TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மிகப் பெரிய தவறுகள்: தேர்தலுக்கு முன் பின் – திவ்யநாதன்

sri lanka elections 2015சர்வதேசத்தின் பார்வையினை அதிகளவு ஈர்த்த ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல், இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்று கூறலாம்.

கடும் போட்டிகளுக்கு மத்தியில் 106 ஆசனங்களை பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்சி அமைத்திருக்கின்றது ஐக்கிய தேசிய முன்னணி.

இலங்கையின் 22வது பிரதமராகவும், தனது அரசியல் பயணத்தில் 4 தடவையாகவும் பிரதமராக தெரிவானார் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.

மக்கள் எதிர்பார்த்த பெறுபேறுகளை விட, அரசியல் அவதானிகள் எதிர்பார்த்த பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளன. இவ்வாறாக நடைபெற்ற இத்தேர்தலில் தேர்தலுக்கு முன்னும், பின்னும் மக்களின் ஏகோபித்த விருப்பத்திற்கு மாறாக பல தவறுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இத்தேர்தலுக்கு முன் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியினரும், இடையில் சேர்ந்துகொண்ட சிலரும் உறுதியான உடன்பாடு ஒன்றை மேற்கொள்ளாமல் போட்டியிட்டமை ஒரு குறைபாடாகும்.

தாம் வெற்றி பெறுவோம் என தெரிந்த நிலையில் கூட, தேசிய அரசாங்கம் தொடர்பில் உறுதியான உடன்பாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் வரவில்லை.

மாறாக தேர்தலுக்கு பின் வருவது பொருத்தமற்றது. காரணம் மக்களின் விசுவாசங்களை இழந்தவர்கள் கூட, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் உள்வருவது பொருத்தமற்றது.

சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பினை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதனை சரியாக வகித்தாரா?

தன்னை ஒரு சமநிலைவாதியாக காட்டிக்கொண்ட ஜனாதிபதி அதனை சரியாக நிறைவேற்றினாரா? போன்றவை கேள்விக்குறி.

பொலன்நறுவை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்வி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகியோர், ஜனாதிபதி தேர்தலில் கைக்கொண்ட உறுதியான வழிமுறைகளை, பொதுத்தேர்தலில் ஏன் பயன்படுத்தவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இரண்டு மிகப்பெரிய கட்சிகளின் குறைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய மக்கள் விடுதலை முன்னணி வெறுமனே தேசிய பட்டியலுடன் சேர்ந்து 6 ஆசனங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டமை மிகப் பெரிய குறைபாடாகும்.

காரணம் மக்களால் அதிகம் வரவேற்கபட்ட கட்சியாகவும், 2020 ம் ஆண்டு எதிர்க்கட்சியாக வரும் என எதிர்பாரத்த ஒரு கட்சி வெறுமனே 6 ஆசனங்களை பெற்றமை பாரிய ஏமாற்றமாகவே கருதப்படுகின்றது.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நியமிக்கபட்ட ஏ.எச்.எம்.பௌஸி, பைஸர் முஸ்தபா, அங்கஜன் ராமநாதன், சரத் அமுனுகம, ஹிஸ்புல்லா, மலிக் ஜயதிலக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜேமுனி சொய்சா, எஸ்.பீ. திஸாநாயக்க, திலங்க சுமதிபால மற்றும் டிலான் பெரேரா ஆகியோரில் 7 பேர் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மக்களுக்கு ஆட்சி செய்வது, 1978 ம் தேசிய பட்டியல் முறைமையில் உள்ள மிகப்பெரிய குறைபாடாகும்.

தேர்தலுக்கு முன் தேர்தல்கள் திணைக்களம் தேசிய பட்டியலில் பெயர் குறிப்பிடாத எவரும் தேசிய பட்டியலின் ஊடாக வரமுடியாது என் கூறியும் இதனை எவ்வாறு? ஏன்? அனுமதித்தது என்பதும் ஒரு குறைபாடாகும்.

ஜனநாயக நாடு ஒன்றின் வெற்றிக்கு மிகப்பெரிய தூண் எதிர்க்கட்சியாகும். ஆனால் இலங்கையில் அமையப்போகும் தேசிய அரசாங்கம் எதிர்க்கட்சியின் தேவையினை குறைத்துவிடக்கூடிய அச்சமும் நிலவிக் கொண்டிருக்கின்றது.

தேசிய அரசாங்கம் என்பது உண்மையில் மக்கள் நலனில் கவனம் செலுத்தக்கூடியவர்களின் இணைவாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அமைச்சு பதவிகளுக்கும், தேசிய பட்டியலுக்கு ஆசைப்படுபவர்கள், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் என்ற நிலையிலே தேசிய அரசாங்கத்தின் சாயல்கள் புலனாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆட்சி அமைக்கக்கூடிய சூழலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தக்க வைத்துக் கொள்ளாமை ஒரு வரலாற்று பிழையாகவே கருதப்படுகின்றது.

இருப்பினும் அவர்களது, சுயாட்சி கோரிக்கை, பாராளுமன்ற பெரும்பான்மையுடன் அமைத்துக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்குறி ஒருபுறம் இருந்திருக்கலாம். எனினும், தமிழ் மக்களின் தேவைகளை அமைச்சு பதவிகள் பெறாமல் நிறைவேற்றிக்கொண்டால் அது சாதனையாகத்தான் கருதப்படும்.

