TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை அரசு தாமதிப்பது ஏன்?

Mahindaஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. காரணம், தேர்தல் அறிவிப்பு இன்று… நாளை… என்று வெளியாகிய செய்திகள் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதால்- எப்போதாவது நடந்து விட்டுப் போகட்டும என்று அவர்கள் கருத ஆரம்பித்து விட்டார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டில் தேர்தல் பற்றிய முடிவை அறிவிப்பதாக முதலில் கூறியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.
இந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட போது, ஒரே குரலில் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துமாறு கூறினர்.

ஆனால், சுதந்தித் கட்சியின் வருடாந்த மாநாட்டில் தேர்தல் எப்போது என்று ஜனாதிபதி மகிந்த அறிவிக்கவில்லை. பின்னர் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சு நடத்தி- தேர்தலுக்குத் தயாராகும் படி அறிவித்தார். அப்போதும் ஜனாதிபதி மகிந்த தேர்தல் எப்போது- முதலில் எந்தத் தேர்தல் என்று அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த புதன்று இரவு விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்கஸவின் பிறந்தநாளில், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்காவது வருட பூர்த்தி நாளில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தவர்களுக்கும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் எந்தத் தேர்தல் என்றோ, எப்போது தேர்தல் என்றோ அறிவிக்காமல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கட்டிக் காக்கின்ற மௌனம், அவருக்கும் இதுபற்றிய குழப்ப நிலை இருப்பதைக் காண்பிக்கிறது. முன்னர் எதிர்க்கட்சிகள் பற்றிய பயமே அவருக்கு இருக்கவில்லை.

எல்லாவற்றையும் போர் வெற்றி பாரத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இருந்திருந்தார். ஆனால் இப்போது போர் வெற்றியில் பங்கு கேட்கும் ஒருவர் தன்னுடன் மோத வந்து விடுவாரோ என்ற பயம் அவருக்கு தோற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியதல்ல. இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒன்றுக்குப் பலமுறை யோசனை செய்வதிலும் அர்த்தம் இருக்கிறது. இந்த நிலையில் தான் எதிர்கட்சிகளைக் குழப்புவதற்கும் அவற்றைப் பலவீனப்படுதுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில் ஏதாவது ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஆளும்கட்சியின் பக்கத்தில் இருந்து அமைச்சர்கள பலர் வெளியேறி எதிரணியுடன் இணையலாம் என்ற தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இவை ஜனாதிபதி மகிந்தவைப் பொறுத்தவரையில் சிக்கலான விடயங்களாகவே இருகின்றன. இந்தநிலையில் மகிந்த ராஜபக்ஸ தரப்பும் தன் பக்கத்தில் சில முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஐதேகவின் தரப்பில் இருக்கும் சிலரை அணுகி ஆளும்கட்சிக்கு இழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐதேகவின் குருநாகல் மாவட்ட எம்.பியான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, எஸ்.பி.திசநாயக்க போன்றோருக்கு ஆளும்கட்சி வலை வீசுகிறது. எஸ்.பி.திசநாயக்க மத்திய மாகாணசபைத் தேர்தலிலட கண்டி மாவட்டத்தில் 180,000 இற்கும் அதிகமான விருப்புவாக்குகளைப் பெற்றவர். அவரை மீளவும் சுதந்தரக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு மகிந்த ராஜபக்ஸ முயற்சிகளை செய்வதாகத் தெரிகிறது. அதற்காக அவருக்கு பிரதமர் பதவியைக் கூடக் கொடுக்க அரசு தயாராக இரப்பதாகப் பேச்சு.

இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்பதை விட, இப்படியான முயற்சிகள் நடக்கின்றன என்பதையே பார்க்க வேண்டும். அதேவேளை தாம் கட்சி மாறப் போவதாக வெளியான தகவல்களை எஸ்.பி. திசநாயக்க நிராகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா அருசியலுக்கு வருவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம் அவர் ரணிலுக்குப் பிறகு தானே ஐதேவின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கனவில் இருந்து வந்தார். ஆனால் இப்போது ஜெனரல் பொன்சேகாவை ரணிலே வேட்பாளராக ஏற்கும் கட்டத்துக்கு வந்து விட்டதால் எஸ்.பி.திசநாயக்கவுக்குப் பலத்த ஏமாற்றம். இந்த நிலையிலேயே அவருக்கு மகிந்த ராஜபக்ஸ தூது அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இன்னொரு புறத்தில் அரசாங்கத்தில் இருக்கும் மிலிந்த மொறகொட புதியதொரு கட்சியை ஆரம்பித்து, அதன் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜெயசூரியவை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்தி;கள் வெளியாகின.

இது பெரும்பாலும் சாத்தியமற்றதாக இருப்பினும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய குழப்பங்களை உருவாக்க அளும்கட்சி முற்படுவதைத் தெளிவாக உணர வைக்கிறது.
இன்னொரு புறத்தில்- ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவுடன் அடிக்கடி முரண்படும் குருநாகல் மாவட்ட எம்.பியான ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை அரசாங்கம் தன் கைக்குள் போட முயற்சிப்பதாகவும் பேச்சு. மற்றொரு ரணில் அதிருப்பதியாளரான ஐதேக எம்.பி லக்ஷ்மன.; செனிவிரத்னவை ஏற்கனவே பசில் ராஜபக்ஸ கைக்குள் போட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இவையெல்லாம் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி. அல்லது தந்திரமாகக் கூட இருக்கலாம்.

ஜெனரல் சரத் பொன்சேகா பொதுவேட்பாளராகப் போட்டியிட்டால் அது கடும் போட்டியைக் கொடுக்கும் என்பதால் அரசாங்கம் சாத்தியமான எல்லா வழிகளிலும் எதிரணிக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த முனைகிறது. இந்த நிலையில் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியைக் குறி வைத்திருக்கிறார். அதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதிலேயே அவர் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் விடயத்தில் எவ்வளவு விட்டுக் கொடுப்புக்கும் அவர் இணங்குவார். ஆனால் பிரதமர் பதவியை தனக்குத் தந்து விட வேண்டும் என்பதே இவரது நிபந்தனை. இந்தநிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறக்கும் முயற்சிக்கு பௌத்த பீடங்கள் மத்தியில் போதிய ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்ற அஸ்கிரிய பீடாதிபதி- “பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது” என்று எச்சரித்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் கூட்டணியின் கொள்கைப் பிரகடன அறிக்கையை கையளிக்க கண்டிக்குச் சென்ற போது மல்வத்தை பீடாதிபதி கொழும்புக்குச் சென்று விட்டார். இவை எதிர்கட்சிளின் கூட்டணிக்கு பலம்மிக்க பௌத்த பீடங்கள், பௌத்தகுருமாரின் ஆதரவு கிடைக்காது என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது. பௌத்த பீடங்களைப் பொறுத்தவரையில் இராணுவ வெற்றிகளுக்காக இனிமேல் திசை திரும்ப வாய்ப்பில்லை. ஆனால் அரசியல் ரீதியான உறுப்பாட்டுக்காகவும் தமது செல்வாக்கை உறுதி செய்து கொள்வதற்காகவும் அவர்கள் முயற்சிப்பார்கள் என்றே தெரிகிறது. இந்த நிலைப்பாடு நிச்சயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கே கைகொடுக்கப் போகிறது. இது எதிரணிக்குப் பெரும் சிக்கலானதொரு விடயமாகும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் மாற்று அணியின் வியூகங்களை உடைப்பதிலேயே இப்போது கவனம் செலுத்துகின்றன. பிரதான சண்டைக் களத்தில் இறங்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் அது நிச்சயம் குறுகிய காலத்துக்குள் கிடைத்து விடும் என்பது உண்மை.

-நகுலன்- இன்போதமிழ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*