TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகிறது…….

Maaveerarநவம்பர் 11. பொதுநலவாய நாடுகளான பெரிய பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளுக்குமான நினைவு நாளாகவும் உள்ளது. இலண்டனில் “மரணித்த மாண்பாளர்கள் (“”The Glorious Dead” ” ) என்ற வாசகங்களைத் தாங்கி நிற்கும் நினைவுத் தூண் உள்ள இடத்தில் நவம்பர் 11 அல்லது அதனை அடுத்த ஞயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது.
கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்க்கு நவம்பர் 27 ஆம்; திகதி;யானது தொடர்ச்சியான தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தம் உயிர்களை ஈந்தவர்களை மதிப்பளித்து நினைவு கொள்ளும் நாளாக உள்ளது. 1982 இல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக மரணமடைந்த புலியான சங்கரின் மரணத்தை குறித்த தினமாக இந்நாள் உள்ளது.

* பல தலைமுறைத் தமிழர்களின் இதயங்களில் அந்நிய அடக்கு முறை ஆட்சிக்கு எதிரான விடுதலைச் சக்தியாக, சிரஞ்சீவியாக, மரணிக்காது நிலைத்து வாழும் பெருமைக்கு உரியவருமான தலைவர் பிரபாகரன் நேரடியாகப் பங்கு பெறாது நடக்கும் முதல் மாவீரர் தினமாக 27 நவம்பர் 2009 அமைகிறது. 2009 நவம்பர் 27 தமிழரின் விடுதலைப் போரின் ஆழ அகலப் பரிமாணங்கள் அதிகரித்தமையின் அடையாளமாக பெப்ரவரி மார்ச் 2009 இல் தீயில் தம்முயிரை ஈந்தவர்களான முத்துக்குமார், இரவிச்சந்திரன், தமிழ் வேந்தன், மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோர் தமிழீழத்தவராக இல்லாது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தமை சுட்டிக் காட்டுகிறது.

அண்மையில் தமிழ் நாட்டில் சீமான் இந்தப் பரிமாண விசாலிப்பை பொருத்தமாக விபரித்திருந்தார்.

உலகம் எங்கும் வாழ்ந்தாலும் நாம் தமிழர்…. நீயும் தமிழன். நானும் தமிழன். ….. தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்….” சீமான் வழங்கிய நேர்காணல், 5 நவம்பர் 2009

சோழரின் புலி இலட்சினையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் உள்ள புலிகள் என்ற சொல்லும் தமிழ் மக்களின் பழைய வரலாற்றிலிருந்து பிரபாகரன் தாம் தொடக்கிய இயக்கத்துக்கு பெற்றுக் கொண்டவை. இந்தத் தொடக்க வேர் இன்று கடல் கடந்த நாடுகளில் அரசு இல்லாது வாழும் இனமாக உள்ள தமிழ் மக்களின் இதயங்களைத் தொட்டுத் தழுவி நிற்கிறது.

கடந்த பல வருடங்களாக தமிழீழத்தையும் தமிழ் நாட்டையும் பூர்வீக தாயகமாகக் கொண்ட தமிழ் மக்கள் இன்று அவுஸ்திரேலியா, ஆந்திரப் பிரதேசம், பாஃரெயின், பொற்ஸ்வானா, கனடா, டெல்கி, டென்மார்க், ஈழம், பீஜி, பின்லாந்து, பிரான்சு, யேர்மனி, கவுடலோப் மாட்டினெக், ஹொங்கொங், இந்தோனேசியா, இத்தாலி, கர்நாடகா, கேரளா, குவைத், மகாராஷ்டிரா, மலேசியா, மணிப்பூர், மொரீஷியஸ், மியன்மார், நெதர்லாந்து, புதிய கலிடோனியா- தஹித்தி, நியூசீலாந்து, நோர்வே, கட்டார், றெயூனியன், சவூதி அரேபியா, சேசெல்ஸ், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, சுவீடன், சுவிற்சர்லாந்து, தமிழ்நாடு, திரிநிடாட், ஐக்கிய அரபுக் குடியரசு, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள், எனப் பரந்து எங்கும் வாழும் அனைவரும் மாவீரர் நாளில் ஒன்றுகூடி விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈந்த சகோதர சகோதரிகளை நினைவு கூர்ந்து மதிப்பளிப்பர்.

