TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அடுத்த அரசுத் தலைவர் தேர்தல் இருமுனையா? மும்முனையா?

electionநெல்சன் மண்டேலா கடந்த ஆண்டு வரை அமெரிக்காவின் பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பிடித்திருந்தவர். உலக அளவில் அவர் எத்தனை பேரும் புகழும் பாராட்டும் பெற்றிருந்த போதும் அமெரிக்க அரசுக்கு அவை எதுவும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஆனால் அது பற்றி மண்டேலாவோ அல்லது ஐ.நா.வோ அலட்டிக் கொண்டதும் கிடையாது.

நேர்மை நியாயம் சத்தியம் என்பவையே பெரிதாக மதித்து வாழ்ந்து வரும் மண்டேலாவுக்கு மற்றவர்களின் உதாசீனம் எந்த வகையிலும் அவரது ஆளுமையைப் பாதிக்கவில்லை. அமெரிக்கா ஈராக் மீது படை எடுத்த போது மிகக் கடுமையாகக் கண்டித்து அமெரிக்காவின் தன்னிச்சையான படையெடுப்பு ஜனநாயகத்துக்கும் உலக அமைதிக்கும் ஐ.நா.வின் நோக்கங்களுக்கும் விரோதமானது சட்டரீதியற்றது என்றும் சாடியவர்.

இவை எல்லாம் அவர் நோபல் பரிசைப் பெற்று உலகத்தவரால் பாராட்டப் பட்ட போதும் ஐ.நா.வுக்குத் தெரியாமல் இருந்ததில் அதிசயப்பட ஏதும் இல்லை. ஐ.நா.வின் செயற்பாடுகளை அறிந்தவர் எவரும் இதற்கான காரணங்களை எளிதில் புரிந்து கொள்வர். ஐ.நா.வுக்கான தனது வருடாந்தக் கொடுப்பனவுகளை ஒழுங்காகக் கொடுக்காது இழுத்தடிக்கும் குணம் கொண்ட அமெரிக்க அரசுக்கு ஐ.நா. செயலர் நியமனத்தை மட்டும் தனது சொத்துடமை போலக் கட்டுப் படுத்துவது ஐ.நா. தலைமையகம் அந்நாட்டில் இருப்பதால் அதன் ஆளுமை தனக்கே உரியது என நினைப்பதால் போலும்.

அமெரிக்காவின் ஆதரவு இல்லாத எவரும் ஐ.நா. செயலர் ஆக முடியாது. அதன் செல்லப் பிள்ளையாக விளங்கும் இப்போதைய செயலர் பான் கீ மூன் எப்போதும் எந்தச் செயலரும் காணாத அளவுக்கு இன்று கண்டனக் கணைகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போரும் அதனை அழிக்க இலங்கை இந்திய அரசுகள் மேற்கொண்ட போர் வியூகங்கள், இழைத்த போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள், ஈழத் தமிழ் மக்களின் முட்கம்பி தடுப்பு முகாம் எனத் தொடரும் மனித அவலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்..

பான் கீ மூன் தமிழ் மக்கள் விடையத்தில் பொய் சொன்னார் என மனித உரிமைக் குழு வெளிப் படையாகவே பெயர் சொல்லிக் குற்றம் சாட்டும் அளவுக்கு அவரதும் அவரது தலைமை நிர்வாகி விஜய் நம்பியாரினதும் செயற்பாடுகள் இலங்கை அரசின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்து வந்துள்ளமை உலகத்தின் கவனத்தைப் பெற்று விட்டதால் எனலாம்.

இப்போது உலகின் அனுதாபத்தையும் நல்லெண்ணத்தையும் பெற்றால் அல்லாது அடுத்த தவணைக்கான பதவி தன்னை விட்டுப் போய்விடும் என்ற பயம் பான் கீ மூனுக்கு ஏற்படுவது போல் தெரிகிறது அதுவும் நியாயமானதே. தனக்கு எதிர்ப்பு அதிகரிக்கும் போதெல்லாம் நல்ல பிள்ளை போல் அறிக்கைகளை விட்டு அனுதாபத்தையும் அதிகரித்த ஆதரவு மற்றும் பண உதவிகளும் பெறும் தந்திரம் இலங்கை அரசுக்கு கைவந்த கலை. அந்த முறையைத் தெரிவு செய்து பான் கீ மூனும் உலக நெல்சன் மண்டேலா தினம் எனப் பிரகடனப் படுத்தி தனக்குப் பாவ மன்னிப்புத் தேடுகிறரோ என எண்ணத் தோன்றுகிறது.

