TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அறிக்கையோடுமுடிவடைந்த சுவிஸ் ஒன்றுகூடல்

TamilNational_Sampanthanகார்த்திகை இருள் அகல, தமிழர்கள் விளக்கேற்றும் மாதம். நவீன வரலாற்றில் புதிய பரிமாணத்தைப் புகுத்திய மனிதர்களை நினைவு கூர்ந்து, வீடு தோறும் ஒளி படரும் மாதம்.

தென்னிலங்கை அரசியலில், பல அதிர்வுகளை உருவாக்கும் மாதமும் இதுதான். யாரைத் தெரிவு செய்ய வேண்டுமென்பதை விட, யாரைத் தெரிவு செய்யக் கூடாதென்பதில், தெளிவான பார்வை தமிழ் மக்களுக்கு உண்டு. இதுவரை கிடைத்த செய்திகளின்படி, தமிழ் பேசும் மக்களின் பூரண சுயநிர்ணய உரிமையை ஏற்று, தொடர்ச்சியாகவே அம்மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, போராட்டங்களை நிகழ்த்தி வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். போரை நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் படை அதிகாரிகளின் பிரதானி சரத் பொன்சேகாவும் இத்தேர்தல் களத்தில் இறங்கவுள்ளனர்.

அதேவேளை, அரசியல் போரில் வெற்றி பெறுவதற்கான சகல வியூகங்களையும் இலங்கை ஜனாதிபதி வகுக்கத் தொடங்கி விட்டார். முன்னர் தடுப்பரண்கள் போட்டு மறிக்கப்பட்ட கூட்டமைப்பினருக்கு வவுனியா முகாம் வாசல்கள் திறக்கப்பட்டன. அம்மக்களின் பிரதிநிதிகள், பார்வையாளராக்கப்பட்டனர். செல்வம் அடைக்கலநாதன் (நா. உ. )மீதான கடுமையான விசாரணைகள் அமைதியுற்றன. ஆனாலும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினம் அவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இன்னமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து, ஜனாதிபதியின் கூட்டமைப்போடு, அதில் அங்கம் வகிக்கும் சிலர் ஐக்கியமாகி விடுவார்கள் என்கிற பதற்றம் மக்கள் மத்தியில் எழாமலில்லை.

அதேவேளை, வருகிற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை மையமாகக் கொண்டு, சில அரசியல் காய்நகர்த்தல்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்தேறியுள்ளன. கடந்த 19 ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மூன்று நாள் சந்திப்பில், தமிழ் பேசும் மக்களைக் கொண்ட கட்சிகள் அனைத்தும் பங்குபற்றின. வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு போன்ற பிரதேசங்களில் இயங்கும் சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னெப்பொழுதும் நிகழாத சந்திப்பொன்றில் ஒன்று கூடியமை பல ஆச்சரியங்களைத் தோற்றுவித்தது. அரச தரப்பு, எதிர்க் கட்சிகளின் தரப்பு, தமிழர் தாயகத் தரப்பென்று முக்கோண அரசியல் சக்திகள் ஓரிடத்தில் சந்தித்திருந்தும், ஒஸ்லோ போன்று, சம்பிரதாயபூர்வமான சந்திப்பு அறிக்கையொன்றையே அவர்களால் வெளியிட முடிந்திருக்கிறது.

ஆனாலும் இச்சந்திப்பின் பல ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட்டதாகவும் இத்தகைய சந்திப்புப் பயணங்கள் மேலும் தொடருமென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன் நம்பிக்கை தெரிவிக்கின்றார். இம் மூன்று நாள் சந்திப்பில் நிகழ்ந்த, சில முக்கிய விடயங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. “இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்’, “வருங்காலத் தேர்தல்களில் சிறுபான்மையின மக்களின் பங்கு’ போன்ற தலைப்புக்களில் தொடங்கப்பட்ட கலந்துரையாடல்கள், ஆரம்பிக்கப்பட்டவுடன் நிராகரிக்கப்பட்டு விட்டன. டிசெம்பர் முதலாம் திகதி முதல் முகாம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியுமன்று ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி அறிக்கையும், தேர்தல் திகதி அறிவிக்கப்படும் வரை வருங்காலத் தேர்தல் குறித்துப் பேச முடியாதென்று அரச தரப்பினர் விடுத்த கோரிக்கையும், மேற்குறிப்பிடப்பட்ட நிராகரிப்புக்களுக்கு காரணிகளாக அமைந்துள்ளன.

