TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் மீண்டும் ஆறு வருடங்கள் துன்பம் அனுபவிக்க நேரிடலாம்

mahindaஎதிர்வரும் வருடம் ஒரு பெரும் தேர்தல் போருடன் ஆரம்பமாகப் போகின்றது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை வெளியிட்டதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல அர சியல் காய்நகர்த்தல்கள் தென்னிலங்கையில் நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அறிவித்தலை தொடர்ந்து அவரை எதிர்த்து எதிர்த்தரப்பில் யார் நிற்கப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்திருந்தன. இலங்கைப் படைகளின் பிரதம அதிகாரியாக இருந்து பதவி விலகிய ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிற்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் இருந்த போதும் அதனை அவர் கடந்த வியாழக்கிழமையே உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அறிவித்தலை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார். பொன்சேகாவை பொறுத்தவரையில் அவர் பொதுவேட்பாளராக நிற்பதை தென்னிலங்கையின் பல கட்சிகள் ஆதரிக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க, ஜே.வி.பி, சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் தமது ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ளன. எதிர்வரும் நாட்களில் மேலும் பல சிறிய கட்சிகள் இந்த பட்டியலில் இணைந்து கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்களும் உண்டு. இலங்கை அரசை பொறுத்தவரையில் இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக சாத்தியமான முழு வளங்களையும் பயன்படுத்தக்கூடும். அதேவேளை இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பிரசாரங்களை மேற்கொண்டும் வருகின்றனர். பொன்சேகா தொடர்பில் பல எதிர்ப்பிரசாரங்களை அரச தரப்பு அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இலங்கையின் வரலாற்றில் இராணுவ தளபதிகள் அரச தலைவருடன் போட்டியிட்டதில்லை எனவும், ஜனாதிபதி மஹிந்தவின் தகுதிகளுக்கு பொன்சேகாவின் தகுதிகள் பொருந்தப்போவதில்லை எனவும் இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனா கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார். மைத்திரிபாலவின் இந்த கருத்துக்களுக்கு பொன்சேகா வட்டாரங்கள் உடனடியாகவே பதில் தாக்குதலை கொடுத்துள்ளன. இஸ்ரேலை உதாரணமாக சுட்டிக்காட்டி கொழும்பு இணையத்தளம் ஒன்று 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் அங்கு ஆட்சியில் இருந்த 12 பிரதமர்களில் ஆறுபேர் படை அதிகாரிகள் என்ற வாதத்தை முன்வைத்துள்ளது. ஜெனரல் பொன்சேகா அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடும் என அரசாங்கத் தரப் பின்னர் தெரிவித்த கருத்துக்களையும் இலங்கை சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மறுத்துள்ளார்.

கடந்த நான்கு வருடத்தில் தற்போதைய அரசாங்கம் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திய அவர் 25 இற்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் நிர்வாக துறைகளில் பணியாற்றி வருவதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார். தென்னிலங்கையில் தற்போது தோன்றியுள்ள இந்த ஊடகப்போர் அல்லது பிரசாரப்போர் விரைவில் மேலும் தீவிரமாகுவதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. எனவே எதிர்வரும் வாரங்களில் இரு தரப்பு வேட்பாளர்களுக்கும் இடையில் கடும் போட்டி உண்டு என்பதை மறுக்க முடியாது. இந்த போட்டிகளுக்கு இடையே இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவும் அரச தலைவருக்கான தேர்தலில் குதித்துள்ளார். தற்போது போட்டியிடப் போகும் இரு பெரும் வேட்பாளர்களுக்கு ஈடாக கருணாரட்னவினால் வாக்குகளை பெறமுடியாது போனாலும் அவர் தென்னிலங்கை மக்களின் வாக்குகளில் ஒரு தொகுதி வாக்குகளை பிரித்துவிடலாம் என்ற அச்சங்கள் உருவாகி உள்ளன.

இருந்தபோதும் பொன்சே காவுக்கு ஆதரவான சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை அவர் தன்பக்கம் இழுத்து கொள்ள போகின்றார் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளின் இந்த வாக்கு வேட்டையில் சிதறிப்போகும் வாக்குகளை கொண்ட பிரிவாக தமிழ் மக்களின் வாக்குகள், முஸ்லிம் மக்களின் வாக்குகள், மலையக தமிழ் மக்களின் வாக்குகள் உள்ளன. நடைபெறப்போகும் இந்த தேர்தலில் இந்த வாக்குகள் மிக முக்கிய பங்கை வகிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் தென்னிலங்கையில் யார் அரச தலைவராக பதவியேற்றாலும் அதனால் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பது தான் உண்மை. எனவே நாடாளுமன்ற தேர்தலை போல் இல்லாது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்கான நபரை தெரிவு செய்வது என்பது கடினமானது.

ஆனால் தமது விருப்பு வெறுப்புக்களை அல்லது தண்டணைகளை இதன் மூலம் அவர்கள் தெரிவிக்க முடியும். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் வட,கிழக்கு வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்திருந்தனர். அதற்கான காரணமும் உண்டு. ஏறத்தாழ 73 வீதம் சிங்கள மக்களை கொண்ட ஒரு தேசத்தில் 18 வீத தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் நபர் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுபவராக இருக்க முடியாது என்பதே அதற்கான காரணம். எனினும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறப்போகும் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் எங்கு செல்லப்போகின்றன என்பதை தீர்மானிப்பதற்கு மேலும் சில வாரங்கள் எடுக்கலாம். போரில் ஏற்பட்ட அழிவுகள், இழக்கப்பட்ட உறவுகள், காணாமல் போனவர்கள், ஏற்பட்ட துன்பங்கள் போன்றவை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் அழிந்துவிடப்போவதில்லை.

எனவே வடக்கு , கிழக்கு பகுதிகளில் வாழும் ஏறத்தாழ எட்டு இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகளும், அதற்கு அப்பால் வாழும் பல இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகளும் முக்கியமானவை. ஆனால் அவற்றை ஒருங்கிணைப்பதற்கு மிகவும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் தேவை. குறுகிய கால அரசியல் நலன்கள் மற்றும் தனிநபர் அபிலாசைகளை தவிர்த்து ஒரு நீண்டகால நோக்கில் அதனை ஒருங்கிணைப்பதற்கும் தமிழ் மக்களை சரியான திசையில் வழிநடத்துவதற்கும் தமிழ் சமூகம் ஒன்றுபட்டு முன்வரவேண்டும். இந்த திசையை நோக்கி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களும், பிரதிநிதிகளும் தமது கவனத்தை குவிப்பதற்கு தயாராகி வருகின்றனர். தமிழ் சமூக்தை பொறுத்தவரையில் எதிர்வரும் இரண்டு மாதங்களும் மிகவும் முக்கியமானவை. அதனை தவறவிட்டால் மீண்டும் ஆறுவருடம் துன்பத்திலும், வேதனையிலும் வாழ்வை தொலைக்கவேண்டிய சூழ்நிலைக்குள் எம்மை நாமே தள்ளியதாகவே அமையும்.

-வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி:வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*