பான் கீ மூனின் பதவிக்கு ஆபத்து என்றால் இந்தியாவின் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்குள் நுழைந்து விடும் கனவு பகற் கனவாகி விடும் வாய்ப்பு அதிகமாகிவிடும் விஜய் நம்பியாருக்கும் வேறு வேலை தேட வேண்டிய நிலை ஏற்படலாம். பாதுகாப்புச் சபை அங்கத்துவம் பெற்று விட இந்தியா பொதுச் சபையில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் அயராது பாடுபடுகிறது. பல நாடுகளுக்கு பண மற்றும் அறிவியல் உதவிகளை அள்ளிக் கொடுத்துத் தாஜா பண்ணி வருகிறது. ஈழத் தமிழர் அழிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இந்தியாவின் கனவுக்குச் சீனா பெரும் சவாலாக மாறி வருகிறது. இந்தியாவின் எல்லைகளை திபெத் அருணாச்சல பிரதேசம் என பர்மிய எல்லை எனப் பல முனைகளில் படை வலுமூலம் கையகப் படுத்தி வருகிறது. இப்போது அதன் நடமாட்டம் கச்சதீவு வரை அதிகரித்துக் காணப் படுவதாக வரும் செய்திகளும் வருகின்றன். அதே வேளை சீனா பல ஆபிரிக்க நாடுகளுக்கு அதிகரித்த முதலீடும், உதவிகளும் வழங்கி இந்தியா பாதுகாப்புச் சபைக்குத் தெரிவாகாதவாறு தடுப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்து சமுத்திரத்தை இந்தியாவா சீனாவா கட்டுப் படுத்துவது என்ற பனிப் போர் முழு அளவில் தொடங்கி விட்டது. இலங்கை அம்பாந்தோட்டையில் சீனாவின் கரங்கள் வலுப் பெற்றுள்ள நிலையில் இந்தியா மாலை தீவுகளில் ஒன்றில் ராடார் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துக் கடல் கண்காணிப்பில் இறங்கி உள்ளது.

மாலை தீவை இந்தியாவின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர உதவிய எமது புளொட் இயக்கத்தை இந்தியா நினைவில் வைத்திருக்க நியாயம் இல்லை. தமிழீழ மக்களின் விடுதலை இயக்கங்களைச் சிதறடித்து அவர்களின் தாயகத்தையும் உயிர் உடமைகளையும் அழித்த பெருமை இந்தியாவுக்கே சேரும். இதனால் ஈழத் தமிழினத்துக்கு மட்டுமன்றி இந்தியத் தமிழருக்கும் ஏற்பட்டுள்ள பரிதாபமான நிலை உலகத் தமிழினத்துக்கே பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அந்தப் பாவத்துக்கு முன்னின்று உதவிய இந்தியா தான் செய்த வினையை அறுவடை செய்யும் காலம் தொடங்கி விட்டது.

சீனாவின் பலமான வர்த்தகத் தொடர்பும் வலுவான பண முதலீடும் அமெரிக்காவின் கரங்களைப் பலமாக கட்டிப் போடும் நிலை உருவாகி விட்டது. அமெரிக்காவின் நிதிவலுவானது தொடர்ச்சியான டொலரின் மதிப்புச் சரிவால் மேலும் பலம் குறைந்து வருகிறது. அதனால் அது சீனாவிடம் இருந்து பெற்றுள்ள அபரிமிதமான முதலீடுகளும் வர்த்தகக் கடன்களும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைப் பாதிக்கத் தொடங்கிவிட்டன.

அண்மையில் ஓபாமா சீனாவில் பேசிய பேச்சுக்கள் அமெரிக்காவின் போக்கில் பாரிய மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன. வெளிப்படையாகவே சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாகத்தான் வாழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை இரு நாடுகளும் இணைந்தே உலகில் சவால்களை எதிர் கொள்ள முடியும் என்று கூறியதன் மூலம் அமெரிக்கா சீனாவை சமநிலையில் தன்னோடு வைக்கும் நிலையைக் காட்டுகிறது.