* “ஒரு தேசம் என்பது வாழ்பவர்கள், இறந்தவர்கள், இனிப் பிறக்கப் போகிறவர்கள் என்பவர்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும்.“

எட்மன்ட் பர்க்

“வேலுப் பிள்ளை பிரபாகரனால் வழிநடத்தப்பட்ட வீரம் செறிந்த ஆயுத விடுதலைப் போராட்டம், அதற்கு விடைபகரும் முகமாக உலகெங்கும் இடம் பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள், மாவீரர் நாட்கள்: 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ் நாட்டில் சுவாமிநாத ஐயரும் ஈழத்தில் தாமோதரம்பிள்ளையும் தொடக்கி வைத்த தமிழர் பண்பாட்டு விழிப்பெழுச்சி: 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரியாரும் சீ.என். அண்ணாத்துரையும் முன்னெடுத்த திராவிடத் தமிழ் தேசிய அமைப்பு: ஈழத்தின் வண. பிதா தனிநாயகம் அவர்களின் பிரமாண்டமான சாதனையான சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ் ஆய்வுகள்: இவையெல்லாம் பெருக்கெடுத்து ஓடும் ஒரு பேராற்றின் சிற்றாறுகளாகும். 80 கோடி தமிழ் மக்களின் ஒன்றிணைவில் பெருக்கெடுக்கும் இந்த ஆறு பின்னோக்கிப் பாயப் போவதில்லை. “

மக்களை இரை கொள்ளத் தக்க வகையில் சிறு கூறுகளாக்கி ஆட்சி செய்வது மிக இலகுவானது என்பதை வெற்றி கொள்பவர் விரும்புவார்கள் என்ற விடயம் ஆச்சரியமானது அல்ல.

* சிங்கள சிறி லங்கா அரசு ஈழத் தமிழ் மக்களை கொழும்புத் தமிழர், பெருந் தோட்டத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், திருகோணமலைத் தமிழர், வன்னித் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் எனப் பிரிக்க முற்படுகிறது. இந்தியாவின் புது டில்லி அரசு, ஈழத் தமிழரை கர்நாடகத் தமிழரில் இருந்தும்;, பம்பாய்த் தமிழரில் இருந்தும், தமிழ் நாட்டுத் தமிழரில் இருந்தும், கேரளத் தமிழரில் இருந்தும், ஆந்திரத் தமிழரில் இருந்தும், மணிப்பூர் தமிழரில் இருந்தும் இப்படியே வேறுபடுத்திப் பார்க்கிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது கேந்திர நலன்களைக் கவனத்தில் கொண்டு மேற்குலக அரசுகள் ஈழத் தமிழர் தமது சகோதர சகோரிகளான இந்திய உபகண்டத்துத் தமிழரிடமிருந்து வேறுபட்டுப் போவதை ஊக்குவித்து வருகின்றன. ஏனென்றால், ஒரு பிளவுபடாத தமிழ்த் தேசியம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவடைந்து விடும் என்பதை இவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

எனவே, புது டில்லி அரசம் மேற்குலக அரசுகளும் தமிழ் மக்களை அடிமைகளாக, நீதிக்கும் சுதந்திரத்துக்கும் இறைஞ்சுபவர்களாக வைத்திருக்கவே ஊக்கப் படுத்துவர். ஏனெனில், புது டில்லியும் மேற்கு உலகும் சிறி லங்கா அரசிடம் தமது பிராந்திய நலன்களை வலியுறுத்திப் பெறத் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் தமிழ்க் கூலிகள் ஒரு பயன்மிக்க பலமான ஆயுதமாக இருப்பர் என்பதாலேயே.

புது டில்லியும் மேற்குலக அரசுகளும் தமிழர் போராட்டத்தில் அக்கறையும் ஆதரவும் காட்டி அதன் மூலம் ஒரு வழியில் வளர வைத்துப் பின் அந்த வழியில் பயன்படுத்துவது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்த நோக்கத்தை அடைவதில் இந்த அரசுகள் தமிழ் தேசிய இயக்கம் தனது மக்களுக்கு இடையே பலம் பெற்றுவிடாது தடை செய்வதில் எல்லாக் காலத்திலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்.

