TamilSpy

பொழுது போக்கு இணையம்…

காக்கா முட்டை – ஒரு பார்வை!

kaaka muttaiபடங்களின் மூலம் ஒரு கலைஞன் பிரபலமாவதும், பிரபல கலைஞர்களால் சில படங்கள் வெற்றியடைவதும் திரைத்துறையில் வழக்கம். காக்கா முட்டை திரைப்படத்தில் இந்த இரண்டும் நடந்திருப்பது சிறப்பு. தனுஷ், வெற்றிமாறனால் உருவாகி உலகெங்கும் சுற்றிவந்த காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் இன்று அவர்கள் பெருமையடைந்திருக்கின்றனர்.

சென்னையிலுள்ள கூவத்தின் அருகே குடிசைப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் ‘பீட்சா’ சாப்பிட வேண்டும் என்ற கனவு தான் கதை. ஆனால் அவர்களின் கனவின் பின் பறந்துவிரியும் நிஜ உலகின் முகங்கள் தான் எத்தனைக் கொடூரம். ’வெறும்’ 300 ரூபாய் பீட்சா என்று சொல்லக் கூட தயக்கமாய் இருக்கும் இந்த படத்தை பார்த்த பிறகு.

பீட்சா வாங்க முந்நூஊஊஊறு ரூபாய் சேர்க்க அவர்கள் கஷ்டப்படும் விதம் படம் பார்ப்பவர்களையும் இனி குறைவாக செலவு செய்ய வைக்கும். அந்த பணத்தை சேர்த்த பிறகும் பீட்சா கடை வாசலில் அவர்கள் நிராகரிக்கப்படும் வேதனையும், வலியும் சமூகத்தின் கன்னத்தில் விழும் அறை.

படத்தின் முடிவில் அவர்கள் பீட்சா சாப்பிட்டார்களா? இல்லையா? என ட்விஸ்ட் தேவையில்லை. சாப்பிட்டார்கள். சாப்பிட்ட பின் அவர்கள் செய்யும் சேட்டை கதைதட்டல்களின் பேரலைக்கு தகுதியான ஒன்று. கிடைத்ததை வைத்து உலகையே வென்றது போல் கொண்டாடி மகிழும் சிறுவர்களுடன் சிறுவர்களாய் நம்மையும் கொண்டாடவைக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

சுகாதாரமான உணவு, காம்பவுண்டிற்குள் மட்டுமே விளையாட்டு என அடங்கி ஒடுங்கி இருக்கும் சிறுவனிடம் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை. ஆனால் ஊரெங்கும் சுற்றித்திரியும் காக்கா முட்டைகளிடம் உலகமே இருக்கிறது என எதார்த்தத்தை பொட்டில் அறைந்தது போல் படம் முழுக்க சொல்லியிருக்கிறார்.

’நாங்க பீட்சா தின்னலனாலும் பரவாயில்ல, எச்சி பீட்சா வேண்டாம்’ என்று தம்பியை அழைத்துச் செல்லும் காட்சி காசுக்கு பஞ்சமே தவிர எங்களிடம் சுயமரியாதைக்கு பஞ்சமில்லை என்பதை விளக்குகிறது. பீட்சா கடை கட்டுவதற்காக காக்கா முட்டையை திருடித் தின்னும் மரத்தை வெட்டும் காட்சியில், சிறுவர்கள் முகத்தில் சொந்த வீட்டை இடிக்கும் சோகத்தை வரவழைக்க இயக்குனர் என்ன கஷ்டப்பட்டாரோ? எல்லா புகழும் அவருக்கே.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை பகடையாக்கி அரசியல்வாதியும், மீடியாவும் தன்னலத்தோடு நடத்தும் விளையாட்டை பகிரங்கமாக சொல்லியிருக்கும் இயக்குனர், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குபவர்களின் முக்கியத்துவத்தை சொல்லவும் தவறவில்லை.

பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை ஆகிய இருவர்களில் சின்ன காக்கா முட்டையான ரமேஷ் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். அதற்காக விக்னேஷ் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியாது. சேட்டைகளினால் ரமேஷ் அதிகம் மனதில் நிற்க, தம்பியின் ஆசைக்காக உழைக்கும் பொறுப்பான அண்ணனாக விக்னேஷ் மனதில் நிற்கிறார்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடிக்க ஐஷ்வர்யாவுக்கு அசாத்திய தைரியம் இருந்ததென்றால், அந்த கதாபாத்திரத்திற்காக 5 கிலோவுக்கு மேல் எடை குறைத்து கச்சிதமாய் நடித்ததற்கு அவருக்கு ஒரு சல்யூட். எத்தனை படம் நடித்தாலும் ஐஷ்வர்யாவுக்கு காக்கா முட்டை ஒரு தங்க முட்டை தான். அவருக்கு மட்டுமல்ல, காக்கா முட்டை படக்குழுவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் இது தங்க முட்டை தான்.

காக்கா முட்டை – தங்க முட்டை!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Movie Review

Your email address will not be published. Required fields are marked *

*