TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசதலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் கொள்கை பிரகடனம் என்ன?

அரசதலைவர் தேர்தல்சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் வாசலுக்கு வந்துள்ளநிலையில், இந்த அரசிற்களத்தில் புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவிற்கு பின் உள்ள அரசியல் நிலைமையினை கையாள்வது எவ்வாறு என்பதே இன்று தமிழ்மக்களுக்குள்ள மிகவும் முக்கியமான விடயம். இதற்கு, தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து பொது அரசியல் தீர்மானத்தை எட்டுதல் வேண்டும். எடுக்கப்படும் அரசியல் தீர்மானம் மக்களின் கருத்துக்கணிப்பிற்கு விடப்பட்டு, பொதுத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம், தமிழ்மக்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்திக் திருப்திகரமான அரசியல் உரிமைகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கவேண்டும்.

முக்கியமாக ராஐபக்ச குடும்பத்தை மனித உரிமை மீறல் விசாரணைக்கு முன்னிலைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு ஆட்சியிலிருந்து அகற்றுதல் வேண்டும். இதனூடாக தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மேலும் சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தி சர்வதேச ஆதரவை பலப்படுத்த வேண்டும். அத்துடன் கருணா, டக்ளஸ் போன்ற தமிழின தேசியத்திற்கு எதிராக செயற்படுபவர்களை அரசியல் ஏதிலிகளாக்குவதன் மூலம் தேசியத்திற்கான குரலை வலுப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம், தமிழ்மக்கள் தமது ஒன்றுபட்ட கோட்பாட்டிலான வாக்குகளின் மூலம் சாதித்துக் கொள்ள முடியும். இதற்கு, தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தக்கொள்ள தீர்மானிப்பவரிடம் பெறவேண்டிய வாக்குறுதிகள் எவை?

• இணைந்த வடக்கு கிழக்கு தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளல்.
• தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் சிங்களக் குடியேற்றங்களைகளை நிறுத்துதல்
• அகதிகள் மீள்குடியேற்றம்
• உயர்பாதுகாப்பு வலயங்களின் மக்கள் மீள்குடியேற்றம்
• போராளிகளக்கான பொதுமன்னிப்பு
• கைதுசெய்யப்பட்டுக் காரணமின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் விடுதலை
• சுதந்திரமான மக்களின் நடமாட்டம்

வாங்குவங்கியினூடாக அடையக்கூடிய விடயங்களை அடிப்படையாக வைத்து ஒன்றிணைந்து குரல் கொடுத்து, அதற்கு ஆதரவளிக்கும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதனூடாக திருப்திகரமான அரசியல் அடைவையாவது பெறுதலே தமிழ்மக்களுக்கு தற்போது உகந்தது. எனவே தமிழ் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களை படுகுழிக்குள் விழாமல் தடுக்க தமிழர்களின் அரசியல் அடைவுகள் எவை? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை தீர்மானித்து மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டும்.

கலந்துரையாடப்படும் தீர்மானங்கள் எவை என தாயகமக்கள், புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்கணிப்பிற்கு விட்டு எல்லோரது ஆதரவின் அடிப்படையில் மக்கள் தீர்மானமாக முன்மொழிவதன் மூலம், மக்களின் வாக்குகள் சரியான முனையில் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை வேகமாக முன்னெடுத்து தமிழ்மக்களை ஒன்றிணைக்கும், முக்கியமாக தென் இலங்கை சக்திகளின் அரசியல் பிடிக்குள் சிக்கவிடாது தமிழர்களை ஒன்றிணைந்து, அவர்களின் பலத்தை ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய காலமிது.

