TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்

Annaகொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட்டவுண் தொடங்கப் போகின்றது.

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்: பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில். மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில்.

anna_big_pulikal.net

சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர். அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர். ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர்.

பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர். எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும். எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை.

அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது. இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.

எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா? முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள்.

ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.

-யாழிலிருந்து சனீஸ்வரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*