பேரரசுகள் பங்காளிகளை இணைத்துக் கொள்வதில்லை. சில உதாரணங்களாக அண்மைக் காலத்தில் கொசோவோ – வட அத்லாந்திக் கூட்டமைப்பின் கட்டளைத் தளம், கிழக்குத் தீமோர் – அவுஸ்திரேலிய படைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். பேரரசுகள் குடியேற்ற நாடுகளையே உருவாக்கும். முன்னர் பிரித்தானியப் பேரரசைப் பொறுத்த வரை இதுவே உண்மை. இந்தியப் பேரரசின் இன்றைய செயற்பாடும் உண்மையில் அத்தகையதே.

* தமிழருக்கான உண்மையான தலைமை ஆங்கிலத்தில் தமக்கிடையே உரையாடும் தமிழரிடம் இருந்து வரமுடியாது என்பதை புது டில்லியும் மேற்குலக அரசுகளும் நன்றே தெரிந்து வைத்துக் கொண்டுள்ளன. தாம் வாழும் நாட்டு அரசுகளுடன் நல்லெண்ணத்தைப் பேணுவதையே தொழிலாகக் கொண்ட பகுதி நேர அரசியல் வாதிகளிடம் இருந்தும் வரமுடியாது என்பதையும் அவர்கள் அறிவர். அத்தகைய தலைமைக்கு ஆழமான வேரும் இல்லாத காரணத்தால் தெரிந்தோ தெரியாமலோ இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அக்கறையுள்ள சர்வதேச சக்திகளின் அல்லது அவற்றின் கையாட்களின் கரங்களில் வெகு சுலபமாக விருப்பமுடன் செயற்படும் கருவிகளாக மாறிவிடுவர். அதன் காரணமாகவே அவர்கள் வேரற்ற தலைமை உருவாவதையே ஊக்குவிப்பர். எல்லா விதத்திலும் விடுதலை அமைப்புகளுக்குள்ளே உட் பூசல் மூலம் சிதறடிப்பது எதுவும் புதுமையானது அல்ல.

ஈரானின் ஷா ஒருமுறை இப்படிக் கூறினார். ”அந்தப்பகுதியில் இருந்த புரட்சியை முறியடிக்க ஆயுதப் படைகளின் தலைவன் என்ற அடிப்படையில் இரண்டு உத்திகளைப் பயன் படுத்தினேன். முதலாவது நேரடித் தலையீடு. இது 1973 இல் ஓமான் விடயத்திலும் பின்னர் பலுசிஸ்தான் விடயத்தில் இராணுவத் தளபாடம், நிதி உதவி என்பவற்றை பாகிஸ்தானுக்கு வழங்கியும் அரசின் அடக்கு முறைக்கு உதவினார். இரண்டாவதாக தேசிய விடுதலை அமைப்புகளுக்குள்ளே உட்சதிகளை உருவாக்குவது. அதன் ஒரு அங்கமாக அமைப்புகளைக் குறித்த வழியில் வளர விடடு அவற்றைத் தோல்வியுறச் செய்வது. குர்திஸ்தான் அமைப்பின் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குர்திஸ்தான் விடயத்தில் ஒப்பீட்டளவில் செலவு குறைந்ததாக இருந்தது எனச் ஷா பகிரங்கமாகவே கூறினார். “30 மில்லியன் டொலருடன் வேலை முடிந்து விட்டது. குர்திஸ்தானை அழிந்து போவதற்கு வெறுமனே உதவியதுதான் அவரது வேலை.” ( பலுசிஸ்தான் மக்கள் விடுதலை முன்னணியின் முராட் கான் நேர்காணலின் போது கூறியது)

* “அமெரிக்க அதிபர் கலாநிதி கீஸிங்கரும் வெளிநாட்டுத் தலைவரும் (ஷா) எமது கையாட்களான (குர்திஷ்) நீடித்து நிலைக்க மாட்டார்கள் என நம்பினர். எனினும் புரட்சியாளர்கள் (குர்திஸ்) எதிரிகளின் (ஈராக்கின்) வளங்கள் குன்றும் வரைக்கும் தமது பகைமையைத் தொடரவேண்டும் என்பதையே அவர்கள் விரும்பினர். இந்த நோக்கம் எமது கையாட்களுக்கு (குர்திஸ்) புகட்டப்படவில்லை. அவர்களின் போராட்டத்தைத் தொடரவே ஊக்குவிக்கப் பட்டனர். கபடத்தனத்திலும் எமது செயற்பாடு கீழ்த்தரமானது.” இப்படி அமெரிக்க மக்களவைப் புலனாய்வுத் தெரிவுக் குழு தெரிவிக்கிறது.