காலத்தின் கடமையைச் சரிவர செய்யாவிட்டால் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த தமிழினம், சிதைந்து சின்னாபின்னமாகி, அழிந்து அடையாளமில்லாமல் போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ்மக்களின் அரசியல் பேசுபவர்களின் கடமை மக்களை ஒன்றிணைப்பது. கருத்தியல் ரீதியான தெளிவைக் கொடுத்து விவாதித்து, பொதுமுடிவிற்குள் ஒன்றாவதே தவிர தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு “துரோகி” பட்டம் கொடுத்து அவர்களையும் அவர்கள் சார்ந்த மக்களையும் கூறாக்கிப் பிரித்து பலவீனப்படுவதல்ல தற்போதைய முக்கியமான விடயம். இச்செயற்பாடுகள் தற்போது பலவீனப்பட்டிருக்கும் இனத்தை மேலும் பலவீனமடையச்செய்யும் என்பதை மறந்தவிடக்கூடாது.

spl

காலத்திற்குப் பொருத்தமற்ற தீர்மானங்களை எடுத்தல், தேர்தல்களை மட்டும் நடத்துதலை விடுத்து, காலத்திற்கு பொருத்தமான, அவசரமாக, அடிப்படையாக செய்யப்படவேண்டிய, கவனிக்கப்படவேண்டிய பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படுவதே சரியான விளைவுகளுக்கான அடிப்படையாக அமைகின்றது.

நீண்டகாலமாக பல அழிவுகளையும் துன்பங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கும் இனத்தின் ஆயுதபலமே அரசியல் தீர்விற்கான களச்சூழலை வழங்கி இருந்தது. தற்போது இராணுவ ரீதியாகப் பலவீனமடைந்துள்ள நிலையில் மக்களை ஒருங்கிணைத்து அரசியல் ரீதியாக செயற்படுவதே காலத்திற்கு உகந்தது.

தமிழ் தேசியத்தைப் பற்றிப்பேசும், செயற்படும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆனால் தற்போதைய தமிழின அவமானமாகவும் வெட்கக்கேடாகவும் இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவிற்கு முந்தைய காலம்வரை ஒன்றிணைந்திருந்த புலம்பெயர் தமிழ்சமூகம் இன்று பிரிந்திருப்பதும், பிரிந்திருந்து ஒரேகருத்தை வெவ்வேறு கோணங்களில் பேசுவதும்தான்.

ஆங்கிலேயன் ஆட்சிசெய்வதற்காகப் பிரித்து ஆட்சிசெய்தான். அன்றிலிருந்து தமிழ் மக்கள் பிரிந்திருப்பதோ அல்லது பிரிக்கப்படுவதே பலவீனமாகவும் அழிவுக்குமான காரணமாக அமைந்துவிட்டது. ஆனால், தமிழர்களுடைய அரசியல் விடுதலை தொடர்பாக கருத்து பேதம் தமிழ்தேசிய உணர்வாளர்களிடையே இருக்க முடியாது. எனவே, சுயநல நோக்கங்களை விடுத்து, நிம்மதியான வாழ்க்கைக்காக ஏங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு திருப்திகரமான அரசியல் தீர்விலிருந்து ஒருமுடிவுவரை நகர ஒன்றிணைய வேண்டும் அல்லது விலகி வழிவிட வேண்டும். இல்லையேல் மக்கள் தூக்கியெறியும் காலம் தூரத்தில் இல்லை.

“வாய்பபுள்ளபோதே சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்” (சந்தர்ப்பங்கள் அரிதாகவே அமையும்) என்பதைப்போல தற்போதிருக்கும் பிராந்திய அரசியல் போட்டியையும் மனித உரிமை விடயத்தில் சிக்கியிருக்கும் ராஐபக்ச அரசை, தற்போது சாதகமாக இருக்கும் மேற்குலக அரசியல் போக்கு போன்ற சூழலை தமிழ் மக்களிற்குச் சாதகமாக்குவதும் அதற்காக ஒன்றிணைந்து உழைப்பதுமே இன்றைய காலத்தின் மிகமுக்கியமான செயற்பாடு.

முக்கியமாக தமிழ், முஸ்லிம், மலையக்கதமிழர்கள் என எல்லோரும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதிருக்கும் பிரதான கட்சிகளின் அரசியல் போட்டியில் தமிழ் மக்கள் தமக்கு சாதகமான, கிடைக்கக்கூடிய அரசியல் முடிவுகளை முன்வைத்து அவற்றை அடைவதற்கான வழிவகைகளை பார்ப்பது அவசியமாகும். எனவே, கருத்து பேதங்களை விடுத்து ஒன்றிணைந்து செயற்படும் இந்த அரிய இறுதிச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துமாறு தமிழ் மக்கள் சார்பாக தமிழ்த்தேசிய உணர்வாளர்களை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

நன்றி: ஈழநேஷன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*