மேலும், தோற்ற கட்சிகளினை இணைத்து தேசிய அரசாங்கம் அமைத்தல் சிறப்பான ஒரு விடயம். ஆனால் எந்த கட்சி பெரும்பான்மை பெற்றதனை மறக்கச்செய்யும் அளவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கின்றமையானது, வாக்களித்த மக்களை குழப்பம் அடைய செய்கின்ற ஒரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணிக்கு 19 அமைச்சுகளும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 16 அமைச்சுக்களும், கிடைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டுக்கு அமைச்சரவையின் எண்ணிக்கையானது 30 போதுமானதாகும். ஆனால் இம்முறை அமைச்சுக்களின் எண்ணிக்கையானது ஐம்பதையும், பிரதி அமைச்சுக்களின் எண்ணிக்கை 40 ஐயும் தாண்டப்போவதாக அறியக்கிடைத்துள்ளது.

இது, பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வளவு தூரம் நன்மை பயக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இத்தகைய எண்ணிக்கை வரலாற்றில் செய்கின்ற மிக பெரிய தவறாகும். காரணம், இலங்கையின் எதிர்காலத்தில் இது பாரிய அழுத்தங்களை கொடுக்க நேரிடலாம்.

அதேவேளை, இத்தேர்தலில் தேசிய அரசாங்கம் என்ற ஒரு புதிய அம்சத்திற்கு இலங்கையின் அரசியலமைப்பில் புதிய விதிகளையும், சரத்துக்களையும் கொண்டு வரவேண்டியது கட்டாயமாகும்.

காரணம் மக்களிடம் தேசிய அரசாங்கம் தொடர்பில் மக்களின் தீர்ப்பு ஒன்றினை மேற்கொள்ளாமல் நிறைவேற்றுவது பொருத்தமற்ற ஒரு செயலாகவே காணப்படும்.
அமைச்சரவை நியமனம் வழங்குவதற்கு ஏன் இவ்வளவு காலம்?

தவறு விட்ட அமைச்சர்கள் அதனை மறைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்படுகின்ற கால அவகாசமா? அல்லது மக்களை இனியும் எப்படி ஏமாற்றுவது என சில அரசியல்வாதிகளுக்கு யோசிப்பதற்கான கால அவகாசமா? என்றே மக்களை நினைக்கத் தோன்றுகின்றது.

அமைச்சரவை நியமனங்கள் ஒரே தடைவையில் வழங்கப்படுவதே சிறந்தது. கடந்த அரசாங்கத்தில் கட்டம் கட்டமாக வழங்கியதற்கு காரணம் இருந்தது.

ஆனால் பொதுத்தேர்தலுக்கு பின்னரும் அமைச்சரவை நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவது பொருத்தமற்றது. அமைச்சரை நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவது அரசியல் தீர்க்கதரிசனமற்ற நிலையினையே பிரதிபலிக்கின்றது.

ஜோர்ச் வோசிங்டனால் அமெரிக்காவின் ஆயுட்காலம் முழுவதனையும் திர்மானிக்க கூடிய தீர்க்க தரிசனம் இருக்கும் என்றால், எமது இலங்கை தலைமைகளுக்கு ஏன் 5 வருடத்தினை தீர்க்க தரிசனமாக யோசிக்க முடியாது.

இரண்டு வருட புரிந்துணர்வு உடன்படிக்கை செய்த இரண்டு கட்சிகளும் தற்போது அதில் சில மாற்றங்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் செய்துக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஏற்கனவே தேசிய அரசாங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு இரண்டு கட்சிகளும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாற்றத்தின்படி தேசிய அரசாங்கத்தில் இருந்து எந்த நேரத்திலும் கட்சி ஒன்று விலகிச் செல்ல வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இத்தகைய திடீர் மாற்றமானது கட்டாயம் ஒரு வருடத்திலோ அல்லது சில மாதங்களிலோ அரசாங்கம் களையப்போகும் சாத்தியத்தினையே ஏற்படுத்தப்போகின்றது. இது மிகப்பெரிய தவறாகவே பார்க்கப்படுகின்றது.

அமைச்சரவை நியமனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பலருக்கு எதிராக நீதிமன்றங்களில் ஊழல் தொடர்பான வழக்குகள் காணப்படுகின்றன. ஆனால் அத்தகைய நிலையிலும் அவர்களுக்கு அமைச்சுக்களை வழங்குகின்றைமையானது, அவர்களுக்கு பாதுகாப்பு போர்வையாகவே மாறப்போகின்றை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக பார்க்கின்ற பொழுது தற்போதைய நிலையில் அரசாங்கம் தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் மக்களை இணைத்துக்கொள்வதாக பதிலாக மக்கள் பிரதிநிதிகளை மாத்திரம் இணைத்துக்கொள்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களை திருப்தி செய்கின்ற செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுப்பதாக அறிய முடிகின்றது .

இதன் தாக்கம், எதிர்காலத்தில் எத்தகைய தாக்கங்களை புரியும் என்பதனை அறிய, மக்களுக்கு நீண்டகாலம் எடுக்காது என்பது மட்டும் உறுதி.

திவ்யநாதன்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*