TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள்…….

anna“அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை… சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது… “

தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்

சிங்கள அரசைத் தோலுரிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

* தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் – தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டு வந்த, முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களை சுதந்திரமாக வாழவிட வேண்டும் என்று என்ற கோசம் இப்போது வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஒரு பகுதி மக்களை மீளக்குடியமர்த்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதால் தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் முன்னெடுத்து வந்த போராட்டங்களிலும் ஒருவித தொய்வும் தேக்கமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. சிங்கள அரசு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் – தமிழர் தரப்பு அதற்கேற்ப காய்களை நகர்த்த முடியாமல் இருப்பது கண்கூடு.

* போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது – போரை நிறுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த நிர்ப்பந்தம் கொடுக்குமாறு கோரியும் தமிழர் தரப்பால் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. போர் முடிவுக்கு வந்த பின்னர், தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுள்ள மக்களை வெளியே விடுமாறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அரசாங்கம் சுமார் 90 ஆயிரம் வரையான மக்களை யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு போன்ற பகுதிகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளதால் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தும் போராட்டங்களின் வீரியம் குறைந்துள்ளது.

குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும் கோரிக்கைகளை முன்வைத்து நடத்த முற்பட்ட போராட்டங்களால் தான் இந்த நிலை. அதற்காக இவை ஒன்றும் அவசியமற்ற போராட்டங்கள் என்றோ முன்னிலைப்படுத்தத் தேவையில்லாத விடயங்கள் என்றோ கருதி விட முடியாது. ஆனால், தமிழர் தரப்பு அரச எதிர்ப்புப் போராட்டங்களுக்கு குறுகிய காலத்துக்கு மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடிய விடயங்களை மட்டும் நம்பியிருந்தது தான் தவறு.

இன்னும் 1 இலட்சத்து 80 ஆயிரம் வரையானோர் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். ஆனால், அவர்களின் விடுதலையை முன்னிலைப்படுத்தும் போராட்டங்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. ஏனென்றால் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏற்படும் தாமதத்துக்கு அரசாங்கம் கூறும் நியாயங்களை சர்வதேசம் ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்கிறது. கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்ற அரசின் நியாயத்தை உணர்ந்து கொள்வது அவசியம்.

ஏற்கனவே அவலத்தின் உச்சங்களைத் தொட்டு விட்ட மக்களை இன்னும் அதற்குள் தள்ளி விடுவதற்குத் துணை போகக் கூடாது. இலங்கை அரசு இந்த விடயத்தில் கூறும் நியாயங்களை ஓரளவுக்கு சர்வதேசம் புரிந்து கொண்டிக்கிறது. ஆனால், முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாடுகின்ற அடிப்படைச் சுதந்திரத்தையேனும் வழங்குமாறு சர்வதேசம் கேட்டு வருகிறது.

* அதாவது மீள்குடியமர்வுக்கு தாமதம் ஏற்பட்டாலும் சரி, அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இதற்குக் கூட அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் சாதகமான பதிலைக் கொடுக்கலாம். ஏனெனில், அடுத்தடுத்து தேர்தல்கள் வரப் போகின்ற நிலையில் அங்குள்ள மக்களின் வாக்குகளுக்காக எதையும் செய்வதற்கு அரசு தயாராகவே இருக்கிறது. அப்படியொரு நிலை வந்து விட்டால் சிங்கள அரசுக்கு எதிரான தமிழர் தரப்பின் போராட்டங்கள், கோசங்கள் முற்றாகவே வலுவிழந்து போய்விடும்.

அதற்குப் பிறகு எந்த நிலைப்பாட்டை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படப் போகின்றன?

இந்தக் கேள்வி இப்போதே எழுந்திருக்கிறது.

* புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் அவர்களை வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் போராட்டங்கள் சிங்கள அரசுக்கு சவால் மிக்கதாகவே இன்றும் இருந்து வருகிறது. ஆனால், அந்த அச்சத்தைத் தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கு, சிங்கள அரசின் போக்கை – சர்வதேசத்தின் முன்பாகத் தோலுரிப்பதற்கு நாம் என்ன செய்கிறோம் – என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திப்பது அவசியம்.

போர் முடிந்து விட்டது. அரசியல்தீர்வு பற்றிய பேச்சையே காணவில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எவரும் கதைப்பதாகவே தெரியவில்லை. இந்தநிலையில் தான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.

இப்போது முதலையின் வாயில் சிக்கியது போன்ற நிலையில் சிங்கள அரசு சர்வதேச சமூகத்திடம் சிக்கிப் போய் இருக்கிறது. சிங்கள அரசைப் பணிய வைப்பதற்கு சர்வதேச ஆதரவைத் தேடிக் கொள்வதற்கு ஏற்ற தருணம் இதைவிட வேறேதும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

* ஒரு பக்கத்தில் போர்க்குற்ற விசாரணைகள் என்று சிங்கள அரசைத் துரத்துகிறார்கள். மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருளாதார ரீதியான சலுகைகளை இடைநிறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. அரசியல் தீர்வு பற்றி வலியுறுத்துகின்றன. பொருளாதார கட்டுப்பாடுகள் பற்றிப் பேசப்படுகிறது. ஜனநாயகத்துக்கான அடிப்படை அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத – அதன் வழி நடக்காத நாடுகள் தான் இப்போது சிங்கள அரசுக்குச் சாமரம் வீசுகின்றன. மற்றெல்லா நாடுகளும் அதற்கு எதிராகவே நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு தருணத்தில் சிங்கள அரசை போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து, அதை தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதே மிகச் சிறந்த இராஜதந்திரம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு எமக்கு பெற்றுக் கொடுத்த பாடம் இந்த உலகத்தை எமக்கு புரிய வைத்தது.

எனவே, இன்றைய உலக ஒழுங்கை கவனத்திலெடுத்து அரசியல், இராஜதந்திர வழிகளில் அதற்கான முயற்சிகளை எடுப்பதே தமிழர்களின் இலக்குநோக்கிய பாதைக்கு தற்காலிகமாக சிறந்தது.

“அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடு” என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளில் தனியே வன்முறை மட்டும் பொதிந்திருக்கவில்லை.

* உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக என்று பலவழிகளிலும் அவலங்களை தமிழ் மக்கள் சந்தித்து விட்டார்கள். அதே வழியில் தான் நாம் அவர்களுக்கு அவலங்களைப் பரிசளிக்க வேண்டும். இப்போதைய நிலையில் அவலங்களைக் கொடுத்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக, அரசியல ரீதியான அவலங்களை கொடுப்பதே மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும். எம்மை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர்களையும் அப்படியே செய்வதற்கு இது தான் உகந்த வழி. இந்த வழியில் அவர்களைத் தோற்கடிப்பதற்கு நகர்வுகளை மேற்கொள்ளாதிருப்பதோ அல்லது தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அது குறித்துச் சிந்திக்காமல் இருப்பதோ பாரிய பின்னடைவுகளுக்கே வழி கோலும்.

* நீண்டகால நோக்கில் தமிழர் தரப்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கோட்பாட்டு ரீதியான செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

* அரசியல்,அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்களை எப்படி எங்கெங்கு நடத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

* வெறுமனே வாழ்வதற்கான உரிமைகளைக் கொடுங்கள் என்று எத்தனை காலத்துக்குத் தான் கேட்க முடியும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் பகிரங்கமான படுகொலைகள் நின்று போயிருக்கின்றன. இந்தக் கட்டத்தில், இப்படிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து போராட்டங்களை நடத்தி வந்தால் அது காலப்போக்கில் வலுவிழந்து விடும். நிச்சயமாக வெளிப்படையான இனப்படுகொலைகள் இலங்கையில் இனிமேல் நிகழாது. அப்படிப் பார்த்துக் கொள்வார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். ஆனால், வேறு விதமாக தமிழரை நசுக்குவதற்கு திட்டங்கள் தீட்டுவார்கள். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக என்று பல வழிகளிலும் தமிழ்த் தேசிய இனத்தைப் பலவீனப்படுத்த முனைவார்கள். இனப்படுகொலைகளில் ஈடுபட்டால் வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கவே கிடைக்காது. இதனால் அவர்களுக்கு ஒரு முகத்தைக் காண்பித்துக் கொண்டு தமிழருக்கு இன்னொரு முகத்தை காண்பிப்பார்கள்.

