TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நள்ளிரவில் காதிலெழும் நாதமணிப் பேரொலியில் நாளை ஒரு பூ மலரும்….

kaarthikai pooஅன்புக்கினியவர்களே!

மானுட வாழ்வில் ஜனனமும் மரணமும் நியதியானவை. இந்த நியதிக்குள் மானுடவியல் கோட்பாடு சொல்லும் தத்துவம் என்பது ஜனனத்தின் தோற்றம் உலகுக்கு மரணத்தின் வாயிலாகச் சொல்லும் செய்தி என்ன என்பதே. இது விடுதலையை எழுதத்துடிக்கும் எம் இனத்துக்கும் பொருந்தக் கூடியதே. காரணம் எமது இனத்தின் ஜனனமும் மரணமும் விடுதலைக்கானதே! உலக மானுடத்தின் வரலாற்றுப் பதிவுகளில் எம் இனத்தின் உயிர்த்துறப்பு என்பது உன்னதமானது! உயர்வானது!

* நவம்பர் 27 எம்மண்ணுக்கு வீரம் விளைந்துவிட்டது என்பதை உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லும் நாள்.

* உரிமை பெறத் துடிக்கும் உன்னதமான இனத்தை இனியும் அடக்கி வைத்து அடிமைப்படுத்த முடியாது என்பதை உலகுக்கு உரக்கச் சொன்ன உன்னதமான நாள்.

* ஈகம் செய்து, தியாகம் புரிந்து, இழப்புக்களைச் சந்தித்து, வேதனைகளைச் சுமந்து, சொல்லடிகளைத் தாங்கி, அச்சுறுத்தல்களைச் சவாலாய் எதிர்கொண்டு, கூட இருப்பவனே கொள்கையை, தியாகத்தை அர்ப்பணிப்பை அதன் உயர்வை விளங்கிக் கொள்ளாமல் செய்யும் காரியங்களை தாங்கிக் கொண்டு – உயிரைக் கொடுத்தாவது உரிமையைப் பெறுவோம்! பெறமுடியும்! என்பதை முதற்சாவு மூலம் முரசறைந்த நாள்!

மாவீரர் நாள் தமிழீழத்தின் தேசிய நாள்!

உலகத் தமிழர்கள் போற்றும் உன்னதமான தேசிய நினைவெழுச்சி நாள்!

சத்தியநாதன் என்கின்ற சங்கர் தன்னுயிர் தந்து தமிழர் வரலாற்றில் சரித்திரமாகிய நாள்!

வரலாறு தந்த வல்லமையாகிய எங்கள் தலைவன் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் எனச் சிந்திப்பதற்கு முன் எதிரி எட்டி உதைத்தாலும் உதைத்த காலுக்கு முத்தமிட்டு, சேவகம் செய்து கிடந்தது எங்கள் இனம். வன்முறையற்ற அகிம்சை வழிமுறை தழுவி எமது இனம் உரிமையைக் கேட்ட போதெல்லாம் சிங்களப் பேரினவாதம் கொடுவாள் கொண்டு குண்டர்கள் மூலம் தமிழின அழிப்புத் தாண்டவத்தைப் புரிந்து வந்தது. வடக்கிலிருந்து கிழக்கிற்கும் கிழக்கிலிருந்து தெற்கிற்கும் தமிழன் செல்லும் போதெல்லாம் தாயகம் அற்றவன் போல சிங்களப் பேரினவாதம் நிற்கவைத்து நீ யார்? என கேள்விகள் கேட்டு, கொடுமைப்படுத்தியது. பரிசோதனை என்கின்ற போர்வையில் தமிழ் பெண்களின் மீது பாலியல் சேட்டைகளைப் புரிந்து கொடுமைப் படுத்தியும் வந்தது. இத்தனை கொடுமைகளையும் கூனிக் குறுகிப் பொறுத்தவாறு என்ன செய்வதென்று தெரியாது ஏங்கிக் கிடந்தது எம் இனம்.

* இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முழுத்தமிழரையும் வீறு கொண்ட இனமாக உருவாக்குதற்காக நவம்பர் 26 இல் சூரியத் தேவனாக எம் தலைவனின் தரிசனம் தமிழினத்துக்குக் கிடைத்தது! தமிழினம் விழி திறந்தது!

* நவம்பர் 27 இல் இரத்தம் சிந்தாமல், உயிரை விலை கொடுக்காமல் விடியல் இல்லை என்பதைக் கூறி ஒரு பிள்ளை விழி மூடியது.

இங்குதான் உலக மானுடத்தின் தோற்றுவாய்க்குள் மானுடவியல் கோட்பாடு சொல்லும் ஜனனமும் மரணமும் விடுதலைக்கான வினைபொருட்களாயின. இரத்தமும் சதையுமாகி சிவந்து கிடக்கும் தமிழீழ மண்ணில் சுடர்விடும் தியாக வேள்வியில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தமிழீழ விடுதலை எனும் தங்கள் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில்…..