8000 இறத்தல் எடையுள்ள பெரிய மனிதக் குரங்குடன் நடனம் ஆடுபவர்களுக்கு அந்த அனுபவம் பரவசம் ஊட்டலாம், ஆனால், முடிவு என்னவோ வழமையாக ஏலவே தீர்மானிக்கப் பட்ட ஒன்றுதான். நாடுகடந்த திபெத்திய அரசின் (நிரந்தரமான) கதியும் கருத்தில் கொள்ளக் கூடிய ஒன்று. உருவாக்கப்பட்டு 50 வருடங்களாகிய பின்னரும், அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் நிதிப்பலம் உள்ள நிலையிலும் சீன ஆளுகையிலிருந்து திபெத்தினால் விடுதலை நோக்கி நகரமுடியாது இருக்கிறது. ஆயினும் சீனாவை அவ்வப்போது மனித உரிமை மீறல் குறித்து அடிக்க அமெரிக்க அரசுக்கு நாடு கடந்த திபெத்திய அரசு ஒரு சிறந்த ஆயுதமாகப் பயன்படுகிறது.

அதேவேளையில் திபெத்தில் சீன அரசு சீன மக்களைக் குடியமர்த்தி மக்கள் பரம்பலை பாரிய அளவில் மாற்றிவிட்டது. நாடு கடந்த திபெத்திய அரசு (திபெத்திய புலம்பெயர் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் உள்ள நிலையிலும்) திபெத்திய மக்களுக்கான நீதி கேட்கும் இணையத்தளங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கூட இவை நடந்துள்ளன. திபெத்திய இணையத் தளங்களுக்குப் பஞ்சம் இல்லை. திபெத்தின் நாடு கடந்த அரசு, திபெத்தின் மத்திய நிர்வாகம், நாடுகடந்த திபெத்திய பாராளுமன்றம், நாடு கடந்த திபெத்திய அரசின் இலண்டன் அலுவலகம், திபெத்தின் நியூயோர்க் அலுவலகம், திபெத்தின் பிரிட்டோரிய அலுவலகம் என இன்னும் பல. இதில் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ரஸ்ய மற்றும் பிரித்தானியச் பேரரசுகள் உடைந்தது போன்று சீனப் பேரரசும் சிதறிப்போகும் வரைக்கும் திபெத் விடுதலை பெற முடியாது. இந்தியப் பேரரசும் ஏனைய பேரரசுகள் போல் போகும் வரை தமிழ்த் தேசியத்துக்குச் சுதந்திரம் கிடையாது எனத் தமிழர்களும் அதிக அளவில் இப்போது எண்ணத் தலைப் பட்டுவிட்டார்;கள். அதாவது புதுடில்லி ஏனைய சமத்துவமான சுதந்திர அரசுகளை ஏற்று அங்கீகரித்துப் புது வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதான் மூலம் மட்டுமே இந்திய ஒருமைப்பாடு நிலைக்கும் என ஏற்க வேண்டும். இந்தியா தானாக வெடித்துச் சிதறாது இருக்க வேண்டும் என்றால் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நடைமுறை ஒரு சிறந்த எண்ணக்கருவாக அமையும்.