சிங்கள அரசுகளின் இத்தகைய போலித்தனத்தை, அரசியல்தீர்வு பற்றிய ஏமாற்றுத்தனத்தை, தமிழருக்கு உரிமைகளை வழங்க மறுக்கும் விடயத்தை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்வதே இன்றைய தேவை.

இனப்படுகொலைகள், கைதுகள், காணாமற் போதல்கள், பொருளாதாரத்தடை என்பன உணர்வு மயமான விடயங்கள். இவை சர்வதேசத்தின் கண்களில் அதிக உறுத்தலை ஏற்படுத்தும். ஆனால், அரசியல் ரீதியான போராட்டங்கள் அப்படி எடுபடாது. எனவே, இனிமேல் இத்தகைய போராட்டங்கள் தான் அவசியப்படும்.
ஏனென்றால் உணர்வு மயமான போராட்டங்களை நடத்தும் காலம் தடுப்பு முகாம்களுடன் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும். இதுபற்றி தெளிவு இல்லாவிட்டால் எந்தவொரு போராட்டத்தினாலும் வெற்றி பெற முடியாது.

* கொடியையும், பதாகையையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு வீதியில் பேரணி செல்வதால் சாதிப்பதற்கு ஏதும் இருக்காது. நியாயமான காரணங்களை நியாயமான வழிகளில் முன்வைப்பது அவசியம். முன்னர் ஒரு காலத்தில் புலிகளைக் காரணம் காட்டி ஒதுங்கியிருந்த நாடுகளால் இப்போது அப்படிச் செய்ய முடியாது.

எனவே, சர்வதேசத் தலையீட்டை உருவாக்கிக் கொள்வதற்கு இப்போதைய தருணமே மிகச் சிறந்தது. சர்வதேசத் தலையீடு தவிர்ந்த வேறெந்த வழிகளிலும் தமிழருக்கு நியாயம் பிறக்காது. இதை உணர்ந்து சாத்தியமானதும் – தமிழருக்குச் சாதகமானதுமான கோரிக்கைளின் ஊடாக போராட்டகளை முன்னெடுக்கத் தயாராக வேண்டும். அதுவே மூன்று தசாப்தப் போரினால் சீரழிந்து போயிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும்.

* போராட்ட வடிவங்கள் மாறலாம் அதுவே அடிப்படை இலட்சியத்துக்கு உரம் சேர்ப்பதாக இருந்தால்;. எனவே, ஒன்றுபடுவோம். ஒருங்கிணைந்து செயற்படுவோம். தெரிந்தோ தெரியாமலோ எம்மை அறியாமல் கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்பாய் மாவீரர் திருவடியில் மன்றாடி மண்டியிட்டு அந்த புனித நாளில் எம் பாவங்களைப் போக்கி பல தலைமுறைத் தமிழர்களின் இதயங்களில் அந்நிய அடக்கு முறை ஆட்சிக்கு எதிரான விடுதலைச் சக்தியாக, சிரஞ்சீவியாக, மரணிக்காது நிலைத்து வாழும் பெருமைக்கு உரியவருமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் மாவீரர் தினமாக 27 நவம்பர் 2009 ல் எம் தேச விடுதலைக்காய் எந்த இடர் வரினும் இலட்சியப் போர் புரிய சபதம் எடுத்துக் கொள்வோம்.

இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை!
விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!

தொல்காப்பியன்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*