TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கருணாவின் உளறலும், பின்னால் உள்ள நிஜமும்!

karuna-thu“கருணா.!!” இந்தப் பெயரை தமிழினம் உள்ளவரை தமிழர் மறக்கப் போவதில்லை. “புதிய தலைமுறை தொலைக்காட்சியில்” சில தினங்களுக்கு முன்பு வழங்கிய நேர்காணலைப் பார்த்த போது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகவே இருந்தது. இதில் உண்மைக்கு புறம்பான பல கதைகள் இட்டுக் கட்டி தன்னை நியாயப் படித்த முயல்கின்றார்.

அவரது நேர்காணலை பார்க்கும் போது தமிழ் மக்களாலும் கைவிடப்பட்டு, சிங்கள ஆட்சியாளராலும் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் போது வந்த “சுடலை ஞானம்” என்றே நான் பார்க்கின்றேன். அதன் வெளிப்பாடே தலைவரையும், மாவீரரையும் மரியாதையாகப் பேசியமை ஆகும். தலைவரைப் பற்றியும் மாவீரரைப் பற்றியும் உலக தமிழருக்குத் தெரிந்த ஒன்றைத்தான் இப்போது இவரும் கூற முற்படுகின்றார்.

தான் புலிகள் போராளிகளை கொல்லவில்லையாம்.!! லெப். கேணல் நீலன், கெளசல்யன் போன்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளம். அவைகளை மறக்க தமிழருக்கு மறதி வியாதியா? புலிகளை எதிர்த்து போராட இவர் ஆயத்தம் செய்த போதும் புலிகள் அதற்கு இடம் கொடாது அதை முறியடித்தனர் என்பதே உண்மை.

அடுத்தது கருத்து முரண்பாட்டில் பிரிந்ததாக புதுக்கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். நிதி மோசடி மட்டக்களப்பில் நடந்தது. அங்கு தலைவர் போய் பார்க்க முடியாது. இதைக்கண்டு பிடித்தவர் தமிழேந்தி அப்பா; அதன் பின்பு தான் புலனாய்வு விசாரணைகள் மூலம் பாலியல் பிரச்சனை இனம் காணப்பட்டது. அதை தலைமை அறிந்ததும் பிரதேச வாதம் முன்னிறுத்தி பிரிந்தது எல்லோருக்கும் தெரியும். பிறகேன் இந்த வீண் முயற்சி?

அடுத்ததாக தன்னை ஒரு இராணுவ மேதாவியாக் காட்ட முயல்கின்றார். புலிகளின் அரசியல், கடற்புலிகள், நிதித்துறை, புலனாய்வுத்துறை தவிர தான், விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதி என்றும் இவருக்கு கீழேயே “சமர்க்கள நாயகன்” தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள், தளபதி கேணல் தீபன் அவர்கள் போன்றவர்கள் இருந்தது போலவும், அவர்களையும் இவரே வழிநடத்தியது போலவும் கூறுகின்றார். இதே வாயால்தான், பேச்சு வார்த்தைக்கு வெளிநாடு வந்த போது தலைவரின், தளபதிகளின் போர் நுட்பம் பற்றி சிலாகித்து கூறிய உரைகள் இன்றும் இணையத்தில் உள்ளது மறந்து விட்டாரோ தெரியவில்லை.?

அடுத்தது அவர் கூறிய முக்கிய குற்றச்சாட்டு இந்திய இராணுவம் மாணலற்றில் சுற்றி இருந்த நேரம் தளபதி பானு, தளபதி சூசை போன்ற தளபதிகள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாகவும், தான் மட்டுமே தேசியத் தலைவர் அவர்களை மீட்டு உயிரை காப்பாற்றியதாகவும் கூறுகின்றார். இது முழுப்பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது. அவர்கள் இருவரும் இந்திய இராணுவத்துடன் சண்டையின் போது காயமடைந்ததனால், மருத்துவத்திற்காக தமிழ்நாட்டிற்கு சென்று மருத்துவம் பெற்றதும் மீண்டும் ஊர் திரும்பி மீண்டும் சண்டை இட்ட வரலாறு உலகறியும்.

அந்த நேரத்தில் நாங்களும் மணலாற்றில் தான் இருந்தோம். என்னைப் போல இன்றும் பலர் உயிருடன் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் ஆரம்பத்தில் தலைவருக்கு பாதுகாப்பாக மணலாறு, முல்லை மாவட்ட தளபதிகளான மேஜர் தங்கேஸ் அண்ணா, பசிலன் அண்ணா, டடி/நவம் அண்ணா போன்றவர்கள் இருந்து வீரச்சாவடைந்த பின்னும், பொட்டு அம்மான், சொர்ணம் அண்ணா, கடாபி அண்ணா, பால்ராஜ் அண்ணா, சங்கர் அண்ணா, அன்பு அண்ணா, ரொபட்/வெள்ளை அண்ணா, தீபன் அண்ணா, சுபன் அண்ணா , கிறேசி அண்ணா என…. அவரை சுற்றி நின்று பாதுகாத்த வீரத் தளபதிகளின் பட்டியல் மிக நீளமே.

