TamilSpy

பொழுது போக்கு இணையம்…

காதில் பூவைக்கும் சிறிலங்கா

kaathilவரலாறுகள் அழிவதில்லை… தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள தேர்தல் கருத்து மோதல்கள் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைகின்ற அதேவேளை ஒவ்வொருவரது உண்மையான நிலைப்பாடுகளையும் வெளிப்படையாய் வெளிக் கொணர்கின்ற நிலையினைக் கொண்டுவந்திருப்பதை தமிழ் மக்களால் வேடிக்கை பார்க்க முடிகின்றது.

தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களை ஒரு உயிருள்ள ஜீவன்களாயும், வெற்றி பெற்றுவிட்டால் அவர்களை ஏதோ கண்காட்சிப் பொருட்களாயுமே சிங்களப் பேரினவாதத்தின் முக்கிய கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் கருதி வந்துள்ளனர்.

அதேவகையிலேயே இந்தத் தேர்தலையும் பயன்படுத்த சிங்களம் முடிவெடுதுச் செயற்படுகின்றது. ஆனால், ஒருவரை ஒருவர் தங்கள் தலைகளுக்கு மேலே தூக்கி கொண்டாடியவர்கள், தமிழ் மக்களை அழிக்க திட்டமிட்டு ஒரே முடிவில் செயற்பட்டவர்கள், சர்வதேசத்திற்கு சொல்வதற்கென பொய்களை ஒரு சேர முடிவெடுத்து வெளியிட்டவர்கள் இன்று எதிர் எதிர் நிலை எடுத்து முடியுமானவரை உண்மையான விடயங்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

jaffna-situationதமிழ் மக்களை மனிதாபிமானம் அற்றமுறையில் மிகக் கொரூரமாய் அழித்த அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாய் அழித்துவிட்டதாய்க் கூறி மிகப் பெரிய வெற்றிவிழாக்களையும் படைக் கௌரவிப்புக்களையும் ஆயுதக்கண்காட்சிகளையும் தம்மால் முடிந்தவரையில் மேற்கொண்டிருந்தார்கள்.

ஆனால் தற்போதைய தேர்தல்ப் பரப்புரைகளில் தாம் விடுதலைப் புலிகளின் ஆதரவினை ஏற்கத் தயார் என சரத் பொன்சேகாவும், பொன்சேகா விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகளுக்கு துணை போவதாக எதிர்த் தரப்பு அமைச்சர்களும் மாறி முடிந்தவரையில் ஒவ்வொரு பரப்புரைக் கூட்டங்களிலும், ஊடக சந்திப்புக்களிலும் விடுதலைப் புலிகளை முடிந்தவரையில் தங்கள் பரப்புரைப் பிரதான கருவாகவே கொண்டு செயற்படுகின்றனர். முடிந்தவரையில் உண்மையான விடயங்கள் எதிர் எதிர்த் தரப்புக்களிடம் இருந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள அதீத அச்சம் அவர்களின் மத்தியில் நிலையாகக் குடிகொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் வரும் நாட்களில் அது தொடர்பான இன்னும் பல விடயங்களை அவதானிக்க முடியும் என்பதை முன்கூட்டியே எதிர்வு கூற முடியும்.

அவர்கள் விடுதலைப்புலிகள் தொடர்பிலும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தொடர்பிலும் தெரிவித்துவரும் முரண்பட்ட கருத்துகளுக்கு பதில் தரும் தெளிவான கருத்துக்களை கடந்த மாவீரர் நாளன்று தலைமைச் செயலகம் வெளியிட்ட மாவீரர் நாள் உரையினையும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வழங்கிய கவிதையினையும் முழுமையாக செவிமடுப்பதன் மூலம் எந்தக் குழப்பத்திற்கும் உட்பட வேண்டிய தேவை எவருக்கும் இருக்காது. (இவற்றைப் புலிகளின் குரல் இணையத்தில் பார்வையிடலாம்).

மாவீரர் நாள் தொடர்பிலும் உரைகள் தொடர்பிலும் தமது பிரபல்யத்திற்காகவும் தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் அல்லது உடைக்கும் நோக்குடனும் மாறுபட்ட அறிக்கைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வருவதை வாசகர்களுக்கு குறிப்பாக தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. தாயகத்தில் இருந்து இந்தக் கட்டுரை ஆக்கப்படுவதால் அந்த முக்கியத்துவத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

எங்கள் தேசியம் சிதைக்கபடும் என நாங்கள் எவரும் கனவில் கூட எதிர்பார்க்கக் கூடாது அல்லது எதிர்பார்ப்பது உயிர் துறந்த எங்கள் தமிழ் உயிர்களுக்கு ஆத்ம திருப்தியைப் பெற்றுக் கொடுக்குமா?

எங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் முதல் இன்றுவரையில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உயிர்கள் எதிரிகளால் சிதைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே நினைக்க முடியாத மாவீரர்களின் தியாகங்கள் அவ்வாறே சிதைந்து போவதா? எங்கள் ஒவ்வொருவரது சொந்த இரத்தமும் இந்த மண்ணில் சிந்தப்பட்டிருக்கின்றது. அந்த இரத்தம் சிந்தலின் தியாகங்களின் அர்ப்பணிப்புகளுக்கு நாங்கள் கொடுக்கும் விலை என்ன? தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் கருத்துக்களை வெளியிடும் இணையத்தளங்களை நிர்வகிப்போர் உங்கள் இணையங்களின் பிரபல்யங்களை நீங்கள் எதிர்பார்ப்பதை ஊடகக்கார்கள் என்ற நிலையில் எங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.

உங்கள் ஆழ்மனங்களின் உணர்வுகளைத் தட்டிப்பார்த்தால் பொறுப்பற்ற செய்திகளை மக்களை நம்பிக்கையிழக்க வைக்கக் கூடிய செய்திகளை நீங்கள் வெளியிடுவதை நீங்கள் நிறுத்துவீர்கள்.

நாங்கள் போராட்டத்தின் மிக மிக நெருக்கடியான வேளைகளில் மக்களுடன் பணியாற்றிய ஊடகர்கள், மக்கள் சிந்திய ஒவ்வொரு குருதிச் சொட்டுக்களுக்கும் நேரடிச் சாட்சியானவர்கள் நாங்கள் சொல்கிறோம். எங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சொல்கின்றோம். எங்கள் போராட்டத்தின் வீச்சு இன்னமும் மூச்சுப் பெறுமே தவிர எந்தவேளையிலும் சிதைந்துவிடப் போவதில்லை. நாங்கள் ஒவ்வொருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நிலைப்பாடுகளை எடுத்து எதனையும் சாதித்துவிட முடியாது. எங்களுக்குள் இருக்கும் பகைமைகளை மறந்து எங்கள் நோக்கம் ஒன்று என்ற இறுமாப்புடன் செயற்படுவோம்.

சில ஊடகங்கள் தாங்கள் தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்ற போர்வையில் எங்களை அறியாமலேயே செய்திகளை வெளியிட்டு தமிழ்த்தேசியத்தை சிதைவாக்க பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். அந்தத் தடைகளை எல்லாம் சரியாக இனம் கண்டு அவர்களை மக்களின் முன் கொண்டுவர நீங்கள் ஒவ்வொருவரும் அவதானமாகச் செயற்பட்டாலே போதும். எங்கள் தலைமையையோ, எங்கள் போராட்டத்தையோ எவராலும் அழித்துவிட முடியாது. காரணம் இரண்டுமே வரலாறுகள். வரலாறுகளை எவற்றாலும் அழிக்கமுடியாது அல்லவா?

இராவணேசன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*