இத்தகைய பின்னணியில் இந்திய சீனப் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலை என்னவாக இருக்கப் போகிறது என்பதை ஊகிப்பது கடினமாக இருக்காது. சுற்றிலும் நட்பு நாடு எனக் கூறிக் கொள்ள ஒரு நாடு கூட இல்லாத நிலையில் இலங்கையை மட்டுமே தாஜா பண்ணித் தனக்குள் வைத்திருக்க இந்தியா படாதபாடு படுகிறது.

அத்தகைய முயற்சியே இலங்கையின் அடுத்த அதிபராக சரத் பொன்சேகா வந்து விடக் கூடாது என அது தவிப்பதும் மகிந்தவை தொடர்ந்தும் வைத்திருக்க முயல்வதும் அதற்காகப் பிரணாப் முகர்ஜி வந்திருப்பதும் புலப்படுத்துகின்றன. இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக இந்தியக் காங்கிரஸ் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்குத் தன் பிரதிநிதிகளை உத்தியோக ரீதியாக அனுப்பியிருந்தது.

இவற்றைப் பார்க்கும் பொழுது இந்திய ஆளும் காங்கிரஸ{ம் இலங்கையில் ஆளும் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் திருமண உறவு கொண்டுள்ள நிலை தெரிகிறது. இந்நிலையில் அண்மையில் கலைஞர் தி.மு.க. காங்கிரஸ் உறவு வளமான வலுவான கூட்டணி என்றுமே பிரியாது எனப் பெருமைப் பட்டுக் கொண்டதும் நினைவு கூரத் தக்கது.

இந்நிலையில் இந்தியாவின் அடுத்த ஆட்சிக் காலங்கள் மத்தியில் சோனியா குடும்பமும் மாநிலத்தில் கலைஞர் குடும்பமும் என்ற நிலை உருவாகி விட்டது. எவர் கூச்சல் போட்டாலும் அரசின் அனைத்து வளங்களும் கட்டமைப்புகளும் இவ்விரு குடும்பங்களின் குடியாட்சிக்கே பயன் படுத்தப்படும் என்பது உறுதியாகிறது. இலங்கையிலும் அதே முறையில் மகிந்தவுக்கே இந்தியாவின் உதவும் கரம் நீண்டு நிற்கிறது. இதுவரை கனவில் மிதந்த ரணில் தமது தோல்விகளின் சாதனையைத் தொடர்ந்தும் வைத்திருப்பார்.

இலங்கையின் அடுத்த அரசுத் தலைவர் தேர்தல் இருமுனையா? மும்முனையா? என்பது மகிந்த ரணில் இருவருக்கும் எழக்கூடிய நிலை உள்ளது. தமிழ் மக்களின் புறக்கணிப்பால் பதவிக்கு வந்த மகிந்தருக்குத் தமிழரின் வாக்கு கிடைக்காத நிலையே தொடரும். அத்தகைய நிலையே அவருடைய அடுத்த வெற்றிக்கும் வழி வகுக்கும் என்பதால் தமிழரின் வாக்குகளை பலன் அற்றுப் போகச் செய்ய மூன்றாவது வேட்பாளராக ஒரு தமிழரை நிறுத்த மகிந்தரும் இந்தியாவும் முற்படுவர். அந்த மூன்றாவது தமிழர் யார்? ஸ்ரீகாந்தாவா ? இரா சம்பந்தனா? இல்லை மனோ கணேசனா?

இந்தியா ஈழத் தமிழ் மக்களை எப்படித் தனது எதிரிகளுடன் சேர்ந்து தாக்கி அழித்ததோ அதே விதத்தில் சீனா மியன்மார் பாக்கிஸ்தான் மட்டும் அல்ல ஸ்ரீ லங்காவும் சேர்ந்தே இந்தியாவுக்கும் அமையுமா என்பதை வரும்காலம் நிரூபிக்கும். அப்போது மகிந்த, பொன்சேகா இருவரில் யார் பதவியில் இருந்தாலும் சீனாவின் பக்கமே சிங்களம் இருக்கும். அப்போது அமெரிக்கா யார் பக்கம் இருக்கும்?

த.எதிர்மனசிங்கம். இன்போதமிழ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*