TamilSpy

பொழுது போக்கு இணையம்…

30 நிமிடங்களில் உங்கள் மூளைக்கு எவ்வாறு உற்சாகம் அளிக்கின்றது ஒரு கோப்பைத் தேநீர்?

black_tea_002நாளாந்த வாழ்வில் காலை மாலை என இருவேளை அல்லது பெரும்பாலும் மாலை நேரத்தில் நாம் அருந்தும் தேநீரானது எவ்வாறு 30 நிமிடங்களுக்குள் நமது மூளைக்கு உற்சாகம் அளிக்கின்றது என சமீபத்தில் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இவர்கள் கூற்றுப் படி நாம் அருந்தும் தேநீரால் கிடைக்கும் பயன் ஆசுவாசம் (relaxation) மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் அது குறிப்பிட்டளவு அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

அதிலும் முக்கியமாக கரும் தேநீர் (black tea) அல்லது மூலிகைத் தேநீர் (green tea) இனை நாம் அருந்தி கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னர் எமது மூளையின் நரம்பியல் செயற்பாடு கணிசமான அளவு அதிகரிப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இச்செயற்பாட்டில் முக்கியமாக நமது ஞாபக சக்தி மற்றும் முடிவெடுத்தல் ஆகிய திறன்களும் விருத்தியடைவதையும் அவர்கள் உறுதிப் படுத்துகின்றனர். ஆனால் இந்த ஊக்கத்தில் பங்கேற்கும் தேநீரில் அடங்கியுள்ள முக்கிய கூறுகள் எவை என்பதை தனித்தனியாக இவர்களால் இனம் காண முடியவில்லை. ஆனால் முன்னைய ஆராய்ச்சிகள் படி தேநீரிலுள்ள Flavonoids எனப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் (antioxidants) இதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் இது தேநீரில் சேர்க்கப் படும் பாலின் அளவினால் பாதிப்பு அடைவதில்லை எனவும் அறியப் பட்டிருந்தது. குறித்த Flavonoids என்ற மூலக்கூறானது ஏற்கனவே வீக்கங்களைக் கட்டுப் படுத்துதல், இரத்த நாளச் செயற்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் தமனி அடைப்புக்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்குத் துணை புரிவதும் ஏற்கனவே அறியப் பட்ட ஆராய்ச்சி முடிவாகும்.

இந்நிலையில் நியூகேஸ்ட்டில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகைப் பட்ட நரம்பியல் செயற்பாடுகளில் தேநீர் அருந்திய 30 நிமிடங்களுக்குள் மூளையில் இருந்து புறப்படும் அலைகள் வகிக்கும் பங்கை அறிய 8 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மூலிகைத் தேநீர் அல்லது கரும் தேநீர் அருந்திய பின் அவர்களது தலையில் இணைக்கப் பட்ட எலெக்ட்ரோட்ஸ் (Electrodes) வாயிலாக ஒரு மணித்தியாலத்துக்குள் அதிகரித்த அல்ஃபா, பீட்டா மற்றும் தீட்டா அலைகளின் செயற்பாடு அவதானிக்கப் பட்டது. இதில் இந்த இரு வகைத் தேநீருமே 30 நிமிடங்களுக்குள் தீட்டா அலைகளைத் தூண்டி புலுணர்வு செயற்பாட்டை அதிகரித்தது நிரூபிக்கப் பட்டது. மேலும் சற்றுக் குறைவாகத் தூண்டப் பட்ட போதும் விழிப்புணர்வு, ஞாபக சக்தி மற்றும் தர்க்கவியல் ஆற்றலுடன் தொடர்புடைய அல்ஃபா மற்றும் பீட்டா அலைகளின் செயற்பாடும் கூட அதிகரிக்கப் பட்டதும் நிரூபிக்கப் பட்டது.

உலகில் அதிகளவு அதாவது மக்கள் தொகையில் 80% வீதமான பிரித்தானியர்கள் தேநீர்ப் பிரியர்கள் ஆவர். ஒவ்வொரு நாளும் இவர்களால் 165 மில்லியன் கோப்பைத் தேநீர் அருந்தப் படுவதாகக் கணிக்கப் பட்டுள்ளது. பிரிட்டனின் தேயிலை பெரு வணிகம் ஒரு வருடத்துக்கு 700 மில்லியன் பவுண்டுக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 கோப்பைத் தேநீர் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்றும் இது இரு வகையான நீரிழிவு நோய்களைத் தடுக்க வல்லது என்பதுடன் இதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதன் வீரியத்தைக் குறைக்க வல்லது என்றும் தெரிவிக்கப் படுகின்றது. இதைவிட கமோமிலே (Chamomile) என்ற மூலிகைத் தேநீர் தைரோய்டு புற்று நோய் பாதிப்பில் இருந்தும் காக்க வல்லது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Medical

Your email address will not be published. Required fields are marked *

*