TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மகிந்தவின் பதவிக்காலம் சர்ச்சையை உருவாக்குமா?

Mahindaபதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ- ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

வேட்புமனுத் தாக்கல்- தேர்தல் திகதி அறிவிப்புத் தான் இன்னும் நிலுவையாக இருக்கின்றன.அதேவேளை மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் போட்டியில் நிறுத்தவுள்ள பொதுவேட்பாளர் தெரிவில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே ஜனாதிபதி;த் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எடுத்த முடிவுக்குக் காரணம் என்ன என்ற கேள்வி பலருக்கும் இருக்கவே செய்கிறது.

தற்போது வடக்கு-கிழக்கில் வாழும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.அவர்களுக்கு ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலை முன் கூட்டியே நடத்தப் போவதாகக் கூறியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.இது தமிழ்மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தேடும் முயற்சியாகவே தெரிகிறது.அரசியல் நிர்ப்பந்தங்களினால் எடுக்கப்பட்டு விட்ட ஜனாதிபதித் தேர்தல் பற்றிய இந்த முடிவுக்கு அப்பால் சில சிக்கல்கள் பற்றி இப்போது பேசப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படப் போவதாக செய்திகள் வெளியான போது இல்லாத பல சந்தேகங்கள் இப்போது எழுப்பப்படுகின்றன.ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே- நடத்துவதற்கு முடிவு செய்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. தற்போதைய நிலை அரசாங்கத்துக்கு சார்பானது அல்ல.

அரசாங்கத்தின் மீதான கவர்ச்சியும் செல்வாக்கும் சரிய ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது.போர் வெற்றியின் பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடத் தொடங்கியுள்ள நிலையில் அளும்கட்சி மீதான கவர்ச்சி குறையத் தொடங்கி விட்டது.ஆளும்கட்சியின் செல்வாக்கு கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்ததற்கு எதிர்கட்சிகள் பலவீனமாக இருந்ததும் ஒரு காரணம்.ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் வலுவாக ஒன்று திரண்டு வரும் சூழலில்- ஆளும்கட்சியால் ஆட்சியில் நிலைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழத் தொடங்கி விட்டது.

எனவே தேர்தலை முன்கூட்டியே நடத்துவது ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதாயமாக இருக்கும என்று கருதப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து தேர்தலை நடத்தும் போது சிலவேளைகளில் தற்போதிருக்கும் ஆதரவுத் தளத்தைக் கூட இழக்கலாம் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னொன்று, அரசாங்கம் அண்மைக்காலமாகவே முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தப் போவதாக கூறி வந்து விட்டது.

அதற்காக ஒரு பெரும் பிரசாரமும் செய்து விட்டது. இந்தக் கட்டத்தில் ஜெனரல் பொன்சேகா போட்டிக்கு வருகிறேன் என்று சவால் விட்டுள்ள நலையில் ஒதுங்கி நிற்பது இனி மேலும் சாத்தியமில்லை. அப்படிச் செய்வது பயந்து ஒதுங்கியதாகக் கருதப்பட்டு விடும். இதனால் தான் அரசாங்கம் அவசரப்பட்டு தேர்தலை நடத்த முடிவு செய்திருக்கிறது.இப்போதைய நிலையில் இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே தேர்தல் நடக்கப் போகிறது.இதற்கு முன்னர் எப்போதும் இப்படி நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது கிடையாது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிவு செய்திருப்பினும், அவர் தனது பதவிக்காலத்தை தியாகம் செய்யும் என்ணத்துடன் தான் இப்படிச் செய்கிறாரா என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக தனது பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளைத் தியகம் செய்யத் துணிந்து விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது கூறியிருக்கிறார். ஆனால் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியான பின்னர் தான் அவர் தனது பதவிக்காலத்தைத் தியாகம் செய்யப் போகிறாரா அல்லது தனது பதவியின் முழு ஆயுட்காலத்தையும் அனுபவிக்கப் போகிறாரா என்பது தெரியவரப் போகிறது.

* ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றால் அவர் தனது இரண்டாவது பதவிக்கான சத்தியப்பிரமாணத்தை உடனடியாக எடுத்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.தற்போதைய பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்தை முடித்த பி;ன்னர் அடுத்த பதவிக் காலத்துக்கான சத்தியப் பிரமாணத்தை மேற்கொள்ள அவர் முனையலாம் என்ற சந்தேகங்கள் தோன்றியுள்ளன.அப்படியாயின் அவர் அடுத்த எட்டு வருடங்கள் ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்படும்.ஆனால் அது சட்டரீதியாக சரியான காரியமா என்பது கேள்வியே. அரசியமைப்பில் உள்ள சில குறைபாடுகளைப் பயன்படுத்தி அதன் வழியே காய்களை நகர்த்தும் முயற்சிகளை எடுப்பது பொதுவான வழக்கமே.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது பொதுத்தேர்தலை நடத்தாமல் 1982ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை கருத்துக்கணிப்பின் மூலம் நீடிக்க வழி செய்தது அதில் ஒன்று.ஜனாதிபதி சந்திரிகா பதவியில் இருந்த போது தனது முதலாவது பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்தையும், இரண்டாவது பதவிக்காலத்துடன் சேர்த்தே அனுபவிக்க ஆசைப்பட்டார்.

ஒரு வருடம் முன்னதாகவே தேர்தல் நடத்தியதால் அதையும் சேர்த்து அடுத்த பதவிக்காலத்தில் ஏழு வருடங்கள் பதவியில் இருப்பதற்கு அவர் முயற்சி செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் பதவிப்பிரமாணம் எடுத்த காலத்தில் இருந்தே பதவிகாலம் ஆரம்பமாவதாகக் கூறி அவரது முயற்சிக்கு ஆப்பு வைத்தது.

* அதேபோல இப்போது நடக்கப் போகும் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றால்- அவர் உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இரண்டு வருடங்கள் கழித்து அதைச் செய்ய முற்படலாம்.அப்படிச் செய்வதன் மூலம் அவர் இரண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகவே அனுபவிக்க முடியும்.ஆனால் இதற்கு அரசியலமைப்பில் தெளிவான ஏற்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் அடுத்த ஜனாதிபதி பதவியேற்பதற்கான காலஎல்லை எதுவும் வகுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.இப்படியிருக்கும் போது எதிர்க்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றால் கூட அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் தகுதி தனக்கு இருப்பதாக மகிந்த ராஜபக்ஸ அடம்பிடித்தாலும் ஆச்சரியப்பட முடியாது.அப்படி இருக்க விரும்பினாலும் அவரை பதவியில் இருந்து வெளியேற்ற சரியான ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.ஆனால் முன்னதாகவே தேர்தலையும் நடத்தி விட்டு- இரண்டு பதவிக்காலங்களையும் முழுமையாகவே அனுபவிக்க நினைத்தால அது அரசியல் கொந்தளிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.

நாடு தழுவிய ரீதியில் அது அரசியல் நெருக்கடிகளை உருவாக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தல் என்பது வாக்களிப்புடன் மட்டும் முடிந்து போகப் போகும் விவாதமாக அமையாது.அதற்கு அப்பாலும் பிரதான வேட்பாளர்களின் அணுகுமுறைகளும் சூடான விவாதங்களுக்கு வழிவகுக்கப் போகிறது.

கார்வண்ணன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*