இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் நேரத்தில் 47 சதவிகிதத்தை வாட்சப் ,ஸ்கைப், மெயில் போன்ற தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்வதில் செலவழிப்பதாக சுவீடனை சேர்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் எரிக்சன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் உள்ள நவீன தகவல் தொடர்பு வசதிகள் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் மொபைல் இணையதள சேவைக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகவும் எரிக்சன் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துவோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 7,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் 30 சதவீத நேரத்தை தகவல் தொடர்பு செயலிகளில் செலவிடுகிறார்கள். வீடியோக்கள் பார்ப்பதற்கு வெறும் 20 சதவீதத்தை மட்டுமே செலவிடுவதும் தெரியவந்துள்ளது.