அதில் கருணாவும் ஒரு அணில். இவ்வளவு பெரிய புளுகு எதற்கு? இவர்கள் தான் இந்திய அரசின் “செக்மேட்” இராணுவ நடவடிக்கைகளை முறியடித்த கதாநாயகர்கள். இன்று தான் செய்தது போல தம்பட்டம் அடித்து மக்களை திசை திருப்பப் பாக்கின்றார். அடுத்தது மிக முக்கியமானது தனது தாக்குதல் உத்தி என்று ஒன்றை கூறினார்.

இராணுவம் முன்னேறும் போது பின் பக்கத்தால் இறங்கித் தாக்குவது. பாவம் கருணா 1994இல் இராணுவத்தின் முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையை தலைவரின் நெறிப்படுத்தலில் பொட்டு அம்மானின் வழி நடத்தலில் புலிகள் முன்னாள் விட்டு பின்னால் இறங்கி அடித்து சிங்களவனை ஓட ஓட விரட்டியது தெரியாது போல இருக்கு. அன்று தான் புது உத்தி ஒன்றை புலிகள் கையாண்டு பெரும் வெற்றியை பெற்றிருந்தனர்.

இந்த உத்தியை “சூரியக்கதிர்” இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும், பின்பு வந்த பல இராணுவ முன்னேற்றங்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்பட்டது. அதை தான் தன்னுடைய உத்தி என்று கருணா இப்போது புலம்பி உள்ளார். கருணா மட்டக்களப்பில் இருக்கும் போது, கருணாவால் மேற்கொள்ள பட்ட முதல் முகாம் தகர்ப்பு முயற்சி “வவுணதீவ” முகாம் ஆகும்.

இந்த தாக்குதல் எமக்கு படு தோல்வியில் முடிந்தது 120க்கு மேட்பட்ட போராளிகளை பறிகொடுத்து 50 இற்கு மேட்பட்ட இராணுவத்தினர் மட்டுமே கொல்லபட்டு இருந்தனர். எமது பக்கத்தில் மிகப்பெரிய இழப்புகளுடன் பின்வாங்கப்பட்டது . இதற்கு முக்கிய காரணம், கருணாவிற்கு பதுங்கித் தாக்குதலில் இருந்த அனுபவம், மரபு ரீதியான தாக்குதலுக்கு இல்லாமல் போனமையே.!

அதன் பின் தலைவர் தனித்த முகாம் தாக்குதலை கருணாவிடம் கொடுத்தது கிடையாது. அப்போது நீங்கள் கேக்கலாம் அப்போ எப்படி கருணாவிற்கு இவளவு முக்கியத்துவம் கிடைத்தது என்று??

அதற்கு நாங்கள் சிறிது பின்னோக்கி போக வேண்டும்.! இந்திய இராணுவத்துடன் கடைசிவரை போராடியது, மற்றும் சண்டை முடிந்த பின் 1990இன் பின் மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கில் புதிதாக போராளிகள் இணைந்தார்கள்.

அவர்களை இணைத்து போராளியாக்கி தலைவருக்கு விசுவாசமாக வளத்திருந்தார். இதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. கருணாவை நல்ல ஒருங்கிணைப்பாளர் என்றே கூறலாம். இதனால் தலைவர், கருணாவிடம் இயல்பான மதிப்பு வைத்திருந்தார். அதனால் மாவட்ட ரீதியான பொறுப்பின் ஊடாக எல்லோருக்கும் “கேணல்” தரம் வழங்கும் போது அவருக்கும் வழங்கப்பட்டது.

ஆனால் போரியலைப் பொருத்தவரை அங்கு தளபதிகளாய் இருந்த லெப். கேணல் ரீகன் அண்ணா ,ஜோய் போன்றவர்களின் தொடர் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் இவர் மீது பெரும் மாய விம்பத்தை உருவாக்கியது. இப்படியே காலம் உருண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளில் வன்னியில் நிலை கொண்டிருந்த புலிகளின் விசேட படையணிகள் பெரும் சிதைவு, மற்றும் ஆளணி பற்றாக் குறையை சந்திக்கும் என்பதை உணர்ந்த தலைவர், மறிப்பு சண்டைக்கு போராளிகள் தேவை நிமித்தம் முதல் கட்டமாக ஜெயந்தன் படையணி வன்னிக்கு நகர்த்தப்பட்டது.

அதன் தளபதியாக கருணாவையும் அழைத்து அவரிடமே அவர்களையும் வழிநடத்தும் பொறுப்பும் தலைவரால் வழங்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அந்தப் போராளிகள் பற்றி அவருக்கே முழுவதும் தெரிந்திருந்தது. அவர்களுக்கும் கருணாவை விட்டால் வேறு தளபதிகளை அந்த நேரத்தில் தெரியாது. அவர்களைப் பழக்கி, அறிந்து, அணி மாற்றுவதற்கு நேரமும் இல்லை. அதனால் கருணாவிடமே விடப்பட்டது.

