுடன்%27 சேர்ந்து பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதில் எந்த அசௌகரியத்தையும் எதிர்நோக்குவதாகத் தெரியவில்லை. 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பதற்காக ராஜபக்ஷவுடன் அணிசேர்ந்த ஜே.வி.பி.யின் தலைவர்கள் இன்று அதே ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்காக விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து நிற்கிறார்கள். இலங்கையின் எந்தவொரு அரசியல் பிரச்சினையிலுமே எதிரெதிர் நிலைப்பாட்டைக் கொண்ட வரலாற்றையுடைய ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரே வேட்பாளரை ஆதரிக்க முன்வந்திருப்பது இலங்கையின் அரசியல் கோலமாற்றங்களில் முக்கியமானது மாத்திரமல்ல, விநோதமானதும் கூட.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையையும் ஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சியையும் ஒழித்துக் கட்டுவதற்காகவே தாங்கள் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக இருதரப்பினருமே காரணம் கூறுகின்ற போதிலும், அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் செய்தியாளர் மகாநாடுகளில் உரத்து ஒலிக்கவே செய்கின்றன. ஐ.தே.க.வின் எந்தக் கொள்கையையும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறும் ஜே.வி.பி.யின் தலைவர்கள், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்படவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க.வின் கொள்கைகளை நிராகரிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்து தனியாகவே போட்டியிடப் போவதாகவும் கூறிவருகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாகவே பாராளுமன்றத் தேர்தலில் தங்களால் கடைப்பிடிக்கப்படக்கூடிய அணுகுமுறைகள் குறித்து ஐ.தே.க.வினரும் ஜே.வி.பி.யினரும் பேச ஆரம்பித்திருப்பது பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்திருக்கும் அரசியல் சக்திகள் மத்தியிலான குழப்பநிலையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த நிலைவரங்களையெல்லாம் நோக்கும் போது அரசியல் விசித்திரமான நண்பர்களை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், சூழ்நிலைகளுக்கேற்ப கோட்பாடுகளிலும் கூட விசித்திரமான நெளிவுசுளிவுகளை ஏற்படுத்துகிறது. எதிர்வரும் நாட்களில் மேலும் பல விசித்திர கோலங்களை இலங்கை அரசியல் அரங்கில் எதிர்பார்க்கலாம்.

சம்பந்தர் – மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்பு: நடந்தது என்ன? .

* .தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. ஜனாதிபதி தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவைத் தமக்குப் பெறுவதற்காகவே சம்பந்தரை ஜனாதிபதி தனியாக அழைத்துப் பேசினார் என்று கூறப்படுகின்றது.

வடக்கு கிழக்கைப் பிரித்த அரசு

இந்தப் பேச்சுகளின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்கள், விபரீதங்களை சம்பந்தர் எம்.பி., எடுத்துக்காட்டினார் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்பில் இடம்பெற்றவை எனத் தெரிவித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறிய தகவல்கள் வருமாறு:-

“உங்கள் ஆட்சியின் கீழ்தான் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. ஒரு சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட முடியும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க ஐ.தே.கட்சி தயாராகவும் இருந்தது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய மறுத்துவிட்டீர்கள். ஆகவே வடக்கு கிழக்கைப் பிரித்தது உங்கள் அரசுதான்” என சம்பந்தர் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினைக்குத் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யக்கூடிய பதிலோ, உறுதிமொழியோ ஜனாதிபதி தரப்பிலிருந்து கோடி காட்டப்படவில்லை.

“இனப்பிரச்சினைத் தீர்வுக்கென அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற ஒன்றை நீங்களே உருவாக்கினீர்கள். அதன் சார்பில் நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதை ஏற்க மறுத்துக் கிடப்பில் போட்டீர்கள். அதன் பின்னர் அனைத்துக் கட்சிக் குழு பயனற்றுப் போயிற்று.” என்று சம்பந்தர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, “நீங்கள்தான் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலேயே பங்கேற்கவில்லையே. அது உங்கள் தவறு அல்லவா?” என்று கேட்டார்.