எங்கள் தேசம் சுதந்திரப் பிரகடனம் செய்யப்படும் அந்தப் புனித நாளில் எங்கள் விடுதலைப் பேரொளி ஏற்றப்போகும் தமிழீழத் தேசியக் கொடி வானில் படடொளி வீசிப்பறந்து

* வென்றதடா! ஈழம்
வென்று தமிழ்
பரணி பாடுதடா ஈழத்தில்

எனும் செய்தியைச் சொல்லும்போது அந்தக் காட்சியைக் காண்பதற்காக கல்லறைக்குள்ளே கண்மூடிக் காத்திருக்கின்றார்கள்.

விண்ணிலிருந்து பார்ப்போம் விடுதலையை என்று சொல்லிச் சென்றவர்களும், ஊர் தெரியாமல், உறவை அறியாமல், தலைவன் முகம் பாராமல், காற்றோடும் வானோடும் கடலோடும் கரைந்து காவியமானவர்களும் இந்த விடுதலையின் செய்திக்காய் காத்து இருக்கிறார்கள்.

amma

தன் கருவறையைச் சுமக்கும் தாயகத்தில் வானைக் கிழித்து ஓசை எழுப்பும் நாதமணிச் சத்தம் விடுதலை பெற்றது தமிழீழம் என்பதை தங்களுக்கு வந்து சொல்லுமென்று எதிர்பார்த்துக் கொண்டும் தங்கள் கல்லறையில் நாங்கள் ஏற்றும் நெய் விளக்குச் சுடரில் தமிழீழ தேசத்தின் வரைபடத்தையும், தாயக கட்டுமானத்தையும் கண்டு களிப்படைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

* மானம் காத்த எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை மாவீரர்கள் புதைந்த இடங்களாக நாம் எண்ணக் கூடாது. அவை உறுதியின் உறைவிடம், உன்னதமான மனிதப் பிறவிகள் மாவீரத் தெய்வங்களாகிய புனிதமான கோயில்கள் அவை. அந்தப் புனிதர்கள் துயில் கொள்ளும் அப்புனித இடத்தில் பூக்கள் வைப்பது மட்டுமல்ல எங்கள் கடமை. கூப்பிய கரங்களுடன் விழி சொரிவது மட்டும்தான் எங்கள் பணியென எண்ணுவதும் கூடாது.

எந்த நோக்கத்திற்காக, எந்த மண்ணின் விடுதலைக்காக அவர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்களோ அதை உணர்ந்து அதற்காக அயராது உழைத்து இறுதி மூச்சுள்ளவரை போராடி தமிழீழத் தாயகத்தை மீட்டெடுத்து உயர்ந்த, உன்னதமான அந்த மாவீரர்களின் புனிதத் திருவடியில் காணிக்கையாக்குவதே நாங்கள் அவர்களுக்குச் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

அலங்கார வளைவுகள், நெய் விளக்குகள், கற்பனையில் உருவாகும் கல்லறைகள், அதற்கான அலங்காரங்கள், கண்ணீர் மாலைகள் எல்லாம் எமது செயற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக செய்யப்படும் காட்சிகளாகவும், , சம்பிரதாயச் சடங்குகளாகவும் அமைந்து விடக் கூடாது.

thalaivar_maviirarnal_2009

* புனிதநாளான நவம்பர் 27 இல் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் தமிழினம் உயிர்த்தெழுந்த நாள் என்கின்ற உணர்வு உருப்பெற வேண்டும். ஆயிரமாண்டுகளானாலும் அழியாது தாயகக்கனவு என்ற தேசப்பற்றுடன் மாவீரர் நாள் விடுதலை பெற்ற மண்ணில் என்று நாங்கள் ஒவ்வொருவரும் சபதம் செய்து கொள்ள வேண்டும்.

இதையே இலக்காகக் கொண்டு நாங்கள் நமது பணிகளை… தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்தோடு…

எம் பாதச்சுவடுகளை பாரெல்லாம் பதிப்போம் என்ற நம்பிக்கையோடு……..

* நள்ளிரவில் காதிலெழும் நாதமணிப் பேரொலியில்
நாளை ஒரு பூ மலரும்
நல்ல சுடர் ஏற்றி வைத்து – நாங்கள்
தொழும் போதினிலே
நம்பும்!
நம் எதிரிச் சேனை வீழும்
பள்ளிகொள்ளும் வீரரது கல்லறையில் கண் சொரிந்து
மணி ஒலிகள் ஒலி எழுப்பி
மாவீரர் புகழ் பாட
தலைவன் உரை முடிந்தவுடன்
தமிழீழம் மலர்ந்ததென்று
தரணியெங்கும் வானுயர்ந்த புலிக்கொடிகள்
தலை நிமிர்ந்து ஆசைந்து ஆட
உள்ளம் உருகி, உணர்வோடு
உத்தமர்கள் துயிலுகின்ற
கல்லறையில்
நாங்கள்
கார்த்திகைப் பூச் சொரிந்து
தேசியத்தின் உயிரானவர்கள்
தேசத் தலைவனுடன்….செய்த பெரும்
ஈகமதை
பாடித் தினம் போற்றி
பாரெல்லாம்
தமிழ் வெல்ல
பணி செய்வோம்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*