ஜெயசிக்குறு சண்டையில் அணி மாற்றீட்டுக்காகவே கருணா கொண்டு வரபட்டார். இதன் பின்பு தான் கருணாவும் முதல் தடவையாக மரபுவழி யுத்தத்தில் பங்கு பற்றினார். ஆனால், அதற்கு முன் மரபு ரீதியான சண்டைகளில் “பழம் தின்று கொட்டை போட்ட” தளபதிகளான பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா, தீபன் அண்ணா, பானு அண்ணா, ராஜுஅண்ணா மற்றும் சொர்ணம் அண்ணா போன்றவர்களுக்கு மத்தியில் மரபுவழி சண்டைக்கு வந்த பாலகன் தான் கருணா.

இன்று ஜெயசிக்கிறு சண்டையை தான்தான் முறியடித்ததாகவும், தலைவருக்கே போர் நுட்பங்களை சொல்லி கொடுத்தது போலவும் தம்பட்டம் அடித்து வருகிறார். உண்மையில் அந்தச் சண்டையில் ஒவ்வொரு பகுதியை ஒவ்வொரு தளபதிகள் வழி நடத்தினார்கள். ஜெயசிகுறு சமர் அனைத்துத் தளபதிகளாலும், போராளிகளாலும் ஈட்டப்பட்ட பெரும் வெற்றி. இதில் ஆட்லறி, மோட்டார் படையணிகள் முக்கிய பங்காற்றி இருந்தது.

இது புலிகள் அமைப்பில் இருந்த அனைத்துப் போராளிகளுக்கும் தெரியும். அந்த நேரத்தில் பெட்டி அடித்து இருத்தல் சண்டை (box சண்டை என்பார்கள்) தான் பிரபலம். அதை அறிமுகப்படுத்தியது தீபன் அண்ணாதான். அவரால்தான் இராணுவம் வெற்றிகரமாக தடுக்கபட்டது. இராணுவத்தை அடித்து கலைத்த சண்டையை சொர்ணம் அண்ணா ஒட்டுசுட்டானில் ஆரம்பித்து வைக்க, எல்லா கட்டளைத் தளபதிகளாலும் ஒவ்வொரு பகுதியாக தலைவரின் வழிநடத்தலில், தளபதிகளால் வழிநடத்தப்பட்டு கூட்டு முயற்சியில் வெற்றி கொள்ளப்பட்டது.

அடுத்தது ஆனையிறவு வெற்றியும் தன்னால்தான் வந்ததாக கூறுகின்றார். அந்தச் சண்டை பற்றி தமிழ் தெரிந்த சிறு குழந்தைக்கும் தெரியும் பால்ராஜ் அண்ணாவின் இத்தாவில் தரை இறக்கமும், ஏனைய தளபதிகளின் ஒவ்வொரு பகுதிக்கான வழிநடத்தலுமே. இதில் கருணாவும் ஒரு படையணியை வழி நடத்தினார் என்பதே உண்மை.

எந்தக் காலத்திலும் அந்த நேரத்தில் “கேணல்” தரத்தில் இருந்த முக்கிய தளபதிகள் கருணாவிற்கு கீழ் சண்டை செய்யவில்லை. அப்படி மிகப் பெரிய இராணுவ மேதை என்றால் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளுடன் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களுடன் இருந்த போதும், ஆயிரம் போராளிகள் தாக்கிய போது ஏன் அவர்களை முறியடித்து வெற்றி கொள்ளவில்லை??

ஏனெனில் புலிகளமைப்பு என்னும் குளத்தில் இருந்து வெளியேறிய (கரை) முதலைக்கு தரையில் பலமில்லை அது தண்ணீரில் இருக்கும் போது தான் அதற்கு பலம். இப்படிபட்ட கருணாதான் தன்னை இராணுவ மேதையாகக் காட்ட முற்படுகின்றார்.

கருணா பிரிந்து சென்ற பின் சண்டைகளில் எமக்கு பின்னடைவு வந்தது உண்மைதான். அதற்கு காரணம் எமது பலவீனம் அவருக்கு தெரிந்திருந்தது. அனால், கருணாவும் ஸ்ரீலங்கா ராணுவமும் போரிட்டிருந்தால் தமிழர் சேனை நிச்சயம் அதை முறியடித்திருக்கும். நாம் மோதியது வல்லரசுகளுடன். எமது தோல்விக்கு முக்கிய காரணம். எமது அயுத வளங்கள் தடைப்பட்டமையும், அது எதிரிக்கு தடையில்லாமல் கிடைத்தமையும்.

இதை நான் எதோ கருணா மீது காழ்ப்புணர்ச்சியில் கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். இதுதான் உண்மை. இது எமது போராளிகளுக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரை மற்றைய தளபதிகளுடன் ஒப்பிடும் போது கருணாவால் அவர்களுக்கு அருகில் கூட நிற்க முடியாது இது எமது போராளிகளுக்கும் நன்கு தெரியும்..!!

-ஈழத்து துரோணர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*