* அமெரிக்க உட்துறை திணைக்களம் அமெரிக்க குடி உரிமை பெற்றிருந்த இலங்கையின் இராணுவக் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகாவை போர்க் குற்றம் பற்றி விசாரிக்க அழைத்தமையைப் பெரிதாக ஆரவாரித்து நன்றி தெரிவிக்கும் செய்திகளை அனுப்பிய தமிழருக்கு இப்போது உண்மை தெரிந்து கண் திறந்திருக்கும் என நம்பலாம். பொன்சேகாவை விட்டுவிட்டு கோத்தபாயவை குறிவைத்தமை அமெரிக்காவின்; உள் நோக்கங்களை காட்டுகிறது.
இவை இலங்கையின் போர் குற்றங்கள் பற்றியோ அல்லது மனித உரிமை மீறல்கள் பற்றியோ சிறிதும் தொடர்பு பட்டிருக்கவில்லை. மாறாக ராஜபக்ச அரசின் அமெரிக்க எதிரிகளுடன் குறிப்பாகச் சீனாவுடன் உள்ள அரசியல் தொடர்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கான அழுத்தமே அதன் நோக்கமாகும். ” முன்னர் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியே அமெரிக்காவுடன் மிக இணைந்து செயற்படுவதில் பெயர் பெற்றிருந்தது.

இந்தியா சுதந்திம் அடைவதற்கு 14 வருடங்களுக்கு முன்பே 1933 இல் இலண்டன் பிறையர் மண்டபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மிகச் சரியாக இப்படிக் கூறினார்-

* “.. ஒவ்வொரு பெரிய செயற்பாடும் மிகச் சிறிய அளவில் தொடங்குகின்றன. எமது முதற்பணி அதிக பட்ச தியாகங்களையும் துயரங்களையும் தாங்குவதற்குத் தயாராக உள்ள தேவையான அளவு ஆண்களையும் பெண்களையும் எமது அமைப்புடன் இணைத்துக் கொள்வதே. அவர்கள் முழு நேரமும் செயற்பட வேண்டும். தோல்விகளால் துவண்டு போகாமலும் எவ்வித இடராலும் முடக்கப்படாமலும் சுதந்திர வெறியுடன் தமது வாழ்வின் கடைசி நாள்வரை உழைக்க உறுதி கொள்ள வேண்டும்…இப்படி ஒழுக்கப் படுத்தப்பட்ட ஆண்களும் பெண்களும்…வேற்று நாடுகள் காலங்களில் எப்படிப் பேரரசுகள் தோன்றி மறைந்தன என்பவை பற்றிய அறிவுபூர்வமான படிப்பைப் பெறவேண்டும். இத்தகைய அறிவுடன் இந்தியாவில் உள்ள பிரித்தானியப் பேரரசின் இந்திய மக்களுடனான தொடர்பில் உள்ள பலமானதும் பலவீனமானதுமான விடயங்களை அறிவு பூர்வமாக ஆராய வேண்டும்.”

ஏனைய காலங்களில் ஏனைய தேசங்களில் நிகழ்ந்த பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய நுணுக்கமான ஆய்வின் தேவை பற்றிய சுபாஷ் சந்திர போஸின் கருத்துக்கள் மிகச் சரியானவையே. இரண்டாவது உலகப் போர் இல்லாது விட்டால் இந்தியாவின் விடுதலை நிகழ்ந்திருக்காது. ஆனால் இரண்டாவது உலகப் போர் சுபாஷ் சந்திர போஸின் முயற்சியால் நிகழவில்லை.. ..

* அது சுதந்திரப் போராட்டத்துக்கான “புறச் சூழல்“. எமது சொந்தக் குறைபாடுகள் பற்றிய விமர்சனப் பார்வையும் முக்கியமானது என்ற அவரது கூற்றும் சரியானதே. .அது விடுதலைப் போராட்டத்துக்கான “அகச் சூழல்”. புறமும் அகமும் எப்போதும் இணைந்தே செல்லும். இரண்டுக்கும் இடையே உள்ள உறவும் உள்ளார்த்தமானதே அல்லாது வெளிப்படையானதல்ல. எப்போதும் இயங்கு நிலையில் உள்ளதே அல்லாது அசைவற்று நிற்காதது. எனவே, நமக்கு அகமும் புறமும் கவனிக்க வேண்டிய தேவை என்பது ஆச்சரியமான விடயம் அல்ல. தமிழ் மக்களிடையே உள்ள பிரிவினைகள் வெறுமனே புறச் சக்திகளின் திட்டமிடலால் மட்டும் என்றுவிட முடியாது. எமக்குள்ளும் பிரபுத்துவ சமூகத்தின் எச்சங்களான சாதிய முறை அமைப்பு தொடர்ந்தும் பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறது.