இறுதியாக, “நீண்டகால திட்டம்’ தொடர்பான கலந்துரையாடல், வருகை தந்த பிரதிநிதிகளை மூன்று குழுக்களாகப் பிரித்து நிகழ்ந்தேறியது. மனோ கணேசன், இரா. சம்பந்தன், ரவூப் ஹக்கீம் போன்றோர் இக்குழுக்களுக்கு தலைமை வகித்தனர். இதில் கலந்துகொண்ட மூன்று குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, தீர்வு குறித்த விடயங்கள், இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு, அறிக்கையாக வெளியிடப்பட்டது. எதிர்க்கட்சித் தரப்பினரான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், ஒற்றுமை குறித்து தமது கலந்துரையாடல்களில் வலியுறுத்தினர். “சுயநிர்ணய உரிமை’ என்கிற சொற்றொடர், இவ்வறிக்கையில் இணைக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அழுத்திக் கூறப்பட்டாலும் அதில் கலந்துகொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர், தமிழ்த் தேசத்திற்கு தனித்துவமான இறைமை உண்டென்பதை வலியுறுத்தி, இது ஒரு சட்டபூர்வமற்ற அரசு என்கிற கருத்து நிலை, அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டுமென தனது அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்தார்.

இந்த இறுதி அறிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஆறுமுகம் தொண்டமானோடு தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கைச்சாத்திடவில்லை. தீர்வின் ஆரம்பப் படிநிலையாக, 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் போதுமென்பதே தேவானந்தா, சந்திரகாந்தன் போன்றோரின் அரசியல் நிலைப்பாடாக இருந்தது. வடகிழக்கு, தமிழரின் தாயகம் என்கிற கதையாடல்கள், காலாவதியாகிப் போன விடயமென்று ஒரு சிலர் பரிகசித்தார்கள். ஆக மொத்தம், இச் சந்திப்பின் பெறுபேறுகள், கூட்டப்பட்டதன் நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. பிராந்திய சக்தி அல்லது மேற்குலகச் சக்தியொன்று இந்த ஒன்றுகூடலின் பின்புலத்தில் செயல்பட்டவர்களென்பதை ஊகிக்க முடிகிறது. இந்தியா முன்னெடுத்த சில நகர்வுகள், அரச தரப்பு பிரநிதிகளின் முறியடிப்பு உத்திகளால் முடக்கப்பட்டதாகவும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும், சில மயக்கமான எதிர்பார்ப்புகளை, இப்பிரமாண்டமான குழுவினரின் சந்திப்பு, புலம்பெயர் மற்றும் தாயக தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கி இருந்தாலும் கூட்டம் முடிவடைந்தவுடன் அக் கனவுகளும் கலைந்து போய் விட்டன. இச்சந்திப்பினை முடித்துக் கொண்டு, லண்டனிற்கு பயணித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அங்குள்ள தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அப்பிரத்தியேக நேர்காணலில் சுவிஸ் சந்திப்பு இனிதே முடிவடைந்து, மேலும் தொடரப் போவதாகத் தெரிவித்திருந்தார். அத்தோடு நேர்காணலை நிகழ்த்தியவர் கேட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த இரா. சம்பந்தன், புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த தமிழீழ அரசு போன்றவை, நடைமுறைச் சாத்தியமற்ற விடயமென்றும், தாம் முன்வைக்கப் போகும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சமஷ்டித் தீர்விற்கு இவை இடையூறாக அமையுமென்றும் காட்டமான விமர்சனமொன்றை அவர் முன்வைத்தார்.