அதை மறுத்துரைத்தார் சம்பந்தர்.”கூட்டமைப்புக்கு அந்தக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு எப்போதுமே அழைப்பு விடுக்கப்படவில்லை. தென்னிலங்கையின் இணக்கப்பாட்டைக் காணவே இந்த அனைத்துக்கட்சி நிறுவப்பட்டது என்பதால் அதன் கூட்டங்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பை அழைக்கத் தேவையேயில்லை என்று கூறிய ஜனாதிபதியே இங்கு இருக்கிறார். அதனை அவரிடம் உறுதிப்படுத்தலாம்.” என ஜனாதிபதியின் செயலாளருக்குத் தகுந்த பதிலடி தந்தார் சம்பந்தர்.

எந்த முகத்துடன் வாக்குக் கேட்பது?

“விடுதலைப் புலிகளை அழித்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரம் பேர் உங்கள் ஆட்சியில் கொல்லப்பட்டனர். சர்வதேசமும் நாங்களும் எவ்வளவு கெஞ்சியும் அதை நீங்கள் தடுத்து நிறுத்தவில்லை.மாறாக, அனுமதித்துப் பார்த்திருந்தீர்கள். அத்தகைய உங்களின் ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் போய் நாம் எமது மக்களிடம் கேட்க முடியும்?” என்று சம்பந்தர் ஜனாதிபதியிடம் கேட்டார்.

அகதிகளாக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அனைவரும் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என உறுதிமொழி தர விழைந்தார் ஜனாதிபதி. இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் மீளக்குடியமர்வு

கண்டி வீதிக்கு கிழக்கே மீள் குடியேற்றம் நடைபெறவேயில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அங்கும் மீள்குடியேற்றம் விரைவில் நடக்கும் என்றார் ஜனாதிபதி.

“”இல்லை. கண்டி வீதிக்குக் கிழக்கே பல இடங்களில் இராணுவமே நிலைகொண்டுள்ளது. மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.” என்றார் சம்பந்தர். “ஆம். சில இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டியுள்ளன. அப்பணி முடிந்ததும் எஞ்சிய இடங்களில் மீள்குடியமர்வு இடம்பெறும்.” என ஜனாதிபதி பதில் தந்தார்.

நாம் தமிழர் தாயகத்தில் இராணுவ நிலை நீக்கத்தை வலியுறுத்த, ஜனாதிபதியோ இராணுவத்தை நிரந்தரமாக நிலைநிறுத்துவது பற்றிப் பிரஸ்தாபிக்கின்றார் என சம்பந்தர் தமது கூட்டமைப்பு சகாக்களிடம் பின்னர் விசனத்துடன் சுட்டிக்காட்டினார்.

“யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருபது வருடங்களுக்கு மேலாக மக்களின் மண் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்போது யுத்த பீதி நீங்கியுள்ளதால் இந்தப் பிரதேசம் அந்த மக்களிடம் விடுவிக்கப்பட வேண்டும்” என சம்பந்தர் வலியுறுத்திய போது, “இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம், அவசரப்படக்கூடாது. பொறுத்துக் கொள்ளுங்கள். ஆறுதலாகப் பார்க்கலாம்” என்ற பாணியில் ஜனாதிபதியின் பதில் அமைந்திருந்தது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆம் திருத்தம் மற்றும் “பிளஸ் பிளஸ்” என்று ஜனாதிபதி கோடி காட்டினார். ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான எந்த சமிஞ்ஞையையும் ஜனாதிபதி காட்டவேயில்லை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழான பொலிஸ் அதிகாரம் பரவலாக்கப்படமாட்டாது என்பதே தமது நிலைப்பாடு என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். அத்தகைய பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் பக்குவப்படவில்லை என்றார் ஜனாதிபதி. வடக்கு, கிழக்கு இணைப்பையும் மறுத்து,பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் சட்ட ஏற்பாட்டையும் மறுக்கும் ஜனாதிபதி, அத்தகைய தமது திட்டத்தைப் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் உத்தேசம் என்று கூறுவது வேடிக்கையானது எனக் கூட்டமைப்புக் கருதுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*