* “தமிழ்த் தேசியம் ஒரு அரசியல் சமூகம், மாபெரும் ஒருங்கிணைப்பு. ஒருங்கிணைப்பை நிலைக்கச் செய்ய உறுப்பினர்க்கிடையே பிரிவுகளையும் பேதங்களையும் ஏற்படுத்தும் எல்லாவகையான காரணிகளையும் தமிழ்த் தேசியம் களைந்து எடுக்க வேண்டும். சாதிய அமைப்பு முறையானது எம்மினத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நாசப்படுத்தும் ஓரு கொடிய முறை”.

(தமிழ்த் தேசியம் பற்றி எஸ்.எம் லிங்கம், சாதி அமைப்பு பற்றி சுவாமி விவேகானந்தர் மற்றும் சாது கபீர்.) ஆனால் எம்மை பிரிப்பது சாதிப் பிரிவினைகள் மட்டும் அல்ல இனப் பிரிவினையும் கூட இருக்கிறது. ஹிட்லரின் ஆரிய இனத் தத்துவம் இனவாதம் என்றால் திராவிட இனத் தத்துவமும் அத்தகையதே. திராவிடன் என்பது ஒரு மொழிக் குழுவினரைக் குறிப்பிடுகிறதே அல்லாது இனத்தைக் குறிப்பது அல்ல. தமிழர் என்றால் நாம் ஒரு மக்கள் இனம் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். ஒரு இனம் என்பது மரபணு முறையாக தலைமுறைகளுக்குள் கடத்தப்படும் உடல் வேறுபாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு தமிழர் ஒரு தேசிய இனம். ஒரு தேசியம் என்பது மற்றைய சமுதாயத்துடன் வேறுபாடுகள் எதிர்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியாக இணைந்து வாழும் மக்கள் சமுதாயம் ஆகும். இது இயற்கையானதோ உருவாக்கப்படுவதோ இல்லை. ஆனால் இதில் இரண்டும் உள்ளது. ஓரு தேசியமானது பொதுவான பாரம்பரியம், மொழி பண்பாடு என்பவற்றால் பிணைக்கப் பட்டு சமத்துவம் சுதந்திரம் கொண்டு வாழ்வதற்கான அரசியல் ஒன்றிணைவு.

தேசியத்தையும் இனத்தையும் ஒன்றாகக் குழப்பி மக்களை இயக்குவது தமிழ் தேசியத்தின் வளர்ச்சியைத் தடைசெய்து தமிழ் மக்களை ஒரு திராவிட இனவாதிகளாக்கி முடக்கப்பட்ட நிலைக்குள் தள்ளிவிடும். தமிழர் என்ற அடையாளம் ஒரு மதம் சார்ந்த அடையாளமும் அல்ல. அது ஒரு மதச் சார்பற்ற அடையாளம். தமிழ் தேசியம் இந்துக்களை (சைவர்கள் வைஷ்ணவர்கள் என்ற இரண்டும்) மட்டும் உள்ளடக்கவில்லை:, மாறாக பல்வேறுபட்ட நம்பிக்கையாளரையும் உள்ளடக்குவதாகும். கிறிஸ்தவ தமிழரும் தமிழர்களே. பிராமணத் தமிழரும் தமிழரே. தலித் தமிழர், அவர்களில் சிலர் பௌத்தர்களாகவும் இருந்தாலும் அவர்களும் தமிழர்களின் ஒரு பகுதியினரே. தமிழ் தேசியம் தனக்குள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களையும் உலகாயவாதிகளையும் கொண்டுள்ளது- ஒரு தேசியம் என்பது ஆழமானதும் சமுதாயத்தின் பிரிவுகளை ஊடறுத்தும் நிற்கும் விசாலமானதுமான பிணைப்பாகும்.

