TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்று நேற்று நாளை – விமர்சனம்!

ninதமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட திரைப்படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லாவிட்டாலும், தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி என்று உறுதியாக சொல்லக்கூடிய விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது இன்று நேற்று நாளை திரைப்படம். சி.வி.குமார் தயாரித்த படமா? அப்ப நம்பிக்கையுடன் பார்க்கலாம் என்ற நம்பகத்தன்மையை மேலும் வளர்த்திருக்கிறது இன்று நேற்று நாளை.

ஒளியின் வேகத்தைவிட அதிவேகமாக பயணித்து இறந்தகாலத்திற்கும், எதிர்காலத்திற்கும் செல்லக்கூடிய கால இயந்திரம் ஒன்றை 2065-ல் உருவாக்கிறார் விஞ்ஞானி ஆர்யா. அதை பரிசோதித்து பார்க்கும்போது அந்த இயந்திரம் 2015-க்கு சென்றுவிட்டு திரும்ப வராமல் போகிறது. சொந்தமாக தொழில் செய்து பணக்காரனாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் விஷ்ணு எடுக்கும் முயற்சிகளெல்லாம் தோல்வியடையில் முடிகிறது. இப்படி வேலைக்கு போகாமல் இருந்தால் கண்டிப்பாக என்னை மறந்துவிட வேண்டும் என்கிறாள் மிகப்பெரிய தொழிலதிபரான ஜெயபிரகாஷின் மகள் மியா ஜார்ஜ்.

சுண்டல் விக்குற காதலுக்காக கொள்கையை தளர்த்தி வேலைக்குப் போக முடிவெடுக்கும் விஷ்ணுவிடம் கிடைக்கிறது காலம் தாண்டி வந்த அந்த இயந்திரம். மியா ஜார்ஜின் தந்தை ஜெயபிரகாஷை மிரட்டி நிலம் கையகப்படுத்தும் ரௌடியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளுகிறது போலிஸ். கால இயந்திரத்தை வைத்து சம்பாதிக்க காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருவதாக கூறி விளம்பரம் செய்கிறார்கள் விஷ்வும் ஜோதிட நண்பனான கருணாகரனும்.

கருணாகரனிடம் மக்கள் தொலைந்து போன பொருள் பற்றி தகவல் தர இயந்திரத்தின் உதவியால் கடந்த காலத்திற்குச் சென்று காணாமல் போன பொருளைப் பற்றி அறிந்து சொல்கிறார் விஷ்ணு. இப்படி இறந்தகாலம் செல்லும்போது இவர்கள் செய்யும் ஏதோ ஒரு தவறினால் அந்த ரௌடி என்கவிண்டரில் இருந்து தப்பித்துவிடுகிறான். தன்னைக் கொல்ல நினைத்த ஜெயபிரகாஷ் குடும்பத்தை அழிக்கவும் முயற்சி செய்கிறான். கால இயந்திரத்தின் உதவியுடன் விஷ்ணு இதை எப்படி தடுக்கிறார்? வில்லனை எப்படி அழிக்கிறார்? காதலியை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதெல்லாம் பரபரப்பான க்ளைமாக்ஸ்.

குறைவான கதாபாத்திரங்கள் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கின்றன. எப்போதும் பரபரப்பான கதாபாத்திரத்தில் விஷ்ணு கொஞ்சம் மெனக்கெட்டு நடித்திருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார். மியா ஜார்ஜ் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பினாலும், குறும்புத் தனங்களினாலும் மனதில் பதிகிறார். கருணாகரனின் எக்ஸ்பிரஷன்கள் தான் படம் முழுக்க பட்டய கிளப்புகின்றன.

Hip Hop ஆதியின் இசையில் பாடல்கள் நார்மலாக இருந்தாலும், ஒளிப்பதிவின் உதவியால் பாடல்காட்சிகள் பொருமையை சோதிக்கவில்லை. ஒளிப்பதிவாளர் வசந்த் நிச்சயமாக பாராட்டப்படவேண்டியவர். கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்கும் படத்தில் ஒளிப்பதிவாளருக்குத் தான் அதிக மெனக்கெடல் தேவை. தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் வசந்த்.

அதிகம் குழப்பாமல், டுவிஸ்ட் என்ற பெயரில் அதிகம் சோதிக்காமல் ரொம்பவே சிம்பிளாக கதையை சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் வரும் காட்சிக்கும், இரண்டாம் பாதியில் வரும் காட்சிக்கும் உள்ள தொடர்பையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டத்தக்கது. படம் முடிந்து வெளியே வரும்போது ‘நம்ம கைலயும் ஒரு டைம் மிஷின் கிடைச்சா எப்படி இருக்கும்’ என்ற ஒரு கற்பனையை மனதில் ஏற்படுத்துவது தான் இயக்குனரின் வெற்றி. முதல் படத்திலேயே புதுமுயற்சியின் மூலம் அங்கீகாரம் பெறும் ரவிகுமார் போன்ற இயக்குனர்கள் வரும்காலங்களில் தமிழ் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்வார்கள் என நம்புவோம்.

இன்று நேற்று நாளை – ஆச்சர்யம்! அதிசயம்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Movie Review

Your email address will not be published. Required fields are marked *

*