ஆனாலும் இவர்கள் முன்வைக்கப் போகும் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டித் தீர்வானது, சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, நடைமுறைச் சாத்தியமில்லாத விடயமென்பதை சிலர் புரிந்து கொள்ளவில்லை. இந்திய தேசமானது “தமிழீழம்’ அமைவதை விரும்பவில்லையென்று கூறும் இரா. சம்பந்தன், அதே இந்தியாவிடம், சம்பூர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில், அனல் மின் நிலையம் அமைக்கக் கூடாதென அழுத்திக் கூறலாம். விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்து விட்டதாகச் சத்தியம் செய்யும் அரசாங்கம், இன்னமும் உயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருப்பதன் நோக்கமென்ன? அடிக்கடி விஜயம் செய்யும், ஆசிய நாடுகளின் தூதுவர்கள், தமிழர் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடப் போவதாகக் கூறியவாறு, ஆள் அரவமற்ற உயர் பாதுகாப்பு வலயங்களை, சுதந்திர வர்த்தக வலயங்களாக்கும் உள் நோக்கத்தோடு காய்களை நகர்த்துகிறார்களா? இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்குமே இச் சூத்திரம் புரியும்.

கூட்டமைப்பு முன் வைக்கும் தீர்வுப் பொதியை ஆட்சியாளர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் இந்தியாவின் துணையுடன் அதை நிறைவேற்றலாமென்கிற அரசியல் கற்பிதங்கள், நடைமுறைச் சாத்தியமானவைகளல்ல. தமிழர்களின் உரிமைக்காக, இலங்கை அரசை, இந்தியா பகைத்துக் கொள்ளுமென எண்ணுபவர்கள், பிராந்திய அரசியலில் ஏற்படும் விரைவான மாற்றங்களை உணர மறுக்கிறார்களென்கிற முடிவுக்கு வரலாம். ரணில் பிரபா ஒப்பந்த காலத்தில் ஒஸ்லோவில் நடைபெற்ற சந்திப்பில் சமஷ்டித் தீர்வினை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது போன்றதொரு கருத்து நிலைத் தோற்றப்பாட்டினை உருவாக்க, சிலர் முயற்சிக்கின்றார்கள். அரசியல் தீர்வு குறித்த இறுதியான முடிவுடன் கூடிய பிரகடனமொன்று ஒஸ்லோவில் வெளியிடப்படவில்லையென்பதே உண்மையாகும்.

ஒஸ்லோ பிரகடனத்தில் புலிகள் உடன்பட்ட தீர்வினையே, தாமும் முன்வைப்பதாகக் கூறுவதன் ஊடாக, சமஷ்டி என்பது தமது சொந்த முடிவல்லவென்று ஒருவித சுயபாதுகாப்புக் கவசத்தை தம் மீது போர்த்திக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். ஆனாலும் யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஏறத்தாழ 78 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் திணித்த அரைகுறைத் தீர்வினை ஏற்றுக் கொள்ளாதது, அரசியல் தவறென்றும் மிக நாசூக்காக, புலிகளின் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் இரா. சம்பந்தன். இந்தியாவின் பிராந்திய நலனிற்காக ஈழத் தமிழினம் விட்டுக் கொடுத்தது. அது இழந்ததும் ஏராளம். இறுதிப் போரில் ஏற்பட்ட பேரழிவிற்கு பெரும்பங்கினை வகித்தவர்களே, விமோசனத்திற்கும் உதவுவார்களென்கிற சரணாகதி அரசியலால் இன்னமும் இழக்கப் போவது அதிகமென்பதை உணரும் காலம், வெகு தூரத்தில் இல்லை.

-இதயச்சந்திரன்

நன்றி:வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*