* “ ஒரு தேசியம் ஒரு சமுதாயமாகக் கற்பனை செய்யப்படுகிறது. அங்கே உண்மையில் சமத்துவம் அற்ற நிலையும் சுரண்டலும் ஒவ்வொருவரிலும் காணப்படினும் தேசியம் என்பது எப்போதும் ஆழமான சமாந்தர தோழமை கொண்டுள்ளதாக உருவகிக்கப் படுகிறது. இத்தகைய சகோதரத்துவமானது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பல கோடி மக்களைக் கொலை செய்வதில் ஈடுபடாது இவை போன்ற வரையறுக்கப் பட்ட கற்பனைகளுக்காகத் தமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விரும்பச் செய்துள்ளது”-

பெனடிக் அன்டர்சன்

தமிழர் தேசியம் பரவலான ஒருமைப்பாடு. வளர்ந்து வரும் ஒருமைப்பாடாகவும் இருக்கிறது.

“கடல் கடந்து பல நாடுகளில் வாழும் 80 கோடித் தமிழ் மக்கள் பொதுவான பாரம்பரியத்திலும், ஒரு வளம் மிக்க மொழியிலும் இலக்கியத்திலும் துடிப்பான பண்பாட்டிலும்: தமிழீழ மக்களின் அந்நிய சிங்கள ஆட்சியின் அடக்கு முறைக்கு எதிரான வீரமிக்க போராட்டத்தால் வளர்ந்து வேரூன்றிய ஒன்றித்த உறவிலும் வளர்ந்து வருகிறது. மின்னியல் புரட்;சியால் உந்தப்பட்ட நிலையில் சமத்துவமாக சுதந்திரமாக அமைதியாய் வாழும் உறுதியுடன் இலக்கு நோக்கிய ஒற்றுமை வளர்ச்சி பெறுகிறது. தமது சக உறவுகளுக்கு எதிர்பார்க்கும் அர்த்தம் நிறைந்த உலகமொன்று சடத்திலிருந்து உருவாகும்…”

இத்தகைய இந்தத் தமிழ்த் தேசியம்தான் 2009 மாவீரர் நாளில் தமது உறவுகள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களுக்காகத் தம்முயிரை ஈகம் செய்த தமிழருக்காகத் தலை வணங்கி நிற்கும். ஆம், எங்கே எவர் வாழ்ந்தாலும் கௌரவத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்காக அவர்கள் தம்மை ஈந்தவர்கள். தமிழில் நாம் இதனைத் தன்மானம் என்போம்…

இங்கே நாம் கூற விரும்புவது தமிழர் தேசியம் தன் வீரர்களைப் பெருமைப் படுத்த முற்படுகிறது என்பதை அல்ல. பெருமைப் படுத்துவது என்பது பெரிது படுத்திப் புகழுவதாகும். தமிழ்த் தேசியம் பெரிது படுத்தவோ புகழவோ முற்படவில்லை. ஆனால் நாம் எமது தேசிய வீரர்களை நினைத்து மதிப்பளித்து அழ முற்படுகிறோம்;: நன்றியோடு நினைவுகூர, பணிவோடு மதிப்பளிக்க, நினைத்து எம் மன ஆழத்தில் அழுதுவிட விரும்புகிறோம். அதே நேரத்தில் எமது சகோதர சகோதரிகள் எந்த நீதிக்கும் சுதந்திரத்துக்குமாகத் தமது உயிர்களைக் கொடுத்தார்களோ அவற்றுக்காக நாமும் எம்மை மீளவும் அர்ப்பணிக்க விரும்புகிறோம். உயிரைக் கொடுத்தவர்கள் வீணுக்காய் இறந்தவர்களாகி விடக்கூடாது.

* “தேசிய நினைவுகளைப் பொறுத்தவரை துயரங்கள் வெற்றிகளை விடவும் பெறுமதி மிக்கவை, ஏனென்றால் அவை எமக்குக் கடமைகளை நினைவூட்டுவதோடு ஒரு பொது எத்தனத்தின் தேவையை ஏற்படுத்துகிறது. எனவே ஒரு தேசியத்துக்குத் தேவையாக பரந்த அளவிலான ஒற்றுமையும் கடந்த காலத்தில் ஒருவர் செய்த தியாகத்தையும் எதிர்காலத்தில் ஒருவர் செய்யத் தயாராக உள்ள தியாகம் பற்றிய உணர்வுகளின் கூட்டாகவும் இருக்கும்.”
ஏர்னஸ்ட் ரெனன்

நடேசன் சத்தியேந்திரா

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*